Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கடலையும் அழிச்சுப்போட்டு பிச்சைதான் எடுக்கப்போறம்!!

பாசையூர் கடற்றொழில் சமூகத்தின் மனக்குமுறல்   “முந்தி எங்கட ஊரை சின்ன சிங்கப்பூர் எண்டு சொல்லுவினம். கம்பஸ் கிடைச்சும் அத விட கடலிலல கூடுதலா உழைக்கலாம் என்டு தொழில் செய்த வரலாறும் இருந்தது. ஆனா இப்ப இந்தத் தொழிலே வேணாமெண்டு வேற தொழிலுகளை நாடிப்போற அளவுக்கு நிலமை வந்திட்டுது. எங்களுக்கே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கேக்க இனிவாற எங்கட தலைமுறைக்கு இன்னும் நிறையப் பிரச்சனைகள் இருக்கும். ஆரிட்ட சொல்லுறது சொல்லியும் பிரியோசனமில்லை” என தன்னுடைய ஊரையும் தொழிலையும் நினைத்து […]

02.05.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

பாசையூர் கடற்றொழில் சமூகத்தின் மனக்குமுறல்

 

“முந்தி எங்கட ஊரை சின்ன சிங்கப்பூர் எண்டு சொல்லுவினம். கம்பஸ் கிடைச்சும் அத விட கடலிலல கூடுதலா உழைக்கலாம் என்டு தொழில் செய்த வரலாறும் இருந்தது. ஆனா இப்ப இந்தத் தொழிலே வேணாமெண்டு வேற தொழிலுகளை நாடிப்போற அளவுக்கு நிலமை வந்திட்டுது. எங்களுக்கே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கேக்க இனிவாற எங்கட தலைமுறைக்கு இன்னும் நிறையப் பிரச்சனைகள் இருக்கும். ஆரிட்ட சொல்லுறது சொல்லியும் பிரியோசனமில்லை” என தன்னுடைய ஊரையும் தொழிலையும் நினைத்து வேதனையோடு பேசுகிறார் பாசையூர் புனித அந்தோனியார் கடற்றொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கடற்றொழிலாளியுடமான பி.பீற்றர்(67)

யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரப்பிரதேசங்களில் ஒன்றான பாசையூர் யாழ்ப்பாண நகரத்துக்கு மிக அண்மையில் அமைந்திருக்கிறது. ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இங்கு மீனவ சமூககத்தவர்களும் அவர்களல்லாத வேறு சமூகத்தவரும் இணைந்து வாழ்ந்துவருகின்றனர். பெரும்பாலனவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பதோடு இவர்களின் வாழ்க்கைமுறை, கூத்து கலைகலாசார வடிவங்களிலும் தமக்கென்று ஒரு பாரம்பரிய வடிவத்தை கொண்டிருக்கிறார்கள். தற்போது இலங்கை முழுவதிலும் கையாளப்பட்டுவரும் “சிறகுவலை” தொழில்முறை இந்த பாசையூரில்தான் முதன்முதல் உருவானது என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று.
இத்தனைகளுக்குள்ளும் இந்த ஊர் மக்களுக்கு காலங்காலமாக அவர்கள் தொழில்முறைக்குள் இருந்துவரும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே இருப்பதுதான் இவர்களுக்கிருக்கும் மிகப்பெரிய கவலை.
பாசையூருக்கு அடுத்தடுத்த கரையோரப்பிரதேசங்களாக குருநகர்,கொழும்புத்துறை,பூம்புகார் என பல கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமமக்களின் தொழில்முறை கூடுதலாக றோலர்படகுத்தொழிலாகவே இருக்கின்றது. முன்பு ஓரளவாக இருந்த றோலர்படகுத்தொழில்கள் தற்போது 500ற்கும் மேலாக பெருகிவிட்டன. தற்போது பாசையூர் மக்களின் சிறகுவலைத்தொழில் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இது பற்றி இந்த மக்களின் பிரதிநிதியாக விளங்கும் பாசையூர் புனித அந்தோனியார் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை ஒரு மாலைநேரத்தில் அவர்களது சங்க அலுவலகத்தில் கட்டுமரம் இணையத்தளத்திற்காகச் சந்தித்து உரையாடினோம்.
எங்கட தொழில் களங்கட்டி எண்டு சொல்லுறது இந்தத்தொழில் எட்டுற தண்ணியிலதான் செய்யலாம். இழவை இழுக்கிறதென்றும் சொல்லுறது கடலுக்க ஒரு பள்ளத்தை கீறிப்போட்டு அதுக்குள்ள வலையைப் புதைக்கிறது. தலைப்பை தடியில கொழுவி விடுறது. அதுக்குள்ள வருகின்ற மீன்களை பிடிக்கிறதுதான் இது. முந்தி எங்கட தாத்தாவையின்ர காலத்தில இந்தத் தொழிலை எட்டாத தண்ணிக்குள்ள ஆழ்கடல்ல எப்பிடி செய்யிறது என்று சொல்லி பாதர் விக்டர் டெலான் என்றவர் ஆபிரிக்காவில போய் கற்றுக்கொண்டுவந்து அதை இந்தக்கிராம மக்களுக்கு பழக்கினவர். இந்தத்தொழில்தான் பாசையூரின்ட தனித்துவமான தொழில்முறை. அது எப்பிடியெணடால் தடிக்கு கீழ வட்டமாக கம்பிகளை வைச்சு கட்டி எவ்வளவு ஆழத்துக்கும் போய் தொழில்செய்யக்கூடியதாக இருக்கும் இதை சிறகுவலை எண்டு சொல்லுறது.
கிட்டத்தட்த 40 வருசத்துக்கு முதல் தன்னிறைவான மிகப்பெரியளவில வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்தது. இந்த தொழில். கூடுதல் மீன்கள் பிடிக்கலாம்., நாங்கள் தொடர்ந்து கடலுக்கயே நிக்கவேண்டிய தேவை இருக்காது ஒருக்காப்போய் கம்பு பாய்ஞ்சிட்டு வந்தா பிறகு அடுத்தநாள் போய் குறிப்பிட்ட கொஞ்சநேரத்துக்க வேலைகளை முடிச்சிட்டு வந்திடலாம். இப்பிடி கஸ்ரமில்லாம ஆர்ப்பாட்டமில்லாம தொழில் செய்து வந்தனாங்கள். ஆனா காலப்போக்கில எங்கட தொழிலில சின்னச்சின்ன பிரச்சனைகள் வந்து இப்ப நிறையப் பிரச்சனைகள் உருவாகிட்டுது இப்ப தொழில் செய்யிறதெண்டது பெரிய பிரச்சனையாக் கிடக்கு” என்கிறார் சங்கத்தின் பொருளாளர் தேவசகாயம்பிள்ளை நிர்மலானந்தன்(68)

றோலர்படகின் பெருக்கமும் கடல்வள சிதைவும்
இப்ப எங்களுக்கிருக்கிற முதலாவது பெரிய பிரச்சனை றோலர்படகுகள் தான். றோலர் படகுத்தொழிலை வர்த்தமானிமூலம் தடைசெய்தாச்சு ஆனாலும் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்குது. றோலர் படகுகளில அடிப்பக்கத்தில பலகைமாதிரி ஒரு இயந்திரம் பூட்டியிருக்கும் அது கடலின்ர அடிப்பகுதியை உழுதுகொண்டுவரும் இப்பிடி உழுதுகொண்டு வரும்போது பவளப்பாறைகளையும் தாவரங்களையும் கிண்டி எடுத்துக்கொண்டு போயிடும் பிறகு கடலின்ர கீழ்ப்பக்கம் தரைமட்;டமாகத்தான் இருக்கும்.
இந்தத்தொழில்களை நிறுத்தச்சொல்லி அரசாங்கத்தால மூன்று தடவைக்கும் மேல அறிவித்தல் வந்திட்டுது. ஆனாலும் சில அரசியல் தலையீடுகளாலயும் ஊழல்களாலையும் அது தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்குது. முந்தி 20, 30 றோலர் இருக்கேக்கயே நிப்பாட்டி இருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது இப்ப 500க்கும் மேல றோலருகள் வந்திட்டுது இனி நிப்பாட்டுறது கஸ்டம். என உதட்டைப் பிதுக்கியபடி சொல்கிறார் இந்தியாவில இந்த றோலர் படகுத்தொழிலால மீன்கள் இல்லாமப் போனதால அவையள் எங்கட கடலை நோக்கி வருகினம் அதைப்போலதான் இன்னும் கொஞ்சநாளையால நாங்களும் வேற இடங்களுக்குப் போகவேண்டிய நிலமை வரும். முந்தி இருந்த சனத்தொகையைவிட இப்ப சனத்தொகை கூடிவிட்டுது. அதோட தொழில்கள் கூடிற்றுது. அதிலயும் மற்ற ஊர்களில செய்யிற றோலர்படகுத்தொழில் கூடினவுடன கடலுக்குள்ள சேதம்வரவெளிக்கிட்டுது. அதால மீனின்ர உற்பத்தி இல்லாமப்போட்டுது. ஏன்று இந்தப் பகுதி கடற்தொழிலாளர்கள் கவலைப்படுகிறார்கள் என்கிறார் பாசையூர் புனித அந்தோனியார் கடற்றொழிளாளர் சங்கத்தின் உபசெயளாளர் மேரியன் மக்ஸ்மில்(35)

டைனமற் பாவனையும் மீனழிப்பும்
“மற்றப்பிரச்சனை டைனமற் அடிக்கிறது. இதைவிட பெரிய பாதிப்பு என்னென்டா டைனமற் அடிக்கிறது. டைனமற் அடிச்சா குறிப்பட்ட மீனைத்தவிர எல்லா மீனுமே சாகும் குஞ்சுமீன் மீன் முட்டைகள் எண்டு எல்லாமே சாகும் அதாலயும் மீன்களின்ர உற்பத்தி குறையும். றோலர் படகு, டைனமெற் இப்பிடியான தடைசெய்யப்பட்ட தொழிலுகளால கடலுக்குள்ள இருக்கிற முருகைகற்பாறைகள் சேதமாக்கட்பட்டுவருது. கடலுக்கு முருகைகற்பாறைகள்(பவளப்பாறை) மிக முக்கியமானது அதைப்போல கடல்தாவரங்களும் மிக முக்கியமானவை. மீன்கள் இனப்பெருக்கம் செய்யுறத்துக்கும் விளையுறதுக்கும் இவைகள் மிக மிக முக்கியம். இப்ப இந்த றோலர் படகுகளின்ர தாக்கத்தால பவளப்பாறைகள் கடல்தாவரங்கள் அழிஞ்சதால இனப்பெருக்கம் செய்ய இடமில்லாம மீனினங்கள் அழிஞ்சுகொண்டு வருகுது. அழிஞ்ச பாறைகள் தாவரங்கள் திரும்பவும் உருவாகுறதுக்கு பத்துவருசங்களாவது எடுக்கும். இதால எங்களுக்கு மாத்திரமில்லை கடலை நம்பி வாழுற எல்லாருக்கும்தான் பிரச்சனை அதை மற்றவர்கள் புரிஞ்சுகொள்ளீனமில்லை” என்ற சங்கத்தின் உறுப்பினர் தோமஸ் கெனடியை(47) இடைமறித்து பேசுகிறார் சங்கத்தின் செயளாளரும் இளம் கடற்றொழிலாளியுமான கிறசென்சியன் அன்ரனிதாஸ்(32)
மேலும் தொடர்ந்த அவர் “எங்கட சிறகுவலை தொழிலில மீன் எங்களை தேடி வரும் ஆனா மற்ற தொழில்களில மீனைத்தேடிப்போகவேண்டி இருக்கும் அதால அவர்கள் தொலைவில போய் மீன்களை அழிச்சவுடன எங்கட தொழில்முறையில தேடிவருகிறதுக்கு மீன்கள் இல்லை அதால இதுவும் ஒருவகையில சிக்கல்தான். அதைவிட றால்களின்ர உற்பத்தியை அழிக்கிறதாலயும் பிரச்சனை வரும் அதாவது றால்கள் இனப்பெருக்கத்தை கடலுக்கடியில உள்ள சேத்துப்பகுதிகளிலதான் உருவாக்கும். அப்ப அந்த றால்களையும் சின்ன மீன்களையும் சாப்பிடத்தான் பெரிய மீன்கள் வாறது றோலர் அடிமட்டத்தோட கிண்டிவிடுறதால அதுகளின் உற்பத்தி குறைய பெரிய மீனுகளின்ர வரத்தும் குறைஞ்சு போட்டுது. இந்தப்பிரச்சனை எங்களுக்கு காலகாலமா இருந்துகொண்டு வருது. நாங்கள் அரசாங்கத்திட்ட அறிவிச்சு அவை இதுகளை பாவிக்கவேண்டாமெண்டு தடையும் போட்டாச்சு ஆனாலும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கு.” தன் பங்கிற்கு கவலைப்பட்டார். தோமஸ் கெனடி.

தொழில் பெருக்கமும் வருமான வீழ்ச்சியும்
“அரசாங்கத்தால தடைசெய்தும் நிப்பாட்டினமில்லை. டைனமற் அடிச்சா சாதாரண மீனவனுக்கே கடலுக்குள்ள சத்தம் கேட்கும் அப்ப நேவிக்காரருக்கு கேக்காதா? இதெல்லாம் அவையின்ர உதவியோடயும்தான் நடக்குது. இப்ப என்னெண்டா எங்கட பாடுகளுக்குள்ளயும் கொண்டுவந்து அடிக்கினம் அப்பிடி அடிக்கேக்க மீன்மாத்திரமின்றி எங்கடை வலைகளும் சேதமாகுது. இது காலகாலமாக நடந்துகொண்டிருக்குது. இதை நிப்பாட்ட ஏலாம இருக்குது எங்களுக்கு இருக்கிறது கொஞ்ச இடம்தான் இப்ப முந்தியைவிட எங்கட பக்கமும் ஆக்கள் கூடக்கூட தொழில்களும் பெருகீற்றுது. 100 தொழில் இருந்த இடத்தில இப்ப 1000 தொழிலுக்கு மேல கூடிற்றுது ஆனா நாங்கள் அந்த குறிப்பிட்ட இடத்துக்கயே செய்யவேண்டி இருக்கு. மற்றவர்களை மாதிரி வேற ஆக்களின்ர இடத்துக்குள்ள போறதில்லை. முதல் ஒரு பாடு தொழில் செய்தாலே குடும்பத்துக்கு போதுமானதா இருந்தது இப்ப ஒராள் 4பாடு பாயவேண்டி இருக்கு. ரெண்டு பாடு சூறையாடப்பட்டாலும் ரெண்டு மிஞ்சும் எண்ட நம்பிக்கையிலதான் தொழில் செய்யிறம்.” என வேதனையோடு சொல்கிறார் சங்கத்தின் உபசெயளாளர் மேரியன் மக்ஸ்மில்(35)
லஞ்சஊழலும் பாராமுகமும்
“முந்தி கடற்கரையோர மக்களை மதபோதகர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சிருந்தவை மக்களும் அவர்களுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்தவை ஆனா இப்ப யாரும் அவர்களை மதிக்கிறதுமில்லை அவர்களுடைய சொற்களை கேக்கிறதுமில்லை. அதால அவர்களாலயும் நடவடிக்கை எடுக்க ஏலாது. இந்தப்பிரச்சனைகளை வடமாகாண மீன்பிடி அமைச்சு, மத்திய அரசு, எல்லாத்துக்கும் அறிவிச்சனாங்கள் அவை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கேல்ல. லஞ்சமும் ஊழலும்தான் நடக்குது. முந்தி விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில இப்பிடி நடக்குதென்டு அறிவிச்சவுடன ஒருநாள் எல்லாரையும் கூப்பிடு செய்யவேணாம் எண்டு உத்தரவு போட்டவுடன எல்லாரும் நிப்பாட்டிப்போட்டினம் இப்ப அப்பிடி உத்தரவு போட எவரும் இல்லைத்தானே அரசாங்கத்தாலயும் ஏலாது அதால இது நடக்குது. இப்ப முந்தியவிட மிகமிக தூரத்தில போய்தான் தொழில் செய்யவேண்டி இருக்கு அதனால காவலுக்கு போய் நிக்கிறது குறைவு அதனால மற்றவர்களுக்கு அது வசதியாகப் போட்டுது அதனால தொழில் செய்யிறதில வேற இடைஞ்சல்களும் வரவெளிக்கிட்டுது” என்ற தேசகாயம்பிள்ளை நிர்மலானந்தனை தொடர்ந்து கிளைப்பிரச்சனைகளைப்பற்றி பேசத்தொடங்கினார் பி.பீற்றர்.
கம்பு பற்றாக்குறையும் கம்பிகளின் மாற்றீடும்
“எங்கட தொழிலுக்கு இருக்கிற இன்னுமொரு பிரச்சனை கம்பு(தடி) கடலுக்கு நடுவில கம்புகளை ஊன்றி அதைச்சுத்தி வலைகளை போட்டுத்தான் எங்கட தொழில்முறை இருக்கும் அதுக்கு நிறையத் தடிகள் வேணும். இப்ப அழிவுகளால காடுகளிலயும் தடிகள் இல்லை. அதுக்குப் பதிலா நாங்கள் கல்வனைஸ் கம்பிகளைத்தான் பாவிக்கிறம். மகாணசபைகளால ஒதுக்கப்படுகிற கம்பு தாறதிலயும் ஊழலும் லஞ்சமும் தான் கூடியிருக்கு கம்பு கொண்டுவாறதுக்கு பேர்மிற் எடுக்கிறதிலயும் குழறுபடியள் இருக்கு. அடுத்த மாதம் காத்து கூடவா இருக்கும் அப்ப நெருக்கமா கம்புகளைப் போட்டு பலப்படுத்த வேணும் ஆனா கம்பு இல்லை. ஒரு கல்வனைஸ் வாங்குற காசுக்கு 20 கம்பு வாங்கலாம். கம்பு 10வருசம் கிடக்கும் கம்பி 3வருசத்தோட பழுதாப்போயிடும் அதாலயும் நட்டம்தான்” எனச் சலித்துக்கொண்டார் தோமஸ் கெனடி.

இதைவிட வடமாகாண கடற்தொழில் அமைச்சுக்கு எங்கட தொழில்முறை பற்றி வடிவாத் தெரியும் அதில உள்ள பிரச்சனைகளும் தெரியும் ஆனா அவை இதில அக்கறை காட்டேல்ல.
கடற்றொழில் அமைச்சென்ற பேர்தான் ஆனா அதிகாரம் முழுக்க மத்திய அரசாங்கத்துக்கு கீழதான் இருக்கு என்டு சொல்லினம். கோபப்படும் பி.பீற்றர்(67). தோடர்ந்து பேசுகையில்,இதைவிட இந்திய மீனவர்களின்ர றோலர் படகுகளும் இங்க வாறது பெரிய இடைஞ்சலாக இருக்குது. முந்தநாளும்; கூட்டம் நடந்தது நாங்களும் கடற்றொழில் சம்மேளனத்தால போனனாங்கள் அதில பிடிபட்ட 80 இந்தியறோலர் படகுகளையும் விடுவிக்கிறதுக்காக எங்களிட்ட அனுமதி கேட்டினம். மோடி வருகிறார் என்று காரணத்தையும் சொல்லிச்சினம். நாங்களும் சரி நல்லெண்ண அடிப்படைதானேயென்டு சம்மதிச்சம்.
இந்தியத்துணைத் தூதுவர் எங்களிட்ட பேசும்போது எங்கடை மத்திய அரசாங்கம் அவர்களை இலங்கை எல்லைக்குள்ள போகவேண்டாம் என்றுதான் சொல்லுது ஆனா அவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொன்னார்.
விடுதலைப் புலிகள் இருக்கேக்க உண்மையிலயே எங்கட தொழில் நல்ல சீராக இருந்தது நல்ல சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் தொழில் செய்தனாங்கள். அவையள் இதுகலெல்லாத்தையும் கட்டுப்படுத்தி வைச்சிருந்தவை. என நினைவுபடுத்துகிறார் கிறசென்சியன் அன்ரனிதாஸ்(32)

எங்கட தொழில் சூறையாடப்படாம இருந்திச்சென்றாலே எங்களால வடிவா முன்னேறலாம் இப்ப நாங்கள் கஸ்டப்படுகிறதுக்கு காரணம் நாங்கள் நிம்மதியா தொழில்செய்ய ஏலாம இருக்கிறதுதான்.
இப்ப ஒவ்வொருநாளும் கடவுளிட்ட மன்றாhடிக்கொண்டுதான் தொழிலுக்கு போகவேண்டி இருக்கு ஏனென்டா அங்க போகும்போது தொழில் இருக்குமோ இருக்காதோ என்டே தெரியாது.
இந்தியாவில மூன்றுமாதம் கடலுக்க மீனின்ர இனப்பெருக்க காலம் என்று சொல்லி அந்த மாதங்களில தொழில்செய்ய தடை என்று சொல்லி அந்த மூன்று மாதமும் அரசாங்கம் நிவாரணம் குடுத்துவருது. இங்க அப்படியான எந்த நடைமுறையும் இல்லை.
கல்விமான்கள் ஆராய்ச்சியாளர்கள் எண்டு நிறையப்பேர் வந்து இந்த பவளப்பாறைகள் தாவரங்கள் அழிவைப்பற்றி ஆராய்ஞ்சுகொண்டு போயினம். ஆனா எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கிறதாகவும் காணயில்லை.
இப்பிடியான நிறையப் பிரச்சனைகள் இங்க இருக்கு இப்ப எங்கட ஆக்கள் வேறவேற தொழிலுகளை நாடிப்போக வெளிக்கிட்டீனம். ஆற்றாமையோடு சொல்கிறார் தேவசகாயம்பிள்ளை நிர்மலானந்தன்(68).

பாசையூர் மீனவர்களின் தொழில் இன்னும் 4, 5 வருசத்தால இல்லாமப் போற நிலமையிலதான் இருக்கு ஆனால் இவர்களுக்கு இந்தத்தொழிலைவிட்டா வேற எந்தத்தொழிலும் தெரியாது கடலைவிட்டா வேற கதி இல்லை. அடுத்த தலைமுறை மேலும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். பிரச்சனைகள் கூடிக்கொண்டே போகிறது. இது வேதனையளிக்கும் விடயம். இதற்கு ஏதும் செய்யமுடியாது அடுத்த தலைமுறைக்கும் சுமத்திச்செல்கிறோம் என்ற குற்றவுணர்வும் கையாலாகாத்தனமும் இந்த மக்கள் மத்தியில் காணப்படுகிறது. கடலை அழிச்சுப்போட்டு எதிர்காலத்தில் பிச்சையெடுக்கத்தான் போறம் என்ற பயவுணர்வு இவர்களிடம் காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்து தமது எதிரகால சந்ததியை காப்பாற்ற வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கை உரத்து ஒலிக்கின்ற போது தீர்வுக்கான வாய்ப்புக்களை எட்டமுடியும்.