Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

காயப்பட்ட மனதாலும் உடலாலும் மண் செழிக்கிறது !
இவர்களா  மாற்றுத்திறனாளிகள் !?

கச்சான் பிடுங்கும் காலம் வந்துவிட்டது.!வாழை குலை போட்டுள்ளது. மரவள்ளி நல்ல கிழங்குகளுடன் செழிப்புற்றுள்ளது. பீற்றூட், புடலங்காய், வெண்டி என மரக்கறிகளுக்கும் பஞ்சமில்லை. தென்னைகள் காய்ப்பதற்கு தயாராகிவிட்டன.  ஜம்புவும் பலாவும் காய்க்கும் காலம் வெகு தொலைவிலில்லை. இவ்வாறு நிலம் தரும் பயனை நன்கு அனுபவிக்கும் மரங்களும் தாவரங்களும் என அந்த வீடு நிமிர்ந்துநிற்கிறது. வவுனியாவில் கணேசபுர கிராமத்தில் 2010இல் குடியேறிய சிவாஜினி கைக்குழந்தையுடன் நிலத்தை செழிப்பாக்கத்தொடங்கியவர். இன்று வரை தொடர்கிறார். பயிர் வளர்ப்பு முதல் கோழிவளர்ப்பு வரை இயற்கைமுறையில் […]

09.09.2016  |  
வவுனியா மாவட்டம்
​தோட்டத்தில் வேலை செய்யும் தம்பதியினர்.

கச்சான் பிடுங்கும் காலம் வந்துவிட்டது.!வாழை குலை போட்டுள்ளது. மரவள்ளி நல்ல கிழங்குகளுடன் செழிப்புற்றுள்ளது. பீற்றூட், புடலங்காய், வெண்டி என மரக்கறிகளுக்கும் பஞ்சமில்லை. தென்னைகள் காய்ப்பதற்கு தயாராகிவிட்டன.  ஜம்புவும் பலாவும் காய்க்கும் காலம் வெகு தொலைவிலில்லை. இவ்வாறு நிலம் தரும் பயனை நன்கு அனுபவிக்கும் மரங்களும் தாவரங்களும் என அந்த வீடு நிமிர்ந்துநிற்கிறது. வவுனியாவில் கணேசபுர கிராமத்தில் 2010இல் குடியேறிய சிவாஜினி கைக்குழந்தையுடன் நிலத்தை செழிப்பாக்கத்தொடங்கியவர். இன்று வரை தொடர்கிறார்.

பயிர் வளர்ப்பு முதல் கோழிவளர்ப்பு வரை இயற்கைமுறையில் செய்துவரும் இவருடன் தற்போது இரண்டுவருட தடுப்புக்காவலின்பின் கணவரும் இணைந்து செயற்படுகிறார்.  தமது தேவைக்காகவும் விற்பனைக்காகவும் மிகச் சிறிய அளவில் வீட்டுத் தோட்டமாகவே இவற்றை செய்துவருகின்றனர். இரண்டு அறையில் ஒரு சிறிய வீட்டை அமைத்துள்ள இவர்கள் இன்னும் அதை முழுமையாக்கவில்லை. கணவன் மனைவி சின்ன மகன் என் மூவர் கொண்ட இந்த குடும்பம் கடின உழைப்பிலும் திட்டமிடலிலும் தமது தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமில்லாமல் இயற்கை உணவுகளை வழங்கி மற்றவர்களுக்கும் உதவுகின்றனர். யார் இவர்கள்?

போரின் வடுக்ககளாக, நிவாரணங்களால் நிவர்த்திக்க முடியாத காயங்களுடன் வாழும் ஜெகநாதன் – சிவாஜினி தம்பதியினரும் அவர்களின் 7வயது மகனும்.

1989இல் மட்டக்களப்பு உறுகாமம் கிராமத்தில் நடந்த இராணுவ சுற்றிவளைப்பில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட தமையனை கண்டுபிடிக்கமுடியாத நிலையில், தமது பாதுகாப்புக்காக போராட்டத்தில் இணைந்தவர் ஜெகநாதன். “தகவல் தெடர்பாடல் பிரிவில் எனது வேலை அமைந்தது. 1993 இல் நடந்த இராணுவத்தினுடான சமரில்  எனது கண்கள் இரண்டும் பாதிப்படைந்த நிலையில் ஒரு கண் முற்றாக பார்வையை இழந்தது. பின்னர் ஆவணப்படுத்தல் பிரிவில் பணியாற்றினேன்.” ஏன தனது பழைய அனுபவங்களை முன்வைத்தார்.

சிவாஜினியின் குடும்பத்தில் அவரின் மூத்த சகோதரி போராட்டத்தில் இணைந்ததன் பலனாக அவர்களது தமையனை இராணுவம் சிறைபிடித்தது. பாதுகாப்பு கேள்விக்குறியாக இவரும் போராட்டத்தல் இணைந்தார். “இயக்கத்தில் இணைந்த ஆரம்பத்தில் முதல் 6 மாத காலப்பகுதிக்கு அடிப்படைப் பயிற்சிகளும் பின்னர் படையணிகளுக்குரிய பயிற்சிகளையும் பெற்றேன். வாகனம் ஓட்டுதல், கராட்டி போன்ற சில முக்கியமான பயிற்சிகளும் தரப்பட்டன. நான் வாகனம் ஓட்டுதல் களஞ்சியப் பொறுப்பு, தகவல் தொடர்பாடல் போன்ற துறைகளில் ஈடுபடுத்தப்பட்டேன்.  2001 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெற்ற சண்டையில் எனது வலது கால் இல்லாமல் போனது. பின்னர் நான் மாற்றுத்திறனாளிகளுக்கான நவம் அறிவுக்கூடத்தில் தொழிற்பயிற்சிகளைப் பெற்றேன். பின்னர் இறுதி யுத்தகாலத்தில் காயப்பட்டதில் கையொன்றும் சரிவர இயங்காமல் போயிற்று. இதற்கிடையில், அக்காவால் அண்ணா எப்படி காணாமல் ஆக்கப்பட்டாரோ, அதேபோல் 2004இல் என்னால் எனது அப்பா இல்லாமல் ஆக்கப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்டார். அந்நேரம் பல குடும்பங்களில் ஆண்கள் பறிக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.  ” என்ற சிவாஜினியின் அனுபவங்கள் கொடுமையானவை.

ஒருகாலை இழந்து, சரிவர இயங்காத ஒரு கையுடன் சிவாஜினியும், ஒரு கண்ணை இழந்து மறுகண்ணிலும் பார்வைக் குறைபாடு கொண்ட ஜெகநாதனும் மனம் தளராத தம் முயற்சியால் இயற்கை முறையிலான வீட்டுத்தோட்டத்தில் ஈடுபட்டு தமது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதற்காக மாற்றுத்திறனாளிகளான இவர்கள்க  டின உடல் உழைப்பைக் கொடுக்கவேண்டியுள்ளது. தம் இயலுமைக்கு அப்பால் அதை அவர்கள் செய்துவருவதால்தான் “இந்த வீட்டுத் தோட்டத்தில் வேலை அனைத்தையும் நாமே செய்துவருகிறோம். அதனால்தான் இந்தவருடம் எமக்கான மலசலகூடத்தை அமைக்க முடிந்தது. அடுத்த வருடம் நீர்த்தாங்கி ஒன்று அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் ஜெகநாதன்.

 

இதில் சிவாஜினிக்கு சிற்பங்கள் போன்ற அழகு கலைப்பொருட்கள் செய்யும் திறனுள்ளது. அதை அவர் ‘நவம் அறிவுக்கூடத்தில் பயிற்சியாகப் பெற்றுள்ளார்.

“நவம் அறிவுக்கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு தொழிற்பயிற்சிகள் இருந்தன. அந்த பயிற்சிகள் தந்த மனஉறுதிதான் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடிகிறது”.என்கிறார் சிவாஜினி.

2007இல் திருமணம் முடித்த இவர்களுக்கு இறுதி யுத்தத்தின்போதே குழந்தை பிறந்திருந்தது. சிவாஜினி குழந்தையுடன் முகாமில் தஞ்சமடைய ஜெகநாதன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

“ எனது கணவர் தடுத்துவைக்கப்பட்டபின் தனியாக கைக்குழந்தையுடன் இந்தக் காணியில் கொட்டில் ஒன்று அமைத்து எனது அம்மாவின் உதவியுடன் தென்னை மரங்களை வைத்தேன். அரசசார்பற்ற நிறுவனத்தின் உதவியுடன் பயிரிடத்தொடங்கினேன்.  பல சித்திரவதைகளைக் கடந்து இரண்டுவருடம் கழித்து கணவர் வந்தார். தற்போது அவருடன் இணைந்து மேலும் பல பயிர்களைப் பயிரிட்டு வருகிறோம்.” என்று சிவாஜினி வாழ்க்கையே போராட்டமாகிப்போனதை விபரிக்கிறார்.

சமுர்த்தியைத்தவிர போரின் பின்னர் அரசு கொடுத்த எந்த நிவாரணமும் இவர்களை வந்தடையவில்லை. வீட்டுத்திட்டத்தைப்பெறுவதற்கு இவர்களது காணி அரசு குறிப்பிடும் எல்லைக்குள் இல்லை. அடுத்தது, சில கொடுப்பனவுகளைப் பெறுவதாயின் அலுவலகங்களுக்கு ஏறி இறங்க செலவாகும் நேரவிரயத்துள் இவர்கள் பல்வேறு வேலைகளைச் செய்துவிடமுடியம். சொந்த முயற்சியும் திட்டமிடலும் இவர்களை வழிநடத்துகிறது.

தோட்டத்தில் வேலை செய்யும் சிவாஜினி
ஒரு கையும் ஒரு காலும் எப்போதும் சளைப்பதில்லை. தோட்டத்தில் சிவாஜினி

“வீட்டுத்தோட்டச் செய்கையில் சந்தைப்படுத்தல் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இயற்கை முறையிலேயே கோழி வளர்க்கிறோம். முட்டைகளை உள்ளுரிலேயே விற்பனை செய்கின்றோம். சிலர் வீட்டிலேயே வந்து வாங்கிச் செல்வார்கள். விளைபொருட்களைக் கொண்டு செல்லவும் அவற்றை விற்பதற்கும் சந்தையில் கமிசன் அறவிடப்படுவதால் அதிக இலாபமே வருவதில்லை. சில வியாபாரிகள் எமது தோட்டத்திற்கே வந்து எடுப்பார்கள். இதனால் ஓரளவு இலாபம் காணக்கூடியதாக உள்ளது. இதனால் எந்த காலப்பகுதிக்கு எந்தப் பயிரிற்கு அதிகம் கேள்வி இருக்கிறதென்பதை அவதானித்து பயிரிடுகின்றோம்.” என்று தமது தற்போதைய நிலையை விளக்கினார் ஜெகநாதன்.

போராளிகளாக இருந்தவர்களுக்கு தடுப்புகாவலும்,புனர்வாழ்வு முகாமும் ‘சமூகத்துடன் இணைத்தல்’ என்ற கருப்பொருளில் பல்வேறு தண்டனைகளையும், பயிற்சிகளையும் கொடுத்திருந்தாலும், இன்றும் சமூகத்துடன் இணைவது கடினமானதாகத்தான் உள்ளது.

“ சமூக இணைவு என்பது இந்த மரக்கறி வாங்கலிலும் விற்றலிலும் முடிந்துவிடுகிறது. அதற்கு மேலால் யாரும் எம்முடன் பழக வருவதில்லை. ஏன் எமது உறவினர்கள் கூட எம்மை கவனத்தில் எடுப்பதில்லை. அவர்களுக்க ஒருவித பயம் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது. நாங்களும் ஒதுங்கியே வாழ்கிறோம்.” என்கிறார் ஜெகநாதன்.

மங்கிபோகும் ஒரு கண்ணுடன் தோட்டத்து வேலைகளில் ஜெகநாதன்
மங்கிபோகும் ஒரு கண்ணுடன் தோட்டத்து வேலைகளில் ஜெகநாதன்

இயங்கக்கூடிய ஒரு காலுடனும் கையுடனும் மண்ணை செழிக்கப்பண்ணுவது முதல் சைக்கிளில் சென்று மகனை பாடசாலைக்கு கொண்டுசெல்வது கூட்டிவருவது வரை அனைத்து வேலைகளையும் செய்யும் இவர் மாற்றுத்திறனாளியா? பார்வை குறைந்துசெல்லும் ஒரு கண்ணுடன் குடும்பத்தை,பயிர்களை பராமரிக்கும் இவர் மாற்றுத்திறனாளியா?