Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

'கொரோனா'
தனித்திருத்தல் என்பது சமூகத்திற்கானது!

தனிமைப்படுத்தல் என்பது சுயநலத்தின் அடையாளமாக மாறக்கூடாது. பொது நலத்தின், சமூகம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இன்று நாங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உள்ளே வாழ்கின்றோம். கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இன்று நான் எப்படி சாப்பிடுவேன் என்பதை நினைக்கின்றார்களே தவிர….

30.03.2020  |  
கொழும்பு மாவட்டம்
பிரதீப் புஸ்பகுமார.

ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா அல்லது கொவிட் 19 வைரஸின் தாக்கமே இன்று உலக நாடுகளின் பேசுபொருள்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா மிகக்குறுகிய காலத்தில் தன் கோர முகத்தை காட்டி, இன்றளவில் சுமார் 33,000 இற்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டுவிட்டது. சுமார் 7 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அணுகுண்டுகளுக்கும் அஞ்சாத வல்லரசுகள் முதல் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் வரை அனைவரையும் வீட்டுக்குள் முடக்கிவைத்து ஆட்டம் காட்டுகின்றது. தனது நாட்டு மக்களையே தனிமைப்படுத்தி வைக்கும் கொடுமையை சீனா மற்றும் இத்தாலியில் காண்கின்றோம். இதன் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை இதுவரை கணிக்கமுடியாதுள்ளது.
கொள்ளை நோயாக மாறியுள்ள கொரோனாவை முதலாளித்துவ பொருளாதாரத்தால் தோற்கடிக்க முடியவில்லை. அப்படியானால் இடதுசாரி கொள்கையின்மூலம் வெற்றிகொள்ள முடியுமா? இந்த நிலையில் இலங்கை நிலைவரங்கள் பலவற்றை சிந்திக்கவைக்கிறது. இலங்கையிலும் இருவர் கொரோனாவால் மரணித்துள்ளார்(28,30.03.2020).

“ஒரே நாட்டு மக்களை தமக்குள் எதிரிகளாக நோக்கிய சமூகங்கள் இன்று ஒன்றிணைந்து அவர்களது பொது எதிரியாகிவிட்ட இந்த கொவிட் வைரஸை எதிர்த்து நிற்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் கருத்தியலில் மாற்றம் ஏற்படுகின்றது. அவர்களது எண்ணங்கள் மாறுகின்றன. கடவுளே இந்த உலகை படைத்தார் என கூறும் மதத்தலைவர்களும் இன்று முகத்தை மூடிக்கொள்கின்றனர். கடவுள் என்பவர் இருந்தால் இன்று வீதியில் நிற்பேனா என அலுத்துக்கொள்ளும் யாசகர்களும் முகத்தை மூடிக்கொள்கின்றனர்! அப்படியென்றால் காலத்திற்கு காலம் மாறுவது மனிதன்தானே?!;” என்கிறார் சமூக ஆர்வலரான பிரதீப் புஸ்பகுமார.

த கட்டுமரன்: ஒரு பொது எதிரிக்கு எதிராக உலகே திரண்டுநிற்கும் இந்த தருணத்தில் இலங்கை மக்களின் மனநிலையை எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?

2009ஆம் ஆண்டுக்கு முன், தெற்கு மக்களுக்கு வடக்கு மக்கள் எதிரியாக தென்பட்டனர். வடக்கிற்கும் தெற்கு எதிரியானது, இனக்கலவரமானது. அதன் பின்னர், தெற்கு மக்களின் பார்வைக்கு இஸ்லாமியர் எதிரியாகினர். அது மதக்கலவரமானது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமிழ், சிங்கள மக்களின் பொதுவான எதிரியாக இஸ்லாம் சமயத்தை நோக்கினர். இப்போது அதெல்லாம் மறைந்து ‘கொவிட்19’ தாக்கம் ஏற்பட்ட பின்னர், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் பார்வை கொரோனா மீது திரும்புகிறது.
இந்த சம்பவங்களை பார்த்தால், மக்களின் எதிரிகள் காலத்திற்கு காலம் மாற்றமடைகின்றனர். சம்பவங்களின் அடிப்படையில் மக்கள் காலத்துக்குக்காலம் தமது கருத்தியல்களைக் கட்டமைக்கக்கூடியவர்களாகின்றனர். எமது நாட்டு நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பதும் இந்த குணாம்சம்தான். ஒரே நாட்டு மக்களை எதிரிகளாக நோக்கிய சமூகங்கள் இன்று ஒன்றிணைந்து அவர்களது பொது எதிரியாக கொரோனாவை மாற்றிவிட்டனர். சம்பவங்களின் அடிப்படையிலான இத்தகைய கருத்தியல் மாற்றம்தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதிருக்கின்றது.

த கட்டுமரன் : அது எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத் தடையாகின்றது என்கிறீர்கள்?

தமது எதிரி யாரென்பதில் உடனடித் தீர்மானம் எடுத்து அதில் அதிக கவனம் செலுத்திய மக்கள், எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதில் கவனஞ்செலுத்தியது குறைவு. அதேநேரம் தற்போது எமது நாட்டில் காணப்படும் மக்களின் கருத்தியல் தவறாக உள்ளமையே நல்லிணக்க தடைக்கு காரணம். எமது கருத்தியல் எப்போதும் ஒரு சிறந்த இலக்கை அடைவதாக இருக்க வேண்டுமே தவிர, பிரிவுக்கு வித்திடக்கூடாது.

பிரதீப் புஸ்பகுமார.

கொரோனாவுக்கு மக்களிடையே எந்த பாகுபாடும் கிடையாது. அரசன் முதல் ஆண்டிவரை எந்த பேதமும் இன்றி தாக்குகின்றது. பிரபலங்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், சாதாரண மக்கள் என சகலரையும் அது தாக்குகின்றது. இங்கு கொரோனா முற்றுமுழுதாக ஜனநாயக ரீதியில் செயற்படுகின்றது. இதனை எதிர்கொள்ள வேண்;டுமாயின் மக்கள் மத்தியில் இப்போது எந்த பாகுபாடும் இருக்கவே கூடாது. தனிமைப்படுதல் என்பதை தான் மட்டும் என்பதன் அர்த்தமாக கொள்கின்றனர். இது எப்படி மற்றவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்?

த கட்டுமரன் : தனிமைப்படுதல் என்பது ‘தான் மட்டும்’ என்பதைத்தானே உருவாக்கும்? இதில் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

தனிமைப்படுத்தல் என்பது சுயநலத்தின் அடையாளமாக மாறக்கூடாது. பொது நலத்தின், சமூகம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இன்று நாங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உள்ளே வாழ்கின்றோம். கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இன்று நான் எப்படி சாப்பிடுவேன் என்பதை நினைக்கின்றார்களே தவிர, அந்த கிராமத்தில் உள்ள ஏனைய மக்கள், குறிப்பாக ஏழைகள் எவ்வாறு சாப்பிடுவார்கள் என நினைப்பதில்லை. ஒரு கிராமமாக, சமூகமாக, மக்கள் குழுவாக நினைப்பதில்லை. தனியாக தற்போதைய நிலையை சமாளிப்பது எவ்வாறென மட்டுமே யோசிக்கின்றனர். நான் 10 முகக்கவசங்களை வாங்கினால் அடுத்தவர்கள் எவ்வாறு வாங்குவார்கள் என நினைப்பதில்லை. சுயநலமாகவே செயற்படுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு, வசதியாக இருப்பதற்காக வீடுகளுக்கு செல்கின்றனர். மற்றவர்களுக்கு பரவினாலும் பரவாயில்லை, தான் சுகமாக வாழவேண்டும் என சுயநலமாக நினைக்கின்றனர். இதனைத்தான், முதலாளித்துவத்தின் கீழ் தன்னிச்சையாக (iனெiஎனைரயடளைஅ) செயற்படும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் என கூறுகின்றேன்.

த கட்டுமரன்: வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை பரிசோதித்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதே?

ஆனால் பலர் அதை தவிர்க்கிறார்கள். தம்மை தனிமைப்படுத்த சம்மதிக்கிறார்களில்லை. இன்று இத்தாலியின் இந்த நிலைக்கு யார் காரணம்? தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து தப்பியோடியவர்களால்தான் இவ்வளவுதூரம் பாரதூரமாகியது.
ஒரு விடயத்தைக் கூறுகிறேன். யுத்த காலத்தில் யாரும் தனியாக போரிட துவக்குடன் செல்லவில்லைதானே? அரசாங்கத்தின்மீது காணப்பட்ட நம்பிக்கையில் மக்கள் செயற்பட்டனர்.
தற்போது தனியாக சென்று பொருட்களை வாங்கி குவிக்கின்றனர். பணமுள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். முகக் கவசம், தொற்றுநீக்கி என்பவற்றை தான் நினைத்தவாறு கொள்வனவு செய்கின்றனர். இங்கு மக்கள் கருத்தியல் ரீதியாக தனியுரிமை கோட்பாட்டை (iனெiஎனைரயடளைஅ) நோக்கி செல்கின்றனர். மக்கள் அரசாங்கத்தின் மீதன்றி சந்தைப்படுத்தலில் நம்பிக்கை வைக்கின்றனர்.

த கட்டுமரன்: உலகமே கிராமமாகியுள்ள இந்த காலகட்டத்தில் இந்த நோய் பரவுகையின் அதிகரிப்புக்கு அதுவும் ஒரு காரணமா?

இப்போதைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் உலகமயமாதல் தோல்வியடைந்துவிட்டது என்பதைத் தானே காட்டுகின்றது. நம்மை நாமே சுயகட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் வரலாறு இதுவரை சந்திக்காத அழிவை சந்திக்கும் என்பதில் மாற்றமில்லை. உலகமயமாக்கலை முன்னெடுத்த முதலாளித்துவம் இன்று செய்வதறியாது திணறிப்போயுள்ளது என்பதுதான் உண்மை.

த கட்டுமரன்: இதனை வெற்றிகொள்ள என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள்?

மனோதத்துவத்தின் நிறுவுனரான சிக்மண்ட் பிரைட், மனிதனின் மனோவியலை தெளிவாக கூறியுள்ளார். குறிப்பாக வாழ்க்கையில் உருவாகும் மோதல்களும் பதற்றங்களும் ஒரு கட்டத்தில் அகற்றப்படுகின்றன என கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், யுத்தத்திற்கு பிறகு வந்த மனோநிலை வேறு, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட மனோநிலை வேறு. இப்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மனிதனை வேறு மனோநிலைக்கு கொண்டுசென்றுள்ளது. இது நிச்சயம் மனித மனங்களை மாற்றும். எண்ணங்களில் வேறுபட்ட மனிதன் இன்று உயிரை காக்க ஒன்றாக போராடுகின்றான். அந்த போராட்டம் இன்னும் வலுப்பெறக்கூடிய கூட்டுசிந்தனைக்குள் வரவேண்டும். தாக்கத்தின் விளைவை உணர்ந்து ஒவ்வொருவரும் செயற்படுவது அவசியம். அது அவர்களுக்கானதல்ல. சமூகத்திற்கானது.
இவ்வாறான ஒரு காலகட்டத்தில் முதலாளித்துவத்தில் மக்களை தன்னிச்சையாக செயற்படவைக்கும் நிலை காணப்படுகிறது. இது மோசமான நிலையாகும். ஆகவே கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் ஒரு பயணமே அவசியம்.
இப்போது மக்களின் கருத்தியலானது நல்லிணக்க கருத்தியலாக அமைய வேண்டும். அதுவே கொரோனாவை தோற்கடிக்க உதவும். அந்த கருத்தியல் மாற்றமே கம்யூனிசமாகும். அந்த கம்யூனிச கருத்தியலில் நல்லிணக்கம் உருவாகி மக்கள் தன்னிச்சையாக செயற்படுவதை தவிர்த்து, சமூகமாக, குழுவாக சிந்தித்து செயற்படுவர். தனது ஒவ்வொரு செயற்பாடும் சமூகம் சார்ந்ததென நினைக்கின்ற தன்மை கம்யூனிசத்தில் உள்ளடங்குகின்றது. கம்யூனிசத்தில் குறைந்தது சமயம் சார்ந்த வேறுபாடுகூட இல்லை. ஆகவே கருத்தியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதுவே நல்லிணக்கம். அதன்மூலம் கொரோனாவை தோற்கடிக்க முடியும்.