Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பாசிக்குடா…
மக்களின் வருகைக்காக காத்திருக்கிறது!

“பாசிக்குடாவுக்கு வரும் உள்ளுர் உல்லாசப்பயணிகளில் அதிகமானவர்கள் முஸ்லிம்களாவர். இந்த இடம் போன்று பொழுதைக் கழிக்க அங்கு வேறு ‘இடங்கள் இல்லை. அதனால் ஓய்வு நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் அவர்கள் அவர்களது குடும்ப சகிதம் இங்கு வருகின்றனர். குளித்து சமைத்து உண்பதில் அவர்கள் மகிழ்வுறுகின்றனர். அவர்கள் இல்லாமல் இப்போது கடற்கரை தனிமைப் பட்டிருக்கின்றது. இப்போது பிரச்சினை முடிந்துவிட்டது. அவர்கள் மீண்டும் வருவார்களானால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.’

30.09.2019  |  
அம்பாறை மாவட்டம்
பாசிக்குடா

அபேநாயக்கா தனபால என்பவர் ஒரு சிங்களவராவார். ஓரளவிற்கு படிப்பறிவு உள்ளவராயினும் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே வளர்ந்து முஸ்லிம் பெண்ணொருவரை மணம் முடித்துள்ளார். அவரது கதை சுவாரஷ்யமானது. அவர் பதியத்தலாவையில் பிறந்துள்ளார். அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வு நடந்த வருடம் பற்றி அவருக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனாலும், முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1977 ஆம் ஆண்டு வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைத்த அந்த வருடமாக இருக்கலாம் என்று கருதுகின்றார். அந்த நாளில் தான் அவரது தலைவிதி மாறியது. அப்போது ஏழு வயதுடைய சிறுவனாக இருந்த போது இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பருவம் அது. முதன் முதலாக லொறி ஒன்றில் ஏறி நீண்ட தூரம் பயணம் செய்வதற்கான சந்தர்ப்பம் சிறுவனாகிய தனபாலவிற்கு கிடைத்தது.

லொறியில் இருந்தவர் அவனை செங்கலடியில் இறக்கிவிட்டார். கையில் புத்தகங்களுடன் இறங்கிய தனபால பாதையின் மறு பக்கத்திற்கு மாறி தனியாக நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு முஸ்லிம் நபர் விபரங்களைக் கேட்டுவிட்டு அவருடன் கூடவே வருமாறு அழைத்துச் சென்றார். அவருடன் சென்ற தனபால வாழைச்சேனையில் சிறுவனாக தனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தாராம்.

சைக்கிளில் சோளப் பொரி செய்து விற்கும் தனபால.

அந்த முஸ்லீம் நபரின் வயலில் வேலை செய்தல், ஆடு மாடுகளுக்கு தீனி போடுதல் உட்பட எல்லா வேலைகளையும் தனபால என்ற அந்தச் சிறுவன் செய்தான். வளர்ந்து வரும் பருவத்தில், அந்த முஸ்லீம் நபருடைய மகள் பரீதாவுடன் ஏற்பட்ட நட்பு நாளாக நாளாகக் காதலாக மாறியது. துனபால ஒருவாறு பரீதாவை மணமுடித்தார். அதன்பிறகு தனபாலவிற்கு பதியத்தலாவைக்கு திரும்பும் எண்ணம் வரவில்லை. திருமணத்தின் பின் சைக்கிளில் சோளப் பொரி செய்து விற்கும் தொழிலை ஆரம்பித்தார். அப்போது 05 சதத்திற்குத்தான் சோளப்பொரி விற்பனையானது. இன்று உல்லாசப் பிரயாணிகள் பெருமளவில் வரும் பாசிக்குடாவில் அவரது தொழில் தொடர்கிறது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் குண்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மூன்று மாதங்களாக பாசிக்குடா ஸ்தம்பிதம் அடைந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்தது.
பாசிக்குடா பிரதேசம் அமைதியாக ஓய்ந்து போய் இருந்தது. அதேநேரம் யுத்தம் முடிவடைந்தபோது, அங்கு உல்லாசப்பிரயாணிகள் வருகையால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வியாபாரம் களைகட்டத் துவங்கியிருந்தது. தனபாலவும் அங்கு வியாபாரத்தை ஆரம்பித்து அவரது குடும்பத்திற்குத் தேவையான வருமானத்தை தினமும் உழைத்து வந்தார். ஆனாலும் உயித்த ஞாயிறு தாக்குதலால் அந்தப் பிரதேசம் ஸ்தம்பிதம் அடைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் வருகையும் குறைவடைந்தது.

கல்குடாவைச் சேர்ந்த பி. ஐங்கரன் என்ற இளைஞன் வடை, பற்றீஸ் போன்ற சிற்றுண்டிகளையும், முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகளையும் கடந்த 08 வருடங்களாக விற்பனை செய்துவருகிறார். “எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் தினமும் வந்து போகும் இடமாக பாசிக்குடா இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்தன. வாராந்த நாட்களில் வாகன நெரிசல் மிகுந்த இடமாக இருந்தது. இதில் நாங்கள் நன்றாக உழைத்து வந்தோம். ஆனால் இப்போது நாம் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டோம்” என்று அவர் கூறுகின்றார்.

பி. ஐங்கரன்

கடற்கரையில் உள்ள 17 கடைகளில் ஒரு கடை முஸ்லிம் நபர் ஒருவருக்கும், 04 கடைகள் சிங்களவர்களுக்கும் ஏனையவைகள் தமிழ் வியாபாரிகளுக்கும் சொந்தமான கடைகளாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கடை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கின்றது. “முஸ்லிம் நபர் அச்சம் காரணமாக கடையை மூடியுள்ளார். ஆனாலும் யாரும் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை” என்கிறார் ஐங்கரன். “அவர்கள் முஸ்லிம்கள் என்ற நிலையில் இந்த நிலைமைக்கு பொறுப்பானவர்கள் அல்ல. முஸ்லிம் கடைகளில் தமிழர்களும் சிங்களவர்களும் பொருட்களை வாங்குவதற்கு தயங்கும் நிலையை நான் அவதானித்தேன். சிலர் என்னிடம் வந்து நீ முஸ்லிமா என்றும் வினவுகின்றனர். நாம் பட்தெல்லாம்போதும். இனி வேண்டாமே..” என ஐங்கரன் கவலையோடு கூறுகின்றார்.

கடற்கரையை அண்மித்ததாக நடக்கும் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடை இராணுவத்திற்கு சொந்தமானதாகும். இராணுவ வீரர் சாதாரண மனிதர்களைப் போன்று சிவில் உடையில் அந்தக் கடையில் இருந்து வியாபாரம் நடத்துகின்றனர். ‘நிகழ்வுகள் வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன’ என்று பொருட்களை விற்பனை செய்தவாறே முஸ்லிம் நபர் ஒருவருக்கு கூறுகின்றார். “பாசிக்குடாவுக்கு வரும் உள்ளுர் உல்லாசப்பயணிகளில் அதிகமானவர்கள் முஸ்லிம்களாவர். இந்த இடம் போன்று பொழுதைக் கழிக்க அங்கு வேறு இடங்கள் இல்லை. அதனால் ஓய்வு நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் அவர்கள் அவர்களது குடும்ப சகிதம் இங்கு வருகின்றனர். குளித்து சமைத்து உண்பதில் அவர்கள் மகிழ்வுறுகின்றனர். அவர்கள் இல்லாமல் இப்போது கடற்கரை தனிமைப் பட்டிருக்கின்றது. இப்போது பிரச்சினை முடிந்துவிட்டது. அவர்கள் மீண்டும் வருவார்களானால் மிகவும் சந்தோசமாக இருக்கும்” வியாபரத்தை நடத்தியவாறே சிப்பாய் கூறுகிறார்.

இவரைப் போன்றே தனபாலவும் பாசிக்குடா கடற்கரைக்கு உல்லாசமாக பொழுதைக் கழிக்க மக்கள் மீண்டும் வரவேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கின்றார்.