Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.
‘கோழி மேச்சாலும் கவுண்மெந்தில மேய்க்கோணும்’

“அரசு ஆகக்குறைந்தது முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து அங்கு தொழிற்சாலைகளை உருவாக்கினால் அவர்கள் தொழில்களையாவது செய்வார்கள். ஆனால், வெளிநாட்டு முதலீடுகளும் இல்லை, அரச தொழில்களும் இல்லை, தொழில் செய்வதற்கான சூழ்நிலைகளும் இல்லை, அதற்கான கொள்கைகளும் இல்லை, ஆகக்குறைந்தது அவர்களுக்கு கடன்களை கொடுத்து சுயதொழிலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பு வசதிகளும் இல்லை

19.03.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

வடக்கு கிழக்கிலே அண்மையில் வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற தொடர் போராட்டம் ஒன்றினை அமைதி வழியில் மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் 2016இல் 3ஆவது காலாண்டில், 4.50வீதம் இது இரண்டாவது காலாண்டில் 4.60 ஆக இருந்தது. இதன்படி வேலையற்றோர் வீதம் குறைந்துள்ளது. ஆனால் இளைஞர்களிடையே என்று பார்க்கின்றபோது 21.20 வீதமாக இருந்தது 21.60 வீதமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது..(ieconomics.com/srilanka –unemploymemt-rate) எனவே ஒவ்வொருவருடமும் வெறியேறிக்கொண்டிருக்கும் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையாயின், இந்த வீதத்தில் அது தாக்கம் செலுத்தும். அந்த வகையில் வடக்கு கிழக்கு பெரும்பாலும் அரச வேலைவாய்ப்பையே நம்பியுள்ள இடங்களாக உள்ளன. அதிலும் பெரும்பாலான தமிழ் மக்கள் அரசவேலையே கௌரவம் பாதுகாப்பு உடையது என நம்புகின்றனர். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘கோழி மேச்சாலும் கவுண்மெந்தில மேய்க்கோணும்’ என்று. சாதாரண ஒரு அலுவலக உதவியாளர் வேலையாக இருந்தாலும் கூட அது அரச வேலையாக இருக்கவேண்டும் என்பர். இதற்கான முக்கிய காரணம் என்ன?

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் , கலந்திருப்போர்

“ அரசாங்கத்தில வேலை எடுத்திற்றா அது நிரந்தர வேலை அல்லோ..பிற்காலத்தில பென்சனும் வரும். குடும்பத்திற்கு பாதுகாப்பு தானே..” என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 55வயதுத் தாய் எம்.பக்கியலக்சுமி. எனவே அனேகமானோர் அரசு கோரும் விண்ணப்பங்களுக்காக காத்திருப்பர். அப்படி காத்திருந்தவர்களின் தொகை இப்போது மிக அதிகமாகிவிட்டது என்பதுதான் வடக்கு கிழக்கின் நிலை. இந்நிலையில்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர் ராஜசிங்கம் சுதீபன்கூறுகிறார்,

“வடகிழக்கிலும் கிழக்கிலும், நாங்கள் மத்திய, மாகாண அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு வேலை தருகிறோம் வேலை தருகிறோம் என்று சொல்லிச்சொல்லி இற்றைக்கு சுமார் 3500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலையற்று வீதியில் போராடுகிறார்கள். போராட்டத்தில் கலந்திருப்போர் நாளாந்த கூலி வேலை செய்பவர்களாகவும், பிள்ளைகளை வீட்டிலே விட்டுவிட்டு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருப்பவர்களாகவும் உள்ளனர்.” என்கிறார்.

               சரி அரசிடம் எந்தமதிரியான வேலைகளை எதிர்பார்கின்றீர்கள்?

“எமது குடும்ப வருமானத்தை ஈடுசெய்வதற்கு என்ன வேலை தந்தாலும் நாங்கள் அதை                     ஏற்கத் தயார்.” என்றார்.

              ஏன் நீங்கள் தனியார் துறைகளில் முயற்சிக்கக் கூடாது?

“வடக்கு கிழக்கில் அதிகரித்த தொழில் வழங்கத்தக்க எத்தனை தனியார் நிறுவனங்கள்                    இருக்கின்றன என்பதைக் கூறமுடியுமா? இங்கே அவை குறைவு, இல்லை என்றும்                            சொல்லலாம்”

            நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள பட்தாரிகளுக்கு இந்தப்பிரச்சினை 
            இல்லை என்று எண்ணுகிறீர்களா?

இவ்வளவு மோசமாக இருக்காது. வடக்கு கிழக்குக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள். இங்கேதான் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமாக உள்ளனர். யுத்தத்தால் சீர்குலைந்த வாழ்க்கையை, எல்லாவற்றையும் இழந்து நின்ற வாழ்க்கையை மீள்ககட்டியெழுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஓட்டுமொத்த மக்களும் யுத்தம் முந்தபின் குடிக்கும் கோப்பையில் இருந்து இருக்கும் வீடு வரைக்கும் புதிதாக கொள்வனவு செய்யவேண்டிய நிலை பல கிராமங்களில் இருந்தன. அரச வேலையில் இருந்தவர்கள் மட்டும் சமாளித்துக்கொண்டார்கள். ஏனையோர் இன்றும் ஒருவேளை உணவுக்கு அல்லாடுபவர்களாக உள்ளனர். இந்த நிலையில் வேலை   இல்லை என்றால் என்ன செய்வது? ஏனைய மாகாணங்களில் எதோவொரு வகையில் அவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. குறிப்பாக தென் மாகாணங்களில்தான் தனியார் நிறுவனங்கள் அதிகரித்துக் காணப்படுகிறன. எனவே வேலயில்லாத் திண்டாட்டம் சாமாளிக்ககூடியதாக அங்கு உள்ளது என்பதே என் அபிப்பிராயம்.

            பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு கொடுக்கும் போது பொதுப்பரீட்சை
            வைத்தே தேர்ந்தெடுக்கிறது. இதை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்?

நாம் பட்டம் பெற்ற படங்கள் தொடர்பில் பாடரீதியான பரீட்சைகளை வைக்காமல் பொதுவானதொரு பரீட்சையினையே வைக்கிறார்கள். அந்தப் பொதுப் பரீட்சை இல்லாது நேர்முகப்பரீட்சையியன் மூலம் தேர்ந்தெடுக்கலாம். அதையும் ஒரு கோரிக்ககையாக நாம் வைத்துள்ளோம்.” என்றார் ராஜசிங்கம் சுதீபன்.

Rajasingam SutheepanJPG
ராஜசிங்கம் சுதீபன்.

இவ்வாறு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலைமையானது முனனரைவிட அதிகமாக இருப்பது அதிகரித்த பட்டதாரிகளின் வரவே காரணம் என பட்டதாரியான சு. பவித்திரா கூறுகிறார்.
“இப்பொழுதெல்லாம் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத பல மாணவர்கள் வெளிவாரியாக படித்து பட்டம் பெறுகிறார்கள். இது பட்டதாரிகளின் தொகையை மேலும் அதிகரித்துள்ளது.” என்பது அவரின் ஆதங்கம்.

தானியார் துறைகளில் வேலைகளைப் பெற முயற்சிக்கவில்லையா?

என  அவரிடம் கேட்டபோது,

” எனக்கு விருப்பம் தான் ஆனால், அங்கு நேர்முகப்பரீட்சைக்குச் செல்கின்றபோது ‘பட்டதாரிகளான நீங்கள் எதிர்காலத்தில் அரச வேலை கிடைக்கின்றபோது இதனைவிட்டுவிட்டுச் சென்றுவிடுவீர்கள். நாங்கள் உங்களுக்கு பயிற்சியளித்து ஒர நிலைக்கு வருகின்றபோது நீங்கள் எங்களைவிட்டு போய்விடுகிறீர்கள். எங்களுக்குதனான் பாதிப்பு.’ என்ற காரணத்தைக் கூறி வேலை தர மறுக்கிறார்கள். அப்படித்த தந்தாலும் மிகக் குறைந்த சம்பளமே கிடைக்கும். பட்டதாரிகளுக்கான சம்பளம் கிடைப்பது அரிது.“ என்கிறார் அவர்.
வடக்கில் உள்ள தனியார் நிறுவனங்கள் எவை எனப்பார்த்தால், சேவை அடிப்படையிலான நிறுவனங்கள்தான் அதிகளவில் உள்ளன. வங்கிசார் நிறுவனங்கள், பொருட்கள் வாங்கல் விற்றல் நிலையங்கள், உணவுவிடுதிகள் என உள்ளன. ஊற்பத்திசார் தொழிற்றுறைகள் குறிப்பிடும்படியாக இல்லை. அதேநேரம் பல்கலைக்கல்வி முறையில் உள்ள பாடங்களைப் பார்த்தால், அதற்கு அரச துறையில்தான் வேலை எடுக்க முடியம் என்கின்றனர் பலர். நுண்கலைத்துறையில் கல்விகற்று 2014இல் பட்டம் பெற்ற பவித்திரா இதுபற்றிக் குறிப்பிடும்போது,
“எமக்கு கற்பிக்கின்ற பாடங்களுக்கு அரச துறையில் தான் வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக நுண்கலைத் துறைகயில் படித்த எனக்கு இங்கு, தனியார் துறையில், என்ன வேலை எடுக்கமுடியம்? அதனால் நாம் அரசதுறையைத்தான் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. அதேபோல தமிழ், இந்துநாகரிகம் போன்ற துறைகளில் படிப்போரும் இதே பிரச்சினைகளையே எதிர்நோக்குகின்றனர். அரசிலும் பெரும்பாலும் ஆசிரியத் தொழிலையே எடுக்கமுடிகிறது.” என்கிறார்.

இவ்வாறான நிலையில் கல்வி கற்று வெளியேறிய இவர்கள் தமக்கு அரச துறையிலே வேலை கிடைக்கவேண்டுமென எதிர்பார்ப்பது சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் மத்திய, மாகாண அரசுகள் அவர்களிடம் இருக்கக்கூடிய வெற்றிடங்களை இந்த பட்டதாரிகள் மூலமாக நிரப்பவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். வடமாகாண கல்வி அமைச்சைப் பொறுத்தவரை 350க்கு உட்பட்ட வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன. என அந்த அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அதைச் செய்யவேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திடமே உண்டு.


பல்கலைக்கல்வி முறையில் உள்ள பாடங்களைப் பார்த்தால், அதற்கு அரச துறையில்தான் வேலை எடுக்க முடியம்

இந்த நிலையில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் அவர்கள்
“அரசு ஆகக்குறைந்தது முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து அங்கு தொழிற்சாலைகளை உருவாக்கினால் அவர்கள் தொழில்களையாவது செய்வார்கள். ஆனால், வெளிநாட்டு முதலீடுகளும் இல்லை, அரச தொழில்களும் இல்லை, தொழில் செய்வதற்கான சூழ்நிலைகளும் இல்லை, அதற்கான கொள்கைகளும் இல்லை, ஆகக்குறைந்தது அவர்களுக்கு கடன்களை கொடுத்து சுயதொழிலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பு வசதிகளும் இல்லை. தந்தையை இழந்து ; தாயை இழந்து, யுத்தத்திலே பல்வேறுபட்ட துன்பங்களை சுமந்து மிகுந்த வறிய நிலையிலே வாடுகின்ற அந்த இளைஞர்களால் என்ன செய்ய முடியும்? ஆகவே, தயவு செய்து இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்தி தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
இது ஓர் பாரதூரமான பிரச்சினை. எனவே, தொழில்களை வழங்குவதற்கு அவசர திட்டங்களை வகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழிற்சாலை அமைத்து தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படுமாயின் தொழில் கேட்டு எமது இளைஞர்கள் போராட வேண்டி தேவை ஏற்படமாட்டாது ” என பாராளுமன்றத்தல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பட்டதாரிகளின் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களைச் சந்தித்துள்ளனர். மிக விரைவில் காலத்தினுள் வடக்கிலுள்ள அரச நிறுவனங்களின் வெற்றிடங்களைத் திரட்டி அவற்றிற்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததாக பட்டதாரிகள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.