Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

‘எறும்பு இராசம்’
மனித உற்பத்திக்கும் உய்விப்பிற்கும் ஆதாரம்!

தமிழ் – முஸ்லீம் எல்லைக்கிராமத்தில் வாழும் இராசலட்சுமிக்கு காத்தான்குடியில் இஸ்லாமியருக்குச் சொந்தமான அஸீஸ்நெசவுத்தொழிற்சாலை அடைக்கலமாக இருந்தது. அந்த தொழிற்சாலை அவருக்கு பயிற்சியும் வழங்கி வேலையும் கொடுத்தது. பயிற்சிக்காகச் சென்ற ‘எறும்பு இராசம்’ தனது கடின முயற்சியால் ஒரு மாதத்திலேயே எல்லாவற்றையும் நெய்வதற்குக் கற்றுக் கொண்டு….

11.11.2019  |  
மட்டக்களப்பு மாவட்டம்

“பெண்கள் மனத்துணிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள முதலில் பொருளாதார பலம் வேணும். பொருளாதார பலத்தை திரட்டுவதே எனது வாழ்க்கையாகிப்போனது” என்கிறார் இராசலெட்சுமி. மட்டக்களப்பு மாவட்டத்தில் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் வாழும் இவரை ஊருக்குள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் இராசலெட்சுமியாக அல்ல. ‘எறும்பு இராசம்’! என்றே தெரிந்திருக்கிறது. அதென்ன ‘எறும்பு இராசம்’? அவ்வளவு சுறுசுறுப்பு.! அவ்வளவு சுமக்கமுடியாத சுமை!
9 சகோதரர்களைக் கொண்ட பெரிய குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக பிறந்த இராசலெட்சுமியின் தந்தைக்கு குடும்பத்தைக் கொண்டு நடாத்தக் கூடியளவிற்கான பொருளாதார வலு இல்லை. அதனால் இலவசமாகக் கிடைக்கும் கல்விகூட இராசலெட்சுமிக்குக் கிடைக்கவில்லை. ‘கொடிது கொடிது இளமையில் வறுமை.’ ஓன்பது பேரும் அந்த கொடுமையில்தான் வளர்ந்திருக்கிறார்கள்.
தனது 16 ஆவது வயதில் தமது பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மா, அரிசி, மிளகாய்த்தூள் இடித்து கொடுப்பதும், விறகு கொத்துதல், தெங்காய் உரித்தல் என பல்வேறு வேலைகளையும் செய்து கடுமையாக உழைத்த இராசம்மா வயிறாரச் சாப்பிட்டதும் இல்லை. நன்றாக உடுத்தியதும் இல்லை. இந்த நிலையில் படிப்பதற்கு ஆசை இருந்தாலும் குடும்ப சூழல் இடம்கொடுக்கவில்லை. அந்தப் பெரிய குடும்பத்தின் மொத்த உணவுத்தேவைக்காகவே அவர் மாடாய் வேலைசெய்தார். சொற்ப பணத்துக்காக யார் கூப்பிட்டு என்ன வேலை சொன்னாலும் செய்து கொடுக்க இராசலெட்சுமி எந்த நேரமும் தயாராகத்தான் இருந்திருக்கிறார். 16 வயதில் இருந்து அவரது சுறுசுறுப்பு எறும்புக்கு ஒப்பானதுதான்.

நெசவுக் கைத்தறி

“உடல் முடியாமல் இருந்தாலும் நான் வேலைசெய்ய மறுத்ததில்லை. எங்கள் குடும்பம் ஒரு நேரம் சாப்பிட எனக்கு பணம் தேவை. கடினமான பல வேலைகளை நான் 16 வயதில் இருந்தே செய்யப்பழகியிருந்தேன்.” என்று கூறும் இராசலெட்சுமி 26 வயதில் திருமணம் முடித்திருக்கிறார். அனேகமான பெண்கள் நினைப்பது போல், திருமணம் என்பது கணவர் என்ற பெரு விருட்சத்தின் கீழ் நிம்மதியாக வாழலாம் என்றுதான் இவரும் நினைத்திருந்தார்.


என் மனநிலையில் யாராக இருந்தாலும் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்.

“எனது குடும்ப நிலை அறிந்தும் தெரிந்தும் திருமணம் முடிக்க சம்மதித்த அவர் அந்தநேரம் எனக்கு கடவுளாகவே தெரிந்தார். ஆனால் 3 மாதங்களிலேயே அவரது சுயரூபம் தெரியவந்தது. அடிக்கடி சண்டை சச்சரவு. பணப்பிரச்சினையே சண்டைக்கான பிரதான காரணமாக இருந்தது. ஒரு நாள் காய்ச்சலும் வாந்தியும் என்னை வாட்டியபோது நிரந்தரமாக கைவிட்டு போய்விட்டார். நான் நிலைகுலைந்துபோனேன். அன்று இருந்த என் மனநிலையில் யாராக இருந்தாலும் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு துன்பப்பட்டேன். அப்போதுதான் நான் ஒருமாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற என்ற விடயமும் எனக்குத் தெரியவந்தது. சந்தோசப்படுவதா? துக்கப்படுவதா? மஞ்சந்தொடுவாய் கண்ணகி அம்மன் ஆலய ஆலமர நிழலில் படுத்துறங்கும் போதுதான் என்னுள் ஒரு வைராக்கியம் பிறந்தது. எப்பாடுபட்டாவது என் கருவில் வளரும் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். அப்பிள்ளையை நன்றாகப் படிக்கவைத்து அரச தொழிலை எடுக்கவைக்க வேண்டும். அதற்கு இறைவன் துணைநிற்க வேண்டும் என்று அம்மனை வேண்டியபடியே நம்பிக்கையுடனும் தளரா மனவுறுதியுடனும் எழுந்த நான் இன்று வரை அந்த நம்பிக்கையிலோ மனவுறுதியிலோ இருந்து சறுக்கவி;ல்லை.” என்கிறார் துணிந்த குரலுடன்.

இன்றுவரை தனது எந்த உறவுகளாலும் எந்த உதவிகளையும் பெறாமல், எதிர்பார்ப்புமில்லாமல் தன் கையே தனக்கு உதவி என்று சுய உழைப்பால் முன்னேறிவருகிறார். சுமூகத்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் தனித்து வாழும்போது எதிர்கொள்ளும் உள வன்முறைகளுக்கும் முகம்கொடுத்துள்ளார். இவர்மேல் பரிதாபப்பட்டு இவளுக்கு ‘வாழ்க்கைகொடுப்பதாக’ சிலர் இவரை அணுகியபோதும், அவர்களின் சுயரூபங்களை நன்கு அறிந்த இவர் துணிந்து எதிர்த்து தனியாக நிற்க முடியும் என எடுத்துக்காட்டினார்.

“சில ஆண்களின் வக்கிரமான பார்வைகளால், நடவடிக்ககைளால் நான் அசந்து போகவில்லை. எந்த ஆணையும் துணிந்து எதிர்த்து கேள்வி கேட்கும் வைராக்கியம் என்னிடம் இருந்ததால் என்னைத் தொடர யாராலும் முடியவில்லை. அப்பப்போ கிடைக்கும் வீட்டுவேலைகளால் நிரந்தரமாக எனக்கு ஊதியத்தை பெறமுடியவில்லை. நெசவுத்தொழிலுக்கு போகத்தொடங்கினேன்.” என்று கூறும் ‘எறும்பு இராசம்’ ஒரு இடத்தில் இருந்துகொண்டு சுறுசுறுப்பாக இயங்கத்தொடங்கினார்.
தமிழ் – முஸ்லீம் எல்லைக்கிராமத்தில் வாழும் இராசலட்சுமிக்கு காத்தான்குடியில் இஸ்லாமியருக்குச் சொந்தமான அஸீஸ்நெசவுத்தொழிற்சாலை அடைக்கலமாக இருந்தது. அந்த தொழிற்சாலை அவருக்கு பயிற்சியும் வழங்கி வேலையும் கொடுத்தது. பயிற்சிக்காகச் சென்ற ‘எறும்பு இராசம்’ தனது கடின முயற்சியால் ஒரு மாதத்திலேயே எல்லாவற்றையும் நெய்வதற்குக் கற்றுக் கொண்டு ஒருநாளில் இரண்டு சாறிகளை நெய்யும் அளவிற்கு வேலையில் வேகம்காட்டினார். ஒரு சாறிக்கு 100 ரூபாதான் வருமானம். அஸீஸ் தொழிற்சாலையானது ஆதரவற்ற பல பெண்களின் பொருளாதாரத்திற்கு வழிகோலுகிறது. அதுதான் இராசலச்சுமிக்கும் ஒரு வழியைக்காட்டியது.

“என்குழந்தையுடன் வேலைக்கு போய் வருவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. ஆனாலும் எனது அயல்வீட்டு மூத்தம்மா எனது குழந்தையைப்பார்த்துக்கொண்டார். ஆனால் குழந்தைக்கு 6வயதாகும்போது அந்த அம்மா இறந்துவிட்டார். எனது குழந்தையை வேலைத்தலத்திற்கு எடுத்துச்சென்று அங்கு வைத்துக்கொண்டே வெலைசெய்வேன். பிள்ளை பாடசாலைக்குப் போகத் தொடங்கியபின் குறிப்பிட்ட குறிப்பிட்ட நேரங்களில் வந்து வேலைசெய்வேன். பிற்காலத்தில் வேலைக்குப் போவதற்கு சிரமப்பட்டபோதுதான் அஸீஸ் தொழிற்சாலை ஐயா எனது வீட்டில் கைத்தறி இயந்திரத்தை பொருத்தித்தந்தார். நான் வீட்டில் இருந்தபடி நெசவுசெய்யத்தொடங்கினேன். ஒரு நாளைக்கு 16,18 மணித்தியாலம் வேலைசெய்தேன். ஒரு நாளில் 3 சாறிகளை நெய்யத் தொடங்கினேன். 2014 ஆம் ஆண்டு வரை வீட்டில் நெசவுத் தொழில் செய்தநான் அதை விட்டு இப்பேதது 5 வருடமாகிறது. ஆனாலும் அந்த முதலாளிக்கு அவசரத்தேவை என்றால் என்னை அழைப்பார். அந்த ஐயாவின் உதவி என்றும் மறக்கமுடியாது.” என்று கனிவுடன் நினைவுகூருகிறார் அந்த முஸ்லீம் முதலாளியை.

Source: newlanark.org

தமிழ் பெண்கள் பலர் முஸ்லீம் முதலாளிகளின் கீழ் வேலைசெய்கின்றனர். அஸீஸ் தொழிற்சாலையில் தற்பொழுது 13 பேர் தொழில் செய்கின்றனர். அவர்களுள் 6பேர் தமிழர்கள். அஸீஸ் அவர்கள் மக்களின் போக்குவரத்து வசதிகளையும் வீட்டின் குடும்ப நிலை கருதியும் அருகிலுள்ள பிரதேசத்தில் நெசவுத் தொழில் மேற்கொள்ள விரும்பிய பெண்களுக்கு நெசவுக் கைத்தறியினை வழங்கியும் அவர்ககளது வாழ்வாதாரதத்திற்கும் உதவிபுரிந்து வருகின்றார். அவ்வாறு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் சுமார் 5 பெண்கள், வீட்டில் இருந்தே நெய்து பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“ஆரம்பத்தில் கிடைத்த சொற்ப பணத்தினைக் கொண்டு சிறுகச் சிறுக சீட்டுக்களை போட்டு அதன்மூலம் வரும் பணத்தை வைத்து ஒரு அறை உள்ள வீட்டைக் கட்டினேன்.” என்று பெருமிதம்கொள்ளும் இராசலட்சுமி இன்று 56 வயதை அடைந்தவராக வீட்டைமுழுமையாக்கியவராக இப்போது கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அத்துடன் சிறு மரக்கறித்தோட்டத்தினையும் உருவாக்கி காய்கறிகள், முட்டை, கோழி என விற்பனை செய்தும் வருகிறார்.

இதன் மூலமாக நாளொன்றிற்கு 700 ரூபாவீதம் வருமானம் ஈட்டும் வகையில் இவை அமைந்துள்ளதாகவும் குறிப்பிடும் இராசம்மா, “படித்து அரச உத்தியோகத்திலுள்ள எனது மகளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைந்தால் நான் நிம்மதியாகக் கண்மூடுவேன்” என்று கண்களின் ஓரமாக கண்ணீர் திரள கூறுகிறார். பெண்கள் உழைக்கப்பிறந்தவர்கள். இன போதமற்று மனித குலத்திற்காக, அடுத்த சந்ததிக்காக தம்மையே ஆகுதியாக்கும் எத்தனை எத்தனை ‘எறும்பு இராசம்’கள் இந்த நாட்டில்!.