Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பிள்ளைகளின் கல்விக்குத்தான் அதிகம் செலவழிக்கிறேன், சேமிக்க எதுவும் எஞ்சுவதில்லை

யாழ். மத்தியபேருந்து தரிப்பிடத்தை கடந்து மின்சாரநிலைய வீதி வழியாக நடந்து கொண்டிருந்தேன். வீதி ஓரத்தில் காணப்பட்ட “பெண்கள் ஆட்டோ தரிப்பிடம்’’ என்னும் மும்மொழிகளிலமைந்த பெயர்சுட்டுப் பலகை எனது கவனத்தை ஈர்த்தது.   நான் சென்ற நேரத்தில் ஆட்டோ தரிப்பிடம் என்னும் பெயர் சுட்டுப் பலகைதான் அந்த இடத்திலிருந்ததே தவிர முச்சக்கரவண்டி எதுவும் இல்லை. ஐந்து நிமிட இடைவெளியில் முச்சக்கரவண்டி ஒன்று அந்த இடத்தில் வந்து தரித்தது. சாரதி ஆசனத்தினை பெண்மணி ஒருவர் அமர்ந்து அழகு செய்தார். குறுந்தூரப் […]

19.07.2016  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ். மத்தியபேருந்து தரிப்பிடத்தை கடந்து மின்சாரநிலைய வீதி வழியாக நடந்து கொண்டிருந்தேன். வீதி ஓரத்தில் காணப்பட்ட “பெண்கள் ஆட்டோ தரிப்பிடம்’’ என்னும் மும்மொழிகளிலமைந்த பெயர்சுட்டுப் பலகை எனது கவனத்தை ஈர்த்தது.

 
நான் சென்ற நேரத்தில் ஆட்டோ தரிப்பிடம் என்னும் பெயர் சுட்டுப் பலகைதான் அந்த இடத்திலிருந்ததே தவிர முச்சக்கரவண்டி எதுவும் இல்லை. ஐந்து நிமிட இடைவெளியில் முச்சக்கரவண்டி ஒன்று அந்த இடத்தில் வந்து தரித்தது. சாரதி ஆசனத்தினை பெண்மணி ஒருவர் அமர்ந்து அழகு செய்தார்.
குறுந்தூரப் பயணங்களுக்கு முச்சக்கரவண்டிகளை வாடகைக்கு அமர்த்தும்போது கட்டணத்தினை பேரம்பேசுவதற்காக ஆண்சாரதிகளோடு தர்க்கித்து பழகிய எனக்கு, முச்சக்கரவண்டியின் சாரதி ஆசனத்திலிருந்த பெண்முகம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
தன்னை ஆச்சரியமாக நோக்குவதை கண்ட அந்த பெண்மணி, “என்ன தம்பி, ஹயரோ? எங்கே போகவேணும்” என்று கேட்டார். “ஹயருக்கு அல்ல, உங்களோடு கொஞ்சம் உரையாட வந்திருக்கிறோம்” என்றேன். முகத்தில் தொனித்த ஏமாற்றத்தை வசனத்தில் காண்பிக்காமல் உரையாடச் சம்மதித்தார். நானும் என்னுடன் வந்த நண்பரும் அந்த முச்சக்கரவண்டியினுள் ஏறி பயணிகளுக்குரிய ஆசனத்திலிருந்தபடியே சாரதி ஆசனத்திலிருந்த அவருடன் உரையாடத் தொடங்கினோம்.
கோமளேஸ்வரி செல்வகுமார் (வயது 46). யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சேர்ந்தவர். கணவர் செல்வகுமார் கூலித்தொழிலாளி. இரு மகன்மாரும் இரு மகள்மாரும் உள்ளனர். இவர்களுடன் இவரது தங்கையின் மகனும் தங்கியிருக்கின்றார். அவருடைய நாளாந்த செலவுகளையும் இவர்களே கவனித்து வருகின்றார்கள். இவருடைய பிள்ளைகள் யாவரும் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள். மூத்த மகன் க.பொ.த. உயர் தரத்திலும் இரண்டாவது மகன் ஆண்டு 9இலும் படிக்கிறார்கள். அதேவேளை இரட்டைப்பிள்ளைகளான மகள்கள் இருவரும் தரம் 4இல் பயில்கின்றனர்.

கே: உங்களது மாதாந்த வருமானமாக எவ்வளவு?
ப: முச்சக்கரவண்டியை வாடகைக்கு ஓடுவதன் மூலம் தினசரி கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ரூபா தொடக்கம் இரண்டாயிரம் ரூபா வரை கிடைக்கும். இதன் மூலம் மாதத்திற்கு 45,000 ரூபாய்க்கு மேல் வருவாய். கணவருடைய கூலி வேலையாலும் சிறிதளவு பணம் கிடைக்கும். அது ஒரு 10,000 ரூபா தொடக்கம் 12000 ரூபா வரை கிடைக்கும்.

கே: உங்களுடைய சம்பாத்தியத்தினை எவ்வாறு செலவிடுகிறீர்கள்?
ப: உணவு, உடை தேவைகளை தவிர்த்து பெருமளவு பணத்தினை பிள்ளைகளின் பெருமளவில் பிள்ளைகளின் கல்வித் தேவைக்கே செலவழிக்கிறேன். சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டிலேதான் குடியிருக்கிறோம். வீட்டிற்கு மாதாந்த வாடகையாக மட்டும் 3,000 ரூபா செலவழிக்க வேண்டியிருக்கிறது.

கே: உங்களுடைய தற்போதைய வருமானம் தொடர்பில் திருப்தியடைகிறீர்களா?
ப: திருப்தி என்றே சொல்வேன். தன்னிறைவு அடைந்திருக்கிறேன் என்பதில் சந்தோசமடைகிறேன். முச்சக்கரவண்டி செலுத்துவதற்கு முன்பு கோழிவளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தேன். அதில் போதிய வருமானமில்லை. அன்றைய பொழுதுக்குள் கணவர் ஏதாவது உழைத்துக்கொண்டு வந்தால் அன்றிப் பட்டினி கிடக்கவேண்டிய நாள்களும் அப்போது இருந்தது. ஆனால் தற்போது அப்படியில்லை. தினசரி உணவை உறுதியாகக் கிடைக்கிறது. பிற தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கிறது.

கே: உங்கள் பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?
ப: பிள்ளைகள் எல்லோரும் பாடசாலை செல்கிறார்கள். அதற்காகத்தான் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. பாடசாலை செல்லும் நாள்களில் தினசரி காலையில் ஏதாவது ஒரு தேவைக்காக காசு கேட்டு நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் மாதாந்தம் செலவிடவேண்டியிருக்கிறது. எனினும் பிள்ளைகளின் கல்வித்தேவைகளுக்காக செலவழிக்க நான் பின்னிற்பதில்லை.

கே: உங்களுடைய ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் எவ்வாறு செலவிடுகிறீர்கள்?
ப: முச்சக்கரவண்டி செலுத்த ஆரம்பித்த பின்னர் பொழுது போக்க, ஓய்வு நேரத்தை கழிக்க எனக்கு நேரம் கிடைத்திருக்கிறது. அதுமாத்திரமின்றி, முச்சக்கரவண்டியிலேயே எனது குடும்பத்தினரை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லவும் வசதியாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் எனது குடும்பத்தினரை மாத்திரமல்லாமல் அயல் வீட்டாரையோ அல்லது அவர்களின் பிள்ளைகளையோ எனது பிள்ளைகளுடன் சேர்த்து அண்மையிலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவும் முடிந்திருக்கிறது.

கே: உங்களது வாழ்க்கைச்செலவினை ஈடுகட்ட உங்களது வருமானம் போதியதாக இருக்கிறதா?
ப: என்னுடைய முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுமிடத்து, ஆம் என்றே சொல்வேன். என்னுடைய உழைப்பு மாத்திரமின்றி என்னுடைய கணவனின் பங்களிப்பும் இருப்பதால் ஓரளவு போதுமானதாக இருக்கிறது.

கே: உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?
ப: என்னுடைய அடுத்த இலக்கு சொந்தமாக காணி வாங்கி அதில் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளவேண்டும் என்பதே. அத்துடன் பாடசாலை வாகனச் சேவைக்கு நல்ல கேள்வி இருக்கின்றது. ஒரு ஹைdயேஸ் ரக வாகனம் ஒன்றை எடுத்து சேவையை விரிவாக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது.

கே: நீங்கள் மாதாந்தம் எவ்வளவு சேமிக்கின்றீர்கள்? அதை என்ன நோக்கத்திற்காக சேமிக்கின்றீர்கள்?
ப: சேமிக்கக்கூடியதாக மாத முடிவில் கையில் ஒன்றும் எஞ்சுவதில்லை. எனது பிள்ளைகளின் கல்விக்காக மாதாந்தம் செலவிடும் தொகையை சேமிப்பு என்பதை விட முதலீடு என்றே கருதுகின்றேன்.