Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வேற்றுமத திருமணபந்தங்கள்:
மதம் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை!

நாம் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எந்த விதமான முதலீடுகளோ பணமோ இருக்கவில்லை. இருவீட்டாரும் கைவிட்ட நிலையில் எமது நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். ஆனாலும்….

02.03.2020  |  
கண்டி மாவட்டம்
முத்துக்கருப்பன் சம்பந்தர் - அப்துல் மஜீத் மெஹருன் நிசா

“மதம் என்பது மனித வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பாதை, மதத்திற்காக மனிதன் என்கின்ற போதுதான் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடுகின்றது. வாழ்வுக்கு ஒரு ஆதாரமாக மதம் இருந்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை” என்கிறார் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரும், ஓய்வுபெற்ற கண்டி கல்வித் திணைக்களத்தின் முன்னாள் இந்துசமய அலுவல்கள் பணிப்பாளருமான முத்துக்கருப்பன் சம்பந்தர்(71வயது). இந்து மதத்தைப் பின்பற்றும் இவர் தனது 31ஆவது வயதில், வங்கி ஊழியராக இருந்த அப்துல் மஜீத் மெஹருன் நிசா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து மணம் முடித்தார். இத்தம்பதியர், திருமணத்தின் போதும் அதன் பின்னும் மதம் பெரும் கேள்வியாக எழும் சந்தர்ப்பங்களை எவ்வாறு எதிர்கொண்டனர் என கட்டுமரனுக்காக விபரித்தனர்.

“இந்து – இஸ்லாம் ஆகிய எமது இரண்டு சமூகங்களும் குறிப்பாக எமது குடும்பங்களும் காதலை எதிர்த்தன. ஒரு கட்டத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததுடன், பல்வேறு வழிகளில் தொழில்களுக்கு பங்கம் ஏற்படுத்துவதாக எச்சரித்தும் பார்த்தார்கள். இரண்டு சமூகத்தினரும் எமது காதலை சவாலாக எடுத்துக்கொண்டு எதிர்ப்பு காட்டினார்களேயன்றி, நாம் இருவரும் அதனை சவாலாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இவை அனைத்தும் எமது காதலுக்கு முன் ஒரு பொருட்டாக அமையவில்லை. நாம் எந்த மதசடங்குகளுமற்று பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். இன்று வரை எனது மனைவியின் பெயர் அப்துல் மஜீத் மெஹருன் நிசா. நான் முத்துக்கருப்பன் சம்பந்தர் என்றே இருக்கின்றோம்.” என சாதாரணமாகச் சொல்கிறார்.
கண்டி, யஹலதென்ன முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற முத்துக்கருப்பன் சம்பந்தர் முஸ்லிம் சமூகம் குறித்து வேறுபட்ட அபிப்பிராயத்தை ஒருபோதும் என் மனதில் வளர்த்ததில்லை என்கிறார். அப்படி ஒரு சூழல் அவருக்க வாய்த்திருக்கிறது. அந்தப் பாடசாலையில் ஒரு மௌலவி ஆசிரியரிடம் இருந்து இஸ்லாம் தொடர்பான சித்தாந்தங்களையும் அரபுமொழியையும் கற்ற இவர் இஸ்லாமிய பாடல்களையும் பாடசாலை மேடைகளில் சிறப்பாக பாடக்கூடிய ஒருவராக இருந்துள்ளார். அத்துடன் இவரது மூத்த சகோதரர் ஒரு கம்யூனிஸவாதியாக இருந்ததும் அதனால் இன மத கலாசார வித்தியாசங்கள் குறித்த அடிப்படைவாத சிந்தனைகளுக்கு அப்பால் தன்னால் சிந்தித்து தைரியமாக செயலாற்ற முடிந்தது எனவும் குறிப்பிடுகிறார். கண்டியில் இருக்கும் முத்துக்கருப்பன் சம்பந்தர் – அப்துல் மஜீத் மெஹருன் நிசாவின் கதை இவ்வாறிருக்க மட்டக்களப்பில் உள்ள திருமதி சந்திரகாந்தா மகேந்திரராசா கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் கூறுகிறார்,

சந்திரகாந்தா மகேந்திரராசா

“நான் இந்துமதத்தைச் சேர்ந்த மகேந்திரராசாவை மணம்முடித்துள்ளேன். எமது திருமணம் மட்டக்களப்பின் மாமாங்கம் ஆலயத்திலே இந்து முறைப்படியே நடைபெற்றது. இதேவேளை பதிவுத்திருமணத்தினை கிறிஸ்தவ முறைப்படி செய்து கொண்டோம். இதன்மூலம் இரு வீட்டு பெற்றோர்களையும் உறவுகளையும் திருப்திப்படுத்திக்கொண்டோம்.” என்கிறார். மதம் பற்றி அதீதவாதியாக இல்லாது யதார்த்தத்திவை உணர்ந்து செயற்படுபவராக உள்ளார் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட சிரேஸ்ட விரிவுரையாளராகப் பணிபுரியும் சந்திரகாந்தா.
அவரவர் மதத்தினை தழுவுவது குறித்து எந்தவித தடையும் இருக்கக் கூடாதென்ற முடிவையே ஆரம்பத்தில் எடுத்துக்கொண்டதாகவும், அதன்படி வீட்டில் இருமத கொண்டாட்டங்களையும் செய்துவருகின்றார். தைப்பொங்கல், சித்திரைவருடப்பிறப்பு பண்டிகைகள் இடம்பெறுகின்ற அதேநேரம் புதுவருடமும், நத்தாரும்கூட கொண்டாடப்படுகிறது. இவ்வாறு இருமதங்களையும் பின்பற்றுபவர்களாக உள்ளனர் இவர்கள்.
“இந்து ஆலயங்களில் இடம்பெறும் பூசை, விழாக்களில் எனது கணவன் பங்கேற்பார். தேவாலயத்தில் நடைபெறும் ஆராதனைகளில் நான் பங்கெடுப்பேன். இருவரும் ஆலயத்திற்கும், தேவாலயத்திற்கும் சேர்ந்தே செல்வோம். திருமணம் செய்து 15வருடங்கள் கடந்திருக்கின்றன. இதுவரை மத ரீதியாக எங்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும், கருத்துவேறுபாடுகளும் இடம்பெற்றதில்லை.” என்று கூறுகிறார் சந்திரகாந்தா. இவர்கள் இவ்வாறு இருமத வழிபாடுகளையும் மேற்கொண்டு தமக்குள்ளும் உறவினர்களிடத்தும் ஒரு சமநிலைச் சூழலை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் முத்துக்கருப்பன் சம்பந்தர் – அப்துல் மஜீத் மெஹருன் நிசாவின் குடும்பத்திற்கும் வந்துள்ளது.

“ஒரு முறை நான் மஸ்கெலியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் எனது மனையின் தாயார் இறந்துவிட்டார். தயாரின் இறுதிக் கிரியைகளில் நான் கலந்துகொண்டு காரியங்களை செய்யவேண்டும் என்று மனைவி விரும்பினார். நான் இஸ்லாமியனாக இல்லாத பட்சத்தில் நேரடியாக அந்த காரியங்களில் ஈடுபட முடியாது. இதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று மனையிவிடம் கேட்டதற்கு கலிமாவைக் கூறி நான் இஸ்லாமியனாக மாறவேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் அவர்களது பள்ளிவாசலுக்கு சென்று மௌலவியை சந்தித்து முறைப்படி “லாஇலாஹ இல்லல்லா{ஹ முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” கலிமாவைக்கூறி புனித இஸ்லாத்தையும் மதமாக ஏற்று மனைவியின் தயாரது ஈமக் கிரியைகளில் ஈடுபடுபட்டு மனைவியின் விருப்பததை நிறைவு செய்தேன். அது எனக்கு திருப்திதான்.” ஏன்கிறர் மிகுந்த நெகிழ்வுடன். குறிப்பிட்டு இந்த மதம்தான் நாம் என முத்திரை குத்தாத வகையில் தன் பிள்ளைகளுக்கும் பெயர்வைத்துள்ளனர் முத்துக்கருப்பன் சம்பந்தர் – அப்துல் மஜீத் மெஹருன் நிசாவின் குடும்பம். மூன்று பிள்ளைகளைக் கொண்ட இந்தக் குடும்பத்தில் ஷா, சஜி, சஜீவ் என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ‘எங்கள் வீட்டுமுகப்பில் இஸ்லாமிய இந்து அடையாளங்கள் இரண்டும் உள்ளன’ என்றும் கூறுகிறார்.

இதையேதான் மட்டக்களப்பில் வாழும் சந்திரகாந்தா மகேந்திரராசாவும் கூறுகிறார்.
“நாம் கடவுளர்களை ஒன்றாகவே பார்த்தோம், பார்க்கின்றோம். இதனால் மதம் எப்போதும், எமது வாழ்வுக்குத் தடையாக இருக்கவில்லை. எனது மகனும் என்னுடனும், எனது கணவருடனும் ஆலயத்திற்கும், தேவாலயத்திற்கும் வருகை தருவார். அவரை இந்த மதத்தினைத்தான் பின்பற்ற வேண்டும் என நாங்கள் கூறவில்லை. அவர் விரும்பிய மதத்தினைப் பின்பற்றட்டும். எனக்கூறியிருக்கின்றோம். மதம் நல்வழிப்படுத்தவே தவிர, முரண்பாடுகளையும், தடைகளையும் உருவாக்க இல்லை.” என தமது அடுத்த சந்ததியினருக்கும் மதம் பற்றிய புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் பாடசாலை பாட விதானங்களில் ஒரு மத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை இவர்கள் எதிர்கொள்வதையும் குறிப்பிடத்தவறவில்லை. பாடசாலைகளின் அழுத்தத்தினால் பிள்ளைகள் படித்த பாடசாலையில் என்ன மதம் படிப்பிக்கப்பட்டதோ அதையே பிள்ளைகளும் படித்து பரீட்சை எழுதினார்கள் என்றும் இரு குடும்பத்தினரும் குறிப்பிட்டனர். ஆனாலும் இரண்டு மதங்களினதும் மத அறிவை தமது பெற்றுக்கொள்வதற்கும் தாம் வழிவகுத்துக்கொடுத்தாகவும் குறிப்பிட்டனர்.
என்னதான் இவர்கள் பார்த்து பார்த்து செய்தாலும் சுற்றிஇருக்கும் உறவுகள் இவர்களின் வாழ்வில் ஏற்படும் சரிவுகளை மதத்தின் பேரால் பெரிதுபடுத்தியதையும் உறவுகளைத் துண்டித்து வாழ்ந்ததையும் முத்துக்கருப்பன் சம்பந்தர் – அப்துல் மஜீத் மெஹருன் நிசாவின் குடும்பம் நினைவுகூர்ந்தது.

வீட்டுமுகப்பில் இஸ்லாமிய இந்து அடையாளங்கள்

“நாம் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எந்த விதமான முதலீடுகளோ பணமோ இருக்கவில்லை. இருவீட்டாரும் கைவிட்ட நிலையில் எமது நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். ஆனாலும் உறங்குவதற்கு கட்டிலோ, வாழ்வதற்கு வீட்டு வசதியோ இருக்கவில்லை. சிலவேளை உண்பதற்கு உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பெரும் சிரமங்களை அனுபவித்துள்ளோம். இந்த பின்புலத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்ற ஒருகொள்கையுடன் வாழவேண்டும் என்பதற்காக மிகவும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாழ ஆரம்பித்தோம். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த எனது மனைவி ஆரம்பத்தில் கஷ்டங்களை அனுபவித்தாலும், படிப்படியாக சவாலுக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டார். எமது வாழ்க்கை முறையைப் பார்த்து எம்மை மெச்சினார்கள். இப்பொழுது எம்மை ஒதுக்கிய பல உறவினர்களும் எம்முடன் நல்ல உறவினை வைத்திருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சமூகத்தில் எமக்கென ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதை நாம் அடைந்த வெற்றியாக கருதமுடியும்.” என்று கூறினார்.


எனது மகனும் என்னுடனும், எனது கணவருடனும் ஆலயத்திற்கும், தேவாலயத்திற்கும் வருகை தருவார். அவரை இந்த மதத்தினைத்தான் பின்பற்ற வேண்டும் என நாங்கள் கூறவில்லை. அவர் விரும்பிய மதத்தினைப் பின்பற்றட்டும்.

திருமதி சந்திரகாந்தாவும் மதபேதம் கடந்து இயங்கிவருவதனால் தனது உறவுகளும் சமூகமும் தன்னை சிறப்பான இடத்தின் வைத்திருப்பதாக மகிழ்கிறார்.
“ஆரம்பத்தில் தமது மகன் கிறிஸ்தவமத்தினை தழுவி விடுவானோ என்று, கணவனின் வீட்டார்கள் அச்சப்பட்டனர். இருவீட்டு பெற்றோரின் விருப்பையும் ஓரளவுக்கு நிறைவேற்ற முடிந்தமையினால் அவ்வச்சம் நாளடைவில் மறைந்து போனது. சைவமுறைப்படி வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லை. அதை நானும் ஏற்றுக்கொண்டு இன்றுவரை கடைப்பிடிக்கிறேன். இவ்வாறான சின்ன சின்ன விட்டுக்கொடுப்புகளே எமது வெற்றிக்கு காரணம்.” ஏன்று கூறும் இவர்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் வருடாந்தம் சிறப்பாக நடைபெற்றுவரும் வருடாந்த நவராத்திரி விழா கடந்த வருடம்(2019) கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நடத்த முடியாதிருந்தது. அந்த சந்தர்ப்த்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றுகின்ற திருமதி சந்திரகாந்தா, நவராத்திரி விழாவை செய்ய வேண்டும். எனக்கூறியதோடு, தமது ஆசிரியர் சங்க உறுப்பினர்களோடு இணைந்து நவராத்திரி விழாவை சிறப்பாக செய்திருக்கின்றார். இவ்வாறு கண்டியிலும் மட்டக்களப்பிலும் வாழும் இந்த குடும்பங்களின் மதம் பற்றிய புரிதலும் நல்லிணக்கமும் வாழ்வை சிறப்புறவைத்துள்ளது.
‘சமூகத்தில் நற்பெயருடனும் ஒழுக்கத்துடனும் நல்ல மனிதர்களாகவும் வாழ்ந்தால் அதுவே மதமாக அமைந்துவிடும். அனைத்து மதங்களும் சிறந்தவற்றையே போதிக்கின்றன. நாம் எல்லா மதங்களிடையேயும் நல்லிணக்கத்தைக் காண்கிறோம். .’ என்ற கருத்தே இந்த இரண்டு குடும்பங்களினதும் ஒரே குரலாக இருந்தது.