Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நீங்கள் யார்?
‘இலங்கையர்’ என்பதுதான் உண்மையான பதில்! ஆனால்..

ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தை புரிந்து கொண்டு இருக்க வேண்டும், ஒன்றாக வாழ வேண்டும்,​சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு மதிப்புக் கொடுக்க வேண்டும். இவை இல்லாதிருத்தல்தான் முரண்பாடுகள்,யுத்தம்,குரோதம் என்பவற்றுக்குக் காரணம்.

01.12.2019  |  
கொழும்பு மாவட்டம்
சமாதானமும் சமூக பணியும் நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ரீ. தயாபரன்

சமாதானமும் சமூக பணியும் நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ரீ. தயாபரன் முரண்பாட்டுத் தீர்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் கல்வி தேர்ச்சி பெற்ற ஒருவராகவும் இப்பணியில் நீண்டகால அனுபவமுடையவராகவும் காணப்படுகிறார். இவருடைய சமாதானப் பணிகளுக்காக இந்தியாவில் சர்வதேச சமாதான விருதையும் பெற்றுள்ளார். இலங்கையில் சமாதான நல்லிணக்கம்பற்றி அவர் த கட்டுமரனுக்கு அளித்த செவ்வி.

கேள்வி: சமதானமும் சமூகப்பணியும் என்ற நிறுவனம் எவ்வாறான பணியை இங்கு ஆற்றிவருகிறது?

பதில்: இலங்கை பூராகவும் சமாதானப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். கூடுதலாக சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம், நிலைமாறுகால நீதி போன்ற விடயங்களில் கூடுதல் கவனம்செலுத்தி செயற்பட்டு வருகின்றோம். இப்பணிகளை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்ளோடு இணைந்து மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் என்பதற்கு அப்பால் இலங்கையிலுள்ள ஒவ்வொருவரும் இந்த நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வரவேண்டும் என்பதற்காக செயற்படவேண்டியது ஒரு சமூகக் கடமை. முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட நாடு முரண்பாட்டோடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிலிருந்து வெளியில் வரவேண்டும். மக்கள் பழையபடி தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கு யாராக இருந்தாலும் பங்களிப்புச் செய்ய வேண்டும். அந்த வகையில் நாங்களும் பங்களிப்புச் செய்கின்றோம்.

கேள்வி: சமாதானத்திற்காக, யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களோடு பணியாற்றாமல் சமூக மட்;டத்தில் மக்களுக்காக பணியாற்றுகிறீர்கள்…?

இலங்கையில் உள்ள எவரும் யுத்தத்துக்கு பங்களிப்புச் செய்யவில்லை என்று கூறமுடியாது. ஒன்று நேரடியாக செய்திருப்பார்கள் அல்லது மறைமுகமாக நடக்கின்ற அநியாயத்தை தட்டிக் கேட்காமல் இருந்திருப்பார்கள். அவ்வாறு இருப்பதுவும் ஒரு பங்களிப்புத்தான். எனவே எல்லோரும் பங்குதாரர்கள்தான். எந்தவொரு தரப்பாவது மனிதகுளாத்துக்கு ஒவ்வாத சட்டரீதியற்ற அநியாயங்களைச் செய்கின்ற போது அதை கண்மூடி வாய்பொத்தி பார்துக் கொண்டிருப்பது கூட அவர்கள் அந்த செயலை ஊக்குவிக்கச் செய்கின்ற விடயம் என்ற படியால் நாங்கள் எல்லோருமே யுத்தத்துக்கு பங்களிப்புச் செய்திருக்கிறோம். அப்படிப்பட்ட நாங்கள் எதிர்கால சந்ததியினருடைய நன்மைகருதியாவது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதற்காக சமூகத்தில் உள்ள மக்களை தயார் படுத்த வேண்டும். மக்களுக்கு அது தொடர்பான விடயங்களை கொண்டு போக வேண்டும் என்பதுதாதான். இப்போதைக்கு எங்களுடைய பிரதான வேலையாக உள்ளது.

கேள்வி: யுத்தம் நிறைவுற்றுவிட்டது. ஆனாலும் மக்கள் மனதில் சமாதானம் நல்லிணக்கம் உருவாகவில்லையே?

பதில்: ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தை புரிந்து கொண்டு இருக்க வேண்டும், ஒன்றாக வாழ வேண்டும்,​சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு மதிப்புக் கொடுக்க வேண்டும். இவை இல்லாதிருத்தல்தான் முரண்பாடுகள்,யுத்தம்,குரோதம் என்பவற்றுக்குக் காரணம். இப்போது வெளிப்படையான சண்டைதான் முடிவடைந்திருக்கிறதே ஒழிய என்ன காரணங்களுக்காக இந்த யுத்தம் உருவானதோ அவ்வளவு காரணங்களும் அப்படியேதான் இருக்கின்றன. எதுவும் தீர்க்கப்படவில்லை. மக்களுடைய எந்த அபிலாசைகளுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் அப்படியேதான் இருக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகள் இருக்கின்ற வரைக்கும் நாம் சமாதானம், நல்லிணக்கம் பற்றி பேசத்தான் வேண்டும்.

கேள்வி: எதற்காக யுத்தம் உருவானதோ அது தீர்க்கப்படவில்லை என்கிறீர்கள். அதே நேரம் யுத்தத்தின் பாதிப்பு இந்த நல்லிணக்கத்திற்கு பாரிய பிரச்சினையாக உள்ளது அதுபற்றி..?

பதில்: யுத்தம் பெரியதொரு பாதிப்பை சமூகங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சமூகங்களுக்கிடையே அவநம்பிக்கை, சந்தேகம், ஒருவரையொருவர் பொறாமையோடு பார்ப்பது, ஒரு சமூகம் தான் வளரவேண்டுமென்றால் இன்னொரு சமூகத்தை வெட்டி வீழ்த்தித்தான் வளரவேண்டும் என்று நினைப்பது, ஒவ்வொரு சமூகமும் தங்களுடைய சமூகம் வளர்ந்தால் போதும் என்று பார்ப்பது இப்படியான பல சிக்கல்கள் இந்த சமூகங்களுக்குள் இருக்கின்றது. இப்போது இலங்கை, சமூகங்கள் இனத்தை, மதத்தை, பிரதேசத்தை அடிப்படையாக வைத்து உடைந்து போயிருக்கிறதே தவிர இலங்கை ஒரு சமூகமாக இல்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக நீங்கள் யார் என்று கேட்டால் ‘இலங்கையர்’ என்று சொல்வதுதான் உண்மையான பதிலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சிங்களவர்களிடம் கேட்டால் அவர்கள் இலங்கையர்கள் என்று சொல்வார்கள் ஆனால் மற்ற சமூகத்தினர் நாங்கள் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என்றுதான் சொல்கிறார்களே தவிர இலங்கையர் என்று சொல்லவில்லை. அது இன்னமுமே கட்டியெழுப்பப்படவில்லை.

கேள்வி: இதற்காக உங்களது அமைப்பினூடாக இப்போது எவ்வாறான பணிகளைச் செய்கின்றீர்கள்?

பதில்: எங்களுடைய வேலைகள் மனிதர்களாக எல்லோரையும் பார்க்க வேண்டு என்பதை நோக்கிய ஒரு பணியாகத்தான் இருக்கின்றது. எந்த சமூகத்தினராக இருந்தாலும் நீங்கள் உங்களது கலாச்சாரம் பண்பாட்டை தனித்துவத்தை மதியுங்கள் ஆனால் மனிதராக இருங்கள்.
சமாதானத்தை, சமூகநல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் அதேபோன்று இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக முன்வைத்த யோசனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி அரசாங்கத்தின் யோசனைகள் தொடர்பில் மக்கள் கலந்துரையாடுவதற்கும், கேள்வி கேட்பதற்கான உரிமைகள் இருக்கின்றது என்பது தொடர்பில் விழிப்புணர்வுக்கூடாக கொண்டு போவதைதான் நாங்கள் செய்கின்றோம்.

கேள்வி: உங்கடைய அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் நல்லிணக்கக் குழுக்கள் எவ்வாறான பணிகளை முன்னெடுக்கின்றன?

பதில்: தனிப்பட்ட ஒரு பிரச்சினை இனப்பிரச்சினையாக மாற்றப்படுகின்ற ஒரு அரசியல் சூழல்தான் இன்று காணப்படுகின்றது. உதாரணமாக கல்முனையில் வடக்கு தமிழ் பிரதேசம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமான பிரச்சினை தமிழ் முஸ்லிம் மக்களை இரண்டு துருவங்களாக பிரிக்குமளவுக்கு மாறியது. ஆனால் இது ஒரு அரசியல் பிரச்சினை. இப்பிரச்சினை சமூகங்களை பாதித்து விடக்கூடாது என்பதற்காக இரண்டு பிரிவுகளிலும் செயற்பட்ட நல்லிணக்கக் குழுக்கள் சம்பந்தப்பட்ட அரசியல், சமூக தலைவர்களை சந்தித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சமாதானமும் சமூக பணியும் நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ரீ. தயாபரன்

அதேபோன்று அக்கரைப்பற்றில் மீன்சந்தை ஒன்றிருக்கிறது. அதற்குப்பின்னால் இந்து மக்கள் வழிபடும் சைவக் கோயில் உள்ளது. இந்த மீன்சந்தையினுடைய கழிவுகள் கோயிலுக்குள் போவது என்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. இது ஆலையடி வேம்பு மற்றும் அக்கரைப்பற்றுக்கு இடையில் பெரியதொரு முறுகலை கொண்டு வந்தது. அந்த மீன் சந்தை அக்கரைப்பற்று மாநகரசபைக்குள் வருவதால் இரண்டு பிரதேச நல்லிணக்கக் குழுக்களும் அக்கரைப்பற்று மேயரோடு கதைப்பதற்கு தீர்மானித்தார்கள். அதன் பிரகாரம் மாநகரசபையினருக்கு விடயங்களை தெளிவுபடுத்திய பின்னர் மீன்சந்தையின் கழிவுகள் கோயில் வளாகத்துக்குள் போகாதவாறு சந்தையைச் சுற்றி வலையடித்திருக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்கின்ற போது சமூகங்கள் இணைந்து வேலை செய்தால் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. இவ்வாறு பல செயற்பாடுகளை இக்குழுக்கள் மேற்கொண்டிருக்கிறன.

கேள்வி: நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசின் பங்கு எவ்வளவு இருக்கவேண்டும் என எண்ணுகிறீர்கள்?

பதில்: இலங்கையில் நல்லிணக்கம் என்பது மிகவும் சவாலுக்குள்ளும் மிக மெதுவாகவும் நடக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது. இதற்கு இன்னும் எத்தனையோ வருடங்கள் செலவிடப்பட வேண்டியுள்ளது. நல்லிணக்கம் வேண்டும் என்ற எண்ணப்பாடு பரவலாக அடிமட்ட மக்களிடம் காணப்படுகின்றது. அதேசமயம் தங்களுடைய தனித்துவத்தையும் அபிலாசைகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற மனோநிலையும் மக்களிடம் காணப்படுகின்றது.
இலங்கையில் நல்லிணக்கம் மிகவும் மெதுவாக செல்வதற்கு நல்லிணக்கத்தை செய்கின்ற அரசுக்கு நல்லிணக்கம் என்ற விடயத்தில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருக்கிறதா என்பது முதலாவது கேள்வி.

நல்லிணக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் அது அரசாங்கத்தின் பணியாக மாற வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசாங்கம் இந்த வேலைகளை சர்வதேச நாடுகளுக்கு காட்டுகின்ற ஒரு வேலையாகத்தான் செய்தது. அரசாங்கங்கள் முன்வைத்த நீதிப் பொறிமுறை, நிலைமாறுகால நீதி போன்றவிடயங்கள் முழுமையாக இதய சுத்தியோடு அமுல்படுத்தப்பட்டதா என்ற கேள்வி இருக்கின்றது. அரசாங்கம் யோசனையை முன்வைத்ததே தவிர அதனை அமுல்படுத்துவதற்கான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. நல்லிணக்கம், நிலைமாறுகால நீதிப் பொறிமுறை போன்ற விடயங்களில் அரசசார்பற்ற நிறுவனங்களும், சிவில் அமைப்புக்களும் தான் கூடுதலான கவனம் செலுத்தின.

கேள்வி :புதிய அரசு நல்லிணக்கம் தொடர்பில் எந்தளவுக்கு செயற்படும் என எதிர்பார்க்கலாம்?

அரசாங்கங்கள் முன்வைத்த யோசனைகளை நடைமுறைப்படுத்தினா​லே பிரச்சினைகளை தீர்க்கமுடியும். கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழு ((LLRC)காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், நல்லிணக்கத்துக்கான அமைப்புகள், ஆணைக்குழுக்கள் பல விடயங்களை அரசாங்கங்கள் முன்வைத்தன. இவை எந்தளவுக்கு செயற்படுகிறது என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது. அரசாங்கம் தாம் முன்வைத்த யோசனைகளுக்கு முழு உருவம் கொடுத்து செயற்படுத்த வேண்டும். இவற்றைச் செய்தாலே அதிகமான பிரச்சினைகள் தீரும்.