Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சிறைக்குள்...
எட்டுக்கு எட்டு அடி பரப்பில் எட்டு முதல் பத்து கைதிகள்!

களுத்துறை, பிந்துனுவௌ, வெலிக்கடை என்று சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் எவற்றிலுமே சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது அவதானிக்கத்தக்கது.

28.11.2017  |  
கொழும்பு மாவட்டம்
சட்டத்தரணி சேனக பெரேரா.
– வனதேவதா

 

“தற்போது வெலிக்கடையில் சுமார் 160 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் கைதிகள் என்று குறிப்பிடப்பட்டபோதும், உண்மையான காரணம், புலிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதே. அவர்களில் பெரும்பாலானோர் பதினைந்து முதல் இருபது வருடங்களாக எந்தவொரு விசாரணையும் இன்றி சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுமிருக்கிறார்கள்” என்கிறார் ‘கைதிகளுக்கான உரிமைகளைக் காக்கும் அமைப்பின்’ (Committee for Protecting the Rights of Inmates) தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா.

‘த கடட்டமரானி’ற்காக ‘கைதிகளுக்கான உரிமைகளைக் காக்கும் அமைப்பின் தலைவர் சேனக பெரேரா, செயலாளர் உதேஷ் நந்திமால் சில்வா, ஆகியோரைச் சந்தித்தோம்.

சுதேஷ் நந்திமால் சில்வா

சிறைச்சாலைகளில் கைதிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள், அவர்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள் குறித்து பல வருடங்களாக இந்த அமைப்பு போராடிக் கொண்டிருக்கிறது. 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை இந்த அமைப்பு முன்னின்று நடத்தியதது குறிப்பிடத்தக்கது.

த கட்டுமரன்: பொதுவாக சிறைக்கைதிகளின் மிக முக்கிய நாளாந்த பிரச்சினைகள் என்று எதைக் கூறுவீர்கள்?

சேனக (தலைவர்): சிறைகளில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினை உணவுதான்! கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உணவின் தரம் குறித்து அரசு சில சிபாரிசுகளைச் செய்துள்ளது. நடைமுறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, குறிப்பிட்ட அந்தத் தரத்தில் இருப்பதில்லை. அதிகாரத் தரப்பினர் சிறைக்கு வந்தால் அவர்களுக்கு வெளியில் இருந்து ஹோட்டல் சாப்பாடு எடுத்து வரப்படுகிறது. ஏனைய கைதிகளுக்கு அடிப்படைத் தரம் கூட இல்லாத உணவுதான் வழங்கப்படுகிறது. மாதம் ஒரு முறை வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவு கூட சோதனை என்ற பெயரில் சில வேளைகளில் சின்னாபின்னப்படுத்தப்படுகிறது அல்லது தடை செய்யப்படுகிறது. சவர்க்காரம் வெட்டும் கத்தியாலேயே மரக்கறியும் வெட்டப்படுகிறது. எந்தவிதத் தரக் கட்டுப்பாடும் சிறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ‘நெல்சன் மண்டேலா சிறை விதிமுறைகள்’ என்ற ஒரு வழிகாட்டியை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. ஐ.நா.வின் அங்கத்துவ நாடாக இருந்தும், அந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை இலங்கை கடைப்பிடிப்பதில்லை.

சுதேஷ் நந்திமால் சில்வா (செயலாளர்- அரசியல் கைதியாக இருந்தவர்): அடுத்து மிகமுக்கியமானது இடம் சம்பந்தப்பட்டது. ஒரு சிறைஅறையில் ஒரு கைதியே தடுத்து வைக்கப்பட வேண்டும் என்கிறது நெல்சன் மண்டேலா விதிமுறை. ஆனால் இலங்கையில் நடைமுறையில் இருப்பது என்ன? எட்டு அடிக்கு எட்டு அடி பரப்பில் உள்ள சிறை அறையில் எட்டு முதல் பத்து கைதிகள் அடைத்து வைக்கப்படுகிறார்கள். மாலை ஐந்து மணிக்குப் பின் மலசலங்கழிக்கும் தேவைகளையும் அந்த எட்டு சதுர அடிக்குள்ளேயே, – அதற்கான வசதிகள் இல்லாமலேயே – நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இப்படி மனிதாபிமானமற்றதாகவே விளங்குகின்றன சிறைச்சாலைகள். கைதிகளை விருந்தினர்களாக உபசரியுங்கள் என்று நாம் கூறவில்லை. குறைந்தபட்சம் மனிதர்களாகவேனும் மதியுங்கள் என்பதே எமது வேண்டுகோள்.

சேனக: வெலிக்கடை சிறைச்சாலையில், ஆரம்பத்தில் ஆயிரத்து 500 கைதிகள் மட்டுமே தடுத்து வைக்கப்பட முடியும் என்று கூறப்பட்டது. பின்னர் அந்த எண்ணிக்கை இரு மடங்காகியது. இன்று, வெலிக்கடையில் மட்டும் ஐயாயிரம் கைதிகள் உள்ளனர்.

த கட்டுமரன்: சிறைக்கைதிகளின் மருத்துவ விடயங்களில் எவ்வளவு கவனம் செலுத்தப்படுகிறது?

சுதேஷ்: சிறைக் கைதிகளை அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் நடப்பது என்னவென்றால், குறித்த அதிகாரிகள் விரைவில் வீடு செல்ல வேண்டும் என்பதற்காக கைதிகளை சிறைச்சாலைப் பேருந்தில் ஏற்றிக்கொண்டு சிறைக்கு வெளியே சென்று சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு, மீண்டும் சிறைக்குள்ளேயே கொண்டுவந்து இறக்கிவிடுகிறார்கள். எவ்வளவு பெரிய அநீதி தெரியுமா இது?

சேனக: சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சாதாரண கைதிகளுக்கு சுகயீனம் என்றாலும் மிக அபூர்வமாகவே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெரும்புள்ளிகள் சிறைக்கு வந்தால் உடனடியாக நேராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆக, எந்த அரசாங்கமாக இருந்தாலும் கைதிகளுக்கான சேவைகள்கூட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

த கட்டுமரன்: அதை எப்படி திட்டவட்டமாக் சொல்கிறீர்கள்?

சேனக: சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சிறைக் கைதிகளுக்கான வசதிகள்; முறையாக அமுல்படுத்தப்படுகின்றனவா என்று ஆராய, ஜோன் அமரதுங்க தலைமையில் ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கைதிகளின் நலன்சார் அம்சங்கள் எதுவும் கைதிகளுக்குக் கிடைப்பதில்லை என்றும், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த கைதிகளே அவற்றை அனுபவிப்பதாகவும் அந்த ஆணைக்குழு எழுத்து மூலம் தெரிவித்திருந்தது. இதைவிட வேறு என்ன வேண்டும்!?

த கட்டுமரன்: சிறைக் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற அத்துமீறல்கள் பற்றி…?

சுதேஷ்: இலங்கைச் சிறைச்சாலைகள் சித்திரவதைக் கூடங்களாகவே மாறிவிட்டன. கடந்த காலங்களில் சிறைச்சாலைகளுக்குள் எத்தனையோ கைதிகள் மரணித்துள்ளனர்! அவர்களில் பெரும்பாலானோர் கடுமையாகத் தாக்கப்பட்டே இறந்துள்ளனர். ஆனால் அவை பற்றிப் பெரிதும் வெளியே தெரியவருவதில்லை. அப்படியே தெரிய வந்தாலும் அது உடனடியாக ஊடகங்களில் இருந்து மறைக்கப்பட்டுவிடுகிறது. அதிகாரிகள் கைதிகளை அழைப்பதே, ‘ஏய்… மே வரேங்… உம்ப…’ (ஒருமையில் விளித்தல், இங்கே வாடா… நீ) என்றுதான். அதிகாரிகளின் பேச்சில் எப்போதுமே ஒரு ஆதிக்க தொனி இருக்கும். கைதிகளைத் தங்கள் அடிமைகளாக நினைத்தே நடத்துகிறார்கள்.

வெலிக்கடைச் சிறையில் 2012 நவெம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற அத்துமீறல்கொலைகள் மிக முக்கியமானவை. கைதிகள் போதை மருந்து வைத்திருந்ததாகவும், அதைக் கைப்பற்றவே விசேட அதிரடிப் படையினர் சிறைக்குள் புகுந்ததாகவும் மக்கள் மத்தியில் ஒரு பொய்யான கருத்து பரப்பப்பட்டது. ஆனால், அச்சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவர்களுள் நானும் ஒருவன். – எனக் கூறி தனது அனுபவத்தைவிபரித்தார்.

இராணுவத்தினர் கவச வாகனமும், கண்ணீர் புகைக் குண்டுகளுடனும் வந்தனர். போதை மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு எதற்காக இவை? சிறைக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியாது என்பதால், அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். அதை அவர்கள் அலட்சியப்படுத்தி முன்னேறி உள்ளே வந்தார்கள். வந்ததும், சந்தேக நபர்கள் இருக்கும் இடத்தை சோதனையிடுவதாகக் கூறி அங்கிருந்தவர்களை கடுமையாகத் தாக்கினர். ஆனால், பதில் தாக்குதல் நடத்தினால் தமக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்ற பயத்தில் சந்தேக நபர்கள் மௌனிகளாக தாக்குதல்களைப் பொறுத்துக்கொண்டார்கள்.
இதனால் ஏமாற்றமடைந்த இராணுவத்தினர், அடுத்ததாக ஆயுள் மற்றும் மரண தண்டனைக் கைதிகள் இருந்த இடத்துக்குச் சென்று வலிந்து தாக்குதல் நடத்தினர். இனிமேல் தமக்கு புதிதாக ஏதும் தண்டனை வழங்கப்பட முடியாது என்பதால் அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இராணுவத்தினரின் எதிர்பார்ப்பும் நிறைவேறியது. அதையே காரணமாக வைத்து, தம் வசமிருந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றனர். சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தாக்குதல் திட்டமிட்ட தீர்மானித்து நடத்தப்பட்ட ஒன்று! இதன்போது படுகாயமடைந்த இருவரில் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறைச்சாலை வாசலில் நிறுத்தியிருந்த முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றப்பட்டார். ஆனால், அவர் தப்பிச் செல்ல முயற்சிப்பதாகச் சித்தரித்து அவரையும் சுட்டுக் கொன்றனர். இதில் வேதனை என்னவென்றால், குறித்த அந்தக் கைதி, அடுத்த இரண்டு நாட்களில் விடுதலையாக வேண்டியவர் என்பதே!

இவை பற்றிய உண்மைகள் வெளியேவந்துவிடக் கூடாது என்பதற்காகவே ராஜபக்ச அரசு ஒரு ஆணைக்குழுவை அமைத்தது. அந்த ஆணைக்குழு முன் சாட்சி சொல்ல வந்தவர்கள் கூட, தாம் கண்ட காட்சிகளையோ, உண்மைகளையோ சொல்லிவிடக்கூடாது என மிரட்டப்பட்ட பின்னரே வாக்குமூலம் கொடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டோம். தற்போதைய அரசோ இச்சம்பவம் குறித்து விசாரண செய்யவே முன்வரவில்லை. பின்னர் நாம் எமது அமைப்பு ரீதியாக குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடுகள் அளித்து, போராட்டங்கள் நடத்திய பின்னரே மூன்று பேரடங்கிய விசாரணைக்குழுவை அமைக்க இணக்கம் தெரிவித்தது. அந்த ஆணைக்குழு ஒரு விசாரணை அறிக்கையை அரசுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால், அந்த அறிக்கை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படவில்லை. அது குறித்த நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, அறிக்கையின் எண்பது சதவீத வேலைகள் முடிவடைந்து விட்டதாகவும், அதை முழுமைப்படுத்த இன்னும் சற்றுக் காலம் தேவைப்படுவதாகவும் கூறி, அடுத்த விசாரணை 2017 டிசம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் ஐந்தாம் திகதி விசாரணையின்போது, அறிக்கை முழுமையடைந்துவிட்டது என நீதிபதி சொன்னால்தான் அது வெளியிடப்படும். அந்நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

வெலிக்கடை சம்பவம் போன்றதுதான் வவுனியா நிமலரூபன் படுகொலையும். வவுனியா சிறைச்சாலையில் தமக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கைதிகள் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால், சிறை அதிகாரிகளை கைதிகள் சிறைப்பிடித்திருக்கிறார்கள் என்ற வதந்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. உடனே இராணுவத்தினர் சிறையினுள் புகுந்து அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். எஞ்சிய கைதிகளை சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிக்கொண்டு அனுராதபுரத்துக்கு அழைத்துச் சென்று மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாகத் தாக்கினார்கள். கொலைக்கு நிகரான அந்தத் தாக்குதலிலேயே நிமலரூபன் கொல்லப்பட்டார். இன்று அது பற்றிய பேச்சே இல்லை. அதை நாம் வெளிக்கொணர முயற்சிக்கிறோம். ஆனால், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் அது குறித்துப் பேசப் பயப்படுகிறார்கள். காரணம், அவர்கள் தமிழர்களாக இருப்பது.

த கட்டுமரன்: சுதேஷ், நீங்கள் கைதியாக இருந்தவர். உங்கள் அனுபவங்களை பொது வெளியில் முன்வைப்பதில் ஆபத்தை எதிர்கொள்ளவில்லையா?

சுதேஷ்: நானும் எதிர்கொள்கிறேன். நான் புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றுகிறேன். அங்கு இன்னும் பழைய அரசின் ஆதரவாளர்கள் பணிபுரிகிறார்கள். ‘வெலிக்கடை சம்பவம் பற்றிய போராட்டத்தை உடனடியாகக் கைவிடவேண்டும்’ என்று வெளிப்படையாகவே எனக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஒருமுறை நான் எனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது என் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் முயற்சியும் நடத்தப்பட்டது. பணியிடத்திலும் உயிரச்சத்துடனேயே பணிசெய்து வருகிறேன். ஆக, இந்த சமூக அநீதிக்கான நியாயம் கிடைக்கக்கூடாது என்பதில் அரசுகள் வெகு ஆர்வமாக இருக்கின்றன.

த கட்டுமரன்: குறிப்பாக வெலிக்கடையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை எவ்வாறுள்ளது?

சேனக: தற்போது சுமார் 160 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் கைதிகள் என்று குறிப்பிடப்பட்டபோதும், உண்மையான காரணம், புலிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதே. அவர்களில் பெரும்பாலானோர் பதினைந்து முதல் இருபது வருடங்களாக எந்தவொரு விசாரணையும் இன்றி சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உதாரணம், கருணா. அவர் கைதானபோதும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுவிட்டார். ஆனால், அவருடன் அதே குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறைகளில்தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கைதிகள் தடுத்துவைப்புச் சட்டத்தில் இருக்கும் விதிமுறைகளை சரியான முறையில் அமுல்படுத்தினால், பல கைதிகளை விடுவிக்க வாய்ப்பு வசதிகள் இருக்கின்றன.

த கட்டுமரன்: நீங்கள் சிறைக்குள்ளே இருந்தவர் என்றவகையில், சிறைக்குள்ளே தமிழ் சிங்களக் கைதிகளின் உறவுநிலைகள் எப்படியுள்ளன?

சுதேஷ்: நூற்றுக்கு 99 சதவீதம் தமிழ் சிங்கள உறவு சிறப்பாகவே உள்ளது. சிறையில் விடுதலைப் புலி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடன் சிங்களக் கைதிகளும் ஒன்றாகப் பேசி பரஸ்பரம் ஆறுதல் அடைவதை நான் கண்டிருக்கிறேன். பொலிஸாரின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகி சிறைக்குள் வீசப்படும் கைதிகள் யாராக இருந்தாலும், தமிழ் அரசியல் கைதிகளும், புலிச் சந்தேக நபர்களுமே ஓடிச் சென்று அவர்களுக்கு மருந்திடுவது, உடல் உபாதைகளைத் தீர்ப்பது என்று முன்னின்று செய்கிறார்கள். சிறைக்குள் இருக்கும் கைதிகளிடம் இருக்கும் மனிதாபிமானம், வெளியே நடமாடும் பெரும்பாலானோருக்கு இல்லை.

த கட்டுமரன்: அமைப்பு ரீதியாக உங்கள் நோக்கம் தற்போது எதைநோக்கியுள்ளது?

சேனக: கைதிகளின் உரிமைகளை நோக்கியுள்ளன. களுத்துறை, பிந்துனுவௌ, வெலிக்கடை என்று சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் எவற்றிலுமே சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது அவதானிக்கத்தக்கது. பிந்துனுவௌ விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டபோதும், உச்ச நீதிமன்றில் அவர்கள் விடுவிக்கப்பட்டதை நாடே அறியும். விதிமுறைகளுக்கு அப்பால் கைதிகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எதிர்த்துப் போராடி வருகிறோம். வெலிக்கடை சம்பவத்தின்போதும் 27 கைதிகள் கொல்லப்பட்டார்கள் என்பது செய்தியாக மட்டுமே இருந்தது. நாம்தான் அந்தக் கைதிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து, சக கைதிகளின் கருத்துக்களையும் பெற்று, அவற்றை முறையான ஆவணங்களாகத் தொகுத்து பொலிஸார் முதல் ஐ.நா. வரை முழுமையான அறிக்கை சமர்ப்பித்திருக்கிறோம். ஆனால், அதற்குப் பரிசாக மரண அச்சுறுத்தல்களே எமக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால் அதையிட்டு நாம் கவலைகொள்ளவில்லை. எமக்கு வேண்டியதெல்லாம், கைதிகளுக்கான உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதும், வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், இனி இவ்வாறானதொரு சம்பவம் சரித்தித்தில் பதிவுபெறாமல் இருக்கவேண்டும் என்பதும்தான்!

============================================================
கைதியின் ஒரு நாள்

அதிகாலை ஐந்தரை மணிக்கு சிறைக்கூண்டின் கதவுகள் திறக்கப்படும்.
கைதிகள் வெளியே வந்து வரிசையாக நிற்பார்கள். அதிகாரிகள் அவர்களைக்
கணக்கெடுப்பார்கள். இதற்குச் சுமார் முப்பது நிமிடங்கள் வரை ஆகும்.
இந்த முப்பது நிமிடங்களுக்குள், கைதிகள் தமது காலை உணவை
வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆறு மணிக்கு இந்த நடைமுறை
முடிந்ததும் கைதிகள் காலைக் கடன்களை முடித்துக்கொள்ள வேண்டும்.
சரியாக எட்டு மணிக்குள் காலை உணவையும் உட்கொண்டுவிட்டு ‘பார்ட்டி’
என்று சொல்லப்படும் தத்தமது வேலைப் பிரிவுகளுக்கு அழைத்துச்
செல்லப்படுகிறார்கள். இங்கு தச்சு, தையல், அச்சிடுதல், இரும்பு
வேலைகள் என்று பிரிவுகள் இருக்கின்றன. சரியாக பகல் பன்னிரண்டு
மணிக்கு வேலையை இடைநிறுத்திவிட்டு மதிய உணவுக்கு வரிசையில்
அழைத்து வரப்படுவார்கள். ஒரு மணிக்கு மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும்.
மூன்றரை மணிக்கு வேலை முடிந்து திரும்பவேண்டும். அதன்போதே
இரவு உணவையும் (ஆம், மாலை மூன்றரை மணிக்கே இரவு உணவும்
வழங்கப்பட்டுவிடுகிறது) பெற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படி உணவை வாங்கும் சிலர் அப்போதே உண்டுவிடுகிறார்கள். ஏனெனில்,
சிறையறைக்குள் கொண்டு சென்றால் அங்கு உண்பதற்கான சூழல்
இருக்காது. ஆனால், இன்னும் சிலர் சிறையறையில் வைத்துவிட்ட
இரவு ஏழு, எட்டு மணியளவில் சாப்பிடுவதும் உண்டு. மாலை
ஐந்து மணிக்கு மீண்டும் கூண்டுகளுக்குள் செல்லவேண்டியதுதான்.
மரண தண்டனைக் கைதிகள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
அவர்கள் ஏனைய கைதிகள் போலவே அதிகாலை ஐந்தரை
மணிக்கு கூண்டை விட்டு வெளியே வருகிறார்கள். மாலை ஐந்து
மணி வரை அவர்களது கூடுகள் அமைந்திருக்கும் முன் விறாந்தைகளில்
உலாவ முடியும். மாலை ஐந்து மணிக்கு மீண்டும் கூண்டுகளுக்குள்
சென்றுவிடவேண்டும்.
==================================================================