Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கொரோனா:
உயிருக்கு இனம்,மதம் இல்லை!

‘நாம் இன்று தேசிய ரீதியாக ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம். கொரோனா எல்லோரையும்தான் தாக்கப்போகிறது. அதற்கு மனிதர்களைப் போல ஜாதி பேதம் தெரியாது. மக்கள் இதன் தீவிரத்தை உணர வேண்டும். எங்களது தொண்டர்களுக்கும் இதைத்தான் சொன்னோம். தமிழ் முஸ்லிம் நபர்களைக் கண்டால் அவர்களுடனும் கண்ணியமான முறையில் நடந்து முகக்கவசங்களைக் கொடுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம்….’

19.03.2020  |  
கொழும்பு மாவட்டம்
பௌத்த தேரர் குழு முஸ்லிம் மதரஸா மாணவர்களுக்கு முகக்கவசங்களை அணிவித்து விடுவதைக் காணலாம்.

உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற உலகமே தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. கொரோனாவின் கோரப்பிடியில் தற்போது இலங்கையும் சிக்கியுள்ள நிலையில் இந்து பௌத்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வணக்கஸ்தலங்கள் அத்தனையும் மூடப்பட்டு குறித்த வளாகங்களில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்சந்தர்ப்பதில் தேரர்களை மையமாகக் கொண்டு இயங்கும் பௌத்த அமைப்பு ஒன்று பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வினியோகிக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதனூடாக நாட்டுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வையும், தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவர்கள் செயற்படுகின்றனர்.

கோட்டை புகையிரத நிலையத்தில் குறித்த பௌத்த தேரர் குழு முஸ்லிம் மதரஸா மாணவர்களுக்கு முகக்கவசங்களை அணிவித்து விடும் காணொளிகளும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள இந்தப்படங்களை ஆயிரக்கணக்கானோர் தமது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ‘கொரோனாவை மனித நேயத்தால் மாத்திரமே வெல்ல முடியும்’ என்ற தொனிப்பொருளிலும் ‘இன்று இணையத்தில் நான் கண்ட அழகிய புகைப்படம்’ என்ற வர்ணனையுடனும் இந்தப் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

‘கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற அனைவரும் ‘மாஸ்க்’ அணிய வேண்டும். தற்போதுள்ள இக்கட்டான நிலைமையை பயன்படுத்தி 15 ரூபாய்க்கு விற்க வேண்டிய ‘மாஸ்க்’கை 150 ரூபாய்க்கு விற்கிறார்கள். இது வியாபராம் செய்யும் தருணமல்ல. மக்கள் இந்த விலை அதிகரிப்பால் ‘மாஸ்க்’ வாங்குவதற்கு அவதிப்படுவதைக் கண்டுதான் இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். இன மத பேதமில்லாமல் எல்லோருக்கும் ‘மாஸ்க்’கினை வழங்கினோம்” என இக்குழுவின் தலைவர் ஜபுரேவல தேரர் தெரிவிக்கிறார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

புறக்கோட்டை தேசிய வைத்தியசாலை கோட்டை புகையிரத நிலையம் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற இடங்களில் கடந்த திங்கட்கிழமை(16.03.2020) மாத்திரம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமையன்று கேகாலை தேசிய வைத்தியசாலை உட்பட குறித்த வளாகத்தைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் முகக்கவசங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கண்டியிலும் முகக்கவசங்களை பகிர்ந்து கொடுக்க திட்டமிட்ட போதும் நாடெங்கும் விடுமுறை கொடுக்கப்படுவதால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்களை நம்முடன் அவர் பகிர்ந்துகொண்டார்.

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த சிறுவர்களான மதரஸா மாணவர்கள் முகக்கவசத்தை அணியத்தெரியாமல் இருந்ததால் அவர்களுக்கு தானே முன்வந்து முகக்கவசத்தை அணிவித்ததாக ஜபுரேவல தேரர் கூறுகின்றார். கமராவுக்கு தன் முகத்தைக் காட்டாத முஸ்லிம் பெண்கள் கூட புன்னகையுடன் முகக்கவசத்தை வாங்கிக்கொண்டதாக அவர் கூறுகின்றார். புர்கா பர்தா என்ற எந்தவிதமான பாகுபாடும் இன்றி அனைவரையும் தேடித் தேடி முகக்கவசங்களை வழங்கியுள்ளார்கள். இந்த இடத்தில் ஒரு உயிர்க்கொல்லி நோயிலிருந்து அனைத்து இனத்தவரும் பாதுகாப்பு பெற வேண்டும் என்ற நோக்கே இவர்களுக்கு பிரதானமாக இருந்தது. இவ்வாறு முகக்கவசங்களை வழங்குவதற்காக சுமார் 15 தேரரர்கள் தொண்டர்களாக செயற்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உதவியாக மேலும் சிலரும் பணிபுரிந்துள்ளார்கள்.

‘நாம் இன்று தேசிய ரீதியாக ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம். கொரோனா எல்லோரையும்தான் தாக்கப்போகிறது. அதற்கு மனிதர்களைப் போல ஜாதி பேதம் தெரியாது. மக்கள் இதன் தீவிரத்தை உணர வேண்டும். எங்களது தொண்டர்களுக்கும் இதைத்தான் சொன்னோம். தமிழ் முஸ்லிம் நபர்களைக் கண்டால் அவர்களுடனும் கண்ணியமான முறையில் நடந்து முகக்கவசங்களைக் கொடுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். எல்லோரும் ஒரே நாட்டில் இருக்கிறோம். நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருந்தாலும் இது அதைப் பற்றி சிந்திக்கும் நேரமல்ல. எல்லோரும் சேர்ந்துதான் கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயற்படுகின்றோம். இதனால் யாரும் எங்களுக்கு எதுவும் சொல்லவில்லை” என ஜபுரேவல தேரர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரமும், மத சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதங்களுக்குடையேயான முரண்பாடுகள் அப்பப்போ பல இடங்களில் வெளிப்பட்டுமுள்ளது. தத்தமது மதங்களை மட்டுமே நம்பும் பலர் அதற்கு மட்டுமே மரியாதையும் கௌரவமும் வழங்கும் நிலையுமுள்ளது. அதனால் ஏற்படும் வெறுப்பு பேச்சுகள் மத முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன. இன்று அவற்றையெல்லாம் மறந்து, எல்லோரும் மனிதர்களாக மனித குலம் காக்க ஒன்றுபட்டுநிற்கின்றனர். கோயில் திருவிழாக்கள், தொழுகைகள், கிறிஸ்தவர்களின் தவக்காலம் எல்லாம் நிகழும் இந்த மாதத்தில் இவற்றுக்காக கோயில்களுக்கு வரவேண்டாம் என்று மத தலைவர்கள் அறிவித்துவிட்டார்கள். பொதுவாகவே மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில்
ஜபுரேவல தேரரிடம் இருந்து முகக்கவசத்தைப் பெற்றுக்கொண்ட பொறியியலாளர் கசுன் தஸநாயக்க தி கட்டுமரனுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,


இப்போது மதங்களில் சொல்லியிருக்கும் விடயங்களை பின்பற்றுவதைக் காட்டிலும் தமது உயிரை பாதுகாத்துக்கொள்வதே அத்தியாவசிய தேவையாக உள்ளது.

‘கொரோனா என்பது ஒரு தொற்றுநோய். இறைவனின் புனிததலம் என்பதற்காக அங்கு கொரோனா தாக்கமல் இருக்கப்போவதில்லை. வணக்கஸ்தலங்களை திறந்து வைத்து அதற்கு யாராவது கொரோனா தொற்றுள்ளவர்கள் வந்தால் அது பாரியதொரு அழிவாக அமையும். அதைத் தடுப்பதே எமக்கு பிரதானமானது. உயிர் என்று வருகின்றபோது அடுத்தவர்கள் பற்றியும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மத நம்பிக்கை என்பது அவரவர்கானது. கொரோனா வைரஸ் போன்றதொரு பிரச்சினை வரும்போது முஸ்லிம் தமிழ் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் ஒன்றுபட்டால்தான் பிரச்சினையை முறியடிக்க முடியும் என்ற நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.’ என்கிறார்.
இது பற்றி மற்றுமொரு பிரயாணி கருத்து தெரிவிக்கையில் ‘இப்போது மதங்களில் சொல்லியிருக்கும் விடயங்களை பின்பற்றுவதைக் காட்டிலும் தமது உயிரை பாதுகாத்துக்கொள்வதே அத்தியாவசிய தேவையாக உள்ளது. கட்டாயம் வணக்கஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்று கிடையாது. வீட்டிலேயும் வணக்க வழிபாடுகளை செய்து கொள்ளலாம். உயிரோடு இருந்தால்தான் வணக்கஸ்தலத்துக்கு செல்ல முடியும். எனவே நோய்த்தொற்றுள்ள இந்தக்காலத்தில் அறநெறியா அறிவியலா என்ற வாதத்தைத் தாண்டி தற்போது அனைவருக்கும் உயிர் முக்கியமான ஒன்றாக உள்ளது’ என்கிறார் நப்ரிஸ் என்ற விவசாயக் கல்லூரி மாணவன.;

வெள்ளமோ யுத்தமோ வந்திருந்தால் முதலில் மக்களுக்காக தமது கதவுகளைத் திறப்பது மத ஸ்தலங்கள்தான். ஆனால் இங்கு வந்திருப்பது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். இதனை புரிந்து கொண்டு அனைத்து சமயத்தவர்களும் தமது ‘மதம்பிடித்த’ உணர்வுகளை விட்டுக்கொடுத்து மக்கள் ஒன்று கூறுவதைத் தடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது வரவேற்கத்தக்கது. என்றும் இந்தப்பிரச்சினை முடியும் வரை இந்த ஒற்றுமை தேவை என்றும் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.
பிரச்சினைகளை மக்கள் கூட்டமாக ஒன்று திரண்டு எதிர்கொள்வதும், எதிர்ப்பதும் வழமை. இங்கு கொரோனா என்ற இந்த உயிர்க்கொல்லி பிரச்சினைக்கு மக்கள் தனித்து இருப்பதும் சுகாதாரமாக இருப்பதும் முக்கியமாகிறது. ஆதற்காக ஆனைவரும் ஆங்காங்கே கைகழும் இடங்களை உருவாக்குவதும், முகக்கவசங்களை இலவசமாக வழங்குவதிலும் ஈடுபட்டிருப்பது இலங்கையர் என்ற ஒன்றுமையை காட்டுகிறது. கொரோனாவால் இதுவரை 19.03.2020 அன்று இரவு 10.00க்கு இலங்கையில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளானவர்கள் 58 பேர். சில பகுதிகளில் (நீர்கொழும்பு, வத்தளை) பொலீஸ் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது.
“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை யாரும் கேட்கவில்லை. தமிழா? சிங்களமா? முஸ்லீமா? கிறிஸ்தவரா? என ஊடகங்கள் கூட அறிக்கையிடவில்லை. வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது சம்பந்தப்பட்ட நபர் யார்? என்ன இனம்? என்ன மதம்? என கேள்விகேட்கும் நாம் இன்றைய நிலையில் கொரோனா பாதிப்பு இத்தனைபேருக்கு என்ற கூறகின்றபோது எதையும் கேட்கதோன்றவில்லை” என்கிறார் தியாகநாதன் யோகன்(55வயது)
எல்லா சமயங்களும் ஒன்றைத்தான் போதிக்கின்றன என்பதை கொரேனா வைரஸ் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பம் உணர்த்தியுள்ளது. சமயத்தலைவர்களால் கூட இன்னொரு சமயத்தை பின்பற்றுபவர்கள் தொடர்பாக கரிசனை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேவாலயம் பள்ளிவாசல் கோவில் விகாரை என எல்லாவற்றையும் மூடினாலும் வீதிகளில் மனிதத்துவத்துடன் செயற்படுபவர்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது.
உயிர் என்று வருகின்றபோது மதமோ இனமோ உயர்வோ தாழ்வோ எதையும் எம்மால் பார்க்கமுடிவதில்லை. “எல்லாமே மக்களுக்காக உருவாக்கப்பட்டவைதான். மக்களுக்கு ஒரு இக்கட்டு உருவாகின்றபோது எல்லாமே கேள்விக்குட்படும். மக்கள் ஒன்றுபட்டு பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றபோது நாடு நலம்பெறும்” என்கிறார் சமூக ஆர்வலர்.