Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சுதந்திரத்திற்குப் பின்!
இலங்கை எப்படி இருந்தது!?

சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் காலம் கட்டியெழுப்பப்பட்டதிலும், அழிக்கப்பட்டதிலும் சகலருக்கும் பங்குண்டு. அனைத்து இன மக்களின் வாழ்விலும் தாழ்விலும் அனைவருமே பங்கெடுத்துள்ளனர். உறைக்கும் இந்த உண்மையை தமது அனுபவங்களால் முன்வைப்பனவே இக்கதைகள்…ஒரு பொருளின் அடிப்படையில் தங்கள் நினைவுகளை மீட்டியுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்த பொருள்களும் சுவாரஸ்யமானவை. காப்பு, அம்மி, மண்சட்டி, பேப்பர் சுருள், வசம்பு,….

09.03.2020  |  
கொழும்பு மாவட்டம்
தொகுத்து செம்மைப்படுத்தி வெளியிட்ட மாலதி டி அல்விஸ_ம் ஹாசினி ஹப்புத்தந்த்ரியும்

அதிகாரங்களினால் கட்டமைக்கப்படும் கதைகளையே வரலாறுகளாகப் படிக்கும் எமக்கு மக்களின் அனுபவங்களினூடக வரலாற்றை திரும்பிப்பார்க்கவைக்கிறது ‘நினைவுக் காப்பகம்’ என்ற நூல். இந்த நூல், 2018 வரைக்குமான காலப்பகுதியை வரையறுத்து சுதந்திரத்திற்குப்பின்னான 70 வருடகால வாழ்வையும் வளத்தையும் வரலாறாக கூறுகிறது. பண்பாடு மதம் மொழி என பல்வகைமைத் தன்மையைக் கொண்டிருக்கும் இலங்கை அதன் வரலாற்றை ஏற்கனவே மொழிசார் இலக்கியங்களால் வளப்படுத்தியுள்ளது. ஆனாலும் ஏனைய மொழி காலாசாரங்களின் வரலாற்றை நீக்கம் செய்து தத்தமது மொழிகளினூடாக தத்தமது வரலாற்றை படிப்பதே நமது வழமையாகிவிட்டது. இந்த நிலையில்தான் ‘நினைவுக் காப்பகத்தின்’ முக்கியத்துவம் இங்கே முன்வைக்கப்படுகிறது.

முதலில் இந்நூல் பற்றிய அறிமுகக் குறிப்பில் இப்படிக் கூறப்படுகிறது. ‘ இலங்கையின் சுதந்திரத்திற்குப்பின்னான பயணப்பாதை கொந்தளிப்பாகவும் குருதி தெறித்ததாகவும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. இனக் கலவரங்கள், இளைஞர் கிளர்ச்சிகள், இயற்கைப்பேரிடர்கள் மற்றும் நீண்ட உள்நாட்டு யுத்தம் ஆகியன நெடுங்காலமாக நிகழ்ந்ததுடன் அண்மைய தசாப்தங்களின்மீது இருளையே அடைகாத்தன. எமது இறந்த காலத்தைப் பிரதிபலிப்பது கட்டாயமானது. ஒரு தேசமாக நாங்கள் அனைவரும் உருவாக்கிய நேர்மறை முன்னேற்றத்தினை நாம் ஏற்போம். எம்மிடமுள்ள குறைந்த நேர்மறை அனுபவங்களைக் கேள்விகேட்பதுடன் அவற்றில் இருந்து பாடமும் கற்றுக்கொள்வோம். ‘நினைவுக் காப்பகம்’ ஆனது 70 கதை சொல்லிகளின் சேகரிப்பு. அவை கடந்த 70 ஆண்டுகள் மீது வலியுறுத்துவதும் தனித்துவமானதுமான கண்ணோட்டங்களைக் காண்பிக்கின்றன. எமது சுதந்திரத்திற்கு பின்னான வரலாற்றில் இருந்து முக்கியமான தருணங்களை அவை ஞாபகப்படுத்துகின்றன.’ இவ்வாறு அந்த நூலின் உள்ளடக்கம் பற்றி கூறப்படுகிறது.

/

இங்கு 70 கதைகள் உள்ளன. அவை 70 பேரின் அனுபவங்கள். 1948இல் இருந்து 2018 வரை 70 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தையும் ஒரு கதை பிரதிபலிக்கிறது. இதைத் தொகுத்து செம்மைப்படுத்தி வெளியிட்ட மாலதி டி அல்விஸ_ம் ஹாசினி ஹப்புத்தந்த்ரியும் இதைத்தான் குறிப்பிட்டுள்ளனர். “நாம் பகிரும் கதைசொல்லல்கள் ஏழு தசாப்தகால இடைவெளியில் இருந்து வந்தவை. எனினும் அவற்றுள் பல 1980கள் மற்றும் 2000கள் ஆகிய காலப்பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களைச் சுற்றியே நகர்கின்றமையை நாம் அவதானித்தோம்……ஒரு ஆண்டில் அல்லது ஒரு குறித்த தசாப்தத்தில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுகள் தொடர்பான புரிதலை இது அளிக்கவல்லது” என்று தமது குறிப்பில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நினைவுக்காப்பகத்தின் கதை சொல்லிகள் சிங்களம், தமிழ், மூர், மலே, போரா, ஆங்கிலேய ஆண்களும் பெண்களும் ஆவர். இக்கதைகள் இலங்கையின் சகல பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களையும் சம்பவங்களையும் கலாசாரங்களையும் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இலங்கையின் வரலாற்றைக் கட்டமைக்கும் ஒவ்வொரு சம்பவங்களிலும் இலங்கையின் பல்லின மக்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் காலம் கட்டியெழுப்பட்டதிலும், அழிக்கப்பட்டதிலும் சகலருக்கும் பங்குண்டு. ஆனைத்து இன மக்களின் வாழ்விலும் தாழ்விலும் அனைவருமே பங்கெடுத்துள்ளனர். உறைக்கும் இந்த உண்மையை தமது அனுபவங்களால் முன்வைப்பனவே இக்கதைகள்.


வரலாற்றைத் திரும்பிப்பார்த்தல் என்பது பல் இன வாழ்வின் பல உண்மைகளையும் நல்லிணக்க வாழ்வுக்கான சாத்தியங்களையும் நம்முன்னே நிறுத்துகிறது.

இந்த நினைவுக்காப்பகத்தின் கதை சொல்லிகள், தம்முடன் சம்பந்தப்பட்ட ஒரு பொருளின் அடிப்படையில் தங்கள் நினைவுகளை மீட்டியுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்த பொருள்களும் சுவாரஸ்யமானவை. காப்பு, அம்மி, மண்சட்டி, பேப்பர் சுருள், வசம்பு, என 70 பொருள்கள் தொடர்கின்றன. இவற்றுள் சில காலத்தால் மறைந்துகொண்டிருப்பவையும் கூட. எனவே கதைசொல்லிகள் தமது நினைவில் கலந்த காலத்தை மீட்டும் வழியில் சில கலாசாரங்களுக்கே உரித்தான பொருள்களையும் மீட்டுத்தந்துள்ளனர். அந்த பொருள் வழி தமது நினைவுத்தடங்களை பரவ விட்டுள்ளனர். சில கதைகள் கதைசொல்லிகளின் அனுபவ மூப்பு எமக்குத் தெரியாத இலங்கை வரலாற்றை முன்வைக்கின்றன.

 

/

உதாரணத்திற்கு ‘வெள்ளிக்காப்பு’ பற்றிக்கூறும் தக்ஷினி எம். பெர்னாண்டோ 1948இல் இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடும் நிகழ்வு நான்கு நாட்கள் நடந்ததாகவும், தனது 20 வயதில் அதற்கு தான் சென்றதாகவும் அங்கு நடைபெற்ற நாடகம் ஒன்றில் பங்குபற்றியதாகவும் அதற்கு அணிந்த அந்த வெள்ளிக்காப்பு தனது தாயாரின் அன்பளிப்பு என்றும் குறிப்பிடுகிறார். அங்கு நடந்த நிகழ்வுகள் பற்றிக்குறிப்பிடுகையில், ‘இலங்கையின் வரலாறு மற்றும் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளை 14 மேடை நிகழ்வுகளாக இசை நடன நாடகங்களாக வகுத்திருந்தனர். ‘இராவணனும் சீதையும்’, பௌத்தத்திற்கான ஒரு அறிமுகம்’, ‘தர்மம் மிக்க எல்லாளன்’, ‘போர்த்துக்கேயரின் வருகை’, எனப் பல நிகழ்ச்சிகளை இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்களான சீபேட் டயஸ், அங்கிள் சூரிய, ஆர்தர் லங்கன்பேர்க் ஆகியோர் படைத்திருந்தனர்.’ என்கிறார். இவ்வாறு வரலாற்றுத்தகவல்களை உண்மையான பெயர்களுடனும் சம்பவங்களுடனும் முன்வைத்திருப்பது எமது பழைய இலங்கையை திரும்பிப்பார்க்க வைக்கிறது. அதனூடாக இலங்கை மக்கள் என்ற ரீதியில் இன, மத போதமற்ற நிகழ்வுகளும் வாழ்வும் சர்வசாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருந்தமையும் தெரியவருகிறது. இந்த வரலாற்றைத் திரும்பிப்பார்த்தல் என்பது பல் இன வாழ்வின் பல உண்மைகளையும் நல்லிணக்க வாழ்வுக்கான சாத்தியங்களையும் நம்முன்னே நிறுத்துகிறது.

‘பிலிங் மரம்’ பற்றி எழுதிய விஜயலஷ்மி ஜெகநாதன் 1983 நடைபெற்ற கலவரத்தை தன் சொந்த கதையினூடாக கண்முன் நிறுத்துகிறார். அதிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிய பறங்கிவீட்டுக்காரரை நினைவுகூர்ந்து அங்கிருந்த மூதாட்டி அன்புடன் கொடுத்த பிலிங் மரத்தையும் பாதுகாத்து வளர்த்ததையும் குறிப்பிடுகிறார். 85 வயதையும் கடந்து இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கும் இவர் இலங்கை வரலாற்றின் சுவடுகளை தன் நினைவுகளில் கொண்டிருக்கிறார்.

உலக அரங்கின் முதல் பெண் பிரதமர், எப்படிப் பிரதமரானார்? என்பதை சுனேத்திரா பண்டாரநாயக்க ‘திருமண நெக்லஸ்’ என்பதனூடாக முன்வைக்கிறார். இவ்வாறு இன்று நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் தமது நினைவுகளை மீட்டியுள்ளனர். சிலரது உண்மைப் பெயர்கள் பாதுகாப்பு கருதி தவிர்க்கப்பட்டும் உள்ளன. இந்தக் கதை சொல்லிகள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்தவர்கள். அத்துடன் புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் உள்ளனர். இவர்களையெல்லாம் ஒன்றிணைத்து அவர்களின் நினைவுகளை மீட்டி அதை வரலாற்று பதிவுகளாக்கிய மாலதி டி அல்விஸ_ம் ஹாசினி ஹப்புத்தந்த்ரியும் இந்நாட்டின் பன்மைத்துவ அடையாளங்களே. இந்நூலுக்கு மேலும் வளம்சேர்த்து எமது எண்ணங்களில் ஒவ்வொரு பொருட்களையும் அதன் பின்னாலுள்ள வரலாற்றையும் கொண்டுவர செய்பவர் படப்பிடிப்பாளர் ஷானி ஜெயவர்த்தன. வினையாற்றல் இல்லாத பொருட் படங்களும் கதைசொல்கின்றன.!
இந்நூல் பற்றிய மேலதிக விபரங்களுக்கு : (http://historicaldialogue.lk/event/launch-of-archive-of-memory/)