நல்லிணக்கம்:
கடினமான விடயங்களைப் பேச நாம் அஞ்சுகிறறோம்.!
இன, மத நல்லிணக்க விடயத்தில் அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. அரசாங்கத்தால் தவறவிடப்படும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அரசாங்கம் சில தவறுகளை விடும்போதுதான் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை செய்கின்றார்கள்.
‘ஒன்றுகூடி வெறுமனே பேசுவதால் மாத்திரம் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது. சில கடினமான விடயங்களையும் பேசவேண்டும். எனினும் வெளிப்படையாக அவ்வாறான விடயங்களை கலந்தாலோசிப்பதற்கு நாம் அஞ்சுவதாகவே நான் கருதுகின்றேன்.’ என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின், ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன். த கட்டுமரனிற்காக அவருடனான செவ்வி.
த கட்டுமரன்: யுத்த மோதலின் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செய்யப்பட் முறைப்பாடுகள் எவை?யுத்தத்தின் பின்னர் சித்திரவதைகள், சட்டத்திற்கு முரணாhக இடம்பெற்ற கைதுகள் அரச உத்தியோகத்தர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாராபட்சம் காட்டப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தன.
த கட்டுமரன்: எந்த விடயம் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன? யாருக்கு எதிராக?
சித்திரவதை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்தன. இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன என்ற விடயத்தை நாம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தோம். கடந்த நான்கு வருடங்களில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாத்திரம் 430 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த முறைப்பாடுகள் நாடு முழுவதிலிருந்தும் கிடைக்கப்பெற்றன. பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மாத்திரமன்றி, சிறு சிறு குற்றங்களுக்காக கைதானவர்கள் கூட சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் சொல்கின்றன. இவையனைத்தும் பொலிஸாருக்கு எதிராகவே செய்யப்பட்ட முறைப்பாடுகள்.
குறிப்பிட்டு ஒரு இனத்தின் மீதான ஒடுக்குதல் வகையினதாக இருந்தது. தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்ற கைதுகள் தொடர்பிலும், முஸ்லிம் பெண்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவர்களது ஆடைகள் தொடர்பிலான விடயங்களில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் மே 13ஆம் திகதி பல முஸ்லிம் கிராமங்கள் தாக்குதலுக்குள்ளான விடயங்கள், தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. முஸ்லிம்களின் வர்;த்தக மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டமைத் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்தன.
த கட்டுமரன்: கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீங்கள் (மனித உரிமைகள் ஆணைக்குழு) எடுத்த நடவடிக்கைகள் எவை?சட்ட விதிகளை மீறி கைதுகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அது தொடர்பில் நாம் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். கைதுகளின்போன பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தினோம். ஆடைக்கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் கொண்டுவந்த சுற்றுநிருபத்தினால் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் விடயத்தை நாம் குறித்த அமைச்சுக்கு சுட்டிக்காட்டி அந்த சுற்றுநிரூபத்தை மாற்றியமைப்பது தொடர்பில்

அறிவுறுத்தினோம். அதற்கமைய அமைச்சு எம்மிடம் இரண்டு தடவைகள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டுள்ளது (ஆடைக்கட்டுப்பாடு தொடர்பில்) அதற்கமைய புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு உள்ளிட்ட இரு இடங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அமைச்சு மட்டத்திலான சில விடயங்களுக்கு நாம் கொள்கை ரீதியில் கடிதங்களை அனுப்பியுள்ளோம். சில முஸ்லிம்கள் சில அலுவலகங்களில் உள்நுழைவதற்கு தடைகள் விதிக்கப்பட்டதாக தொலைபேசி ஊடாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு, அந்தக் கணமே தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
த கட்டுமரன்: இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டும், அவற்றை முறைப்பாடாக மக்கள் முன்வைக்கவில்லை என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?பெண்களின் உரிமைகள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான மீறல்கள் அவ்வளவாக முறைபாடு செய்யப்படுவதில்லை. அதற்காக அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை. அவர்கள் அது தொடர்பில் முறையிடுவதற்கு முன்வரவில்லை என்றே அர்த்தம். அவர்களின் அறியாமையும் அதற்கு காரணம். ஆகவேதான் மஸ்கெலிய (ஹட்டன்) பிரதேசத்தில் நடமாடும் சேவைகளை நடத்தி, அவர்களுக்கு அறிவூட்டும் பணிகளை தன்னார்வத் தொண்டர்கள் மூலம் முன்னெடுத்தோம். தொடர்ந்து அவ்வாறான நடமாடும் சேவைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். இதற்கென தன்னார்வ தொண்டர்களை மேலும் அதிகரித்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி, மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விடயங்களை முன்னெடுக்கவுமுள்ளோம்.
த கட்டுமரன் : ஊடகங்களுக்கு எதிராக ஏதாவது முறைப்பாடுகள் கிடைத்தனவா?சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனிமனிதர்கள் ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை தொடர்பில் பல முறைப்பாடுகளை வாய்மூலமாக முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில் ஊடகங்களின் நடத்தைகள் தொடர்பில் நாம் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளோம். ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ச்சியாகவே விமர்சனங்களை வெளியிட்டு வந்துள்ளது. எனினும் அதன் பின்னரும் ஊடகங்கள் பொறுப்பாக நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்களை நெறிப்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென கருத்துகள் வெளியாகின்றன. எனினும் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
த கட்டுமரன்: இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களை நெறிப்படுத்த முடியுமா?சமூக ஊடகங்கள் எமது பாரம்பரிய ஊடகங்களைவிட பாரதூரமான பாதிப்புகளை உருவாக்கும் எனக் கூற முடியாது. இங்கே சமூக ஊடகங்களை பாவிக்கும் மக்களின் எண்ணிக்கை சதவிகித அடிப்படையில் மிகக்குறைவு. தொலைக்காட்சியை பார்ப்பவர்கள், பத்திரிகைகளை வாசிப்பவர்களே சமூகத்தில் அதிகம். ஆகவே வெகுஜன ஊடகங்களை பொறுப்புடனும் ஒழுக்கக்கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைப்பது எப்படி என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் இனவாத, வெறுப்பூட்டும் பேச்சுகளைக் கட்டுப்படுத்த ஓரளவு முயற்சிகளை எடுத்திருந்தது. எனினும் அது போதியதாக இல்லை. ஆனால் பாரம்பரிய ஊடகங்கள் அதைச் செய்யவில்லை. உதாரணமாக கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் பொய்யான செய்திகளை அதிகம் வெளியிட்டது யாரென ஆராய்ந்தால் தொலைக்காட்சியும் பத்திரிகைகளும்தான். அந்த செய்திகளை நம்;பி அதன் தூண்டுதலால் செயற்பட்டவர்களே அதிகம். ஆகவே இவ்வாறான விடயங்களை கட்டுப்படுத்தும் வகையில் சில ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதனைவிட மக்கள் இனவாதத்துடன் செயற்படும், சிந்திக்கும் நிலையில் இருந்து தாமாக மாறவேண்டும்.
த கட்டுமரன்: கீழைத்தேய நாடுகளில் மோதல்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்போது மனித உரிமை மீறல்களும் இணைந்தே அரங்கேறுகின்றன. இந்த நிலைமைக்கு என்ன காரணம்?இனத்துவேசமமே பிரதான காரணம். இந்த இனமென்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு தவறான கருத்து, அல்லது அவர்களைப்பற்றி ஒரே வகையினதான படிமம் உருவாக்கப்படலே காரணம். ஆகவே எம்மிலிருந்து அவர்கள் வேறுபட்டவர்கள் என்ற மனநிலையே அது. அவ்வாறான ஒரு சூழலில் ஏனைய சமூகத்தினரை சமமாக பார்க்கின்ற ஒரு நிலைமை உருவாவதில்லை. அதனைவிட இலங்கை பெரும்பாலும் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றுவதில்லை. சட்டச் செயற்பாடுகளை மதிப்பதில்லை. ஒரு பிரச்சினை ஏற்படும்போது அதனை இலகுவாக எவ்வாறு தீர்க்காலம் என யோசிக்கின்றார்களேத் தவிர, சட்ட ரீதியாக அதனை அணுகுவதில்லை. இதன்போது இன, மதத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் நிலைமைகளை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
த கட்டுமரன்: இலங்கை போன்ற பல்லின சமூகத்தைக்கொண்ட நாட்டில் இனங்களுக்கு இடையில் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை என எண்ணுகிறீர்கள்?30 வருட யுத்தத்தின் பின்னர் அந்த யுத்தம் ஏன் ஏற்பட்;;டது என்ற விடயத்தின் உண்மைத்தன்மைத் தொடர்பில் ஆராய வேண்டும். அதனை கண்டறிந்து அதற்கான தீர்வினை காணாவிடின், இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமாகாத விடயமே. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கருத்துகள் தொடர்பில் ஆராய வேண்டும். இது தாக்குதல்களின் பின்னர் திடீரென தோன்றிய விடயமல்ல. வெளிவருவதற்காக காத்துக்கொண்டிருந்த விடயங்களே அவைகள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக வைத்து வெளியாகியுள்ளன. அதனைவிட இனவாத, மதவாத கருத்துக்கள் வெளியிடப்படும்போது அவற்றை பொதுவாக ஏற்றுக்கொள்ளும் நிலைமையொன்று காணப்படுமாயின் அது பழகிப்போன விடயமாக மாறிவிடும். ஆகவே இவ்வாறான விடயங்களின் அடிப்படைக் காரணங்களை கண்டறிவது அரசாங்கத்தின் கடமை. ஒன்றுக்கூடி வெறுமனே பேசுவதால் மாத்திரம் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது. சில கடினமான விடயங்களையும் பேசவேண்டும். எனினும் வெளிப்படையாக அவ்வாறான விடயங்களை கலந்தாலோசிப்பதற்கு நாம் அஞ்சுவதாகவே நான் கருதுகின்றேன். அந்த அச்சத்தை கைவிடும் பட்சத்தில் தீர்வினைப் பெற முடியும்.
த கட்டுமரன்: கடினமான விடயங்கள் பற்றி கலந்துரையாட வேண்டுமென நீங்கள் குறிப்பது எவற்றை?கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்திற்கு காரணம் என்ன? பாராபட்சம்! தமிழ் சமூகம் அரசினாலும் அரச கொள்கைகளாலும் பாராபட்சத்திற்கு உட்படுத்தப்பட்டமையே காரணம். ஆகவே இது தொடர்பில் வெளிப்படையாக பேசி தீர்வுகாண முயற்சித்திருக்கின்றோமா என்ற கேள்வி எழுகின்றது. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் பேசுகின்றோம். எனினும் அது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றோமா? மூன்று இனங்கள் ஒன்றாக வாழும் பிரதேசங்களில் காணிப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் பாராபட்சமற்ற சமத்துவமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? இவை அடிப்படை மனித உரிமைகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுகின்றனவா? அல்லது இனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலா நோக்கப்படுகின்றன? என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
த கட்டுமரன்:இவ்வாறான ஒரு சூழலில் அரசாங்கத்தின் இன, மத நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு திருப்தியடைகின்றதா?நாட்டில் என்னென்ன பிரச்சினைகள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அரசாங்கத்தின் கடமைகள் தொடர்பில் நாம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். இன, மத நல்லிணக்க விடயத்தில் அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. அரசாங்கத்தால் தவறவிடப்படும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அரசாங்கம் சில தவறுகளை விடும்போதுதான் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை செய்கின்றார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளை ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். ஆகவே விமர்சனம் என்பதைத் தாண்டி அரசாங்கம் விடும் பிழைகளை சுட்டிக்காட்டி அதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்கச் செய்கின்றோம்.