Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

லியன்வெல தோட்டம்:
ஒரு வீதி தீர்மானிக்கிறது மக்களின் வாழ்வை!

இங்கிருந்து நடந்தேதான் ஒஸ்பிடல் போனேன். அங்க தங்கி இருந்து சிசரின் (சத்திரிசிகிச்சை) மூலம் குழந்தை கிடைச்சி. டிக்கட் வெட்டி த்ரீவீலர்ல வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கும் போது இடையில த்ரீவீலர் புரண்டுருச்சி. முழு குடும்பமும் கீழ. புறந்த ஏண்ட குழந்தை நான் என எல்லாருமே கீழ கிடந்தம். இதனால ஏண்ட உடம்புக்கு ரொம்ப முடியாமபோச்சு. திரும்ப குழந்தைய தூக்கிக்கிட்டு இங்கிருந்து நடந்தே போய்தான் மருந்து கட்டிகிட்டு வந்தோம்…

07.12.2019  |  
நுவரேலியா மாவட்டம்

“குழந்தை பிறக்கிறதுக்கு ஒருமாதம் முன்னாடி இந்த ஊரவிட்டு வேறு இடத்திற்கு போயிருவம். குழந்தை பிறந்தப்புறமும் கொஞ்ச நாள் அங்க தங்கிட்டுதான் ஊருக்கு வருவம்” என்கிறார் சதாசிவம் தயாரஞ்சனி. இவர் வாழ்வது நுவரெலியா நகரத்தில் இருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லியன்வெல தோட்டத்தில். இந்தத் தோட்டத்தில் இருந்து பிரதான பாதைக்கு செல்லவேண்டுமென்றால் 3கிலோ மீற்றர் கடக்கவேண்டும். இந்த 3 கிலோ மீற்றரும் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன் இருந்தே அதே நிலையில்தான் உள்ளது. அதாவது ஆங்கிலேயரின் ஆட்சியில் பெருந்தோட்ட தொழிலாளர்களால் நடைபாதையாக உருவான வீதி இது. அந்த வீதிதான் இன்றளவும் மக்கள் பாவனையில் உள்ளது.

“என்னோட தங்கச்சி(24) காச்சல் வந்து இருந்தா. இந்த ரோட்டாலதான் த்ரீவீலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுகிட்டுபோனம். போக்குள்ளேயே மூச்சுதிணறல் வந்திற்று. ஆஸ்பத்திரிக்கு போகமுதலே இறந்திற்றா. அதுக்கப்புறம் அப்பா(55) 2012இல், நெஞ்சு வலினு சொல்லி நெஞ்சைபிடிச்சுகிட்டு இருந்தார். அவர த்ரீவீலர் இந்த ரோட்லதான் கொண்டுபோனம். வழியில த்ரீவீலர் உடைஞ்சி போச்சு. அத சரிபண்ணி போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்பிடி அடுத்தடுத்து நாங்க எங்க உறவுகள இழந்தது இந்த வீதியாலதான். இந்த வீதி சரியா இருந்தா உசிர காப்பாத்தி இருக்கலாம்” என்கிறார் இங்கு வாழும் மணியன் புவனேஸ்வரி.

வீதியின் தோற்றம்!

இவர்கள் எல்லோரும் தமக்கிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய எல்லாப்பிரச்சினைகளுடனும் வாழ்கையை போராடி வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். தமது வாழிடத்தில் இருந்து வெளியில் செல்லதென்றால் ஒழுங்கான ஒரு வீதியின்றி தமது வாழ்க்கையை பலிக்கடாவாக்கிவருகின்றனர். லியன்வெல தோட்டத்தில் இவர்களைப்போல் 110 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு மலைஏறுவதும் இறங்குவதும் பழகிப்போன விடயம்தான். ஆனல் உடல்நலம் குன்றியவர்கள் என்னசெய்வார்கள்? பெரும் சுமையுடன் செல்பவர்கள் என்ன செய்வார்கள்?

சதாசிவம் தயாரஞ்சனி – மணியன் புவனேஸ்வரி.

‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது முதுமொழி ஆனால் இவர்களது கதைகளைக்கேட்டபின்னர் ‘வீதியில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

இங்கு வாழும் பொன்னையா சுலேஜினியின் கதை திடுக்கிட வைக்கிறது. “2018 மார்ச் மாதம் 10ஆம் திகதி இங்கிருந்து நடந்தேதான் ஒஸ்பிடல் போனேன். அங்க தங்கி இருந்து சிசரின் (சத்திரிசிகிச்சை) மூலம் குழந்தை கிடைச்சி. டிக்கட் வெட்டி த்ரீவீலர்ல வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கும் போது இடையில த்ரீவீலர் புரண்டுருச்சி. முழு குடும்பமும் கீழ. புறந்த ஏண்ட குழந்தை நான் என எல்லாருமே கீழ கிடந்தம். இதனால ஏண்ட உடம்புக்கு ரொம்ப முடியாமபோச்சு. திரும்ப குழந்தைய தூக்கிக்கிட்டு இங்கிருந்து நடந்தே போய்தான் மருந்து கட்டிகிட்டு வந்தோம். அப்புறம் இரண்டு நாளுக்கு ஒரு முறை நடந்து போய்தான் மருந்து கட்டிட்டு வந்தேன்.”என்ற உயிரச்சம் நிறைந்த கதையைக் கூறிமுடித்தார். உயிர்பயத்தை ஏற்படுத்த வீதி ஒரு காரணமாக உள்ளதே!

குழந்தை கிடைக்க முன் வேறு இடங்களில் தங்கி நின்று குழந்தை பெற்று இங்கு வந்தாலும் குழந்தைகளுக்கான பிரச்சினை, மாதாந்தம் கிளினிக் போவது கூட அவர்களுக்கு எட்டாக் கனவாகத்தான் இருக்கிறது.

“ஒவ்வொரு மாசமும் 1000 ரூபா (முச்சக்கர வண்டி கட்டணம்) இல்லனா கிளினிக் போக இயலாது. டொக்டர் பேசுவாரு கிளினிக் வரலனு, என்னா செய்ய? அதுக்கு பணம் கொடுக்க எங்கிட்ட இல்ல. நடந்து போக முடிஞ்சவங்களும் போறாங்க, நான் வருத்தம் வந்தா மட்டும் போவேன்.” என்கின்றார் 74 வயது கந்தசாமி சரஸ்வதி. (நோயாளி)
“இந்த ரோட்டின் நிலைமையால இந்த தோட்டத்தில இருந்து 25 பிள்ளைங்களுக்கு கிட்ட 10 ஆம் 11ஆம் வகுப்போட நின்னுட்டாங்க. சின்னஞ்சிறுசுக இஸ்கூல் போகமா நின்னுடுவாங்க. தினமும் ஒரு மலையை கடந்து 3கிலோமீற்றர் பாடசாலைக்குச் செல்வது என்பது மாணவர்களுக்கு இலகுவான காரியம் இல்லை. எட்டு மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு 6 மணிக்கே புறப்பட வேண்டும்.”
என்றும் கூறுகிறார் கந்தசாமி சரஸ்வதி.

சுலேஜினியின் – கலைச்செல்வி

இந்த வீதியால போய்வருவது மட்டும் பாதிக்கவில்லை. அதன் பாதிப்பு பிள்ளை ஒன்றுக்கு பிறப்பு சாட்சி பத்திரம் எடுக்க முடியாத நிலைக்கு கொண்டுபோய்விட்டுள்ளது என்பதை நம்பமுடியுமா?

“என்னோட இரண்டாவது குழந்தைக்கு குடுத்த திகதிய விட முன்னாடியே வருத்தம் வந்திற்று. ஆஸ்பத்திரிக்கு போக முடியல. மழையும் பெய்திட்டு இருந்திச்சு. இந் ரோட்டில சும்மாவே போகமுடியாது. மழையில நினைச்சுப்பாக்கவே முடியாது. குழந்தை வீட்லையே கிடைச்சிருச்சி. அப்புறமும் நாங்க போனப்போ ஆஸ்பத்திரியில பேசினாங்க வீட்ல பிறந்ததால என் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ எடுக்க முடியாம இருக்கு. இதுல என்னுடைய தப்பு என்ன இருக்கு?” என்கிறார் யோகராஜ் கலைச்செல்வி.

இப்படி அந்த ஊரில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதைகள் உண்ளன. அந்தக் கதைகளுக்கு காரணம் இந்த வீதி.
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் இந்த ஊருக்கு அவசரத் தேவைகளுக்கான சிறிய நகரம்தான் ஹைபொரஸ்ட். அங்குதான் ஒரு ஆரம்ப வைத்தியசாலையும் இருக்கின்றது. ஹைபொரஸட் தோட்டம் லியன்வெலவில் இருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடைப்பட்ட தூரத்தை முச்சக்கர வண்டியில் கடக்கவேண்டுமானால், கட்டணம் 1,000 ரூபாய். இங்கே பொதுப்போக்குவரத்தைப் பார்த்தால், லியன்வெலவை அண்மித்து இருக்கும் அல்மா கிரேமண்ட் தோட்டத்திற்கு போனால், தார் வீதி காணப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து சேவை குறிப்பிட்ட மணிக்கு ஓடும். இந்நிலையில், லியன்வெல – அல்மா கிரேமண்ட் தோட்டங்களுக்கு இடையிலான தூரம் வெறும் மூன்று கிலோமீற்றர்களே. ஆகவே இந்த மூன்று கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்பட்டலே போதும். அந்த மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வாக அது அமைந்துவிடும்.    இந்த வீதிக்காக இவ்வளவு காலமும் இவர்கள் ஏன் உரிய அதிகாரிகளிடம் போகவில்லை?


இந்த வீதிக்காக இவ்வளவு காலமும் இவர்கள் ஏன் உரிய அதிகாரிகளிடம் போகவில்லை?

100 வருடங்களுக்கு மேல் உருவான இந்த ஊருக்கு 2010இல் தான் மின்சாரவசதியே கொடுக்கப்பட்டது. பல பெண்கள், ஆண்கள் இணைந்து இந்த வீதி தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பல தடவைகள் தெரிவித்திருக்கிறார்கள். போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. என்கிறார்கள்.
ஆனாலும் இந்த மூன்று கிலோமீற்றர்களை நடந்தே கடந்துவிடலாமே என எண்ணத் தோன்றும். அதுதான் இங்குள்ள மிகப்பெரிய சிக்கல். இந்த மூன்று கிலாமீற்றர் ஒரு மலையை செங்குத்தாக கடப்பதற்கு சமமான உயரத்தைக் கொண்டது. இந்த தூரத்தைக் கடந்து வந்து மேலே இருந்து பார்த்தால் முழு ஊரையும் (லியன்வெல) ஒரு சிறிய கமராவால் படம் பிடித்துவிட முடியும். அவ்வளவு உயரத்தில் உள்ளது இந்த ஊர்.

இந்த தோட்டத்தில் விளைவிக்கப்படும் மரக்கறிகளுக்கு 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹைபொரஸ்டில் கிடைக்கும் விலை கிடைப்பதில்லை. இந்த வீதி சரியில்லாததால் பாதி விலைக்கே விற்பனை செய்துவிடுகிறார்கள். இங்கு வந்து வாங்கிச் செல்லும் வியாபாரிகளும் போக்குவரத்து(பாதை) சிக்கலை காரணம் காட்டி விலையை குறைத்துதான் கேட்பார்கள்.எமக்கும் அதைக் கீழே கொண்டுபோய் நல்ல விலைக்கு விற்க முடியாததால் சொற்ப விலைக்கு விற்றுவிடுவதாக கூறுகின்றனர் பலர்.

இப்படி மூன்று கிலோமீற்றர் வீதியின் கையில் தமது வாழ்வை ஒப்படைத்துவிட்ட இந்த மக்கள் காத்திருக்கின்றார்கள் நல்லதொரு வீதிக்காக!