Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

யாழ்பாணம் - வவுனியா
ஹிப்போவின் தொப்பி!

சாதாரணமாக ஒரு பொது போக்குவரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்ல 4 அல்லது 5மணித்தியாலங்கள் தேவைப்படும். அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இந்த இளைஞன் தன்காதலியை புகையிரத நிலையத்தில் இருத்திவிட்டு யாழ்ப்பாணம் வந்து மீண்டும் வவுனியா சென்றுகொண்டிருக்கிறார்.

07.01.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
ஹிப்போ.

ஒரு மழை நாளின் மதிய நேரம் அது! யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்;ற அரசுப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, அந்த நாவலை முடிக்க எண்ணி படிக்க ஆரம்பித்தேன்.
“எக்ஸ்கியூஸ் மி, மே ஐ சிற் ஹிய?” தயவுடன் நாகரிகம் நிரம்பிய அந்தக் கேள்வி சட்டென என்னை நிமிரவைத்தது. அருகில் அமர்வதற்கு அனுமதி கேட்டான் ஓர் வெளிநாட்டு இளைஞன். “யெஸ் பிளீஸ்…” என்றவாறு நகர்ந்தேன். இந்த பஸ் ஓட்டத்தில் நாவல் படிக்கமுடியாது. யன்னலுக்கு வெளியே பார்த்தேன். யாழ்ப்பாணத்தின் இறுதி தரிப்பிடம். அதிகமான பயணிகள் ஏறிக்கொண்டிருந்தார்கள்.
அந்த வெளிநாட்டு இளைஞனின் கைகளில் எந்தவித பைகளும் இல்லை. ஆனால் அவன் வவுனியாவுக்கு ரிக்கெற் எடுத்தான். எனது அனுமானம் சரியாக இருந்தால், அவன் ஒரு மாணவன்! ஆனால் ஏன் தனியாகப் பயணம் செய்கிறான்? எந்த நாட்டுக்காரனாக இருக்கும்? எங்கு போகிறான்?? இங்கு எதற்காக வந்திருப்பான்??? ‘டபிள்யூ’ மற்றும் ‘எச்’ வகைக் கேள்விகள் எனக்குள் வரிசைகட்டி நின்றன. தனது தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி கையால் மெதுவாக வருடிக்கொண்டான். பின்னர் அதை அணிந்துகொண்டான். செல்போனில் யாருடனோ பேசினான். அது பிரெஞச் மொழி. பேசும்போது அவன் மனம் அதிகமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மிகுந்த சந்தோசத்தில் இருந்தான்.
இன்று இலங்கையில் உலகில் உள்ள அத்தனை மொழிக்கரர்களும் வந்து போகிறார்கள். இலங்கை ஒரு சொர்க்காபுரிதான்! ஆனால் இவன் தனித்து பயணிக்கிறானே…

என்பக்கம் திரும்பி நான் கையில் வைத்திருக்கும் புத்தகம் பற்றி விசாரித்தான். “மக்சீம் கார்க்கியின் தாய்” என்றேன். கார்க்கியை அறிந்துதான் இருந்தான்! அவனுடனான எனது உரையாடலில் அவன் பிரான்ஸ் நாட்டவன். பெயர் ஹிப்போ. 22 வயது. மருத்துவம் படிக்கிறான் இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கிறான்.என்பதை தெரிந்துகொண்டேன். ஆனால் தனியாகவா?
தன்னுடன் மருத்துவம் படிக்கும் தோழியைக் காதலிப்பதாகவும் அவளுடன்தான் இலங்கைக்குச் சுற்றுலா வந்திருப்பதாகவும் கூறினார்.

சரி இப்ப ஏன் தனியாக யாழ்ப்பாணம் வந்து போகிறீர்கள்? கையில் எந்த பொருட்களையும் காணவில்லையே. உங்கள் காதலி எங்கே? என நான் கேள்விகளை அடுக்கினேன்.
பதில் : நாம் இருவரும் யாழ்ப்பாணத்திற்கு 3நாட்களின் முன் வந்தோம். கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, வவுனியாவிற்கு சென்றபோதுதான் ஒரு பொருளை யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டுவிட்டோமே என்ற நினைவு வந்தது. ஊடனடியாக வவுனியாவில் இறங்கிவிட்டோம். அந்தப் பொருளை எடுப்பதற்காக நான் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தேன். பொருள் கிடைத்துவிட்டது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. பொருளை எடுத்துக்கொண்டு திரும்பி வவுனியா சென்றுகொண்டிருக்கிறேன்.
இந்தமாதிரியான பிரயாணம் இலங்கையில் வாய்த்திருப்பது நீண்ட நெடுங்காலத்தின் பின்தான். ஆனாலும் ஒரு பொதுப் போக்குவரத்தில், அதுவும் குறித்த காலநேரம் இல்லாது பயணிக்கும் போக்குவரத்தில் இப்படிப் பிரயாணம்செய்ய நம்மவர் துணியார்.

கேள்வி: உங்கள் காதலி இப்போது எங்கு நிற்கிறார்?

எமது பொருட்கள் எல்லாவற்றுடனும் வவுனியா புகையிரத நிலையத்தில் அவளை நிற்கச்சொல்லிவிட்டு வந்தேன். நாங்கள் இன்று கொழும்பு போக வேண்டும்.

சாதாரணமாக ஒரு பொது போக்குவரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்ல 4 அல்லது 5மணித்தியாலங்கள் தேவைப்படும். அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இந்த இளைஞன் தன்காதலியை புகையிரத நிலையத்தில் இருத்திவிட்டு யாழ்ப்பாணம் வந்து மீண்டும் வவுனியா சென்றுகொண்டிருக்கிறார். அவர்கள் தவறவிட்ட பொருள் அத்தனை பெறுமதியானதா? கேட்கும் எண்ணத்தில் அவருடன் அளவளாவினேன்.
அடுத்தவாரம் பிரான்ஸ் திரும்பவேண்டிய இவர்கள் எந்த ஒரு வழிகாட்டி நபர்களும் இல்லாமல் இலங்கைiயை சுற்றிப்பார்த்துள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்களே இடங்களைப்பார்வையிட உதவியதாகக் கூறினார்.
கேள்வி: உங்கள் இருவரையும் மிகவும் கவர்ந்த இடம் இலங்கையில் எது?

சிகிரியா! என்ன உயரமான மலை…! அவ்வளவு உயரத்தில் ஒரு அரசன் கோட்டை அமைத்து வாழ்ந்திருக்கிறான்…. அதற்குள் உள்ள ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்…ம்.. முழு இலங்கையுமே அழகுதான்.
என்று கூறிச் சிரித்தவரிடம்,

கேள்வி : இலங்கையில் ஆச்சரியப்படவைத்த நிகழ்ச்சி அல்லது சம்பவம்?

நல்லூரில் உள்ள கோயில். என்ன ஒரு மக்கள் கூட்டம்!! சமய விழா ஒன்றில் இவ்வளவு மக்கள் கூட்டம் கலந்துகொண்டதை அந்த (நல்லூர்) இந்துக் கோயிலில்தான் முதல் முறையாகப் பார்த்தேன்.
என்று ஆச்சரியப்பட்டவரிடம்,

கேள்வி : யாழ்ப்பாணத்தில் நீங்கள் தவறவிட்ட பொருள் என்ன என்ற தெரிந்து கொள்ளலாமா?
என்னைப்பார்த்து சிரித்தவர். தன் தலையில் இருந்த தொப்பியைக் கழற்றியபடி‘இதுதான். இந்தத்தொப்பி’ என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அட இதுக்காககவா? என்ன கொடுமை இது… ஒரு பக்கம் சிரிப்பும் வந்தது.

தொலைந்துபோன தொப்பி

கேள்வி: இந்தத் தொப்பிக்காக ஐந்நூறு ரூபாயும் சுமார் 5 மணி நேரத்தையும் செலவு செய்திருக்கிறீர்கள். இதற்கு புதிதாக ஒரு தொப்பியை வாங்கியிருக்கலாமே!
இந்தத் தொப்பி விலைமதிப்பற்றது. இதைப்போல் ஒன்றை எங்குமே வாங்க முடியாது. இதை நான் என்னுடனேயே எப்போதும் பத்திரமாக வைத்திருப்பேன். எப்படி தவறவிட்டனோ தெரியாது. நல்லகாலம் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் அது அப்படியே இருந்தது. திரும்ப எடுத்துவந்துவிட்டேன்.
இதைச் சொல்லும்போது மிகுந்த சந்தோசமாக இருந்தார். தனாகவே அந்த விலைமதிப்பற்ற தொப்பி பற்றி சொன்னார்.
இந்தத் தொப்பி, எனது காதலியால் எனக்காகப் பரிசளிக்கப்பட்டது. அவள் சில மாதங்களுக்கு முன்பு, பிரான்சில் வீடு மாறிச் சென்றாள். அப்போது சாமான்களை ஏற்றியிறக்க நான் அவளுக்கு உதவி செய்தேன். நான் விடைபெற்றபோது, அவள் இந்தத் தொப்பியை எனக்குப் பரிசளித்தாள்.
அட கடவுளே இது காதல் பித்தா? என்று மனதுள் எண்ணினேன். இது உலகமெல்லாம் உள்ள காதலர்களுக்கான மனநிலைதான்.புதிதாக ஒன்றுமில்லை. அட அதுக்காக இவ்வளவு தூரம்… நேரம்…
கேள்வி: அதனால் என்ன இப்போதும் அவளுடன் தொடர்பில் இருக்கிறாய் அல்லவா! நீ தொலைத்தது தெரிந்தால் இன்னொன்றை உனக்கு வாங்கித் தரப்போகிறாள்!!
(எனது கூற்றை அவசரமாக மறுத்தான்). இது எங்கள் காதலின் சின்னம் மட்டுமல்ல. எவ்வளவு முயற்சித்தாலும் மீண்டும் இதனைப் பெறமுடியாது.
இது பிரான்சில் உள்ள பிரபல விளையாட்டு நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு. அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொப்பிகளை மட்டுமே ரசிகர்களுக்காகத்தயாரிக்கிறது. இந்த ஆண்டு ஆயிரம் தொப்பிகளை மட்டுமே தயாரித்தது. இதை வாங்க ரசிகர்களிடையே பெரும் போட்டி ஏற்படும். எனது காதலி எப்படியோ இதைப் பெற்றிருக்கிறாள். இந்த ஆண்டு அவளிடம் இருந்த மிகவும் பெறுமதிவாய்ந்த பொருள் இதுவென்று அவள் என்னிடம் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறாள். அதையே எனக்குப் பரிசளித்திருக்கிறாள் என்றால், என்மீது அவள் கொண்டுள்ள காதலின் ஆழத்தைக் காட்டியிருக்கிறாள் என்று உணர்கிறேன். எனவே இதை நான் பாதுகாக்கத்தானே வேண்டும்!
ஆமாம்… ஆயிரத்தில் ஒன்று, பாதுகாக்கத்தான் வேண்டும்.!