Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

100 வயதைத் தாண்டிய தொய்வானை!
நூறு வருஷமாகியும் எதுவும் மாறல…

இலங்கையில் தேயிலைத் தூரில தேங்காயும், மாசியும் கொட்டிக்கிடக்கு. இங்க நல்லா வாழலாம். என்று சொல்லி, எங்கள இங்க கூட்டி வந்தான்க. ஆயி, அப்பனோட தான் இங்க வந்தே. ஆனா, தேயில தூரில தேங்கையையும் காணல, மாசியையும் காணல. நாங்க ஏமாந்திட்டோ.

22.08.2017  |  
பதுளை மாவட்டம்

M.Selvarajah

இலங்கைத் தேயிலையின் 150 ஆவது வருடப்பூர்த்தியையிட்டு பெருமிதமாக கொண்டாடிக்கொண்டிருகத்கிறோம். அந்தத் தேயிலைக்காக 60 வருடங்களுக்கு மேலாக தன் உடல் உழைப்பை கொடுத்துக்கொண்டிருந்த தெய்வானையம்மா இப்படிக் கூறுகிறார்.
“நூறு வருஷம் கடந்தும் தோட்டங்களில எதுவும் மாறல. அன்னிக்கும் லயத்திலதான். இன்னிக்கும் அதே லயத்துலதான் இருக்கோம்.” என்று பெருமூச்சு விடுகிறார். தெய்வானை முத்து.
12 வயதில் இவர் பதுளைப் பகுதியின் “வாதுகன” என்ற தோட்டத்தில் பெயர் பதிந்து தேயிலை தளிர்களை கொய்யும் வேலையில் ஈடுபட்டவர் 68 வருடங்களாக (80 வயதுவரை) தோட்டத்தில் வேலைசெய்து இன்று நூறு வயதைத்தாண்டி திடகாத்திரமாக வாழ்ந்து வருகிறார். இன்று தன்னைத்தான் பார்ப்பது மட்டுமல்லாமல் வீட்டுத் தோட்டம் கோழி வளாப்பு என்றும் பூட்டப்பிள்ளைகளை பராமரிப்பது என்றும் இயங்கி வருகிறார்.
இந்தியாவின் தமிழகத்தில் கொத்தமங்களம் என்ற கிராமத்தில் 1914ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆந் திகதி பிறந்ததாக குறிப்பிடுகிறார். (அவரது கடவுச்சீட்டில் 1915 என்றே உள்ளது.) தெய்வானை, தந்தை இராமசாமியுடனும் தாய் கறுப்பாயியுடனும் 5 வயதில்; இலங்கைக்கு வந்தவர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பெற்ற கடவுச்சீட்டு

“12 வயசில நா வேலைக்கு போக்குள்ள தேயில செடியெல்லாம் என்னைய விட உசரம். பாஞ்சி பாஞ்சிதான் கொழுந்து கொய்த. அப்பெல்லாம் ஒரு நாளைக்கு 20-25 கிலோ கொழுந்த பிக்கணும். இல்லாட்டி கையை நீட்டச்சொல்லி கங்காணி பிரம்பால அடிக்கும். நா அதுக்கு பயந்து எப்பிடியாச்சும் பிச்சுருவன். ஆதனால எனக்கு நல்ல பெயர் இருந்திச்சு.
இலங்கையில் தேயிலைத் தூரில தேங்காயும், மாசியும் கொட்டிக்கிடக்கு. இங்க நல்லா வாழலாம். என்று சொல்லி, எங்கள இங்க கூட்டி வந்தான்க. ஆயி, அப்பனோட தான் இங்க வந்தே. ஆனா, தேயில தூரில தேங்கையையும் காணல, மாசியையும் காணல. நாங்க ஏமாந்திட்டோ. அன்னையிலிருந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோ. ஏமாந்த சோககிரிகளாகவே இருக்கிறோ. என வேதனையுடன் தெரிவிக்கும் தெய்வானை
கடின உழைப்பாளியாக இருந்திருக்கிறார். “இதுவரை எனக்கு எந்த நோயும் ஏற்பட்டதில்லை. ஆகையினால் எந்தவொரு மருந்தையும் நான் குடித்ததே கிடையாது. மூன்று நேரமும் சோற்றையே பிரதான உணவாகவும், கறிக்கு நாட்டுக்கோழி எறைச்சி, ஆட்டெறச்சி, முச (முயல்)எறச்சிகள சாப்பிட்டதால எனக்கு தைரியம் இருக்கு. சாமி கும்பிடற நாளக்கு எறச்சி சாப்பிடமாட்டே. இப்பவு, முந்நிய போல தேயில கொழுந்து பிய்க்க முடியும். ஆனா என்னைய அனுப்பமாட்டேங்கிறான்க” தெய்வானையம்மா கம்பீரமாகக் கூறுகிறார்.
எழுத படிக்க தெரியாத தெய்வானை, தேவாரம், தாலாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி, கும்மி என பாடல்களைப் பாடி அசத்துகிறார். புத்தகப்படிப்பற்று, எழுத்தறியாத தெய்வானையம்மாவிற்கு பாடல் வரிகள் எல்லாம் நினைவில் நிற்கிறது. வாய்மொழியக கேட்டவையும் அவரே உருவாக்கியவையுமான நிறைய பாடல்களை பாடுகிறார்.
அப்போதெல்லாம் படிக்கும் வசதி எப்படி இருந்தது என அறிய அதுபற்றிக் கேட்டோம். “படிக்க எனக்கு ஆசை வரல்ல. எங்க ஆயோடு(அம்மா) தேயில கொழுந்து பிய்க்க போயிடுவே. பள்ளிக்கொடமின்னு ஒன்னு இருந்ததா தெரியல. தேயில கொழுந்த புள்ளக வீணாக்கிருதுக என்றதாலஇ புள்ளகள அடச்சி வைப்பாங்க. அத தான் பள்ளிக்கொடமுன்னு சொல்ராங்க. புள்ளகள அடச்சி வைக்கிறதற்கு பயந்து, ஆயி என்ன மறைச்சி கொழுந்தெடுக்கிற இடத்திற்கு கூட்டிகிட்டு போயிடும்” என்று கூறும் தொய்வானையம்மா ஓலைக் கொடட்டகைக்குள் நிலத்தில் இருந்து சினிமா பார்த்த கதையையும் கூறுகிறார்.

கோழி வளர்ப்பில்

 

இதுவரை எத்தனைதரம் வாக்களித்துள்ளீர்கள் என கேட்டபோதுஇ ஒரே ஒரு முறைதான் வாக்களித்ததாகவும் “நாங்க ஓட்டு போட்டு என்னெத்த கண்டோம். இவனுகலால எங்களுக்கு என்ன நன்மை கெடச்சிச்சி?” என்ற கேள்வியைத் திரப்பிக் கேட்கிறார். “அப்பெல்லாம் எங்க கங்காணி, எங்கள கூட்டிக்கிட்டுப் போய், அவரு சொன்ன மாதிரி ஓட்டு போட்டோம்” என்கிறார் எந்த அக்கறையையும் காட்டிக்கொள்ளாமலே.
“நாங்கெல்லாம் அடிமைக தான். கங்காணியின்னா எங்க எல்லாத்துக்கும் பயம். எங்க எல்லா விசயத்திற்கும் கங்காணிக்கிட்ட கேட்டு தான் செய்வோம். வீட்டு காரியமென்னாலும். அவரு தான் எங்களுக்கு பெரியவரு. அவரு வீட்டு வேலைகளையும் நாங்க தான் செய்யனும். நம்ம எல்லா அவருக்கு அடிமைகதான். நம்ம பொம்பளக அந்த கங்காணி ஓடயும் குடும்பம் நடாத்தொணும்.(பாலியல் அடிமைகளாக) கங்காணிய எதிர்த்துக்கிட்டு எதுவுமே செய்ய ஏலாது.”
முதுமையின் முகத்தில் உணர்வற்று தூய அமைதி பரவிக்கிடக்கிறது. “நாங்க ஏமாந்து இங்க வந்தபோது, எங்கக்கிட்ட ஒத்தும இருந்திச்சி. இப்ப அந்த ஒத்துமய காணல. போட்டி பொறாம கூடிப்போச்சி, தேயில தோட்டமே நாசமா போச்சி.” என்கிறார் கவலையுடன்.
இவ்வருட மார்ச் 8ஆம் திகதி மகளிர் தின நிகழ்வில் தெய்வானையம்மா நீண்ட கால உழைப்பு கருதி விருது வழங்கி, பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
“என்ணெய்க்கு ஏமாந்து, அடிமையாக இங்க வந்தோமோ, அது மாதிரியே இன்னைக்கும் ஏமாந்து, அடிமையாக இருக்கோ. ஏதும் மாறல” என்பதை திரும்ப திரும்ப தெய்வானையம்மா கூறிக்கொள்கிறார்.