Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இலங்கையில் பணிப்பெண்கள்.
மலையகப் பெண்கள் தேவை!

“இந்த வேலைக்கு விரும்பித்தான் நான் வந்தேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஓய்வில்லாத வேலை, குழந்தை மலம் கழித்த பின்னர் அந்த குழந்தையை குளிப்பாட்டனும், அந்த குழந்தைட உடுப்ப கழுவனும். அப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்“

07.08.2017  |  
நுவரேலியா மாவட்டம்

-S. Partheepan

 

“நான் பல வருசமா இங்கதான் இருக்கன். காலயில 4.30க்கு எழும்பினா நைட் 11 மணியாகும் தூங்க. காலயில இருந்து வேல வேல வேல… சின்னவர், ( பணியாற்றும் வீட்டு உரிமையாளரின் மகன்) செனாலி (வீட்டு உரிமையாளரின் மகள்) அப்புறம் அக்கா (வீட்டு உரிமையாளரின் துணைவி) அப்புறம் லொக்கு அய்யா (வீட்டு உரிமையாளர்) இப்படி எல்லார்ட வேலயும் பாக்கணும். வெறுத்துரும். என்ன பண்ண. நாய் வேசம் போட்டாச்சு கொலச்சு  தான் ஆகணும்’’ என்கின்றார் பதுளையை சேர்ந்த 36 வயது மணிகண்டன்சாந்தி. 05 வருடங்களாக நுகேகொடையில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகின்றார் சாந்தி.

‘’காலயில 4.30க்கு எழும்பினா, எல்லாத்துக்கும் ரீ குடுக்கனும், இதுல ரீய கொண்டுபோனா, சின்னவர் பால் கேப்பார், பால கொண்டு போனா சூடுனு சொல்வார், சரினு ஆறவச்சு கொடுத்தா சீனி பத்தாதும்பார்“ இப்படி ஆரம்பிக்கும் வேல என்கிறார் ஆற்றாமையுடன் சாந்தி. “அதன் பிறகு கால சாப்பாடு அது மிகப்பெரிய போர்களம், ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு கேட்பாங்க, எல்லாத்துக்கும் காலயில சாப்பாடு செஞ்சு கொடுத்து அனுப்புறதுக்குள்ள உசுர போயிறும் அதுக்கப்புறம் அவங்க சாப்பிட்ட பாத்திரங்கள கழுவுறது, அவங்கட உடுப்ப கழுவுறது, வீட்ட சுத்தப்படுத்துறதுனு…. இரவு 11 மணிவரைக்கும் வேல வேல…“ என அடுக்கிக்கொண்டே போனார் சாந்தி, “பாத்திரங்களை கழுவும்போது அநியாயமாக குப்பைத் தொட்டியில் வீசப்படும் மிஞ்சிய உணவுகளை பார்க்கும் போது கவலையா இருக்கும். எத்தின பேர் சாப்பாடில்லாம இருக்காங்க…. எனவும் ஆதங்கப்பட்டார்.

Paper – Advertisment

‘’காலயில எழும்பினா நைட் 12 மணிக்குதான் வேல முடியும், எல்லாருக்கும் அவங்க அவங்களுக்கு விருப்பமானது சமைக்கிறது, அவங்க உடுப்பு கழுவுறது, அங்க உள்ள சின்ன குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுறது. அத அழாம பாக்கிறது. எல்லாம் நான்தான். ரொம் கஷ்டம்’’ என தனது கவலையை பகிர்ந்தார். நுவரெலியாவைச் சேர்ந்த சண்முகநாதன் குமாரி. கடந்த 3 வருடங்களாக வெயாங்கொடையில் உள்ள ஒரு சிங்கள இனத்தவரின் வீட்டில் இவர் பணியாற்றி வருகிறார்.

சாந்தியின் நிலைமைக்கும், குமாரிக்கும் இடையில் பெரிதாக எவ்வித வேறுபாடும் இல்லை. பாதுகாப்பற்ற ஒரேவிதமான வேலைச் சுமைதான் இருவருக்கும்.

இப்படி மலையகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றி வருகின்றார்கள். பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டு வறுமை, குடும்பச் சுமை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மலையகத்தைச் சேர்ந்த பல பெண்கள், வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

“ எனக்கு இங்க எல்லாம் புதுசா இருக்கு…போடுற சட்டையில இருந்து சாப்பாடு, ஆக்களோட பழகிற முறை எல்லாமே நம்ம மாதிரி இல்ல. இதெல்லாம் பழக்கதில வர நீண்ட காலம் எடுத்துது. இப்ப கொஞ்சம் பரவாயில்ல…பழகிகிட்டன்.” என்கிறார் குமாரி. இதுவரை கண்டிராதா நாகரீகம், மனித நடத்தைகள், வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்காத பழக்கவழக்கங்கள் ஏதோ வேற்று கிரகத்தில் கொண்டுவந்து விட்டது போன்ற உணர்வுடனேயே பல பெண்கள் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் பணிப்பெண்களாக பணியாற்றி வருகின்றார்கள். குமாரி மேலும் கூறுகையில்,


எனக்கு இங்க எல்லாம் புதுசா இருக்கு…போடுற சட்டையில இருந்து
சாப்பாடு, ஆக்களோட பழகிற முறை எல்லாமே நம்ம மாதிரி இல்ல.
இதெல்லாம் பழக்கதில வர நீண்ட காலம் எடுத்துது.

“இந்த வேலைக்கு விரும்பித்தான் நான் வந்தேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஓய்வில்லாத வேலை, குழந்தை மலம் கழித்த பின்னர் அந்த குழந்தையை குளிப்பாட்டனும், அந்த குழந்தைட உடுப்ப கழுவனும். அப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்“ என லேசாக கண்கலங்கினார் குமாரி. 18 வயதில் வேலைக்கு வந்த குமாரி, தரம் 10 வரை மாத்திரமே கல்வி பயின்றுள்ளார். கல்வியில் விருப்பமின்மை காரணமாகவும், அதேநேரத்தில் குடும்ப வறுமை கணமாகவும் இவ்வாறு பணிப்பெண்ணாக இருந்து வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

என்னதான் குழந்தையைதூக்கி கொஞ்சி விளையாடினாலும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு குழந்தையின் மலத்தை சுத்தம் செய்வது என்பது கடினமாகவே இருக்கும். அத்துடன் வயோதிபரை பராமரிப்பதில் அவர்களின் மலங்களை சுத்தம் செய்வதிலும் இளம் பெண்கள் மனக்கஸ்ரத்துடன் செய்துவருகின்றனர். ஆனாலும் அதுதான் வேலை என்பதால் அதற்குப் பழக்கப்பட்டேயாக வேண்டும்.

இவ்வாறு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பல பெண்கள் தொழில் ரீதியில் கஷ்டங்களை அனுபவிக்கின்ற அதேவேளை, துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாவதாக மீனாட்சி மலையக மகளிர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்துஜா கிருஸ்ணராஜா. கூறுகிறார்.
“இந்தப் பிள்ளைகளின் வறுமையை, வாழ்க்கைச் சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சக ஆண் பணியாளர்கள் இந்த பெண்களை மிக இலகுவாக தமது இச்சைகளை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கின்றார்கள். கௌரவம் மற்றும் பயத்தினால் அது தொடர்பில் அவர்கள் வெளியில் அறிக்கையிடுவதில்லை. அப்படி அறிக்கையிட்டாலும் நீதியைபெறுவது என்பதும் எட்டாததாகவே உள்ளது. கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.” என்கிறார் சிந்துஜா கிருஸ்ணராஜா.

இவ்வாறு உடலாலும் மனதாலும் கஸ்ரப்படும் பெண்களுக்கு கிடைக்கும் மாத வருமானம் 20 அல்லது 25க்குள்தான் உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே இலங்கை, வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பி அன்னியச் செலவாணியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு. 2014ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற 110480 பெண்களில் 88661 பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாகும். (http://www.slbfe.lk/file.php?FID=202)  அங்கும் எமது பெண்கள் தொழில் பாதுகாப்பின்றி உடலாலும் மனதாலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். அதேபோல் உள்ளுரிலும் பணிப்பெண்களுக்கான தேவை அதிகமாக உள்ள நிலையியல் அது சரிகாக நெறிப்படுத்தப்படாமல் அப்பாவிப்பெண்களை பழிவாங்குகிறது. இன்று ஊடகங்களில் உள்ள விளம்பரங்களில் அதிகமானவை வீட்டுப் பணிப்பெண்கள் தேவை என்பதேயாகும். அதிலும் குறிப்பாக மலையகப் பெண்கள் தேவை எனவும் குறிப்பிட்டு பலர் விளம்பரம் செய்துள்ளனர்.

அதே வேளை இந்த வேலைகளுக்காக அனுப்பப்படும் பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோருக்கும் வீட்டு எஜமானர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதில்லை. இடைத் தரகர்கள் இரண்டு இடத்திலும் பணத்தை வாங்கிக் கொண்டு செயற்படுகிறார்கள். இந்தப் பிள்ளைகளுக்க தொழில் பாதுகாப்பு இல்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். குறித்த வீட்டு பணிப்பெண்களுக்கு சரியான சம்பளமோ, ஊழியர் சேமலாப நிதி, விடுமுறை உள்ளிட்ட அடிப்படையான தொழில் சலுகைகளோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. குறைந்த ஊதியத்திற்கு வருடக்கணக்கில் அவர்கள் பணியாற்றுவதால் ஒரு மிகப்பெரிய தொழிற்படையின் உழைப்பு யாருக்கும் தெரியாமல் சூறையாடப்படுகின்றது. இந்த வருட பெண்கள் தினத்தில் ஊடகம் ஒன்றின் ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பும் வெளிநாட்டுபணிப்பெண்கள் – (நன்றி :NEWS 1st)

‘இன்று மலையகத்தில் இருந்து வீட்டு வேலைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்லும் பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது.
நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், ஊழியர் சேமலாப நிதிஃஊழியர் நம்பிக்கை நிதி, அடிப்படை சம்பளம், தொழில் ஒப்பந்த நிர்ணயம், தொழில் பாதுகாப்பு, பாதுகாப்பான வேலை தள சூழல் என்பன இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். ஆகவே இதன் விளைவு பாரதூரமானதாகவும் சமூக பிரச்சினைகளாகவும் உருவாக்கப்பட்டதுடன் இத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களில் அதிகமானோர் பெண்களாகவும் கணீப்பீடு செய்யப்பட்டுள்ளது மற்றுமோர் முக்கிய விடயமாகும். அத்துடன் இன்றுவரை இவர்கள் முறைசாரா தொழிலாளர்களாகவே கணீப்பீடு செய்கின்றனர் ஐடுழுஇன் 2008 ஆம் ஆண்டு அறிகக்கையின்படி 15.5மூ பெண்கள் மட்டுமே சம்பளம் பெறுகின்ற வேலையாட்களாக உள்ளனர் 2010 ஆண்டு புள்ளி விபரத்தின்படி இலங்கையில் முறைசார தொழிலாளர்கள் 62.6மூ ஆக காணப்படுவதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளனர். சர்வதேச தொழில் ஸ்தாபனம் தனது 100 ஆவது அமர்வில் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.அன்றைய அச்சூழலில் இலங்கை அரசும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது ஆனாலும் இன்னும் இலங்கை அரசாங்கம் இவர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்காத நிலை காணப்படுகின்றது.’

மலையக பெண்கள் மற்றும் சிறுமிகள் இவ்வாறு வேலை தேடிவருவதற்கு வறுமையே பிரதான காரணம். பல வருடங்களாக நீடிக்கும் சம்பளப் பிரச்சினை, கல்வியில் நாட்டமின்மை, கற்க வேண்டுமென நினைத்தாலும் அதனை தடுக்கும் வறுமை என பல்வேறு காரணங்களாலும் அவர்கள் இவ்வாறு பணிப்பெண்களாக வந்துசேர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். மலையகத்தின் வறுமை நிலையையும், கல்வி தரத்தையும் மேம்படுத்த இந்த அரசாங்கமும் மலையகத் தலைமைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கும் பெண்ணியவாதியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான நளினி ரட்னராஜா. இதுதொடர்பில் எவரும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார்.

அதேவேளை, ஏற்கனவே கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு பணிப்பெண்களாக செல்வோர், வீட்டுக்குள்ளேயே இருப்பதால், வெய்யில் படாமல் கொஞ்சம் வெள்ளையாகவும், கையில் கொஞ்சம் பணத்துடனும் வீடு திரும்புவதை பார்த்து ஏனைய பெற்றோரும் தமது பிள்ளைகளை அனுப்பத் தயாராகி விடுகின்றனர்.