Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இன,மத முரண்பாடுகள்:
பிரச்சினையின் தீவிரத்தை பொதுமக்களாலேயே குறைக்கமுடியும்!

உண்மையை கண்டறிவதற்கான பணிகளை முன்னெடுத்தோம். ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சாட்சியமளித்தார்கள். சட்டத்தரணிகள் குழு ஒன்றுதான் சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டது. அதைவிட மக்களிடம் நாம் அவர்களது உரிமைகள், மத உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டோம்.

27.10.2019  |  
கண்டி மாவட்டம்

“மோதல்கள் இடம்பெறும் இடங்களில் அதனை தடுப்பது தொடர்பிலேயே எமது கவனத்தை செலுத்துகின்றோம். இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.” என்கின்றார் ‘கண்டி மாவட்ட சர்வமத ஒருங்கிணைப்புக் குழு’வின்(DIRC)செயலாளர் ரேனுகா மலியகொட.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இது தொடர்பில் பணியாற்றிவரும் கண்டி மாவட்ட சர்வமத ஒருங்கிணைப்புக் குழு’ விசேடமாக திகண சம்பவத்தில் தனது களப்பணியை செவ்வனவே ஆற்றியிருந்தது.
கண்டி – தெல்தெனிய, திகண பகுதிகளில் கடந்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் இரண்டு உயிர்கள் பலியாகின. 28 பேர் காயமடைந்தனர், 445 வீடுகள் மற்றும் வர்த்த நிலையங்கள் சேதமாக்கப்பட்டன. 24 பள்ளிவாசல்கள், 65 வாகங்களும் சேதமாக்கப்பட்டன.
2018, மார்ச் 3 ஆரம்பான வன்முறைகள், 7 நாட்களின் பின்னர் மார்ச் 10 முடிவுக்கு வந்தது.
இதன் அடிப்படையில் “பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக சிங்கள மக்களாகிய நாம் சென்று ஆறுதல் கூற முடிந்தது. இதுவே சகவாழ்விற்கான முதலாவது படியாக அமைந்ததாக நாம் கருதுகின்றோம்.” என்கிறார் செயலாளர் ரேனுகா மலியகொட.

Gamini Jeyaveera
உண்மையை கண்டறியும் முயற்சி

இந்தச் சம்பவத்தின் பின்னர் இரண்டு பணிகளை கண்டி மாவட்ட சர்வமத ஒருங்கிணைப்புக்குழு நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிடுகின்றார் செயலாளர்.
இலங்கை இன வன்முறைகளை ஒழிக்கும், பொதுமக்களின் ஆலோசனைககளை பெறுவதற்கான பிரஜைகளின் ஆணைக்குழு மற்றும் உண்மையை கண்டறியும் குழு ஆகிய இரண்டு ஆணைக்குழுக்களை உருவாக்கிய கண்டி மாவட்ட சர்வமத ஒருங்கிணைப்புக்குழு , கண்டி திகண சம்பவத்தின் பின்னணியையும் உண்மையையும் கண்டறிந்தோடு, மீண்டும் இவ்வாறான மோதல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கான உபாயங்களையும் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறது.


படுகொலை புரிந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் நேருக்கு நேர் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள்.

“திகண சம்பவம் இடம்பெற்ற தினத்தன்றே எமக்கு தகவல்கள் கிடைத்தன. எமக்காக பணியாற்ற பலர் இருந்தனர். அவர்கள் தகவல்களை வழங்கினார்கள். எனினும் அந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை. காரணம் நாங்கள் நிராயுதபாணிகள். எனினும் அதன் பின்னர் அரசாங்கத்திற்கு நாங்கள் இந்த விடயத்தின் பாரதூரத்தினை உணர்த்தி அதனை தடுக்க முயற்சித்தோம். எனினும் அந்த கால இடைவெளிக்குள் பல விடயங்கள் நடந்தேறிவிட்டன. தடுக்க வேண்டிய பாதுகாப்புத்தரப்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததால் அழிவுகள் கைமீறிப்போயின. இது பற்றி சாட்சி ஒருவர் குறிப்பிடும்போது, ‘தீயை அணைக்க வந்த இராணுவம் தண்ணீர் இல்லை எனக் கூறிவிட்டு, கொஞ்ச தூரம் சென்று தண்ணீரை வீதியில் ஊற்றிச் சென்றது. இதை நான் என் கண்ணகளால் பார்த்தேன்’ என்று ஒருவர் சாட்சியம் அளித்தார். இத்தகைய நடவடிக்கைகளால் எம்மால் உடனடியாக எதையும் செய்யமுடியவில்லை. சில இடங்களில் பாதுகாப்புப் பிரிவினர் தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காது, கண்டும் காணததுமாக வாழாதிருந்தார்கள். என்றும் பலர் சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சிகளில் எல்லா இன மத மக்களும் உள்ளடங்கியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
‘நாட்டில் பல இடங்களில் பல இனவாத கலவரங்கள் இடம்பெற்றன, எனினும் அவற்றின் பின்னணில் இருந்தவர்கள் யார்? தாக்குதல் நடத்தியது யார்? என்பது தொடர்பில் யாரும் தேடிப்பார்த்ததில்லை. தென்னாபிரிக்கா இன்று ஒரு நிலையில் இருக்கிறதென்றால், அந்த நாட்டின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, படுகொலை புரிந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் நேருக்கு நேர் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆகவே உண்மை கண்டறியப்பட வேண்டும்.

இங்கே உண்மையைக் கண்டறிவது குற்றம் புரிந்தவர்களைத் உடனடியாக தண்டனைக்குட்படுத்த வேண்டும் என்பதற்காகவல்ல. மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை பொதுமக்களை வைத்தே மேற்கொள்வதற்காக. சர்வமதக் குழு மற்றும் அவர்களால் அமைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் குழு ஆகியவற்றில் அங்கம் வகித்தவர்கள் சமூகத்தில் உள்ள பொதுமக்கள். இவர்களில் துறைசார் மூளைசாலிகளும், தொழில்வாண்மையாளர்களும் அடங்குவர். சமூகங்களுக்குள் எழும் முரண்பாடுகளைக் கையாள்வதற்கு அந்த சமூகத்துள் இருப்பவர்களை ஒன்றிணைத்து செயற்படுவதுதான் ஆரோக்கியமானது. அதை இவர்கள் செய்துள்ளமை வரவேற்கத்தக்கதே.

“திகண சம்பவத்தையடுத்து நாம் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல்படுத்தினோம். பின்னர் நாங்கள் இது தொடர்பில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைத்தோம். இதற்கும் எதிர்ப்புகள் எழுந்தன. எனினும் நாம் பின்வாங்கவில்லை. மூன்று பள்ளிவாசல்களுக்கு மக்களை அழைத்து (திகண, கட்டுகஸ்தோட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள்) உண்மையை கண்டறிவதற்கான பணிகளை முன்னெடுத்தோம். ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சாட்சியமளித்தார்கள். சட்டத்தரணிகள் குழு ஒன்றுதான் சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டது. அதைவிட மக்களிடம் நாம் அவர்களது உரிமைகள், மத உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டோம்.” என்கிறார் ரேனுகா.
மேலும் ‘நாம் அமைத்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஊடாக, நாம் அறிக்கை ஒன்றை உருவாக்கினோம். திகண கலவரம் தொடர்பில் தற்போது காணப்படுகின்ற ஒரே ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை அதுதான்.’ (http://kandydirc.org/wp-content/uploads/2018/12/FINAL-Truth-Commission-Report.pdf) என்கிறார் இந்தக்குழுவின் இணைப்பாளர் ஜயவீர. இதனடிப்படையில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது, திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கையே என, கண்டி மாவட்ட சர்வமத ஒருங்கிணைப்புக்குழு கண்டறிந்துள்ளது.
“உண்மையில் வெளியில் இருந்துவந்துதான் தாக்குதல் நடத்தினார்கள். கூட்டாக செயற்படும் அடிப்படைவாதிகள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். அவர்களின் ஒத்துழைப்புடன் தாக்குதல் நடத்தினார்கள். நாங்கள் இதனை குற்றச் செயல் ஒன்றாகவே அர்த்தப்படுத்தினோம். மனிதர்களுக்கு எதிரான குற்றம் சொத்துக்களுக்கு எதிரான குற்றம் சமூகத்திற்கு எதிரான குற்றம் (இன முறுகலை ஏற்படுத்தியமை) மதங்களுக்கு எதிரான குற்றம். இந்த இனவாத செயற்பாடுகளுக்குள் இவை அடங்கும். இதுவொரு திட்டமிட்ட குற்றச்செயல்.” என்கிறார் காமினி ஜயவீர.
இந்த விடயத்தை சமூகத்திற்கு தெளிவுபடுத்துவதும் சமூகத்தை சக வாழ்வுக்கு உற்சாகப்படுத்துவதும் இவ்வாறான குழுக்களின் பணியாக இருந்தது. இவ்வாறான முறுகல் முரண்பாடுகள் வருகின்றபோது ஊடகங்களின் பங்கும் அளப்பரியதாகவுள்ளது. அவை பொறுப்புடன் நடக்கவேண்டும். ஆனால் சமூக ஊடகங்கள் இவற்றை ஊதிப் பெருப்பித்து பிரச்சினைகளை அதிதீவிரமாகக்கிவிடுகின்றன. இதையே காரணமாக வைத்து சமூக ஊடகங்களை அரசு உடனடியாகத் தடைசெய்கிறது. உண்மையில் சமூக ஊடகங்கள் உண்மையைக் கண்டறிவதில் பெரும்பங்காற்ற முடியும். அதைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு உதவிசெய்ய வேண்டுமேயொழிய அதைத்தீவரமாக்கி சமூகத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லக்கூடாது.

“ எங்களுடைய சாட்சிப்பதிவுகள் மற்றும் தெளிவுபடுத்தல்களின் பின்னர், இதுவொரு திட்டமிட்ட குற்றச் செயல் என்பதை உணர்ந்துகொண்ட மக்கள், இனவாத, மதவாத அமைப்புகள் இதனை நடத்தினார்கள் என்பதையும் உணர்ந்துகொண்டார்கள். எமது அறிக்கை வெளியானதன் பின்னர் அது அனைவராலும் உணர்ந்துகொள்ளப்பட்டது. நாம் திகணப் பிரதேசத்தில் அமைந்துள்ள கலாசார நிலையத்தின் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு, இன நல்லிணக்கம் மற்றும் கவாழ்வு தொடர்பிலும் அறிவுரைகளை வழங்கினோம்.
‘பொதுமக்கள் ஆலோசனை ஆணைக்குழு ஒன்றை அமைத்து, மீண்டும் நாட்டில் இனவாதம் ஏற்படாமலிருக்க என்ன செய்யவேண்டுமென்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தோம். ஊடகவியலலாளர்கள், மதத்தலைவர்கள், வேறு துறைச்சார்ந்நவர்கள் என பலரை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்தோம்.” எனக் குறிப்பிடுகின்றார் காமினி ஜயவீர.
இவ்வாறு மக்கள் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதும் ஆரோக்கியமான சமூகம் கட்டியெழுப்பப்படுகிறது என்பதற்கான அறிகுறிதான்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பல்வேறு வழிகளிலும் மக்களை ஒன்றிணைக்க உழைத்த இந்த கண்டி சர்வமதக் குழு கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
“பெண்கள் அமைப்புகள் ஊடாக, சில விளையாட்டு, கலைகலாசார நிகழ்வுகளை நடத்தி மக்களை ஒன்றிணைத்தோம். இதன் மூலம் விகாரையையும், பள்ளிவாசலையும் இணைக்க முடிந்தது. யதார்த்தத்தை உணரச்செய்ய முடிந்துள்ளது. இதன் மூலம் மக்களிடையே 100 வீதம் அல்லாவிட்டாலும், 80 வீதம் இன, மத நல்லிணக்கத்தை உணரச் செய்ய முடிந்தது.” என்கின்றார் ரேனுகா.