Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

உயிர் கொடுத்த அந்த வார்த்தை!
“உனது குழந்தை ஒன்று உயிருடன் உள்ளது!”

லதா வெளியூர் சென்று ஒரு வருடம் முடியும் காலம். மெல்ல மெல்ல அந்த குடும்பம் தலையெடுக்க ஆரம்பித்திருந்தது. லதாவின் கணவனும் மிகவும் பொறுப்பாக குழந்தைகளை வளர்த்துவந்தார். 2004 டிசெம்பர் 26ஆம் திகதி 10, 5,4,2 வயதில் இருந்த லதாவின் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்க கணவர் , குழந்தைகளுக்கான காலைச் சாப்பாடு தயாரித்துக்கொண்டிருந்திருக்கிறார்…..

29.12.2019  |  
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பில் இந்த வருட நினைவு கூரல்...நன்றி: http://telo.org

சுனாமியின் கோரத்தாண்டவத்தால் என்குடும்பம் மொத்தத்தையும் இழந்து விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த எனக்கு ‘உன் ஒரு பிள்ளை தப்பியிருக்கு’ என்ற வார்த்தையே என்னை வாழவைத்தது.
ஆம் 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலைக்கு இரையாகிப்போன மொத்த குடும்பத்தையும் இழந்த கிருபராணி புனிதகுமாரின் ( லதா- வயது 51) நிலையை நினைத்து உருகாதார் இல்லை என்றே கூறவேண்டும்.
மட்டக்களப்பு கல்லடியை பிறப்பிடமாக் கொண்டாலும் 20 ஆவது வயதில் மணமுடித்தபோது இரு வீட்டாருக்கும் பிடிக்காத காரணத்தால் கல்லடியை விட்டு வெளியேறி அயல் பிரதேசங்களில் பல வீடுகளில் வாடகைக்கு வாழ்ந்து வந்தவர் லதாவும் அவரது கணவனும். 6 குழந்தைகளுக்கு தாயான லதா குடிகாரக் கணவனால் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். கணவனின் குடிப்பழக்கம் 6 மாதக் குழந்தையை காவுகொண்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற லதா பாதிவழியில் கணவன் வருவதைக்கண்டு கணவன் ஓட்டிவந்த லொறியில் ஏறி வைத்தியாலைக்குச் சென்றபோது கணவன் குடித்திருந்ததால் விபத்து ஏற்பட்டு குழந்தை இறந்துபோனது. அந்தக் குழந்தையின் இழப்பில் லதாவும் கணவனும் துவண்டுதான் போனார்கள். வறுமை, துயரம் அவர்களைச் சூழ்ந்திருந்தது.

நாவலடி கடற்கரையில் கட்டப்பட்ட நினைவுத்தூபி நன்றி: ilakkiyainfo.com

“பிள்யையும் போனாப்பிறகு வறுமையும் துன்பமும் இன்னும் வாட்டியது. காலம் செல்ல செல்ல வாடகை கட்டும் அளவிற்கு போதிய வருமானம் இன்மையால், டச்பார் வீதியில் நாவலடிப் பிரதேசத்தில் (கடற்கரையை அண்மித்த பிரதேசம்) தோட்டகாரர் ஒருவரின் ஒரு அறை வீட்டில் 5பிள்ளைகளுடன் வாடகையின்றி வாழ்ந்து வந்தோம். தென்னந்தோட்டங்களை மாத்திரம் பராமரித்துவரச் சொன்னார். நாள் செல்லச் செல்ல நாங்கள் படும்துயரம் கண்டு மனமிரங்கிய தோட்டக்காரர் பராமரித்தலுடன் தேங்காய்களை பறித்து விற்று அதன் அரைவாசிப் பணத்தை கூலியாகவும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்.” என லதா தனக்கு உதவிய மனிதர்களையும் மறக்காது நினைவு கூர்ந்தார்.
குழந்தையற்ற ஒருவருக்காக வைத்தியர் ஒருவர் ஒரு பிள்ளையைத் தரும்படி கேட்க வறுமையென்றாலும் குழந்தைகள் தம்முடனேயே இருக்கவேண்டும் என்பதில் இருவரும் இறுக்கமாகவே இருந்தனர். கணவனும் குடியை விடுவதாக இல்லை. பிள்ளைகளை பசியாற்ற தான் வேலைக்கு போகத்தொடங்கினார் லதா. அதற்கு இஸ்லாமியர் ஒருவர் பெரும் உதவிபுரிந்தார்.
அந்தவகையில் 1996 ஆம் ஆண்டுகாலம் தொடக்கம் காத்தான்குடியில் அரிசி ஆலை ஒன்றுக்கு வேலைக்குச் சென்றார். நாளொன்றிற்கு 100 ரூபாவுக்கு நெல் குற்றி, நெல்லுமி நீர்த்து வருமானத்தையீட்டிவந்தார். அவ்வருமானம் 7பேருக்கு ஒரு நேர வயிற்றையே நிரப்பிவந்தது. அந்த நேரத்தில்தான் தன் குடும்பம் 3நேரம் சாப்பிட்டு குழந்தைகள் படிக்கவேண்டும் என்றால் பொருளாதாரம் பெருகவேண்டும் என்று எண்ணி ஒரு முடிவு எடுத்தார்.


லதா வெளிநாடு சென்றார். அரேபிய நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக செல்ல உதவியரும் இஸ்லாமியர் ஒருவர்.

“குடிக்காமல் இனி நம் குழந்தைகளை மாத்திரம் கவனித்துக்கொள்வதே உங்கள் வேலையாக இருக்கவேண்டும். நான் காசு உழைச்சு தாறன். குழந்தைகளை பாருங்கள்” என்று கணவனிடம் கேட்டபோது கணவன் அதற்கு இசைந்தார்.
வறுமை அவரை அதற்கு இசைய வைத்தது. லதா வெளிநாடு சென்றார். அரேபிய நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக செல்ல உதவியரும் இஸ்லாமியர் ஒருவர். லதா போகும் போது மூத்த ஆண்பிள்ளைக்கு வயது 10. ஏனைய நால்வரும் அதற்கு கீழ் வயது கொண்டவர்கள். 2004 ஆம் ஆண்டு தை மாதம் லெபனான் நாட்டிற்குச் சென்றார்.
அவளது கணவனும் அவளின் வாக்குக்கு மதிப்பளித்து லதா போன அன்றைய நாளிலிருந்து குடியைக் கைவிட்டு குழந்தைகளே உலகம் என்று வாழத்தொடங்குகினார். ஓன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெறலாம் என்பது போல அவருக்கு லதாவின் பிரிவு இருந்தது. மூத்த பையனும் இரண்டாவது பையனுமே பாடசாலைக்குச் சென்று வந்தனர். மாதம் மாதம் சரியான திகதிக்கு பணம் லதாவின் கணவனின் கரம் வந்தடைந்தது. அனுப்பும் பணத்தில் கடன்களையும் அடைத்து பிள்ளைகளின் சிறு சிறு தேவைகளையும் உணவுத் தேவைகளையும் நிறைவேற்றிவந்தார். கடற்கரையை அண்டிய அந்த நாவலடி தோட்ட வீட்டில்தான் அவர்கள் இருந்தனர்.

லதா வெளியூர் சென்று ஒரு வருடம் முடியும் காலம். மெல்ல மெல்ல அந்த குடும்பம் தலையெடுக்க ஆரம்பித்திருந்தது. லதாவின் கணவனும் மிகவும் பொறுப்பாக குழந்தைகளை வளர்த்துவந்தார். 2004 டிசெம்பர் 26ஆம் திகதி 10, 5,4,2 வயதில் இருந்த லதாவின் பிள்ளைகள் விளையாடிக்;கொண்டிருக்க கணவர் குழந்தைகளுக்கான காலைச் சாப்பாடு தயாரித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போதுதான் அந்த அவலம் நிகழ்ந்தது. இலங்கையில் சுனாமி சில கிராமங்கள் அழிந்ததாக தகவல்கள் கூறின. 30ஆயிரம் பேர்களை காவு கொண்டதாக கணக்கெடுக்கப்பட்டது. அதிலும் இந்தக் கிராமத்தில் குடும்பம் குடும்பமாக 65வீதமானோர் சுனாமிக்கு பலியாகினர். அதில் இவர்களும் அடக்கம்.

வெளிநாட்டிற்கு லதாவை அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக லதாவுக்கு தந்தி(சுனாமி அனர்த்தத்தினால் வெளிநாட்டுப் பணிப்பெண்ணான லதாவின் குடும்பம் உயிரழிவுகளைச் சந்தித்துள்ளது.எனவே இவரை உடனடியாக நாட்டிற்கு அனுப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் )அனுப்பப்பட்டது. 28 ஆம் திகதி அதிகாலை இலங்கைக்கு வந்த லதா விமான நிலையத்தில் இருந்து தன்வீடு இருந்த நாவலடிக்கே முதல் செல்ல விரும்பி அங்கு சென்றார். வீடு இருந்த அடையாளமே இல்லாதிருந்தது.! லதாவுடன் கூடச்சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய பெண்மணியும் அரசசார்பற்ற நிறுவனர்கள் இருவரும் லதாவுக்கு ஆதரவளித்து தேற்றினர்.

“அன்னை வேளாங்கண்ணி மாதா கோயிலின் இடிபாடுகளுக்கருகில் நின்றபடி கடலைப் பார்த்துக்கொண்டிருந்ததேன். கடலுடன் அப்படியே சங்கமமாகிவிடவேண்டும் என்ற எண்ணமே வந்தது. 5பிள்ளைகள் என் கணவன்…யாரையும் எனக்கு வைக்கவில்லையே…என கத்தினேன். எவ்வளவு கஸ்டப்பட்ட என் குழந்தைகள்… உண்ண ஒழுங்கான உணவின்றி, உடுக்க ஒழுங்கான உடைகள் இன்றி…எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேர்த்தேனே! நான் யாருக்காகச் சென்றேனோ அவர்கள் எவருமே உயிருடன் இல்லாதபோது நான் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பிரயோசனம் அப்பதான் என்னை அடையாளம் கண்ட எனக்கு தெரிந்த றுக்கா அக்கா, ‘உனது குழந்தை ஒன்று உயிருடன் உள்ளது’ என்ற தகவலை சொன்னார்.” என்கிறார் லதா.

றுக்கா அக்காவின் குரலே ஒரு கணம் லதாவை ஸ்தம்பிக்க வைத்தது. நடுக்ககடலில் தத்தளித்துக் கிடந்த ஒருவருக்கு கரைசேரக்கிடைந்த ஒர துரும்பாக இருந்தார் லதாவின் மகன். ஆனால் தாயை அடையாளம் காணமுடியாத அதிர்ச்சியில் இருந்தார்.
பல்வேறு சிகிச்சைகளின் பின்னர் அம்மாவை இனங்கண்டு மகன் கூறிய விடங்களில் இருந்துதான் அன்று நடந்த விடயங்களைத் தெரிந்துகொண்டார் லதா. தோட்டக்காரருக்கு காசுகொடுப்பதற்காக தன்னை தந்தை அனுப்பி வைத்ததும் தான் திரும்பி வரும்போது கடலலை எல்லோரையும் இழுத்துச்சென்றதையும் கூறியுள்ளார். தன் கண்முன்னே தந்தையும் சகோதரர்களும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டபோது, அதற்கு எதிர்திசையில் ஓடத்தோன்றாத இந்த 7வயதுச் சிறுவன் தன் தந்தை சகோதரர்கள் நோக்கியே ஓடியுள்ளான். அப்போது அங்கு நின்ற சிங்கள இராணுவ வீரர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு முகாமில் ஒப்படைக்கப்பட்டான்.

இவ்வாறு லதாவின் வாழ்வில் தமிழ் முஸ்லீம் சிங்களவர் என அனைவருமே சம்பந்தப்பட்ட சம்பவங்களால்தான் வாழ்வு மீண்டிருக்கிறது! வாழ்வு நீண்டிருக்கிறது!
“வீடு இல்லாததால் முகாமில் கன காலம் இருந்தம். பிறகு நாவற்குடாவில் சுனாமி வீட்டுத்திட்ட உதவியில் காணியும் வீடும் கிடைச்சது. தனது ஒரே மகனுக்காக மீண்டும் ஓடத்தொடங்கினன். ஆப்போது நாளொன்றிற்கு 1 மூடை நெல்லு குற்றினால் 200 ரூபா வீதம் கிடைச்சது. அதன் இரண்டில் ஒரு பங்கை சீட்டுக் கட்டி சேமிச்சன். என்ர மகனின் ஆசைகள் எதுவும் நான் இருக்கும் வரை ஈடேறாமல் போகக் கூடாது என்பதற்காக அவனுக்காக உழைத்தேன். இப்ப அவனுக்கு 22 வயது. அவனும் இப்ப நாவற்குடாவில் ஒரு கொம்மியூனிக்கேசன் கடை ஒன்றில் வேலை பார்க்கின்றான். அவனது சம்பளப் பணத்திலும் மிச்சப்பிடிச்சு 2020 ஜனவரியில் ஒர மோட்டார் சைக்கிள் எடுத்து குடுக்கவேணும்.” என்ற பெருமிதப்படுகிறார் லதா.

“ஒவ்வொரு சுனாமி நினைவு நாள் அன்றும் நானும் எனது மகனும் நாவலடிக் கடற்கரைக்குச் சென்று என் குடும்ப உறவுகளுக்காக திதி கொடுத்து வேண்டிக்கொள்வதோடு அன்று மரணித்த அனைவருக்கும் பிரார்த்தனை செய்வம். பின்னர் வறுமையிலுள்ள இல்லங்களுக்கு சென்று எங்களால் முடிந்த உணவு உடைகளை அன்பளிப்புச் செய்து வருகின்றோம்.” என்று கண்கள் பனிக்க தன் வாழ்வுப் பயணத்தை கூறிமுடித்தார்.