Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை
இலங்கையில் மொழிக்கொள்கையை அமுலாக்கினால் ஐம்பது வீதப் பிரச்சினை தீர்ந்து விடும்.

/“சிங்கள மொழியும், தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாக வேண்டும் என அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தால் திருத்தப்பட்டுள்ள 18(1) மற்றும் 18(2) உறுப்புரைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம், சகல அரச ஆவணங்களும், படிவங்களும், அறிவித்தல்களும் (பெயர்ப்பலகைகள் அடங்கலாக), சுற்று நிருபங்களும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருக்க வேண்டும் அல்லது வெளியிடப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் மொழியிலேயே அவர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும், சிங்கள மொழியில் பதில் அனுப்ப […]

29.09.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

/“சிங்கள மொழியும், தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாக வேண்டும் என அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தால் திருத்தப்பட்டுள்ள 18(1) மற்றும் 18(2) உறுப்புரைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம், சகல அரச ஆவணங்களும், படிவங்களும், அறிவித்தல்களும் (பெயர்ப்பலகைகள் அடங்கலாக), சுற்று நிருபங்களும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருக்க வேண்டும் அல்லது வெளியிடப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் மொழியிலேயே அவர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும், சிங்கள மொழியில் பதில் அனுப்ப வேண்டிய தேவைகள் இருப்பின் தமிழ் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு இணைக்கப்படல் வேண்டும் என்றும், எந்தவொரு பிரஜையும் தமது சொந்த மொழி மூலம் அரச அலுவலகங்களுடன் தொடர்புகளைக் கொள்ள முடியுமென்றும், அதற்கான வசதிகள் சகல அரச அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அரச கல்வி நிறுவனங்கள், போதனா நிலையங்களில் மொழிகளுக்குத் தனித்தனியான நிறுவனங்கள் இருந்தாலன்றி, மூன்று மொழிகளிலும் போதனைகள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சிங்களம் தெரியாதவர்கள் கலந்து கொள்ளும் அரச கூட்டங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் வகுப்புகளில் மொழிபெயர்ப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும், குறிப்புகள் அவர்களது மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒருவருக்குத் தெரியாத மொழியில் வாக்குமூலம் அளிக்கக் கட்டாயப்படுத்துவது, விளங்காத – வாசிக்க முடியாத வாக்குமூலத்தில் பலவந்தமாக ஒப்பம் வாங்குவது, ஒருவர் தொடர்பு கொண்ட மொழியிலன்றி அல்லது அவரின் தாய் மொழியிலன்றி வேறு மொழிகளில் தொடர்பு கொள்ள முயல்வது என்பன மொழி உரிமையை மட்டுமல்ல, அடிப்படை உரிமைகளையும் மீறும் செயல்களாகக் கொள்ளப்படும் என்றும், அரச மற்றும் நிர்வாக நடைமுறைகளின்போது மொழி உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுபவர்கள் அடிப்படை மனித உரிமை மீறலுக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும், மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிடலாம் அல்லது அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் அவதானத்துக்குக் கொண்டுவரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்ததன் பின்னர் ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ள அரசுகளினால் தமிழ் மொழி அமுலாக்கம் குறித்து சுமார் 18 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்ற போதிலும், தமிழ் மொழி அமுலாக்கம் என்பது கேட்பாரற்றதொரு நிலையில் பின்தங்கியிருப்தையே காணக்கூடியதாக இருக்கிறது என்பது தெரியவருகிறது. ஒரு சில அமைச்சுக்களைத் தவிர ஏனைய அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கடிதங்கள், ஆவணங்கள் என்பன தனிச் சிங்கள மொழியிலேயே அனுப்பப்படுவதாகவும், அவற்றைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்புகளின் உதவிகளை நாட வேண்டியுள்ளதாகவும், இதனால் ஏற்படுகின்ற தாமதங்கள் காரணமாக பல்வேறு இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதாகவும் பலரும் முறையிடுகின்ற நிலையே காணப்படுகின்றது.” ஏன்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமுலாக்கல் கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களிடம் நிலையியற் கட்டளை 23ஃ2 இன் கீழ் எழுப்பப்படும் வினாக்கள் நேரத்தின் போது 07.06.2016 மேற்கண்டவாறு குறிப்பிட்டார்./

“இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகும். மொழிச்சட்டம், மும்மொழி சட்டமாகும். ஆகவே அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். ஆனால், இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை. இதை இனி அனுமதிக்க முடியாது. தமிழ் மொழி இப்படி கைவிடப்பட முடியாது. மும்மொழி மொழிச்சட்டம் மீறப்படவும் முடியாது. எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது எனக்கூறவும் முடியாது” என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் பொதுமக்கள் பாவனைக்குள்ள அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கூறினார். (15.08.2017, வீரகெசரி ஒன் லைன்)

இந்தப் பின்னணியில் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவில் (ழுககiஉயைட டுயபெரயபநள உழஅஅளைளழைn); 2010ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை அங்கத்தவராக இருந்த யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளையுடன் இலங்கையில் அரச கரும மொழிகள் அமுலாக்கம் தொடர்பாகக் கலந்துரையாடினோம்.

“அரச கரும மொழிகள் ஆணைக்குழுவில் ஐந்து பேர் நியமிக்கப்பட்டார்கள். அதில் மூன்று பேர் சிங்களவர்கள் ஒருவர் தமிழர் மற்றவர் முஸ்லீம். இதில் தமிழர்களாகிய நாங்கள் சிறுமான்மையினராகத் தான் இருந்தோம். ஏங்கள் குரல்கள் பலமில்லாதைவைகளாகவே காணப்பட்டன. இதனை விட ஆணைக்குழுவில் பணியாளர்களின் எண்ணிக்கை 29 ஆகும். அதில் லிகிதர் தரத்திலான பதவியில் ஒரே ஒரு தமிழர் இருந்தார். மிகுதி 28 பேரும் சிங்களவர்கள். முதலில் இதற்கு நாம் ஆட்சேபணை தெரிவித்தோம். பின்னர் மூன்று தமிழர்களை இந்த அலுவலகத்தில் நியமித்தார்கள். இலங்கையின் யாப்பிலும் சட்டங்களிலும் மொழிக்கொள்கை சிறப்பாக உள்ளது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. நாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்ற உணர்வு தான் இந்த ஆணைக்குழுவிலிருந்து விலகும் போது எனக்கு ஏற்பட்டது.” என்றார் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
“அரச உத்தியோகத்தர்களுக்கு மொழிக்கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அது தொடர்பான எந்தவொரு கட்டாயமும் இல்லை. மொழிக்கொள்கைகளை அமுல்படுத்தத் தவறினால் தண்டனைகள் எதும் இல்லை. பாதிக்கப்படுபவர் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்பதற்கான வாய்ப்புக்களும் இல்லை. ஒரு வேளை மொழிக்கொள்கை பின்பற்றப்படவில்லையென்று முறையிட்டால் தாம் பழிவாங்கப்ட்டுவிடுவோம். தமது காரியங்களை செய்து முடிக்கமுடியாமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக பாதிக்கப்படுபவர் முறையிடுவதில்லை. இதனால் குறிப்பாக தமிழ்மொழி அமுலாக்கம் இலங்கையில் நடைபெறுவதில்லை. அதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். சிறுமான்மையினரின் மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உணர்திறன் இலங்கையில் வளர்த்தெடுக்கப்டவில்லை” என்று அவர் மேலும் தொடர்ந்தார்.
“இலங்கையில் போக்குவரத்து சேவை மக்களுக்கானது அதில் தகவல்களை மூன்று மொழிகளிலும் வழங்க வேண்டும் அப்போது தான் சிறந்த சேவையையும் வருமானத்தையும் பெறமுடியும். ஆனால் பொது போக்குவரத்து பஸ்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகின்றது. புகையிரதம் நிலையங்களில் கோட்டை போன்ற முக்கியமான இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தமிழில் அறிவித்தல் வழங்கப்படுவதில்லை. இதிலிருந்து பொது போக்குவரத்துக் கூட சிங்கள மொழி தெரிந்தவர்களுக்கு மட்டும் என்பதாக அர்த்தப்படுகிறது. அரச கரும ஆணைக்குழு 100 புகையிரத உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பு வழங்குவதற்கான பயிற்சிகளை வழங்கியிருந்தும் சிங்களப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான புகையிரத நிலையங்களில் தமிழ் அறிவித்தல்கள் வழங்கப்படுவதில்லை” என்று பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை ஆதங்கப்பட்டக் கொண்டார்.

இதனை உறுதிப்படுத்துகிறது தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு ஓகஸ்ட் 2017 வெளியிட்ட செய்திக்குறிப்பு. “இன்று இலங்கை முழுக்க உள்ள 882 அரச அலுவலகங்களிலிருந்து மூன்று மொழிகளிலும் இல்லாத முறையற்ற படி­வங்­களை நாம் பெற்று, அவற்றை மூன்று மொழிகளுக்கும் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பிக்கிறோம். இதற்குள், 429 பிரதேச செயலக மற்றும் அதனுடன் இணைந்த அரச காரியாலயங்களும், 256 மாகாண மற்றும் பிரதேச சபை அலுவலகங்களும், 197 ஏனைய அலுவலகங்களும் இருக்கின்றன. மொழிபெயர்த்த பிறகு புதிய மும்மொழி படிவங்கள் எனது அமைச்சினால் அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் அந்த படிவங்களின் மென்பொருள் பதிவு செய்யப்பட்ட இறுவெட்டும் அந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி மேலதிக மும்மொழி படிவங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அச்சடித்துக்கொள்ளலாம். இதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் இந்நாட்டில் சிங்கள மொழியுடன், தமிழ் மொழியும் ஒரு ஆட்சி மொழி, ஆங்­கில மொழி இணைப்பு என்ற உரிமையை அனுபவிப்பதில் ஒரு படி முன்னேறுவர் “ என்று அந்தச் செய்திக்குறிப்பு விளக்குகின்றது.

தமிழர்கள் தமது மொழியுரிமையை நிலைநாட்டத் தவறுவது இந்தப்பிரச்சினை நீடிப்பதற்கான காரணமான அமைந்து விடுகின்றது. வடக்குக்கிழக்கில் தமிழ் மொழி முதன்மை மொழியாக வழக்கில் இருந்தல் வேண்டும். ஆனால் கிழக்கில் திருகோணமலை மற்றும் அம்பாறையில் அதிகமான அரச கூட்டங்கள் சிங்களத்திலேயே நடத்தப்படுகின்றன. தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் தமிழ் அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.தாம் பாதிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக இந்த நிலைமை நீடிக்கிறது. இதே போன்று கொழும்பு மாநகரசபையில் அதிகமாக இருப்பவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும் அங்கு சேவைகள் அனைத்தும் சிங்களத்திலேயே நடைபெறுகின்றன. தமிழுக்கு உரிய இடமில்லை. இது பற்றி முறையிட்ட போது அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லுவார்கள் ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்பதையும் பேராசிரியர் தெரிவித்தார்.


“ தமிழ்மொழி அமுலாக்களில் நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றோம். தற்போது ஒரு தந்திரோபாயத்தைப் பின்பற்றுகிறார்கள். ஏதாவது முறைப்பாடு சொன்னால் அதனை இன்சொல்லால் கோபப்படாது நாங்கள் சரி செய்கிறோம் என்று சொல்லி எங்களை ஏமாற்றுகிறார்கள். இலங்கையில் மொழிச்சட்டம் நடைமுறையில் இல்லை. அதனை அமுல்படுத்துவதற்கான கடுமையான செயல் திட்டம் இல்லை இதனால் தமிழ்மொழி அமுலாக்கம் தோல்வியடைந்துள்ளது.”

“ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் மொழிக்கொள்கையை கடுமையாக அமுலாக்க நேரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்கள் எப்போது தமிழர்களை தங்களது பங்காளர்களாகக் கருதியதில்லை. ஆட்சி எங்களுடையது ஏனையவர்கள் இங்கு இருக்கலாம் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள். இதனால் தான் மனப்பாங்கில் மாற்றம் வரவில்லை. அரசியல் அமைப்பு ஏற்பாடுகள் சட்டவாக்கங்கள் இருந்த போதும் மொழிக் கொள்கை அமுலுக்கு வரவில்லை. சின்னச்சின்ன முன்னேற்றங்கள் இருந்தாலும் அதனை அடைவுகளாகக்க கொள்ள முடியாது” என்று மேலும் விபரித்தார் பேராசியர் பாலசுந்தரம்பிள்ளை.

தமிழ்மொழியை தமிழர்களே புறக்கணிக்கூடியளவிற்கு திட்டமிட்டு மொழி அமுலாக்கத்தைச் செய்கிறார்கள். உதாரணமாக பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்புச்சான்றிதழில் மூன்று மொழிகளிலும் விபரங்கள் காண்ப்படுகின்றன. முன்னும் பின்னுமாக இரண்டு பக்ககங்கள் அச்சிடப்பட்ட அந்தச் சான்றிதழில் முன்பக்கம் முழமையும் சிங்களத்திலும் பின்பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விபரங்கள் காணப்படுகின்றன. சிங்களத்தோடு ஏனையவற்றில் அதாவது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விபரங்களைப் பெறமுடியும். இது மாணவர்களின் விருப்பத்தேர்வாக இருக்கும். பிரதானமான முன்பக்கத்தில் சிங்களத்தில் பெயர்விபரங்கள் காணப்படுவதால் ஒரு தமிழ் மாணவன் தனது விருப்பத் தேர்வாக ஆங்கிலத்தை கோருவது வழமை. ஏனெனில் வெளிநாட்டுப் பல்கலைக்கழககங்களில் கல்விகற்பதாயின் ஆங்கிலத்தில் விபரம் தேவை. ஆகவே தமிழ் மாணவன் ஒருவனே தாய் மொழியை வேண்டாம் என்று சொல்வதாக நிலைமை காணப்படுகின்றது. ஆனால் தமிழ் பேசும் இடத்தில் உள்ள யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தனது பட்டச்சான்றிதழில் ஒரே பக்கத்தில் மூன்று மொழிகளுக்கும் சம அளவில் வாப்பக்களை வழங்கியிருக்கிறது. மூன்று மொழிகளிலும் விபரங்களும் தரப்படுகின்றன. தமிழ் பகுதிகளில் மொழிக்கொள்கை சரியாக அமுல்படுத்தப்படுகின்ற அதே வேளை சிங்கள்ப்பகுதிகள் அந்த நிலைமை இல்லை. பல்கலைககழகங்களில் பயிற்சி நெறிகள் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படிருக்கும் யாழ்ப்பாணப்பல்கலக்கழகத்தில் நூறு வீதம் அது அமுல்படுத்தப்படும். எந்தவொரு மாணவனும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் கொழும்பு, பெரதேனீயா, றுகுணு போன்ற பல்கலைக்கழகங்களில் மிகச்சிறியளவு தமிழ்மொழி பேசும் மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள். விரிவுரையாளர்கள் அவர்களை புறம்தள்ளி ஆங்கில மொழிமூலமான கற்கைநெறிகளின் விரிவுரைகளை சிங்களத்தில் நடத்துவதுண்டு. இதனால் அந்த மாணவர்கள் விரக்தியடைந்து இடைவிலகுவதும். குறைந்தளவு பெறுபேறுகளில் கல்வியைப்பூர்த்தி செய்வதுமான நிலைமை உள்ளது. உயர்கல்வியிலேயே மொழி அமுலாக்கம் இந்த நிலையில் இருக்கின்ற போது அரச அலுவலகங்களின் நிலைமை மேலும் மோசமாக உள்ளதை கலந்துரையாடலில் இருந்து உணர முடிந்தது.
இதே போன்று வியாபாரப்பொருட்களில் தமிழ் அதிகளவு புறக்கணிக்கப்படுவதை காணலாம் தமிழ் மூன்றாம் தர நிலையில் தரப்படுகின்றது. மிகச்சிறியதாக அல்லது எங்கோ ஒரு மூலையில் அச்சிடப்படுகின்றது. இதே போன்று வங்கிகள் தங்கள் கணக்குகளுக்கு வைக்கின்ற பெயர்களை சிங்களப்பெயர்களாக வைக்கிறார்கள். வர்த்தக நடவடிக்கைகள் எப்போது மக்கள் சார்ந்தவைகளாகவும் விளைபயன் தரவல்லவையாகவும் காணப்பட வேண்டும். இதற்கு மக்கள் இலகுவில் அணுகும் வாய்ப்பு இருக்க வேண்டும். இதற்கு மொழி முக்கியமானது. இதனை இலங்கையில் வர்த்தகநாமங்கள் கருத்தில் கொள்வதில்லை. தமிழ்மொழி பேசுபவர்களை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. உண்மையில் ஒரு வர்த்தக நாமம் மூன்று பாஷைகளில் தரப்படலாம் பொருள் ஒன்று அதாவது அர்த்தம் ஒன்றாக இருக்கலாம் பெயர்கள் வேறாக அமையலாம். இதற்கு சிறந்த உதாரணம் மக்கள் வங்கி இதன் ஆங்கிலம் பீப்பில்ஸ் பாங் அதே போன்று சிங்களத்தில் மாகாசன பங்குவ என்று தரப்படுகிறது.இதனைப்பின்பற்றினால் வர்த்தக நடவடிக்கைகளில் மொழிஅமுலாக்கம் சிறப்பாக அமையும். இன்னொரு பாஷையை திணிக்க வேண்டி வராது.


இலங்கையின் இனப்பிரச்னைக்கு மொழிக்கொள்கை சீரான முறையில்அமுல்படுத்தப்பட வேண்டும். மொழிக்கொள்கைளை அமுலாக்கினால் இலங்கையின் இனப்பிரச்னையில் 50 வீதம் தீர்ந்து விடும்

என்றார் பேராசிரியர் பாலசுந்தரம பிள்ளை. இதையே தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனும் வலியுறுத்துகின்றார்.

“நான் பதவி ஏற்கும் போது, இந்த நாட்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு கூட இந்நாட்டின் மொழிச்சட்டம் பற்றிய தெளிவு இருக்கவில்லை என்பதை கண்டு பிடித்தேன். இப்போது நான் மருத்துவர் ஆகியுள்ளேன். அதாவது, மொழி மருத்துவர் ஆகிவிட்டேன். மொழி அமுலாக்கல் செய்யாமை ஒரு தேசிய நோய் ஆகும். ஆகவே இன்று மொழி அமுலாக்கல் செய்யாமை நோயை தீர்க்க மருந்து கொடுக்க ஆரம்பித்து விட்டேன். “