Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சிறப்புத்தேவையுடையவர்:
சிறப்புச்சேவை எதுவும் கிடைக்கவில்லை! ஆனாலும் சிறக்கிறார்!

“நீங்கள் வாய்மொழியாக பாடிவரும் பாடல்களைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?” என்று அவரிடம் கேட்டபோது “ஆம் நான் இவ்வாறு எல்லாவற்றையும் எழுதி வைக்கிறேன்” என்று தன் காலால் எழுதிக்காட்டினார். பாடசாலைக்கல்வியையும் அவ்வாறுதான் முடித்துள்ளார். அவருக்கான சிறப்புத்தேவைக்கான பாடசாலையில் அவர் படிக்கவில்லை…

26.11.2019  |  
மட்டக்களப்பு மாவட்டம்
காலால் எழுதிக்கொண்டிருக்கும் டிலானி

“ஹெய்…இங்கால..இங்கால….போ..போ…” கூவிக்கொண்ட 30 ஆடுகளை தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டிலானி அந்தக் கிறவல் வீதியால் போய்க்கொண்டிருக்கிறாள். யானையி;ன் ‘லத்தி’கூட அந்தப்பாதையில் காய்ந்து கிடக்கிறது. யானைகள் வந்துபோகும் அந்த நிலத்தில் அவள் கையில் எந்த தடியோ கம்போ இல்லை…ஆனால் ஆடுகள் அவளது குரலுக்கு கட்டுப்பட்டு வீடுகளை நோக்கி நடந்துகொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மணற்பிட்டிக் கிராமத்தில்தான் நாம் இதைப்பார்க்கிறோம். அப்போதுதான் அதை அவதானித்தோம். இரண்ட கைகளுமே இல்லாத குணரத்தினம் டிலானி தனது வாய் வல்லமையாலும் கால் பலத்தாலும் அன்றாடவேலைகளைச் செய்து சீவித்துக்கொண்டிருக்கிறார். அந்த வீதியின் இருபுறமும் வேளாண்மை வயல்நிலங்கள். ஆடுகள் அதற்குள் போகாதவாறு கண்ணுங்கருத்துமாக சாய்த்துக்கொண்டு வீட்டுக்குப் போகிறார்.
அது குருந்தையடிமுன்மாரிக் கிராமம். அரசசார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சில கல்வீடுகளும் கிறவல் போன்ற நிறத்தில் தகரக்கூரையும், களிமண்ணால் ஆன சுவரையும் கொண்ட சில வீடுகளும் அமைந்துள்ள அந்தப்பகுதியில் ஒரு களிமண் வீடுதான் அவருடையது. தங்கை திருமணம்முடித்து போய்விட தாய் தந்தையுடன் வசித்துவருகிறார் குணரத்தினம் டிலானி. போர்க்காலத்தில் பிறந்த டிலானிக்கு பிறக்கும்போதே இருகைகளும் இல்லை.
எந்நேரமும் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டிருக்கும் டிலானி ‘பச்சை வளையல்கள் மிச்சம் பதினாறு லெட்சம் விலைதானே..’ என்ற கரகப்பாடலை முணுமுணுத்தபடி தனது அன்றாட கடமைகளில் ஈடுபடுகிறார்.


விசேட தேவைக்குரிய ஒருவர் எந்தவித விசேடசேவையுமற்று இவ்வளவுதூரம் வந்திருப்பதே பெரிய விடயம்தான்.!

இப்பகுதியிலுள்ள மக்கள் இப்போதுதான், ஓரளவுக்கு பாடசாலைக் கல்வியைக் கற்றுவருகின்ற சமூகமாக இருக்கின்றனர். ஆனாலும் கைகள் இன்றி பிறந்த டிலானி கல்வி கற்கத்தவறவில்லை. சக நண்பர்களுடன் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திலே தரம் 10வரை கல்வி கற்றதாக கூறுகின்றாள். அது வரை நன்றாகவே கற்றுவந்த டிலானிக்கு அதற்கு மேல் படிக்ககுடும்ப சூழலும் அவளது நிலையும் இடங்கொடுக்கவில்லை. விசேட தேவைக்குரிய ஒருவர் எந்தவித விசேடசேவையுமற்று இவ்வளவுதூரம் வந்திருப்பதே பெரிய விடயம்தான். பெரும்பாலும் கிராமங்களில் விசேடதேவைக்குரியோருக்கு எந்தவித விசேட சேவைகளம் கிடைப்பதேயில்லை. இதனால் விசேட தேவைக்குரியோர் எல்லோருக்கும் பாரமாக வாழவந்தவர்களாகவே பார்ப்பர். குடும்பமும்,சமூகமும் சுற்றமும் அவர்களைப் பரிதாபம் பார்பதுடன் அவர்களை எதற்குமே பிரியோனமற்றவர்களாக கருதும் மனநிலையில் இருப்பர். டிலானி போல் உற்சாகமாக தன்னம்பிக்கையுடன் இயங்கும் பிள்ளைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டிகள்தான். எமக்கு எதுவும் கிடைக்காவிடினும் நாம் நம் சிறப்பை உலக்குணர்துவோம். என்று நிற்பவர்கள் இவர்கள்.

வீட்டிலே தாய், தந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் டிலாணி, கரகப்பாடல்களையும், நாட்டார் பாடல்களையும் படிப்பதில் தன்திறமையை வெளிப்படுத்திவருகிறார். வாய்மொழியாக பாடிக்கொண்டே இருக்கும் டிலானிக்கு மத,இலக்கிய சம்பவங்கள் வரலாறுகள் நன்கே தெரிந்திருக்கிறது. அதுதான் அவருக்கு பல்வேறு பாடல்களையும் பாட வழிவகுக்கிறது.
“நீங்கள் வாய்மொழியாக பாடிவரும் பாடல்களைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?” என்று அவரிடம் கேட்டபோது “ஆம் நான் இவ்வாறு எல்லாவற்றையும் எழுதி வைக்கிறேன்” என்று தன் காலால் எழுதிக்காட்டினார். பாடசாலைக்கல்வியையும் அவ்வாறுதான் முடித்துள்ளார். அவருக்கான சிறப்புத்தேவைக்கான பாடசாலையில் அவர் படிக்கவில்லை. சாதாரணமாக எல்லோரும் படிக்கும் பாடசாiயில் படித்த இவர் தன் காலால்தான் பல்வேறு வேலைகளையும் இன்றுவரை செய்துவருகிறார். அவ்வாறே அவர் தன் பாடல்களை கொப்பிகளில் காலால் எழுதி பதிவுசெய்து வருகிறார். நாம் கையால் எழுதினால்கூட அவ்வளவு அழகாக எழுதமாட்டோம். அவ்வளவு அழகு!.

ஆடுகளுடன் டிலானி…

“என்பிள்ளையை ஆண்டவன் இவ்வாறு படைத்துவிட்டான். தினம்தினம் கவலைதான்.அவளின் எதிர்காலம்பற்றி…ஆனாலும் அவள் தன்னம்பிக்கை மிக்கவள். ஆவளால் நாங்கள் இன்ற பெருமையடைகிறோம்.” ஏன்கிறார் அவரது தாய். அப்படி என்ன பெருமை?
“இன்று டிலாணி என்றால் பலருக்கும் தெரியும். பல்கலைக்கழகத்தில் இருந்தும் என்மகளை சந்தித்து கதைப்பதற்கு வருகிறார்கள். அவளைப் பற்றி நேர்காணல் செய்துவிட்டு செல்கின்றனர். விருதுகளை, கௌரவங்களை வழங்குகின்றனர். இதுதான் பிள்ளையைப் பெற்ற தாய்க்கு கிடைக்கவேண்டிய மிகப்பெரிய சந்தோசம் அச்சந்தோசத்தை என்மகள் டிலாணி மூலம் பெற்றிருக்கின்றேன்.” என்ற பூரித்து போகிறார் தாய். ஆம், டிலானியின் கரகப்பாடல்களுக்காக விருதுகளைப் பெற்றுள்ளார். 2017ம் ஆண்டில் வழங்கப்பட்ட கலைஞர் கௌரவம், 2013ல் வழங்கப்பட்ட ‘இளங்கரகக்குயில்’ விருது, 2012ல் வழங்கப்பட்ட ‘மக்கள் கலை முதுசொம்’ என்பன அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளாகும். இந்த விருதுகளை உள்ளுர் அமைப்புகளும் பிரதேச சபை, கிராம அபிவிருத்தி சபை என்பனவும் வழங்கியுள்ளன. உண்மையில் டிலாணி ஒரு கரகக்குயில்தான். தானே பாடல்களை இயற்றி தன்குரலால் கோயில்களில் பாடிவருகிறார். விசேட தேவைக்குரியவராக அவர் இருந்தபோதும் அவருக்கு எந்தவித விசேட சேவைகளும் கிடைக்கவில்லை. கல்வி தொடக்கம் தனது அன்றாட வாழ்ககை வரை அவர் சாதாரண மனிதர்களுடன் போட்டிபோட்டு தான் வாழ்ந்து வருகிறார்.
“வீட்டில் எப்போதும் சும்மா இருக்க மாட்டாள். கரகப்பாடல் ஒன்றை பாடிக்கொண்டே இருப்பாள். தானாக சமைப்பதற்கு ஆர்வமிருந்தாலும், சமைப்பதற்கு தெரிந்திருந்தாலும் அவளால் சமைக்க முடியாது. நானே சமைத்துக்கொடுக்க வேண்டும். ஆனாலும் தானும் உழைத்து வாழ வேண்டும் என்ற வைராக்கியம் அவளிடம் எப்போதும் இருகக்கிறது.” என்று கூறுகிறார் தாய்.
அதனால்தான் தனதும் தனது உறவினர்களினதும் ஆடுகளை மேய்த்தல், தோட்ட வேலைகளுக்கு உதவுதல் என இயங்கிவருகிறார் டிலானி.

“என் அப்பா கூலிவேலை செய்துதான் எங்களைக் கவனித்து வருகிறார். இதனால் நான் சுயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் என்னால் முடியக்கூடிய வேலைகளைச் செய்துவருகிறேன்.” ஏன்ற கூறும் டிலானி
ஆடுமேய்ந்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டு தனது வாழ்க்கைக்கு ஒளியூட்டிக்கொண்டிருக்கிறாள். வசதிகள் இருந்தும், உடல் அங்கங்கள் ஒழுங்காக இருந்தும் கற்க, சாதிக்க தவறும் பலருள்ளும் டிலாணி போன்றோர்கள் பல படிகளை கடந்து உயர்ந்து நிற்கின்றனர் என்பதே நிதர்சனம்.

‘கற்பகச் சோலையில் வேங்கைமரமாகி கந்தன் உருமாரி அங்கு கம்பீரமான மணிவளையல் கொண்டு காப்பு விலை கூறி..’ என்பதும்
‘திணைப்புன சுந்தரி வள்ளி அழகிற்கு செட்டியார் ஆனாரே வேலன் தீராத மோசகன் வேற்றியுடன் அப்பன் தேடியும் போறாரே..’ என்பதும் அவர் இயற்றி பாடிய கரகப்பாடல்கள்.