Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சுரங்கி ஆரியவன்ச
“தற்போதைய நிலையில் தனித்து போராடி மனித உரிமையை வென்றெடுக்க முடியாது!”

குறிப்பாக கிராம மட்டங்களுக்குச் சென்றால், அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. எனினும், வெறுமனே பொலிஸில் மாத்திரம் முறைப்பாடு செய்கின்ற நிலையே அங்கு காணப்படுகின்றது. இதனால் மனித உரிமை மீறலில் ஈடுபடும் நபர், சுதந்திரமாக வெளியில் நடமாடும் அதேவேளை…

13.11.2019  |  
கொழும்பு மாவட்டம்
மனித உரிமைகள் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச.

“மனித உரிமை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் நாம் கூட்டாக இணைந்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடும்போது அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வது இலகுவாக அமையும். அதற்காக மனித உரிமை தொடர்பாக செயற்படும் அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து ஒரு வலையமைப்பாக செயற்படுவது அவசியம்.” ஏன்று கூறுகிறார் ‘மனித உரிமைகள் மையத்தின்’ (Center for Human Rights and Research) நிறைவேற்றுப் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச. தகட்டுமரனிற்காக அவருடன் நேர்காணல்.

கேள்வி – இலங்கையில் மனித உரிமை தொடர்பான விடயங்களில் வெற்றிகொள்ள முடியாதுள்ளமைக்கான காரணங்கள் என்ன என எண்ணுகிறீர்கள்?

மனித உரிமைகள் தொடர்பான போதிய தெளிவு அல்லது போதிய அறிவு பொதுமக்கள் மத்தியில் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. மனித உரிமைகள் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. எனினும், நாட்டு மக்களிடம் அதற்கான தெளிவு இல்லாத காரணத்தால் மக்களை ஏமாற்றி மனித உரிமை மீறல் விடயங்களில் சில தரப்பினர் ஈடுபடுகின்றனர்.
மனித உரிமை தொடர்பான விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் போதியளவு நிறுவனங்கள் இல்லாமையும் மனித உரிமை விடயங்களை வெற்றிகொள்ள முடியாமைக்கான காரணமாக உள்ளது. சிறுவர் உரிமைகள், பெண்ணுரிமை எல்லா விடயங்களும் மனித உரிமைக்குள் அடங்கும். எனினும், இவற்றை உறுதிப்படுத்த எமது நாட்டில் போதிய அலகுகள் இல்லாமையும் ஒரு குறைபாடாகும். எனினும், கடந்த 10, 15 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலையிலிருந்து, மனித உரிமை தொடர்பான தெளிவு ஓரளவு இன்று மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

கேள்வி : இதற்காக உங்கள் அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை?

தற்போதைய நிலையில் தனித்து போராடி எந்தவொரு அமைப்பிற்கும் மனித உரிமையை வெற்றிகொள்ள முடியாது. மனித உரிமை தொடர்பாக செயற்படும் அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து ஒரு வலையமைப்பாக செயற்படுவது அவசியம். அவ்வாறு ஒரு வலையமைப்பாக செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எமக்கான பலம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மனித உரிமை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் நாம் கூட்டாக இணைந்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடும்போது அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வது இலகுவாக அமையும்.

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் ஊடாக கடந்த 2013ஆம் ஆண்டு, பல மாவட்டங்களைச் சேர்ந்த, பல்வேறு தொழில்நிலைகளை வகிக்கக்கூடியவர்களை தேர்ந்தெடுத்து ஒரு வலையமைப்பை உருவாக்கினோம். அதாவது, சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக செயற்படுபவர்கள், தேர்தல் கண்காணிப்பு, கடற்தொழில், விவசாயம், கல்வித்துறை என பல விடயங்கள் தொடர்பாக பணியாற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து மாவட்ட வலையமைப்பாக உருவாக்கினோம். அந்த மாவட்ட வலையமைப்பின் ஊடாக தேசிய வலையமைப்பை உருவாக்குகின்ற ஒரு செயற்றிட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக அந்த வலையமைப்பை உருவாக்கியிருக்கின்றோம். இப்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக ஏதாவது விடயங்கள் பேசப்படுகின்றபோது, மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது குறிப்பாக நாம் உருவாக்கிய வலையமைப்பின் ஊடாகவும் அதற்கு குரல்கொடுக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியிருக்கின்றோம். இது பாதிக்கப்பட்டவர் நீதியை பெற்றுக்கொள்ள மேலும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையாக உள்ளது.
ஆகையினால், கூட்டாக இணைந்து இவ்வாறு இணைந்து குரல்கொடுக்கின்றபோது மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு இலகுவாக தீர்வினை பெற்றுக்கொள்வது மாத்திரமல்லாமல், எதிர்வரும் ஒரு தசாப்த காலத்திற்குள் சகல மக்களுக்கும் மனித உரிமை தொடர்பான தெளிவினை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும்.

கேள்வி – மனித உரிமை மீறல் விடயங்களில் ஈடுபடுவோர் அதற்கான தண்டனையை பெறுவது இலங்கையில் குறைவாகவேயுள்ளது. இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதும், அது தொடர்பான முறைப்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும், சம்பவம் இடம்பெற்று எத்தனை நாட்களுக்குள் அது தொடர்பான முறைப்பாடுகளை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்க வேண்டும் போன்ற விடயங்கள் மக்களுக்கு தெளிவில்லாமல் உள்ளன. குறிப்பாக கிராம மட்டங்களுக்குச் சென்றால், அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. எனினும், வெறுமனே பொலிஸில் மாத்திரம் முறைப்பாடு செய்கின்ற நிலையே அங்கு காணப்படுகின்றது. இதனால் மனித உரிமை மீறலில் ஈடுபடும் நபர், சுதந்திரமாக வெளியில் நடமாடும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் காணப்படுகின்றது.

கேள்வி – பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள், தொழில் செய்யும் இடங்களில் இடம்பெறும் அடக்குமுறைகள் வெளியில் பேசப்படுவதில்லை. ஆனால் குறையவும் இல்லை. இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?

இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் ஆணாதிக்கம் என்ற ஒரு விடயம் காணப்படுகின்றமையே இதற்குக் காரணம். பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற விடயம் பெரும்பாலும் மத, கலாசார ரீதியிலும் பேசப்படுகிறது. தீர்மானங்கள் எடுப்பவர்கள் ஆண்களாக இருக்கின்றனர், அதனை பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, உடன்படாதபோது அல்லது அங்கு மாற்றுக்கருத்து இடம்பெறும்போது அங்கு வன்முறைகளுக்கும் அராஜகங்களுக்கும் வழிவகுக்கின்றன. இதனை உடனடியாக மாற்ற முடியாது. பெண்களுக்குரிய உரிமைகள் தொடர்பாக முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறான தெளிவூட்டல்கள் மூலம் வீட்டு வன்முறையை தடுக்கலாம்.

 

மனித உரிமைகள் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச.

அடுத்ததாக பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள், அடக்குமுறைகள் பற்றி பார்த்தால், பெண்கள் அவற்றை வெளியில் சொல்லும்வரை அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். ஒவ்வொரு பெண்ணும் ஏதோவொரு முறையில் அடக்குமுறைக்கு, வன்முறைக்கு உள்ளாகியிருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்குள் ஒவ்வொரு கதைகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதனை வெளிக்கொணர தயங்குகின்ற சந்தர்ப்பத்தில், தவறு செய்கின்றவர்கள் மற்றும் தவறு செய்ய முற்படுபவர்களுக்கு அது சாதகமாக அமையும். ஆகவே, பெண்கள் தாமாக முன்வந்து இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில், பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். காரணம், ஏனையோர் இவ்வாறான விடயங்களை செய்ய அஞ்சுவார்கள்.

கேள்வி – குறிப்பாக பதுளையில் பெண் அதிபர் ஒருவரை முதலமைச்சர் ஒருவர் முழந்தாழிட வைத்தார். இது தொடர்பான முறைப்பாடுகள் சரியான வழிமுறைகளில் செய்யப்பட்டும் தவறிழைத்தவர் இன்னும் அதிகாரத்திலுள்ளாரே?

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியுலகத்திற்கு அறிவித்த ஒரு அமைப்பாக எமது மனித உரிமை அமைப்பு காணப்படுகிறது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அது தொடர்பான விசாரணைகள் இன்றும் நடைபெற்று வருகின்றது. சம்பந்தப்பட்ட முதலமைச்சரை பதவிவியிலிருந்து நீக்கும் பல கட்ட நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தோம். அது தொடர்பாக அழுத்தம் கொடுத்தோம். ஆனாலும், குறித்த முதலமைச்சர் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சி அது தொடர்பில்  கரிசனை கொள்ளவில்லை.
இவ்வாறான நிலைகள் தொடர்வதற்கு அரசியல்வாதிகளும், தற்போது நாட்டில் காணப்படும் அரசியல் கலாசாரமுமே காரணம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அந்த முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டாலும் அரசியல் இலாபம் கருதி அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையான விடயம். எனினும், மனித உரிமையை நிலைநாட்டும் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். ஆதாரங்களுடன் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து அதுகுறித்து நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி – பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் தொடர்பாக உங்கள் செயற்பாடுகள் எவ்வாறு அமைகின்றது?

இன்று பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் வடக்கு – கிழக்கில் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக யுத்த காலத்தில் மற்றும் இயற்கை அனர்த்தங்களின்போது அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்கள் தொலைத்தனர். ஆகவே பெண் தலைமைதாங்கும் குடும்ப பிரஜைகளுக்கு எமது சேவையை முன்னெடுத்தோம். குறிப்பாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அவசியம். எனினும் எவ்வித ஆவணங்களும் இல்லாத மக்களுக்காக, ஆட்பதிவு திணைக்களத்தை தொடர்புகொண்டு, அதன் உத்தியோகத்தர்களை கிராமப்புறங்களுக்கு அழைத்துச்சென்று பிரதேச செயலாளர்கள் ஊடாக சத்தியக்கடதாசியை வழங்கி அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தியுள்ளோம்.

 


இந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 500,000 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை.

இந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 500,000 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை. இது மிகவும் பாரதூரமான விடயம். இது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு எமது அமைப்பு தீர்வை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளது.

கேள்வி – அரசியலில் பெண்களின் வகிபாகம் இன்னும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் காணவில்லை. இது தொடர்பாக ஏதேனும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்களா?

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நாம் குரல்கொடுத்து வருகின்றோம். மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்தோம்;. அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களிலும், பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும் பெண்களுக்கான கோட்டா வழங்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவு புத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்டது. இப்போது உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீதமான பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. இந்நிலை மேலும் மாற்றமடைந்து பாராளுமன்றத்திலும் இந்த சதவீதம் பேணப்பட வேண்டும் என்பதற்காக எமது அமைப்பு தொடர்ந்தும் பணியாற்றும்.