Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நல்லிணக்கம்:
நாம் ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டால் நல்லிணக்கம் இயல்பாகிவிடும்.!

“நாம் ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டவர்களாக சமூக உறவை கட்டியெழுப்புகின்றோம். நான் நினைக்கின்றேன் நாம் புதிதாக நல்லிணக்கம் என்று எதையும் செய்வதற்கில்லை” என்று முஹம்மத் புஹாரி முஹம்மத் அஸ்வத் தெரிவிக்கின்றார்.

02.02.2020  |  
பொலநறுவை மாவட்டம்
டாக்டர் முஹம்மத் புஹாரி முஹம்மத் அஸ்வத் .

“நாம் ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டவர்களாக சமூக உறவை கட்டியெழுப்புகின்றோம். நான் நினைக்கின்றேன் நாம் புதிதாக நல்லிணக்கம் என்று எதையும் செய்வதற்கில்லை” என்று முஹம்மத் புஹாரி முஹம்மத் அஸ்வத் தெரிவிக்கின்றார்.
வாழச்சேனை ஓட்டமாவடியை பிறப்பிடமாக் கொண்ட டாக்டர் அஜ்வத் பமுணுவையைச் சேர்ந்த கொனரா முதியன்சலாகே ருக்மா மைத்திரி என்பவரை திருமணம் முடித்துள்ளார். டாக்டர் அஜ்வத் இளம் வயது டாக்கடராக கண்டி ஆஸ்பத்திரியில் சேவையாற்றிய காலத்தில் தாதியாக அதே ஆஸ்பத்திரியில் வேலை செய்த ருக்மாவை சந்தித்துள்ளார். இருவரும் காதல் வலையில் சிக்கி பின்னர் திருமணம் முடித்துள்ளனர். அஜ்வத் மற்றும் ருக்மாவின் காதல் வாழ்க்கை திருமணத்தில் முடிந்து இப்போது மூன்று தசாப்தங்களைக் கடந்துவிட்டது. காதலில் எப்படி ஒருவருடன் ஒருவர் வசமானார்களோ அதே நிலையிலே இப்போதும் இருவரும் உள்ளனர்.

டாக்டர் அஜ்வத்.

“நாங்கள் ஐந்து வருடங்களாக காதல் தொடர்பை வைத்திருந்தோம். எங்களுக்கிடையில் எந்தவிதமான இன முரண்பாடுகளும் இருக்கவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் மிகவும் இலகுவான முறையில் புரிந்துகொள்ளும் வகையில் நடந்துகொண்டோம். நாங்கள் இருவரும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தேவையற்ற கேள்வியை விட எங்களுக்கிடையிலான இணக்க ரீதியான புரிந்துணர்வே அவசியமாக இருந்தது. அதுவே எங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு இட்டுச் சென்றதே தவிர மேலதிகமாக செயற்கையாக நல்லிணக்கத்திற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் தேவைப்படவில்லை” என்று அஜ்வத் கூறு கின்றார்.

டாக்டர் அஜ்வத் நாட்டின் பல பிரதேசங்களிலும் சேவையாற்றி நல்ல அனுபவத்தை பெற்றுள்ள ஒருவராவார். “எனது முதலாவது நியமனம் கல்பிடிய மாவட்ட வைத்திய சாலையிலாகும். அங்கு நான் இரண்டு வருடங்கள் சேவையாற்றினேன். அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்தேன். அங்கு நான் ஒரு வருடமாக சேவையாற்றும் போது எனக்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மதவாச்சிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் நான் டாக்கடர்களுடனும் ஆஸ்பத்திரி நிர்வாக உத்தியோகத்தர்களுடனும் வேலை செய்து நிறைய அனுபவத்தை பெற்றுக்கொண்டேன்.


 நாங்கள் இருவரும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தேவையற்ற கேள்வியை விட எங்களுக்கிடையிலான இணக்க ரீதியான புரிந்துணர்வே அவசியமாக இருந்தது.

மதவாச்சி வட மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு எல்லை பிரதேசமாகும். அங்கு அடிக்கடி பாதுகாப்பு காரணமாக சோதனைகள் நடத்தப்பட்ட போது ஆஸ்பத்திரி ஊழியர்களும் சோதனையிடப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது அவர்களை விடுவிக்கச் செய்வதற்காக நான் போக வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டதுண்டு. மாவட்டத்தில் நிலவிய அவசர நிலைமைகள் காரணமாக எமது ஆஸ்பத்திரி ‘அம்பியுலன்ஸ்’ வண்டியை அநுராதபுரத்திற்கு அனுப்ப வேண்டிய நிலைமைகளும் ஏற்படுவதுண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் அவசர நிலையில் இருக்கும் நோயாளிகளை அநுராதபுர ஆஸ்பத்திரிக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்புவதற்காக வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடுவதுண்டு. அதனால் அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நோயாளிகளை முன்கூட்டியே நான் அநுராதபுர ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவேன்.”
டாக்டர் அஜ்வத் மேலும் தெரிவிக்கையில், நாம் சிகிச்சையளிக்கும் போது ஒரு இனத்தை மாத்திரம் கவனத்தில் எடுத்து சிகிச்சை அளிக்கவில்லை. அவ்வாறு செய்வது எமது தொழில் தர்மமும் இல்லை. அது ஏனைய சமூகங்களுக்கு செய்யும் அநீதியாக அமையும்’ என்கிறார். இப்போது டாக்டர் அஜ்வத்தும் அவரது மனைவி ருக்மாவும் பொது சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவாகள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பொலநறுவையில் சகல வசதிகளையும் கொண்ட பலவிதமான நோய்களுக்கு வைத்தியர்களை சந்திக்கக் கூடிய ஒரு மருத்துவ (சனலிங்) சிகிச்சை நிலையத்தை நிறுவியிருந்தனர். அதில் அவர்களது சேவை தொடர்கிறது. அவரது மகளான காலிதாவும் தந்தை வழியில் தற்போது மருத்துவ தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
மனிதர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்தால் மக்களுக்காக எங்களால் பல சேவைகளை செய்ய முடியும் என்பதை வைத்தியர் அஜ்வத் எங்களுக்கு கற்றுத் தருகின்றார்.