Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வரலாறு சொல்கிறது..
‘சிங்களம் மட்டும்’ என்பதில் பாரிய மாற்றம் இல்லை.

தமிழ் மொழிப்பாவனை உரிய முறையில் மக்களின் தேவைகளைத் திருப்திப்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. அரசாங்கம் தேவையானளவுக்கு மொழிப் பயிற்சிகளை மேற்கொள்ளாததது இதற்கு முதலாவது காரணம். அக்கறையற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் அடுத்த காரணம்.

24.12.2017  |  
கொழும்பு மாவட்டம்

பாரதி இராஜநாயகம் 

 

இலங்கையின் இன நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மொழி இவை அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. பண்டரநாயக்கவின் ஆட்சிக் காலத்தின் (1956) போதுதான் சிங்களம் மட்டும் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, உத்தியோகபூர்வமான முறையில், மொழிப் பிரச்சினை ஒன்று இந்த நாட்டில் உள்ளது என்பது பிரகனடனப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தப் பிரச்சினை அதற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டிருந்தது. குறிப்பாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் சுதந்திரத்தைக் கொடுப்பதற்கு முன்னதாகவே இந்தப் பிரச்சினை ஆரம்பமாகிவிட்டிருந்தது. அல்லது அதற்கான விதைகள் தூவப்பட்டிருந்தன.

30 வருடமாகத் தொடந்த தமிழர்களின் அகிம்சை வழியான போராட்டத்தினால், இந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் காணமுடியவில்லை. பண்டா- செல்வா உடன்படிக்கை, டட்லி – செல்வா உடன்படிக்கை என்பன இந்தப் பிரச்சினைக்கான தீர்வைக்காண்பதற்கு முனைந்தன. இரு உடன்படிக்கைகளுமே ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்டன. இலங்கையின் இரண்டு குடியரசு அரசியலமைப்புக்களும் சிங்களத்துக்கான உத்தியோகபூர்வ அந்தஸ்த்தைக் கொடுப்பனவாகவே இருந்தன. 1987 இலங்கை – இந்திய உடன்படிக்கைதான் இந்தப் பிரச்சினைக்கான தீர்வை முதலில் முன்வைத்தது. ஆனாலும், அதுவும் கூட எழுத்து வடிவில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செயற்படத் தொடங்கியிருக்கின்றது. இன்றுவரையில், மொழி அமுலாக்கலுக்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து முழுஅளவில் இல்லை.

இந்த நிலையில், மொழி தொடர்பான நெருக்கடி இந்த நாட்டில் எவ்வாறு உருவாகியது. அதற்கு பெற்றோல் ஊற்றி எரிய விட்டவர்கள் யார், இரு இன மக்களுக்கும் இடையிலான மோதலுக்கு இது எவ்வாறு காரணமாகியது. இந்தப் பிரச்சினை இறுதியில் எவ்வாறு கையாளப்பட்டது? இதற்கான தீர்வு காணப்பட்டுவிட்டதா? என்பன போன்ற விடயங்களை இந்தக் கட்டுரை ஆராய்கின்றது.

தீர்மானங்கள் மூன்று

1948 ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு நகரசபை மண்டபத்தில் ஹேவா ஹவுஸ் சங்கத்தின் ஆதரவில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. தேசிய பிரதிநிதிகள் சபை உறுப்பினர் எச். ஸ்ரீ நிசங்க இதற்குத் தலைமை தாங்கினார். மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு கூட்டமாக இது அமையும் என்பதை இதில் கலந்துகொண்டவர்கள் உணர்ந்துகொண்டிருப்பார்களோ தெரியாது.

இங்கு உரையாற்றிய எச்.ஸ்ரீ நிசங்க முக்கியமாகக் குறிப்பிட்டது இதனைத்தான். “அரசாங்கம் சிங்களத்தையே தேசிய மொழியாக்கி இங்குள்ள அனைவரையும் சிங்களத்தையே பேசுமாறு வலியுறுத்த வேண்டும். 1815 இல் பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றிய பின்னர் ஆங்கிலமே ஆட்சிமொழியாக்கப்பட்டது. இப்போது சிலர் சிங்களத்தை ஆட்சி மொழியாக்க முடியாது எனக் கருதுகின்றனர். இது பைத்தியக்காரத்தனம்” என்று நிசங்க குறிப்பிட்டார்.

இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்ட பின்னர் தனிச்சிங்களத்தை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட முதலாவது நிகழ்வாக இதனைக் கருதலாம். இந்தக் கூட்டத்தில் பின்வரும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. சிங்களம் அரச கரும மொழியாக்கப்படாமைக்குக் கண்டனம்.
2. தமிழுக்கு மதிப்பு ஆனால், சிங்களமே அரச கரும மொழியாக இருக்க வேண்டும்.
3. இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஆராய்வதற்காக செயற்குழு ஒன்றை அமைத்தல்.

இந்தக் கூட்டம் பற்றியும், இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் சிங்களப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டிருந்தன. இவ்விதம்தான் ‘சுதந்திரம்’ பெற்ற பின்னர் தனிச் சிங்கள இயக்கம் ஆரம்பமாகியது எனக் குறிப்பிடலாம்.

இருந்தபோதிலும், சுதந்திரத்துக்கு முன்னர் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்திலேயே அதாவது 1944 ஆம் ஆண்டில் இதேபோன்ற பிரேரணை ஒன்றை ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்தார். இருந்தபோதிலும், அதற்கு ஆதரவு இருக்காமையால் அந்தப் பிரேரணை கைவிடப்பட்டது. பின்னர் சுதந்திரம் என்ற பெயரில் சிங்களவர்களிடம் அதிகாரம் கையளிக்கப்பட்ட போது, இதற்கு இயற்கையாகவே ஆதரவு காணப்பட்டது.

தமிழ் தலைவர்களின்
பிரதிபலிப்பு என்ன?

இலங்கை எந்தப் பாதையில் செல்லப்போகின்றது என்பதற்கு நகர சபை மண்டபத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த 3 அம்சத் திட்டம் கட்டியம் கூறுவதாக இருந்தது. 1948 மே 10 ஆம் திகதி மட்டக்களப்பு முற்றவெளியில் நடைபெற்ற தமிழ்க் காங்கிரஸின் கூட்டம் ஒன்றில் அதன் தலைவர்களான ஜ.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஆகியோர் இது தொடர்பாக முதல்முறையாக மக்களை எச்சரித்தார்கள்.

இங்கு உரையாற்றிய ஜி.ஜி.பொன்னம்பலம், “தமிழ் மக்களையும் தமிழ்ப் பகுதிகளையும் உடனடியாகப் பாதிக்கக்கூடிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவ்விடயங்களில் அவர்கள் ஒரேமுகமாக இருந்து ஒரே குரலில் பேச முன்வர வேண்டும்” என அழைப்பு விடுத்தார். இங்கு உரையாற்றிய தந்தை செல்வா, “சுதந்திரம் வந்துவிட்டது என்று சொல்கின்றார்கள். உங்கள் அரசு உங்கள் மொழியில் நடக்கப்போகின்றதா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

தமிழ் மக்கள் அடுத்ததாக எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளை இரு தலைவர்களும் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதை இந்த உரைகள் புலப்படுத்தின.

SWRD Bandaranayake
GG.Ponnampalam

1948 ஜூன் 20 ஆம் திகதி ஆரம்பமான தமிழ்க்காங்கிரஸின் ஆலோசனைக் கூட்டத்திலும், இது தொடர்பாக செல்வநாயகம் பிரஸ்தாபித்திருந்தார். யாழ். நகர மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது: “இப்போதைய அரசியலமைப்பில் தமிழர்கள் சுதந்திரமடைந்துவிட்டார்கள் எனக் கருத முடியாது. தமிழர்களின் இலட்சியம் அவர்களின் பூரண சுதந்திரத்துக்கு வழிகோலுவதாக இருக்க வேண்டும். 20 ஆம் நூற்றாண்டில் இப்பிரச்சினையைத் தீர்பதற்கான ஒலே வழி பாஷா வாரியான பிரிவினையே.”

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் மாநில சுயாட்சியை அது ஏற்றுக்கொண்டது. அதற்காக மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. அதனைப்போன்ற ஒரு மாநில சுயாட்சியைத்தான் செல்வநாயகம் மனதில் கொண்டிருந்தார் எனக் கருதலாம். அவ்வாறான சுயாட்சி மூலமாகவே தமிழ் மக்கள் தமது மொழி உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என செல்வநாயகம் கருதியிருக்கலாம்.

ஜோன் கொத்தலாவலை
கொடுத்த வாக்குறுதி

இவ்வாறு தனிச் சிங்களத்தை இனவாத சக்திகள் வலியுறுத்திவந்த அதேவேளையில், பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை 1955 இன் முற்பகுதியில் மேற்கொண்டிருந்தார். பொதுத் தேர்தல் ஒன்று எதிர்நோக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றது. அவர் கலந்துகொண்ட இறுதிக்கூட்டம் கொக்குவிலில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹன்டி பேரின்பநாயகம் சிங்களமும், தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இரு மொழிகளுக்கும் சமத்துவ அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தக் கோரிக்கை அவரால் முன்வைக்கப்பட்டது. சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது கொத்தலாவலைக்கு நிச்சயமாக சங்கடமான நிலையைக் கொடுத்திருக்கும்.

பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்த கூட்டம் ஒன்றில் வைத்து பகிரங்கமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனால், இதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் கொத்தலாவலைக்கு. அதனால், அங்கு “சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாக்கப்படும்” என்ற அறிப்பை வெளியிடுவதைவிட அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.

Sir John Kotelawala
Handy Perinbanayagam

இந்த அறிவிப்பு சிங்களப் பகுதிகளில் எந்தளவுக்கு பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் அறியாதிருந்திருக்கமாட்டார். கடும் எதிர்ப்பு தென்னிலங்கையில் உருவாகியது. பாராளுமன்றத்துக்குள்ளே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலும், பாராளுமன்றத்துக்கு வெளியே பௌத்த பிக்குகள் தலைமையிலும் சிங்களம் மட்டும் என்ற கோஷத்தை முன்வைத்து தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தவர்களுக்கு கொத்தலாவலையின் அறிவிப்பு பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. அவர்கள் சிங்கள மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் அரசியலில் இறங்கினார்கள். சிங்களம் மட்டும் என்ற நிலைப்பாட்டுக்குத்தான் சிங்கள மக்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. சமஅந்தஸ்த்து தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டால், சிங்களவர்களும் தமிழ் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும், இதனால் சிங்களம் அடையாளத்தை இழக்க வேண்டி அபாயம் உள்ளதாகவும் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஐ.தே.க.வுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

பண்டரநாயக்கவின்
தேர்தல் உபாயம்

ஐ.தே.க.விலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பண்டரநாயக்க இந்த நிலைமையை தமது அரசியலுக்கு முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டார். 1955 செப்டம்பரில் பண்டாரநாயக்க வெளியிட்ட அறிவிப்பு இலங்கையின் சரித்திரத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் வெளியிட்ட அறிவிப்பு இதுதான்:
“சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மொழி தொடர்பான உப குழு மொழி தொடர்பான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் இருக்கும். தமிழை நியாயமாகப் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.”

பண்டரநாயக்கவின் இந்த அறிவிப்பு கொத்தலாவலையை பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. பண்டரநாயக்கவின் அறிவிப்புக்கு ஆதரவு பெருகிய அதேவேளையில், ஐ.தே.க.விலிருந்து பலர் விலகி ஸ்ரீ.சு.க.வில் இணையத் தொடங்கினார்கள். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இது தமக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த ஐ.தே.க. தலைமை அவசரமாக கட்சியின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தை 1956 பெப்ரவரியில் கூட்டியது. அதில் சிங்களம் மட்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தலில் தமக்கு ஆதரவைத் தரும் என அவர் நம்பினார்.

சிங்களம் மட்டும் என்ற கோஷத்தை இரு கட்சிகளும் முன்வைத்தாலும், கொத்தலாவலையின் யாழ்ப்பாண உரை சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பண்டாரநாயக்கவும் அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். தேர்தலில் ஐ.தே.க. படுதோல்வியடைந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றிய பண்டாரநாயக்க, சிங்களம் மட்டும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து சிங்கள ஸ்ரீ பிரச்சினை உருவானது. இவற்றால் உருவான இனக்கலவரங்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. இந்த சிங்களம் மட்டும் என்ற நிலைப்பாட்டில்தான் இரு பிரதான கட்சிகளும் தமது அரசியலை முன்னெடுத்தன.

இலங்கை அரசியலில் மொழி எவ்வாறு முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டது என்பதற்கான சரித்திர ஆய்வாக – பதிவாக இவை உள்ளன. இதன்மூலம் உருவான நெருக்கடிகளைத் தவிர்ப்தற்காகத்தான் பண்டா – செல்வா உடன்படிக்கையும், டட்லி – செல்வா உடன்படிக்கையும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், சிங்கள மக்களின் கடுமையான எதிர்ப்புக்களால் அவை கைவிடப்பட்டன. உள்நாடடுப் போர் உருவாகுவதற்கும் இதுவே அடிப்படையாகியது. இலங்கைக் குடியரசின் இரண்டு அரசியலமைப்புக்களும் கூட, தமிழ் மொழிக்கு சமத்துவ அந்தஸ்த்தை வழங்குவதற்குத் தவறியிருந்தன. சிங்கள மக்களின் உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே இந்த இரு அரசியலமைப்புக்களும் உருவாக்கப்பட்டன. அதாவது, அரசியலமைப்பின் மூலமாகவே சிங்கள மொழிக்கு முதன்மை இடம்கொடுக்க வேண்டும் என்பதில் இரு பிரதான கட்சிகளும் திட்டமிட்டுச் செயற்பட்டன.

1972 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பின் மூலம் உத்தியோகபூர்வமாக இலங்கையின் மொழிக்கொள்கை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி அரசியல் யாப்பின் மூலம் சிங்களமொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் மூலம் (அத்தியாயம் 4, உறுப்புரை 18 இல்) இலங்கையின் அரச கரும மொழி சிங்களமாக வேண்டும் என்பதுடன், உறுப்புரை 19 இல் இலங்கையின் தேசிய மொழியாக சிங்களமும் தமிழும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 21(1) உறுப்புரையில் அரச கரும மொழியே இலங்கையின் நிருவாக மொழியாதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கள மொழிக்கான அந்தஸ்த்தை அரசியலமைப்பின் மூலமாகவே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் உறுதியாக இருந்துளளன என்பதற்கு இது ஆதாரம்.

இந்தியத் தலையீடும்
13 ஆவது திருத்தமும்

இதனால் தொடர்ந்த போர் இந்தியாவின் தலையீட்டுக்கு வழிவகுத்தது. தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு 30 வருடங்களின் பின்னர் அதாவது, 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய உடன்படிக்கையின் மூலமாகவே (அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக 13 வது திருத்தம் மூலமாக) தமிழ் மொழிக்கும் சமஅந்தஸ்த்து முதல்முறையாக வழங்கப்பட்டது. இந்தியாவின் அழுத்தமும், வடக்கு கிழக்கில் தொடர்ந்த போரின் விளைவுகளும் இரு பிரதான கட்சிகளும் இந்த விடயத்தில் இணங்கிவருவதற்குக் காரணமாகின. 1988 இல் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் மொழி தொடர்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது. “சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாகும்.”

அரசியலமைப்பில் உத்தியோகபூர்வ மொழியாக தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டு 30 வருடங்கள் சென்றுள்ள நிலையில் கூட, இன்னும் முற்றாக நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகத்தான் அது உள்ளது. அரசியலமைப்பில் கண்டு கொள்ளப்படாத ஒரு பக்கமாகவே மொழி அமுலாக்கல் உள்ளது. அரசகரும மொழி எனக் குறிப்பிடும் போது அது நாட்டின் நிர்வாக மொழியாகச் செயற்படுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது எனப் பொருள்கொள்ளலாம். அதாவது இலங்கைப் பிரஜை ஒருவர் தமது அன்றாட கடமைகளையும், அரசாங்கத்துடனான தொடர்புகளையும் தான் தமிழ் மொழியிலேயே மேற்கொள்வதற்கான உரிமையைக் குறிப்பதாகும். அரசியலமைப்பில் சொல்லப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் எதுவும் கடந்த காலங்களில் இருக்கவில்லை. அரசகரும மொழிகள் திணைக்களம், அதற்கென அமைச்சு என்பன இருந்தும் சிங்களம் மட்டும் என்ற நிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால், இலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ்பேசும் மக்களுக்கு அரச நிர்வாக சேவையைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்படுகின்றது. இந்நிலையில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பில் இருக்கும் பிரச்சினை என்னவெனில், அது நிர்வாக ரீதியாக மக்களுக்கு சென்று சேரவில்லை. தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் இது அவர்களது அன்றாட பிரச்சினையாக இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கு, மலையகத்தில் தமிழர்கள் அதிகளவுக்குச் செறிவாக வசித்தாலும், ஏனைய பகுதிகளிலும் கணிசமாக வசிக்கின்றார்கள். அதேபோல வடக்கு, கிழக்கில் சிங்களவர்களும் வசிக்கின்றார்கள். இதனைக் கருத்திற்கொண்டுதான் அரசியலமைப்புக்கான 16 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில் இலங்கை முழுவதும் சிங்களமும், தமிழும் நிர்வாக மொழிகளாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைவிட, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதன்மை நிர்வாக மொழி தமிழ் எனவும், ஏனைய 7 நிர்வாக மாவட்டங்களிலும் நிர்வாக மொழியாக சிங்களம் இருக்கும் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முதன்மை நிர்வாக மொழியாக பயன்பாட்டிலுள்ள மாகாணங்களில் சில பிரதேசப் பிரிவுகளில் குறிப்பிடத்தக்களவு மற்றைய மொழியினர் உள்ளபோது, அப்பிரசேப் பிரிவுகளை இரு மொழி பிரதேசப் பிரிவுகளாக ஜனாதிபதி பிரகடனம் செய்யலாம். அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தின் 21 வது பிரிவு இதனைக் கூறுகிறது. இதன்படி அந்தப் பிரிவில் இரு மொழிகளும் சமத்துவ அந்தஸ்த்தைக் கொண்டவையாகக் கணிக்கப்பட வேண்டும். இதுவரை 47 பிரதேசங்கள் இவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 40 பிரதேச செயலகப் பிரிவுகள் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளன. அவை வர்த்தமானி மூலமாக இன்னமும் பிரகடனம் செய்யப்படவில்லை.

இவ்வாறான பிரகடனங்கள் வரவேற்கத்தக்கவைதான். ஆனால், இந்தப் பகுதிகளில் கூட தமிழ் மொழிப்பாவனை உரிய முறையில் மக்களின் தேவைகளைத் திருப்திப்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. அரசாங்கம் தேவையானளவுக்கு மொழிப் பயிற்சிகளை மேற்கொள்ளாததது இதற்கு முதலாவது காரணம். அக்கறையற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் அடுத்த காரணம். இவ்வாறான பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை நிலைநிறுத்திக்கொள்வதில் உறுதியுடன் செயற்பட வேண்டும். அதன் மூலமாகவே அரசாங்கத்துக்கும் நிர்ப்பந்தததைக்கொடுக்கமுடியும். முழுஅளவில் தமிழர்கள் தமது தாய்மொழியிலேயே தமது தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நிலை இதன்மூலமாகவே ஏற்படுத்த முடியும். இது தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமானதாகும்.