Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பெருநகரில்...
கடவுளே மழை வரக்கூடாது…!

“ஏறத்தாள 49 வருடங்களுக்கு முன் நான் எனது தந்தையுடன் சிறுவனாக இங்கு குடியேறினோம். அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் இந்த எட்டுக்கு எட்டு அளவுடைய அறை தான் எம் வீடு.”

19.07.2018  |  
கொழும்பு மாவட்டம்

ஒவ்வொரு மழைக்காலம் நெருங்கும் போதும் தஸ்லீமிற்கு ஏற்படும் மன நெருக்கடிகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அவரது வாழ்விட வசதியீனங்கள் அந்தப் பயத்தை அவருக்குள் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எந்தப்பக்கத்தில் இருந்து வீட்டுக்குள் தண்ணீர் வரும் என்று சொல்ல முடியாது. எல்லாப்பக்கங்களில் இருந்தும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம். ஒரு சராசரி மனிதனாக அவரால் இயல்பாக வாழ்ந்து விட முடியாத நிலைமைக்காக வருந்துவதிலேயே அவருடைய வாழ்வின் பெரும் பகுதியை நகர்த்திக் கொண்டார். ஏனோ அவருடைய சிந்தனைகள் கற்பனையில் கூட வாழ முடியாத அளவிற்கு முடங்கி விட்டன. ஒரு சராசரி மனிதனுக்குரிய சிந்தனைகளில் சுற்றுப்புறம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எம்.எம் தஸ்லீம் (57 வயது)வாழ்ந்து உணர்ந்து கொண்டிருக்கிறார். உண்பதும் உறங்குவதுமே அவருடைய சந்ததியின் கனவாகிப் போய் விட்டதா? என்ற ஏக்கம் அவரை வாட்டிக் கொண்டுதானி ருக்கிறது.


“ஏறத்தாள 49 வருடங்களுக்கு முன் நான் எனது தந்தையுடன் சிறுவனாக இங்கு குடியேறினோம். அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் இந்த எட்டுக்கு எட்டு அளவுடைய அறை தான் எம் வீடு.” என்று கூறும் தஸ்லீம் தனக்கு பிறந்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இப்போதும் அங்கு வாழ்கிறார். அந்த எட்டுக்கு எட்டு அளவுடைய அறைக்குள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஒரு அசாத்திய மனம் தேவை. விளையாட்டு முற்றம் கூட இல்லாத கூட்டுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகளாக அடுத்தடுத்த சந்ததி வளர்கிறது.

கொழும்பு என்றதும் அந்தப் பெருநகரில் எல்லோருக்கும் மனக்கண்ணில் தெரிவது வசதியும் வாய்ப்பும் கூடிய ஒரு நகர்ப்புறம் தான். ஆனால் இந்த எம்.எம் தஸ்லீம் போல் அடிப்படை வசதிக் குறைவோடு எழுபதினாயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழ்வதாக CMC SEVANATHA 2002  அறிக்கைகள் கூறுகின்றன. இந்த 15 வருடங்களுக்கு மேற்பட்ட இந்த காலத்தில் இருப்பிடம் அதே அளவினதாக இருக்க, சனத்தொகை அதிகரித்துள்ளது. எனவே அடிப்படை வசதிக்குறைவோடு வாழும் குடும்பங்களின் தொகை இன்னும் அதிகமாகியுள்ளது. கொம்பனித்தெருவில் அந்த இடத்திற்கே பெயர் ‘அடிமைகளின் தீவு’ SLAVE ISLAND.. குறைந்த வருமானம் கொண்டவர்கள் வழ்ந்த இந்த பிரதேசம் தற்போது மிக அபிவிருத்தியடைந்த செல்வாக்குள்ள கொழும்பின் முக்கிய இடமாகவும் விளங்குகிறது. சதாரணமாக ஒரு அடி நிலம் வாங்குவதென்றால் முடியாத காரியம். இந்த நிலையில், இங்கு வாழ்வோரில் கணிசமான தொகையினரை தற்காலிகமாக வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு அரசு பகிரதபிரயத்தனம் மேற்கோண்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே தொடர்மாடிகளில் குடியிருக்கும் இந்த அன்டர்சன் குடியிருப்பாளர்கள், பராமரிப்பற்ற மிகவும் பாதிப்புக்குள்ளான ஒரு கட்டிடத்தில் அடிப்படை வசதிகளை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.


இங்கு தஸ்லீம் மட்டுமல்ல சாமிக்கண்ணும்( தமிழ்) ஜெயக்கொடியும்(சிங்களம்) சேர்ந்துதான் வாழ்கிறார்கள்.

சுமார் 114 குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. 49 வருடம் கடந்த கட்டிடம் புகையிரத வண்டியின் ஓட்டத்திற்கு அதிர்ந்து உதிரத் தொடங்கியதையும்; காண முடிகிறது. ஆங்காங்கே வீட்டுக்குள் நீர் கசிவதையும், சுவர்களில் மரங்கள் முளைத்திருப்பதையும் யாரும் கவனிப்பாரில்லை. மலசலக்கூட குழாய் கழிவு நீர் கசிவுகளும் துர் மணமும் நிறைந்த கட்டிடங்களை சாக்குகளாலும் துணிகளாலும் ஈரத்தை ஒத்தி எடுத்து அந்த கட்டிடத்தில் வாழப்பழகிவிட்டனர். ஆனாலும் வேறு இடம் தருவர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் இருக்கிறார்கள். அங்கு போய் நிம்மதியாக இருக்கலாம் என்று நம்பி வருடக்கணக்காகிவிட்டது. தேர்தல் காலத்தில் கொட்டப்படும் வாக்குறுதிகளும் வாக்கு வேட்டைக்காகிப் போனது.

மழை வந்தால் கவலைகொள்ளும் இவருக்கு மனக்கண்முன் நிற்பதெல்லாம் வீடுகள் ஒழுகுவதும், கழிவு நீர் எல்லாம்பாதைகளிலும் வீடுகளிலும் நிறைந்து நிற்பதும்தான். மழை,வெய்யிலில் இருந்து மக்களை பாதுகாப்பன வீடுகள். ஆனால் இந்த வீடுகள் எதற்கு? நிம்மதியாக தூங்குவதற்கு கூட முடியாத இந்த வீடுகள் எதற்கு?

“மாதம்பிட்டிய, மட்டக்குழி,வெள்ளாம் பிட்டி போன்ற பிரதேசங்களில் அரசாங்கம் தற்காலிகமாக வீடமைத்து தருவதாக கூறி அங்கு கட்டப்பட்ட வீடுகளையும் பார்வையிடச் செய்தார்கள். அன்று நான் அடைந்த சந்தோசத்திற்கு எல்லையில்லை. கொம்பனித் தெருவில் வசிக்கும் எல்லோருக்குமே ஒரு புதிய வீடு பற்றிய கனவு இருந்து கொண்டு தானிருக்கிறது.” என்று கூறும் தஸ்லீமுக்கு தானும் தன் பிள்ளைகளும் இங்கே வளர்ந்தது பற்றிய கவலையை விட தன் பேரப்பிள்ளைகள் இங்கே வளர்வதைதான் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது. மிகவும் மோசமான ஒரு சுற்றுச்சூழலில் தன் பேரர்கள் வளர்வதை சகிக்கமுடியாதுள்ளது.

இங்கு தஸ்லீம் மட்டுமல்ல சாமிநாதனும்( தமிழ்) ஜெயக்கொடியும்(சிங்களம்) சேர்ந்துதான் வாழ்கிறார்கள். இவர்களுக்குக்குள் இன மத பேதம் இல்லை. மொழியும் ஒரு தடையல்ல. அடிப்படை வசதியில்லாத இந்த இடத்தில் சமரசம் நிலவுகிறது. இன,மத நிகழ்வுகளை எல்லோரும் சேர்ந்தே செய்கிறார்கள்.

ஆனாலும் இங்கு ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. மாடிக் குடியிருப்புகளில் எப்படி வாழவேண்டும் என்று இவர்களுக்கு தெரியாதிருந்தது. இவர்களது குப்பைகளை இவர்களே பலவிடங்களிலும் வீசியிருக்கிறார்கள். கட்டிடங்களில் மரங்கள் முளைக்கத் தொடங்கும் போதே அதை பிடுங்கிவிட யாருக்கும் தோன்றவில்லை. கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக செயற்பட்டு தீர்வுகாணத் தெரியவில்லை. கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க அதைப்பயன்படுத்தும் முறை தெரியவில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருப்பதும் இந்த பிரச்சினைகளுக்கு காரணமாக அமைவதையும் ஏற்றுக்கொள்ளலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக புதிய இடத்தில் வீடு வரப்போகிறது என்பதை நினைத்து இந்த தற்காலிக வீட்டை பராமரிக்காது விட்டமையையும் நியாயப்படுத்த முடியாது.

அதே நேரம் பொது பராமரிப்பு நிலையும் படு மோசமாக இங்குள்ளது. இந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் அரசு பாராமுகமாக இந்த கட்டிடத்தை வி;ட்டுள்ளதோ என்றும் சிலர் ஐயுறுகின்றனர். ஏனெனில் கொழும்பின் மிக முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது. சுற்றிவர சொகுசு மாடிகளும், வீடுகளும் ,அரசின் முக்கிய அலுவலக பகுதிகளும் இங்கு அமைந்திருக்க, அங்கே இந்தமாதிரியான குடியிருப்புகளை அரசு விரும்பாமலிருக்கலாம்.

ஆனாலும் நகருக்குள் இருக்கும் இந்த மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாதவர்களாக பல ஆண்டுகாலம் வாழ்வதென்பது அவர்களின் உடல் உள பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமையும். தஸ்லீம் வேண்டிக்கொள்வதுபோல் மழை வராமல் விடப்போவதில்லை. வரும் மழைக்கு அவர்கள் எப்படி ஈடுகொடுக்கப் போகிறார்கள்?

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா