Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

83 கலவரத்தில்…
“பொல்லையும் மிளகாய்த்தூளையும் வைத்து காவல் காத்தோம்.!”

வீட்டின் பின் கதவின் வழியாக எங்கள் வீட்டுக்குள் அந்தக் குடும்பத்தை வரவழைத்து ஒளித்து வைத்தோம். கடவுளே அந்த பொழுதுகள் பயங்கரமானவை. இப்பொழுது நினைத்தாலும் எனக்கு உடலெங்கும் ஒருவித அச்ச உணர்வு பரவுகின்றது.

31.07.2018  |  
கொழும்பு மாவட்டம்

“மக்கள் ஒருவிதமான அச்சத்துடன் இருந்தனர். கடைகளிலும் பொது இடங்களிலும் கூடியிருந்தவர்கள் ‘பொரளை கனத்தையில் பெருமளவானவர்களின் இராணுவத்தினரின் உடல்கள் இரவோடு இரவாக புதைக்கதைப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொழும்பில் சிங்களவர்களைக் கொல்லப் புறப்பட்டு வருகின்றார்கள்’ என்றும் கதைத்துக் கொண்டிருந்தனர்.” என்று 1983 ஜூலையில் இலங்கையில் நடந்த கலவரம் பற்றி விபரித்தார் கித்சிறி நிஸ்ஸங்க. வயது (வயது57.) ஹட்டன் பிரதேசத்தினைச் சேர்ந்த இவர் பிலியந்தலையை வசிப்பிடமாகக் கொண்டவர். தொழில் நிமித்தம் கொழும்பு ஜாவத்தயில் உள்ள ஒரு முஸ்லிம் வர்த்தகர் வீட்டில் தங்கியிருந்து அந்த வர்த்தகரின் வாகன ஓட்டுனராக பணியாற்றியவர். அவர் மேலும் கூறுகிறார்,

“அன்றைய தினம் ஜூலை25ம் திகதி என்று நினைக்கின்றேன். எல்லா இடமும் ஒரே பதற்றமாக இருந்தது. பகல் 2.30 மணியளவில் நான் புறப்பட்டு பம்பலப்பிட்டி செல்வதற்காக வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன். பஸ் போக்குவரத்தும் இல்லை. ஆங்காங்கே கலவரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ஏனக்கு அப்ப 22 வயது,என்ன தான் நடக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் இருந்தது. வீதியெங்கும் உடைக்கப்பட்ட தமிழர்களின் கடைகளில் இருந்த பொருட்களை எல்லாம் சிலர் வெளியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தனர். அதனை தத்தமக்காக எடுத்துக் கொண்டு சிலர் சென்று கொண்டிருந்தனர். பல கடைகள் எரிந்து கொண்டிருந்தன. டொரிங்டன் சந்தியில் இருந்த ஒரு வீடும் தீக்கிரையாகிக் கொண்டி ருந்ததாக ஞாபகம். எங்கும் புகை மூட்டம். தும்முல்லை வரை நடந்து சென்று கொண்டே இருந்தேன். தும்முல்ல சந்தியிலும் கடைகள் எரிந்து கொண்டே இருந்தன. சலுசலவில் எனது நண்பன் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் கண்டியை சேர்ந்த அவர் தாக்கப்பட்டு ஆபத்தானா நிலையில் இருந்ததாக அறிந்தேன். காரணம் அவர் கறுப்பாக இருந்ததே. கறுப்பாக இருந்த காரணத்தினால் பல சிங்களவர்கள், தமிழர்களாகக் கருதப்பட்டு தாக்கப்பட்டனர். அதனால் சிங்களவர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவியது. நான் திரும்பவும் எனது இடத்திற்கு வந்துவிட்டேன். அப்போதுதான் எனக்கு அந்த பொறுப்பளிக்கப்பட்டது.” என்று கூறும் கித்சிறி நிஸ்ஸங்க தனக்கு அளிக்கப்பட்ட உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பை பின்வருமாறு விளக்கினார்.

http://groundviews.org/2016/07/26/black-july-government-promises-and-our-future/

“எங்களது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த காவலாளியின் குடும்பத்தினர்(6பேர்)

பேலியகொடையில் பின்வத்த பகுதியில் பிரச்சினைக்குள்ளாகியிருப்பதாக நாம் அறிந்து கொண்டோம். அவர்கள் தமிழர்கள். அவர்களை அழைத்து வர ஒரு வாகனத்தில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு போனேன். வழியில் நான் பார்த்த காட்சிகளை நினைத்தாலே இப்பொழுதும் மனம் பதறுகின்றது. அப்படி ஒரு மோசமான நிலைமையை விபரிக்க வார்த்தைகள் இல்லை. சாதாரண மனிதர்கள் எப்படி மிருகங்களாக மாறினார்கள்? என்ற கேள்வி இன்றைக்கும் எனக்குள் உள்ளது. ஒருவாறு பாதுகாப்பாக நான் அவர்களை அழைத்து வந்து எமது முதலாளி முஸ்லிம் வர்த்தகர் வீட்டில்


கறுப்பாக இருந்த காரணத்தினால் பல சிங்களவர்கள், தமிழர்களாகக் கருதப்பட்டு தாக்கப்பட்டனர்.

விட்டேன். அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவுகளை கடைகளில் வாங்கிக் கொண்டு வந்தேன். அன்று நான் அவர்களை அழைத்து வர முன்வராதிலிருந்தால் அந்த குடும்பம் இன்று உயிருடன் இருந்திருக்காது. அன்று அவர்களை என்னால் காப்பாற்ற முடியாமல் போயிருந்தால் அந்நிகழ்வு எனக்கு ஒரு வாழ்நாள் பூராகவும் பெரும் துயரமாக இருந்திருக்கும். இன்று அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள். 35 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அன்றைய கோரமான சூழலையும் வன்முறைகளையும் என்றுமே மறக்க முடியாது.”

என்று கூறும் கித்சிறி நிஸ்ஸங்க இன்றும் அவற்றைக்கூறும்போது பதட்டமடைகிறார். ஏந்த வரலாற்றையும் நாம் மாற்ற நினைக்கலாம். ஆனால் மக்கள் மனங்களில் பதிவாகியிருக்கும் வரலாற்று நிகழ்வுகள் யாராலும் மாற்றமுடியாதவை. தாங்கள் தாங்கள் பார்த்த காட்சிகளை இன்னும் மனங்களில் பதிவுசெய்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். பெரும் துயருக்குள் சிக்கித்தவித்த தமிழ் மக்களின் பாடுகளை சிங்கள இனத்தின் சாதாரண பொதுமக்கள் எப்படி நோக்கினர் என்பதை அறிவதற்காக இந்த நேர்காணல் செய்யப்பட்டது. இந்த விடயங்களை சொல்ல துணிந்த இந்த மக்கள் தமது முகங்களை பொதுவில் காட்டுவதற்கு உடன்படவில்லை.

“1983இல் சிங்கள மக்கள் தான் தமிழர்களை அடித்து கொன்றனர் என்கின்றனர். ஆனாலும் எத்தனை சிங்கள மக்கள் தமிழர்களைக் காப்பாற்றியிருக்கின்றார்கள் தெரியுமா?” என்று கேட்கிறார் தயாவதி மெனிக்கே (69). கொழும்பு கிரான்ட்பாஸில் நவகம்புர பகுதியில் வசித்து வருகின்றார்.
ஒரு தமிழ் குடும்பத்தினையாவது எங்களால் காப்பாற்ற முடிந்ததே என்பதில் எமக்கு பெருமைதான். அப்பொழுது கிரான்ட்பாஸ் பகுதியில் அயலவர்கள் பெரும்பாலும் தமிழர்களாகத் தான் இருந்தனர். நாங்கள் உறவினர்கள் போன்று தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். கலவரம் தொடங்கிய தினங்களில் ஜுலை 25 மற்றும் 26ம் திகதிகளில் நாடு முழுவதும் பதற்றமாக தான் இருந்தது. ‘புலி வருது புலி வருது’ என்று தான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கும் அச்சமாக தான் இருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் கடைகள் உடைக்கப்பட்டன. டயர்கள் போட்டு எரிக்கத்தொடங்கினர். உடைத்த கடைகளில் இருந்து யார் யாரோ பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் முன்பு ஒருபோதும் பார்த்திராதவர்கள் நிறையப் பேர் எமது பகுதியில் கத்தி வாள் பொல்லுகளுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அண்டை வீடுகளில் இருந்த தமிழர்கள் கலவரத்துடன் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை ஆசுவாசப்படுத்த நாங்கள் அதிக நேரத்தினை எடுத்துக் கொண்டோம். ஜுலை 26ம் திகதி கலவரம் மிகத்தீவிரமடைந் திருந்தது. எங்கள் வீடுகளை சூழவிருந்த தமிழ் குடும்பங்கள் பல இரவோடிரவாக காணாமற் போயிருந்தார்கள். அவர்கள் உயிருக்கு அஞ்சி தப்பி சென்று விட்டார்களா இல்லை இரவோடிரவாகக் கடத்தப்பட்டார்களா கொல்லப்பட்டார்களா என்று இன்று வரை எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எங்கள் அருகில் இருந்த வீட்டில் இருந்த தமிழ் குடும்பத்தினை இரு சிறு பெண் பிள்ளைகளையும் அவர்களின் தாய் தந்தையரையும் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்து கொண்டோம்.
‘கோ தெமலு இன்னவத? ஹங்க கென இன்ன எப்பா தேருனாத?”(தமிழர்கள் இருக்கிறார்களா? அவர்களை ஒளித்துவைக்க வேண்டாம்..விளங்குதா?) என வாள்களை தூக்கிக் கொண்டு வீதியில் கத்திக் கொண்டிருந்தனர். ஆனால் நாம், வீட்டின் பின் கதவின் வழியாக எங்கள் வீட்டுக்குள் அந்தக் குடும்பத்தை வரவழைத்து ஒளித்து வைத்தோம். கடவுளே அந்த பொழுதுகள் பயங்கரமானவை. இப்பொழுது நினைத்தாலும் எனக்கு உடலெங்கும் ஒருவித அச்ச உணர்வு பரவுகின்றது. எங்கள் வீடோ சிறிது. எங்கு தான் அவர்களை ஒளிப்பது? அவர்கள் அச்சத்தில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர். நான் எனது இரண்டு மகன்களையும் வீட்டின் வாசலில் காவலுக்கு இருக்க செய்து விட்டு அவர்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தேன். வாள் கத்தி பொல்லுடன் ஒரு கூட்டம் வந்து அந்த அண்டை வீட்டில் இருந்த தமிழர்கள் எங்கே என்று ஆக்கிரோஷமாக தேடிக் கொண்டிருந்தது. அவர்களின் வீட்டு உபகரணங்கள், பொருட்கள் எல்லாம் வீதியில் தூக்கி எறியப்பட்டன. எனது மகன்களை வெருட்டி எங்கே அந்த தமிழர்கள்? எங்கே? என்று கேட்டு பயமுறுத்தினர். அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று சொல்லவும் ஒளித்து வைத்தால் உங்களையும் கொல்வோம் என்று எச்சரித்து விட்டு சென்றனர்.
அச்சத்தில் அன்று முழுவதும் அவர்கள் சாப்பிடவே இல்லை. நாங்களும் பயத்தில் உறைந்து போயிருந்தோம். அந்த காடையர்களிடம் அகப்பட்டிருந்தால் அவர்கள் கதை அன்றே முடிந்திருக்கும். டயர்களில் போட்டு எம் கண்முன்னே எரித்து கொன்றிருப்பார்கள். அதனை நான் எப்படி தாங்கியிருப்பேன்? ஏமக்கு இருந்த பயத்தால், அவர்களை கிரான்ட்பாஸ் பொலிசில் கொண்டு போய் ஒப்படைத்து விடுவோம் என்று மகன் கூறினான். ஆனால் எனக்கு அந்த சூழலில் பொலிஸ் மீதும் நம்பிக்கையிருக்கவில்லை. ஏனெனில் காடையர்களுடன் பொலிசாரும் சுற்றித் திரிந்ததை நான் என் கண்களால் பார்த்தேன். டயர்களை எரிக்கும் போது அவர்கள் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்ததையும் கண்டேன்.” என்று இன்றும் பதற்றத்துடன் கூறும் தயாவதி மெனிக்கே (69) தாமும் பொல்லுகள் கத்தியுடன் தயாராக இருந்ததையும் கூறுகிறார்.

அந்த சூழலில் பொலிஸ் மீதும் நம்பிக்கையிருக்கவில்லை. ஏனெனில் காடையர்களுடன் பொலிசாரும் சுற்றித் திரிந்ததை நான் என் கண்களால் பார்த்தேன்.

“இரவில் எவராவது வந்து கதவைத் தட்டினால் எதிர்த்து தாக்குவதற்காக எனது மகன்கள் பொல்லுகளையும்,கத்திகளையும் கதவின் ஓரத்தில் வைத்து விட்டு படுத்திருந்தனர். நான் மிளகாய்த் தூள் அடைத்த பேணி ஒன்றினை தயாராக எப்பொழுதும் அருகில் வைத்திருந்தேன். எவனாவது வந்தால் முகத்தில் தூவி விட்டு தப்பிக்க முடியும் அல்லவா? இவ்வாறு மூன்று தினங்கள் முப்பது தினங்களாக கழிந்தன. கலவரங்கள் ஓய்ந்த பின்பு அவர்கள் ஒருவித அதிர்ச்சியுடன் இருந்தனர். அதிர்ச்சியில் இருந்து அவர்களால் மீள முடியவில்லை. சில நாட்களின் பின் இந்த இடத்தைவிட்டு செல்ல அவர்கள் முடிவுசெய்தனர். எம்மிடம் இருந்து விடைபெறும் போது என்னைக் கட்டியணைத்து குமுறிக் குமுறி அழுததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவர்கள் சென்று விட்டனர். அதன் பின் அவர்களைப் பற்றி எந்த விபரங்களையும் அறிய முடியவில்லை. என்ன செய்வது? அவர்கள் நம்பி வாழக் கூடிய ஒரு சூழலை அன்று நாங்கள் உருவாக்கவில்லை. இப்ப நினைத்தாலும் வேதனைதான்.” ஏன்று விபரித்தவர் தான் கூற மறந்த விடயம் ஒன்றுள்ளதாகவும் அதையும் கேட்கும்படி சொல்லத் தொடங்கினார்.
“அந்த பிள்ளைகளின் அம்மா எப்பொழுதும் சிவத்த பெரிய வட்டப் பொட்டு வைத்திருப்பார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். கலவரங்கள் நிகழ்ந்த நேரம் தமிழ் என்று தெரியாமல் இருக்க துணியொன்றை எடுத்து அந்த பொட்டை நான் என் கைகளால் நன்கு அழித்து விட்டேன். அது முதல் அவர்கள் அங்கிருந்து எங்களைப் பிரியும் வரை அந்த பெண்ணின் நெற்றியில் சிவத்த பெரிய வட்டப் பொட்டை காணவே முடியவில்லை. அதனை இப்பொழுது நினைத்தாலும் எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு ஏற்படுகின்றது. கணவனை இழந்தால் தான் பொட்டை அழிப்பார்களாம். அதுதான்.” பொட்டை தான் அழித்தற்கே வருத்தப்படும் தயாவதி மெனிக்கே (69) எவ்வாறான கனிவு கொண்டவராக இருந்திருப்பார்!

 

வடக்கிற்கு அனுப்புவதற்காக மக்கள் கப்பலில் ஏற்றப்பட்டனர்http://groundviews.org/2016/07/26/black-july-government-promises-

கொட்டாஞ்சேனையில் மாநகர சபை உறுப்பினர் ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்து கொண்டிருந்த குணரத்ன புஞ்சிஹேவா (74)” வின் அனுபவம் இப்படி இருந்தது.
“எங்கும் மக்களின் ஓலமும் அழுகையும் கேட்டது. வீதிகளில் டயர்கள் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்தன. நானும் சிலரும் மாநகர சபையின் உறுப்பினர் வீட்டில் இருந்து குழுமி நின்று கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகளை தூக்கிக் கொண்டும், கைகளில் பல்வேறு விதமான மின்சார உபகரணங்களை தூக்கிக் கொண்டும் அந்த பாதையை கடந்து சென்று கொண்டிருந்தனர். அவ்வாறு சென்ற ஒருவரை நிறுத்திக் கேட்ட பொழுது ஆமர் வீதியில் உள்ள தமிழருக்கு சொந்தமான பிரபல மின் சாதன கடையினை அடித்து நொறுக்கி விட்டனர் என்றும், அங்குள்ள பொருட்களை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர். நாங்கள் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தோம். அப்போதுதான் ஒருவர் அந்த தகவலைச் சொன்னார், ‘வீதியில் சென்று கொண்டிருந்த தமிழ்ப் பெண்ணைப் பிடித்து அவளின் ஆடைகளைக் களைந்து அவள் தலையைப் பிடித்து நெற்றியில் பொட்டு இருந்ததால் தலையை கல்லில் அடித்து கொண்டிருந்ததை பார்த்து ஓடிவந்துவிட்டதாக அவர் கூறினார். அப்போதுதான் நாம் பதட்டமானோம். மாநாகர சபை உறுப்பினருடன் கலந்துரையாடினோம். அவரும் தொலைபேசியில் அறிந்தவர்களுடன் கதைத்து விட்டு நிலைமை சரியில்லை என்றார்.
நேரம் செல்ல செல்ல அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் கத்தி வாள் பொல்லுகள் சகிதம் சிங்கள மக்களைப் பாதுகாக்க புறப்பட்டது. ‘கொட்டி எனவா கொட்டி எனவா” என்று சத்தமிட்டுக்கொண்டு சென்றது. எங்கள் வீட்டிற்கு அருகாமையில் வந்த அவர்கள் மாநகர சபை உறுப்பினரைப் பார்த்து நாங்கள் இருக்கின்றோம் சிங்களவர்களைப் பாதுகாக்க நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறி சென்றனர். அப்போதுதான் எமது மேல்மாடியில் வசிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தோம். நாங்கள் ஒரு திட்டத்தினை தீட்டினோம். அப்போது இங்கிருந்து போன அந்த கும்பல் ‘கொட்டியா இன்னவத’ என்று கேட்டு வீடு வீடாக தமிழர்களை தேடி வருவதாக அறிந்தோம். இதனால் அவர்களை அன்று இரவு எப்படியாவது பாதுகாக்க முடிவுசெய்தோம். அந்த தொடர்மாடி பிரதான வாயிலுக்குள் அந்த கும்பல் பிரவேசிக்காதவாறு நாங்களும் அவர்களுடன் இணைந்தவர்கள்போல் பொல், கத்திகளுடன் அங்கு அமர்ந்து சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டும் படுத்துக் கொண்டும் உறங்காமல் இரவுப் பொழுதைப் போக்கினோம்.
ஒருவாறு விடிந்தது. ஜுலை 27 திகதியா என்று ஞாபகம் இல்லை. ஊரடங்கு சட்டத்தினால் கலவரங்கள் அடங்கியிருந்தன. கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு ஆண்கள் பாடசாலையில் அகதி முகாம் ஒன்று ஸ்தாபிக்கப் பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினருக்கு தகவல் வந்தது. இந்தக் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி அவர்களை அங்கு கொண்டு விட்டு வர ஆயத்தமானோம். கறுப்பு கண்ணாடியினால் மூடப்பட்ட ஒரு டிபென்டர் வண்டியில் ஓட்டுநரும் நானும் ஒரு பொலிஸ் அதிகாரியும் அவர்களுடன் புறப்பட்டோம் முகாமில் விட்டு விட்டு வீடு திரும்பினோம். மனம் ஆறுதலாக இருந்தது.” என்று கூறும் குணரத்ன புஞ்சிஹேவா(74) இப்பொழுதும் அதனால் தான் குற்ற உணர்வின்றி வாழ்வதாக கூறுகிறார். இவ்வாறு 1983இல் தம் கண்முன்னே சாதாரண தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட் வன்முறைகளைக் கண்டு அதிலிருந்து விலகி உதவிக்கரம் நீட்டிய சாராண சிங்கள மக்கள் தமது நினைவுகள் 35 வருடங்கள் கழித்து ‘கட்டுமரத்திற்காக’ எம்முடன் பகிர்ந்துகொண்டனர்.