Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வாழும் முதுசொம்!
கைவிடப்படும் நிலையிலுள்ள காரைநகரில்…

வளமும் செழிப்பும் கொண்டு வாழ்ந்த இந்த ஊர், இப்பொழுது தமிழர்களால் கைவிடப்படும் நிலையில் உள்ளது. போர் மக்களை மட்டுமல்ல நிலத்தையும் தின்று தீர்த்துள்ளது. கைவிடப்பட்ட நிலங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழடைத வீடுகளே எஞ்சியுள்ளன. அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும் மக்கள் குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை அண்மைய செய்திகளில் படித்திருப்போம்.

30.10.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

“இந்தா இந்த வெண்கல குத்துவிளக்கு 3 சதத்துக்கு (00.03)வாங்கினது. இதை வாங்கும்போது எனக்கு 12 வயசு. அப்பதான் யப்பான் ஆர்மிக்காரர் காங்கேசன்துறைக்கு குண்டுபோட்டவங்கள்.” என்ற கூறும் கந்தப்பு நடராஜ ஐயா 85 வயதைக் கடந்த வாழும் முதுசொம்.

இலங்கையின் வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தை சூழ காணப்படும் தீவுக்கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான் வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார் பேராசிரியர்.பொ.ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான நுயசடல ளுநவவடநஅநவெ ழக துயககயெ என்பதில் இந்த விடயம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருப்பதைக் காணலம்.

/

தமிழர் வரலாற்றுத் தொடக்கத்தில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் தீவுகளில் ஒன்றான காரைநகரில் இருந்துதான் இந்த கந்தப்பு நடராஜா ஐயாவின் குரல் ஒலிக்கிறது. வளமும் செழிப்பும் கொண்டு வாழ்ந்த இந்த ஊர், இப்பொழுது தமிழர்களால் கைவிடப்படும் நிலையில் உள்ளது. போர் மக்களை மட்டுமல்ல நிலத்தையும் தின்று தீர்த்துள்ளது. கைவிடப்பட்ட நிலங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழடைத வீடுகளே எஞ்சியுள்ளன. அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும் மக்கள் குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை அண்மைய செய்திகளில் படித்திருப்போம். இவ்வளவு சிரமம் மிகுந்த சூழலுக்குள்ளும் தன் ஊர், வரலாறு, அவற்றை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கும் எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற பேரார்வத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்தான் இந்த கந்தப்பு நடராஜா.

கந்தப்பு நடராஜா. 1930 ஆம் ஆண்டு, காரைநகர், களபூமி பொன்னாவெளி கிராமத்தில் பிறந்திருக்கிறார். சுந்தரமூர்த்தி பாடசாலை, காரைநகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வியைக் கற்ற இவர், சுவாமி விபுலானந்த அடிகளாரின் விருப்புக்குரிய மாணவனாகவும் இருந்திருக்கிறார். தற்போது தமிழர்களின் பழம்பெரும் பொருட்கள் சேகரிப்பாளராக மாறியுள்ளார்.

“எனக்கு இந்த விசயங்களில் முதல் ஒன்றும் தெரியாது. சண்டையள் ஓய்ஞ்ச பிறகு தெற்கு பக்கமிருந்து வாற யாவாரியளுக்கு எங்கட வீட்டுப் பழைய சாமானுகள நிறைய வித்திருக்கிறன். பிறகு ஏன் இவங்கள் இதுகள வாங்குறாங்கள் என்று யோசிச்சன். அப்பிடி காரணத்த தேடிக்கொண்டு போகேக்கத்தான் எங்கட அன்றாட பாவனைப் பொருட்களின்ர முக்கியத்துவமும், தனித்துவமும் விளங்கினது. அதுக்குப் பிறகு என்னதான் கஸ்ரம் வந்தாலும் ஒரு பொருளையும் விற்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தன். எங்கட தோட்டந்துரவு, வயல் எண்டு கிடந்த பழைய சாமானுகள் எல்லாத்தையும் பாதுகாக்க தொடங்கினன்.
என்ன செய்ய….! இந்த அறிவு எனக்கு வயசான பிறகு தான் வந்தது. இந்தப் பொருட்கள என்னால பராமரிக்கிற அளவுக்கு வலு இல்ல. ஆனா இதையாவது என்னோடயே பத்திரப்படுத்தி வச்சிருக்கிறனே என்ற பெருமை இருக்கு..” எனத் தொடர்ந்தவரின் வார்த்தைகளில் வயதின் இயலாமையும், அதையும் தாண்டி இயலுமையை வரவழைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்ற துடிப்பும் தெரிந்தது.
அப்படியே தன் ஒரு அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பழைய பொருட்களை காட்டுவதற்கு நுழைந்தார்….ஐயா.

அது ஒரு ஆவணக்காப்பகத்தின் பிரதான இயல்புகளைக் கொண்டிருக்கவில்லைத்தான். சிலந்திகளின் வசிப்பிடமாகியிருந்த அந்த அறையில் வெண்கலப் பொருட்களிள். ஆன்றாடம் பாவனையில் இருந்து இன்று காணாமல் போயிருக்கும் பாத்திரங்கள், பூசைப்பொருட்கள் என அறை நிறைந்திருந்தது. ஒவ்வொன்றையும் அவர் தன் கையால் எடுத்து எங்களுக்கு காட்டும்போது கூடவே அந்தப் பொருளோடு தொடர்புட்ட நினைவின் வரலாற்றையும் பேசிக்கொண்டார்

ஆதில் பேசப்பட்ட ஒன்றுதான் 3சதத்திற்கு வாங்கிய வெண்கல குத்துவிளக்கு.

“இங்க இந்த காரைநகர் துறைமுகம் அந்த நேரம் மிக பிரபலமாக இருந்தது. அதனால இதால தான் யாழ்ப்பாணத்துக்கு எல்லா சாமானுகளும் போகும். அப்பிடித்தான் இந்தப் பொருட்களும் அந்த நேரம் குறைஞ்ச விலைக்கு வாங்கினது. இது மட்டுமில்ல, தட்டுமுட்டு சாமானுகள், துணிமணிகள், மட்பாண்டங்கள், இந்தியாவிலயிருந்து கொண்டு வந்த வடக்கன் மாடுகள் எல்லாமே இந்தத் துறைமுகத்துக்குள்ளால தான் வரும். வடக்கன் மாடுகள் நல்லா வேலை செய்யும். காரைநகர் முழுவதுமே அப்ப ரெண்டு போக ( நெல் விதைப்பு பருவ காலங்கள்) விதைப்பு செய்வினம். மரக்கறி செய்வினம். இப்ப இதை சொன்னால் நம்புவியளே. காரைநகர் விவசாயத்தில சிறந்திருந்த காலம் அது. இப்ப குடிக்கிறதுக்குகூட தண்ணியில்ல…“ என ஆதங்கப்படும் நடராஜா ஐயாவின் பேச்சில் வரலாறு கலந்திருக்கிறது.

ஐயாவின் வீட்டில் இருக்கும் பொருட்கள் அத்தனையும் நூறாண்டுகள் கடந்தவை. கிடைத்தற்கரிய நூல்கள் பலவற்றையும் வைத்திருக்கிறார். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் சுதேசிய மருத்துவக் குறிப்புக்கள் அடங்கிய நூல்களும் உள்ளன.

பாவனைப் பொருட்கள் தொடக்கம் வீட்டின் சுவர் கதவுகள், யன்னல்கள் என அனைத்திலும் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான கட்டடவியலின் பண்பாட்டுக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. வீடமைப்பில் யாழ்ப்பாண குறிப்பாக தீவக சூழலுக்கு எல்லாவிதத்திலும் பொருந்திவரும் நுட்பம் இயல்பாகவே கையாளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் நடராசா ஐயாவின் வீட்டை வடிவமைத்தவர் கட்டிடவியலாளரோ, இயந்திரவியலாளரோ அல்ல. நடராசா ஐயாவின் தந்தையார் கந்தப்புவும் அவர்தம் நண்பர்களும் தான். அவர்கள் மரபார்ந்த விவசாயிகள்.
தமிழர்களின் பண்பாட்டுக் கூடமாக இருந்திருக்கும் அந்த வீடு இப்போது மிச்சம் பிடித்து வைத்திருப்பவற்றை பார்த்து நிமிர்கையில், “எப்பிடி இருக்கு“ என்ற கேள்வியை கேட்கிறார்.
பெரும் பிரமிப்பைத்தவிர நம் வாய்பேசவில்லை.

போர் சப்பித்துப்பிய கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனாலும் இவர் இரண்டாம் போர் பற்றிய நினைவுகளையும் மறக்கவில்லை.
“ ரெண்டாம் உலகப் போர் காலத்தில காப்பிலிகள் வரத் தொடங்கினதிலயிருக்கு மக்கள் இங்கையிருந்து இடம்பெயரத் தொடங்கினவை. அந்த நேரம் எனக்கு தெரிய 40 ஆயிரம் பேர் அளவில் இங்க இருந்திருப்பினம். அப்ப அப்பிடி இடம்பெயர்ந்த ஆக்கள் பதுளை, பண்டாரவளை, கொழும்பு என்று குடியேறிச்சினம். இப்ப நடந்த போரால இலங்கையிலேயே இருக்கமுடியாம வெளிநாடுகளுக்கல்லே போயிற்றினம். அவே எல்லாம் எப்ப திரும்பிவாறது? இந்த நிலம் இப்பிடியே பாழடைஞ்சு போகபோகுது..” என்ற கவலை கொள்ளும் நடராஜா எந்ப்போருக்கும் இடத்தவி;டடு அசையாம இருக்கிறார்.

“இறுதிப்போர் நடக்கேக்க இங்க இருந்து நான் போகேல்ல. நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்திட்டன். என்னோட சேர்த்து 900 பேர் இங்க தங்கினவ. பிறகு இங்க வீட்டு திறப்புகள கதவிலயே விட்டிற்று வெளிய போங்கோ, குறிப்பிட்ட ஒரு கட்சிக்காரரின்ர பெயரைச்சொல்லி நாங்க நிர்வாகத்த நடத்த அவர்களிடம் குடுக்கப்போறம் என்று கட்டளை வந்தது. நாங்களும் நம்பி வெளியேறினம். 3, 4 நாள் கழிச்சி போய் வந்து பார்த்தால் வீடுகளில இருந்த பெறுமதியான கனக்க சாமானுகள் களவு போயிருந்தது.” என்ற இறுதிப்போரில் மிஞச்சியிருந்ததையும் களவுகொடுத்த நிலைகளை விளக்கினார்.

இப்ப மிஞ்சி இருந்த சனம் ஊரைவிட்;டு வெளியேறினதுக்கு தண்ணீரும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது என பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
“அப்பெல்லாம் கிணறுகளில துலா போட்டு இறச்சி விவசாயம் செய்தம். குடிக்கவும், விவசாயத்துக்கும் அளவா தண்ணீர பாவிச்சம். நல்ல தண்ணீர் அப்பிடியே இருந்தது. ஆனால், என்றைக்கு எங்கட விவசாயிகள் பம்ப் போட்டு நிலக்கீழ் தண்ணீர இறைக்க தொடங்கிச்சினமோ அண்டையில இருந்து கடல் தண்ணீர் நல்ல தண்ணீரோட கலக்க தொடங்கீற்றுது. இப்ப தண்ணீருக்காக போராடவேண்டியிருக்கு. மழை பெய்தால் மட்டும்தான் விவசாயம்….ம் எண்ட நிலமைதான்.” நீண்ட பெருமூச்சோடு தன் உரையாடலை முடித்துக்கொண்டார் கந்தப்பு நடராஜா. ஆனால் இந்த வரலாறு பதியப்படாமலே அழிந்துபோகிறது.

ஜெரா
சுயாதீன ஊடகவியலாளர்,
யாழ்ப்பாணம்