Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கிராமத்தின் முன்னோடி!!
பாடசாலை செல்லவில்லை.!

“இவ்வூரில் ஓரளவிற்கு அரசாங்கமும், நிறுவனங்களும் உதவிகளை வழங்குகின்றபோதும் அவற்றினை பயன்படுத்தி முன்னேறத் தெரியாதவர்களாக இங்கு பலர் உள்ளனர்”

05.02.2017  |  
மட்டக்களப்பு மாவட்டம்
சில பொழுதுகள் ஆடுகளுடனும்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்கும், இங்கும் ஆறுகள் ஓடி ஓடி அழகைகொடுத்து நிற்க, உயரமான மேட்டுநிலங்கள் மத்தியிலேயே பல கிராமங்கள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்திற்குச் சென்று, படுவான்கரை என்றுகேட்டால் எல்லோரும் இலகுவாக காட்டிவிடுவார்கள். ஏனென்றால் யுத்தத்தில் பல உயிர்களைக் காவு கொடுத்த பிரதேசம் இது. இங்கு உழுதுண்டு வாழ்வோர் அதிகமானோர். இங்கு வந்து கொக்கட்டிச்சோலை எங்கிருக்கின்றது என்றால், எல்லோரும் இனங்காட்டிவிடுவர். 1987இல் இறால் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களை கூட்டமாக வெட்டிக் குவித்த இடம் கொக்கட்டிச்சோலை (http://tamilnation.co/indictment/indict042.htm) அங்கிருந்து மணல்பிட்டி வீதியினூடாக தாந்தமலை முருகன் ஆலயத்தினை நோக்கி செல்லும் வீதியின் இருமருங்கிலும் நெல்வயல்சூழ மத்தியிலே; அந்த அழகிய கிராமமான மாவடிமுன்மாரி அமைந்திருக்கின்றது. இது மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 24 கிலோமீற்றறுக்கு அப்பால் உள்ள கிராமமாகும்.
“1990ம் ஆண்டு மாவடிமுன்மாரி கிராமத்தானாய் பிறந்து, இரண்டரை வயதில் தாயை இழந்து தாய் பாசத்தினையும் பறிகொடுத்து நின்றேன். என்னோடு இருந்த தந்தையும் வேறு திருமணம் செய்துவிட்டார். இதனால் என் அம்மம்மாதான் என்னை வளர்த்து வந்தார். பின் எனது மாமியின் அரவணைப்பிலும் சில காலம் வாழ்ந்தேன்.” என தன் ஆரம்ப வாழ்க்கை பற்றிக் கூறும் தியாகராசா சோதிநாதன் பிறப்பிலேயே இருகால்களிலும் குறைபாடுடையவராக பிறந்த மாற்றுதிறனாளி. கால்கள் சரிவர இயங்காததால் நடமாடும் இயல்பை சிறுவயதிலேயே இழந்து யாரும் விரும்பாத ஒருவராய் வாழ்ந்திருக்கிறார்.
நாட்டின் பிரச்சினையும் அவரை மேலும் வறுமைக்குள் தள்ள கஸ்ரத்தின் மத்தியில் வேறு இடங்களுக்குச் சென்று யாசகம் செய்து வாழ்ந்து வந்ததாக மனமுடைந்து கூறுகிறார். வறுமையும் இவரது இயலாமையும் இவரை பாடசாலைக்கு செல்வதற்கும் அனுமதிக்கவில்லை. சிலவேளை தாயார் உயிருடன் இருந்திருந்தால் போயிருப்பாரோ என்னவோ!? . விவசாயத்தையே நம்பி வாழும் இந்தக் கிராம மக்களுக்கு விவசாயம் செய்வதற்கும் நாட்டு பிரச்சினை இடங்கொடுக்கவில்லை. மொத்தத்தில் கிராமமே வறுமையில் இருந்த காலப்பகுதியில் இவரது இளமைக்காலம் கழிந்துள்ளது. 2007இல் அந்தக் கிராமத்தை விட்டே இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழவேண்டிய நாட்டு சூழலில் வாழ்வே வெறுத்துப்போனது என்கிறார் தியாகராசா சோதிநாதன்.

மகளை ஏற்றிக்கொண்டு சைக்கிளில் செல்லும் சோதிநாதன்
மகளை ஏற்றிக்கொண்டு சைக்கிளில் செல்லும் சோதிநாதன்

அப்போது, கால் இரண்டும் நடக்க முடியாத நிலையில் யாசகம் புரிந்து வந்த அவரை யாரும் ஏறெடுத்து பார்க்காத போது தேவதையாக வேவிதா சோதிநாதன் தனக்கு வாய்த்ததாக கூறுகிறார். வேவிதாவை காதலித்து திருமணம் செய்தபோதும் வாழ்க்கை பெரும் சுமையாகவே இருந்துள்ளது. குடும்பத்தை நடத்த மீண்டும் பெரும் சிரமப்பட்டுள்ளார். அவர் திருமணம் முடிக்கும் போது அவருக்கு வயது 19.
திருமணத்தின் பின் வாழ்வின் மீதான பிடிப்பு கொஞ்சம் வந்தாலும் பொருளாதாரம் அவரை வாட்டியது. அப்போதுதான் ஆபத்பாந்தவராக அந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று அவருக்கு பொருளாதாரத்திற்கான வழியைக் காட்டி நம்பிக்கையைக் கொடுத்து அவரது முயற்சிக்கு வித்திட்டது. யாசகம் செய்த இவரை சுயதொழிலுக்கு உற்சாகமளித்தது. கோழிக்குஞ்சுகள், ஆடுகளைக் கொடுத்து அவற்றை வளர்த்து பயன் பெற உதவியது.


வீட்டுத் தோட்டத்தையும் உருவாக்கி கச்சான், கீரை, பச்சைமிளகாய் ,பாகல் ,சோளம், பூசனி,கத்தரி என மரக்கறிகளையும் தானியங்களையும் பயிரிட்டு வருகிறேன்.

“அவர்கள் அளித்த 50 கோழிச்சுஞ்சுகளும் 5 ஆடும் என் வாழ்வில் நம்பிக்கையை ஊட்டின. அதன் வருமானத்தில் அந்த தொழிலை பெருக்கி மேலும் 20குஞ்சுகளை வாங்குவதும் வளர்ப்பதும் முட்டை,இறைச்சி என விற்று பணம் ஈட்டினேன். தற்போது 15ஆடுகளையும் வளர்த்துவருகிறேன். அது மட்டுமல்லாமல் வீட்டுத் தோட்டத்தையும் உருவாக்கி கச்சான், கீரை, பச்சைமிளகாய் ,பாகல் ,சோளம், பூசனி,கத்தரி என மரக்கறிகளையும் தானியங்களையும் பயிரிட்டு வருகிறேன். எமது தேவைக்கு மட்டுமல்லாமல், மேலதிக விளைபொருட்களை விற்பனைசெய்தும் வருகிறேன். “ என்கிறார் தியாகராசா சோதிநாதன்.

வீட்டுத் தோட்டத்தில் கச்சான் பிடுங்குகிறார் சோதிநாதன்.
வீட்டுத் தோட்டத்தில் கச்சான் பிடுங்குகிறார் சோதிநாதன்.

இவை மட்டுமல்லாமல், தியாகராசா சோதிநாதனுக்கு ஒலிபெருக்கி உபகரணங்களும் ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தின் மூலம் கிடைத்துள்ளது. அதை வாடகைக்கு விட்டும் அவர் பணமீட்டிவருகிறார். இப்பொழுதெல்லாம் அவரை சைக்கிளில் காணமுடிகிறது. தானாகவே சைக்கிள் ஓட கற்றுக்கொண்டு துர இடங்களுக்கு ஒலிபெருக்கியை வாடகைக்கு விட்டுவருகிறார்.
“இத்தொழிலை நான் தொடர்ச்சியாக செய்வதற்கு எனது மனைவி கூடவே இருந்து சகலவிதமான உதவிகளையும் செய்து தருகின்றாள், நான் சோர்ந்து போனாலும் என்னை தட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பவர் என் மனைவிதான். நான் ஒலிபெருக்கியை கொண்டு செல்கின்ற போது வீட்டில் உள்ள கோழி, ஆடுகளை பராமரிப்பது என் மனைவிதான். இப்படியான மனைவி என் வாழ்வில் கிடைத்தமையும் எனக்கு பெரும் ஆறுதல்” என்று கூறும் இவர் தற்போது தரம் 2இல் கல்வி கற்கும் மகனுக்கும் வயது 2இல் உள்ள மகளுக்கும் தந்தையாவார். மகனை பாடசாலைக்கு கொண்டு விடுவதில் இருந்து மனைவியுடன் வெளியில் போவது வரை சைக்கிளிலேயே சென்று வருகிறார்.
அந்த ஊரில் உள்ள வயதான ஒருவரை தெருவில் வழிமறித்து, உங்களுக்கு தியாகராச சோதிநாதனைத் தெரியுமா என்றோம். அவர் யோசித்துக்கொண்டிருக்க பக்கத்தில் நின்றவர் “கண்ணனைத்தான் கேக்கிறார்கள்” என்றார்.
“கண்ணன் என்றுதான் இங்குள்ளவர்களுக்கு தெரியும். அவன் மிகவும் சுறுசுறுப்பான பிள்ளை, எங்கு என்ன நடந்தாலும் அங்கு முதலில் நிற்பது அவன்தான். யானை அடித்தாலும், வீட்டை உடைத்தாலும், சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு ஓடிவிடுவான். தன்னாலான உதவிகளைச் செய்வான். இங்குள்ளவர்களும், ஊரில் உள்ள அமைப்புக்கள் பற்றி ஏதாவது அறிய வேண்டுமென்றால் கண்ணனிடம்தான் கேட்பார்கள். மரணவீடு நடந்தால் அவனிடம் உள்ள ஸ்பீக்கரையும், கதிரைகளையும் கொண்டுபோய் போடுவான். பணமேதும் கேட்கமாட்டான், கொடுத்தால் மட்டும் வாங்கி எடுப்பான். கண்ணன் என்றால் எல்லோருக்கும் விருப்பம். எங்கேயும், உதவிகள், சேவைகள் பெறச்செல்வதென்றாலும் ஊருக்குள் அவனிடம் ஆலோசனை பெற்றுத்தான் இங்குள்ளவர்கள் செல்வர். ஆடு, கோழி வளர்ப்பது தொடர்பிலும், அவற்றுக்கு நோய் ஏற்பட்டால் என்னநோய் என்று கண்டுபிடிச்சு இங்குள்ளவர்களுக்கு, இவன்தான், மருந்தையும் சொல்லிக்கொடுக்கிறான் இப்படியான பிள்ளைக்கு கால் இரண்டையும், கடவுள் இப்பிடி கொடுத்திற்றார்.” என்று கண்ணனைப் புகழ்கிறார் ஞா.பேரின்பம்(வயது75) என்ற பெரியவர்.

அதானால்தான் தியாகராச சோதிநாதனுக்கு கோயில் நிர்வாகம், விளையாட்டுக்கழகம்,கிராம அபிவிருத்திசபை என பொது அமைப்புகளில் உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. அந்தக் கிராமத்து வறியவர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இத்தனைக்கும் இவருக்கு எழுத வாசிக்க தெரியாது. கையொப்பம் இடுவதற்காக அவரது பெயரை மட்டும் எழுதுவதற்கு பழகியுள்ளார். இந்த வயதுக்கு பிறகு எழுத வாசிக்க பழகுவதற்கு என்ன செய்யவேண்டும் என அவருக்கு தெரியவில்லை. இலகுவாக எழுத்துக்களை கற்றுக்கொள்வதற்கு எவராது உதவி செய்தால் கற்றுக்கொள் தயாராகவும் உள்ளார்.
“இவ்வூரில் ஓரளவிற்கு அரசாங்கமும், நிறுவனங்களும் உதவிகளை வழங்குகின்றபோதும் அவற்றினை பயன்படுத்தி முன்னேறத் தெரியாதவர்களாக இங்கு பலர் உள்ளனர்”என்று ஆதங்கப்படும் தியாகராச சோதிநாதன் கிராமக் கூட்டங்களில் இதுபற்றி உரத்துக் கூறிவருகிறார். தனது கிராமத்தினை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இவருக்குள் நிறையவே உள்ளது என்பதை மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதில் தெரிகிறது.