Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நல்லிணக்கம்:
இது ஒரு கணிதச் செயற்பாடல்ல, நீட்சிகொண்டது!

தனித்துவம் வேறு தனிமைப்படுதல் வேறு என்பதைப் புரிந்து கொண்டு சிங்கள சமூகத்திலிருந்து முற்றிலும் துருவப்படுத்தப்படுவதால் உண்டாகக் கூடிய எதிர்கால அழுத்தங்களையும் ஆபத்துக்களையும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்காலத்தில் சாதுரியமாகக் கையாள வேண்டும்.

05.01.2020  |  
கொழும்பு மாவட்டம்
சமூக செயற்பாட்டாளர் ,எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித்

நாம் பேசவேண்டிய நல்லிணக்கம் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குச் சாமரம் வீசுவதற்கான நல்லிணக்கமல்ல. நாம் பேசவேண்டியது சுய அழிவிலிருந்து  நம்மைப் பாதுகாப்பதற்கான நல்லிணக்கம். நிகழ்ந்து முடிந்த போரின்
முப்பரிமாணங்கள் எமக்குள் விதைத்திருக்கும் வன்ம உணர்வுகளிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் சந்தேகங்களிலிருந்தும் எம்மை
விடுவிக்கவேண்டியிருக்கிறது… என்கிறார் சமூக செயற்பாட்டாளர் எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித். ‘படைப்புகளுடாக நல்லிணக்கம்’ என செயற்பட்டுக்கொண்டிருக்கும் எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யிதுடன் கட்டுமரனுக்காக ஒரு சந்திப்பு.

த கட்டுமரன்: எப்போதும் ‘நல்லிணக்கம்’ அரசியலுடன் தொடர்புபடுத்தியே
பார்க்கப்படுகின்றது. இலக்கிய செயற்பாடுகளினூடாக நல்லிணக்கத்தில்
கவனம் செலுத்தும் நீங்கள் அதில் எப்படி செயல்படுகிறீர்கள்?

சமகாலத்தில் நல்லிணக்கம் என்பதுஇ திறந்த பொருளாதாரக் கொள்கையில் தாராள வணிகத்தை எதிர்கொள்ளும்போது கடந்த கால நிகழ்காலப் படுகொலைகளும் இனப்படுகொலைகளும் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்படுவது அல்லது மறுக்கப்படுவது என்கிற பன்னாட்டு வர்த்தக முயற்சியாக மாறியுள்ளது. அரசுகளும் அதிகாரபூர்வ அமைப்புகளும் ‘நல்லிணக்கம்’ என்ற தொன்மையான தொனிப்பொருளை இன்று இவ்வாறுதான் கையாள்கின்றன. பாரபட்சங்கள் நிரம்பிய இலங்கை போன்ற நாடொன்றில் ‘நல்லிணக்கம்’
குறித்துப் பேசுவதை நகைச்சுவையான அறமற்ற செயல் என்பவர்களும் இருக்கிறார்கள். இனத்துவ சமய தேசிய பாரபட்சங்கள் முரண்பாடுகள் நிரம்பிய இடமொன்றிலிருந்து கட்டமைக்கப்படுவதே நல்லிணக்கம். இத்தகைய சூழலில்தான் நல்லிணக்கத்திற்கான தேவைப்பாடும் உள்ளது. இதில் நகைச்சுவை ஒன்றுமில்லை. இது அறமற்ற செயலென்பதற்கான நியாயங்களும் இல்லை.
அரசியல் தரப்புகளும் பொருள்முதல்வாதிகளான தனி நபர்களும் குழுக்களும் நல்லிணக்கத்தின் மீதான நம்பிக்கையற்ற சூழல்களைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் காப்பாற்றிக் கொள்ளப் பாடுபடுகின்றார்கள். படைப்பாளிகள் இதற்கு எதிர்த் திசையில் பயணிப்பதற்கான பாதையொன்றைச் சிறு கற்களால் நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே படைப்புக்களுக்கூடாகவும் மொழி பெயர்ப்புக்கூடாகவும் நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப முடியுமென நம்புகிறேன்.

சமூக செயற்பாட்டாளர் ,எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித்

நாம் பேசவேண்டிய நல்லிணக்கம் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குச் சாமரம்
வீசுவதற்கான நல்லிணக்கமல்ல. நாம் பேசவேண்டியது சுய அழிவிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான நல்லிணக்கம். நிகழ்ந்து முடிந்த போரின்
முப்பரிமாணங்கள் எமக்குள் விதைத்திருக்கும் வன்ம உணர்வுகளிலிருந்தும்
குழப்பங்களிலிருந்தும் சந்தேகங்களிலிருந்தும் எம்மை
விடுவிக்கவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் எமக்குள்ளிருக்கும் மனிதத்
தன்மைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவேனும் இந்த செயற்பாட்டை
படைப்புகளுக்கூடாகத் திறம்படச் செய்ய முடியும். வெவ்வேறு கலாசார
பண்பாட்டு விழுமியங்களை அறியவும் தெளியவும்இ படைப்புகள் சிறந்த ஊடகம்.
இவற்றை மொழி மாற்றம் செய்வது வாசிப்புக்கு விடுவதும்
கலந்துரையாடல்கள் செய்வதும் சமூகங்களுக்கிடையிலான சந்தேகங்களையும்
குழப்பங்களையும் இல்லாமல் செய்யும்.

த கட்டுமரன்: இதற்காக நீங்கள் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் எவை?

‘படைப்புகளுக்கூடாக நல்லிணக்கம்’ என்ற செயற்பாட்டை இரண்டாண்டுகளுக்கு
முன்பு தொடங்கினோம். பல்வேறு கலந்துரையாடல்களை வெவ்வேறு மொழி
பேசும் வெவ்வேறு மொழியில் செயற்படும் படைப்பாளர்களுடன்
மேற்கொள்வதற்கான களங்களை ஏற்படுத்தியிருந்தோம்.
‘வீ டிரான்ஸ்லேட்’ என்ற அமைப்புஇ ஊடக நண்பர்கள் சிலரால் சமீபத்தில்
தொடங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இலக்கிய நூல்களை மொழிமாற்றம்
செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இது மேலும் நம்பிக்கை தருவதாக
இருக்கிறது.

த கட்டுமரன்: நல்லிணக்க செயற்பாடுகள் எந்தளவிற்கு வெற்றியளித்துள்ளன? இதன்
அடுத்த கட்டம் என்ன?

இதுவொரு சிக்கலான கேள்வி. எப்போதும் நாம் விரைவான பதில்களை
எதிர்பார்க்கிறோம். இதனால்தான் மிக நல்ல பொது நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் விரைவிலேயே செயலிழந்து போகின்றன. இந்த எதிர்பார்ப்பு செயற்பாட்டில் ஒரு வித இயந்திரத் தன்மையை வலிந்து திணிக்கக்கூடியது. என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற செயற்பாடுகளில் வெற்றியோ தோல்வியோ பெறுபேறுகளாக இருக்க முடியாது. நல்லிணக்கசெயற்பாடு ஒரு கணிதச் செயற்பாடல்ல. இங்கு உடனடியான பதில்களுக்கு
இடமில்லை. இதுபோன்ற செயற்பாடு நீட்சியானவை. இதொரு முடிவிலியான
செயற்பாடு. உள்நாட்டில் செய்யப்படுகின்ற நல்லிணக்க வேலைத்திட்டங்கள்
சிலதைச் சில சக்திகள் பூகோள அரசியல் நலன்களைப் பெறும் நோக்கில்
பயன்படுத்துவதால் நல்லிணக்க செயற்பாடுகள் மூலம் ஏற்படக்கூடிய நல்ல
விளைவுகள் காணாமல் போய்விடுகின்றன. வெறும் பிரசார உத்திகளுக்குத்
துணை போவதாலும் இச்செயற்பாடுகள் குறுகிச் சிதைந்து விடுகின்றன.
நல்லிணக்க முயற்சிகள் பெரும்பான்மை – சிறுபான்மை இன மற்றும் மத
சமூகங்களுக்கிடையில் செய்யப்படவேண்டியது என்ற ஒற்றைப் பார்வை
இலங்கையில் எதிர்பார்க்கும் பெறுபேற்றைத் தராது.
நல்லிணக்க செயற்பாடு சிறுபான்மை இனங்களுக்குள்ளும் – சிறுபான்மை
இனங்களுக்கிடையிலும் – பெரும்பான்மை மக்களுக்குள்ளும்
முன்னெடுக்கப்படவேண்டும்.

த கட்டுமரன்: எமது நாட்டிற்கு இன்று அவசியமாகவுள்ள நல்லிணக்கத்தில் பெண்கள்
எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம்? அல்லது பெண்கள்
ஊடாக எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்?

எமது பாரம்பரிய குடும்ப அமைப்பில் பெண்களுக்கு முக்கிய இடம் இருந்தது.
இலங்கைச் சமுதாயம் இன மொழி கலாசார அடிப்படையில் வேறுபட்டதாக
இருந்தாலும் அடிப்படையில் தாய்வழிச் சமூகத்திற்கான
பொதுத்தன்மைகளைக் கொண்டிருந்தது. குடும்பங்களில் உறவு திருமணம்
பொருளாதாரம் நில உரிமைகளின் பயன்பாட்டைத் தீர்மானிப்பது போன்ற
செயற்பாடுகளில் நல்லிணக்கத்தோடு குடும்ப உறுப்பினர்களுக்கிடையே
முரண்பாடுகள் இல்லாமல் செயற்படுத்துவதில் வல்லவர்களாக
இருந்தவர்கள் எம் பெண்கள். ‘பெண்கள் நிலத்தின் தாய்மார்கள்’ என்று ஒரு
பழமொழியும் உண்டு. இதன் மூலம் குடும்பச் செல்வத்தை வைத்திருத்தல்
குடும்ப வரலாற்றைப் பதிவு செய்வது போன்ற பிற முக்கிய பொறுப்புகளில்
பெண்கள் பங்களித்தார்கள். கலந்தாலோசனைகள் மூலம் குடும்ப
முரண்பாடுகளைத் தீர்த்தார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த நிலை இப்போது இல்லை. இலங்கைச் சமுதாயம் மிக மோசமான ஆணாதிக்க சிந்தனைகளால் பெண்களை அடக்கியாளும் சமுதாயமாக மாற்றமடைந்திருக்கிறது. குடும்பத்திலும் சமூகத்திலும்
முறையான கலந்துரையாடல்களில் இருந்து பெண்கள் தொடர்ந்தும்
விலக்கப்படுகிறார்கள். சமகாலத்தில் பெண்கள் தங்களின் எதிர்கால
வாழ்வைத் தீர்மானிப்பதற்கான உரிமை கூட மறுக்கப்படுகின்றது.
உலகளவிலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் நல்லிணக்க
செயற்பாடுகளிலும் பெண்கள் பங்குபற்றுதலின் சதவீதம் தொடர்ந்து
குறைவாகவே உள்ளது. தேசிய உரையாடல்கள் மற்றும் மோதல்களால்
பாதிக்கப்பட்ட இனங்களின் முடிவுகளுடன் ஆண்களும் அரசியல்வாதிகளும்
ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இப்படியான சவால்கள் இருந்தபோதும் அமைதி பாதுகாப்பு நீதி
நல்லிணக்கம் போன்ற செயற்பாடுகளில் பெண்கள் தொடர்ந்தும்
பொறுப்புக்கூறியே வருகிறார்கள். வடக்கில் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட குடும்பத்து தமிழ் பெண்களும் தெற்கில் 1983 ஜூலைக் கலவரத்தின்போது காணாமலாக்கப்பட்ட
குடும்பங்களைச் சேர்ந்த சிங்களப் பெண்களுக்குமிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட
ஒரு நிகழ்வில் நடந்தவொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
காணாமலாக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிங்களப் பெண்ணொருவர் தமிழ்ப்
பெண்ணொருவரின் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டு கேவிக் கேவி
அழுதார். இரண்டு பெண்களினதும் இனம் வேறு. மொழி வேறு. கலாசாரம் வேறு.
அவர்களது துணைவர்களைக் காணாமலாக்கியவர்கள் வேறு. ஆனால்
அவர்களின் வலி ஒன்றாக இருந்தது. அந்த வலி அவர்களை இணைத்தது.
இதுபோன்ற ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளால் பெண்கள் நல்லிணக்கத்தில்
பங்களிக்க முடியும்.


நாம் பேசவேண்டியது சுய அழிவிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான நல்லிணக்கம்.

சமூகங்களுக்கிடையிலான பொதுத்தன்மைகளை அடையாளம் கண்டு
இணைப்புப் பாலமாகச் செயற்படக்கூடியவர்கள் பெண்கள்.
சர்வதேச அளவில் சமாதான முன்னெடுப்புகளிலும் நல்லிணக்க
செயற்பாடுகளிலும் பல பெண்கள் பாங்காற்றி வருகிறார்கள். லேமா ராபர்ட்டா
கோபோவி தனது சமாதான நல்லிணக்க செயற்பாடுகளால் 2003 இல் லைபீரிய
உள்நாட்டுப் போருக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
நல்லிணக்க செயற்பாடுகளில் பெண்கள் பங்கேற்பதற்கான களங்கள் இங்கு மிகக்
குறைவாகவே உள்ளன. இது பெண்களின் செயற்பாட்டுக்கிருக்கும் பாரிய தடை.

த கட்டுமரன்: எமது சமூகத்தில் இனங்களுக்கு இடையில் காணப்படும் தவறான புரிதல்
காரணமாக சிறு விடயங்களும் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கின்றன.
இதனை நீக்க என்ன செய்யலாம்?

தவறான புரிதல் இயற்கையாக ஏற்பட்ட ஒரு உணர்வல்ல. இது மக்களுக்குள்
செயற்கையாகத் திணிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை
ஆளுவதற்கு முயன்ற அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இன மத
அடிப்படையில் மக்களைப் பிரித்தால்தான் தங்களது அரசியல் இலக்குகளை
அடைவது இலகுவானது என்று தந்திரோபாயமாகச் செய்த தீவிர பிரசாரமே இந்த
நிலைக்குக் காரணம். இன்றுவரை கட்சி அரசியலும் நபர்களை மையப்படுத்திய அரசியல்
செயற்பாடுகளுமே இலங்கையரை இலங்கையர் என்று ஒன்றுபட்டுச் சிந்திக்க
முடியாதவர்களாக்குகிறது.

புதிய முற்போக்கு அரசியலின் தோற்றமும் ஒற்றுமை நல்லிணக்கம் போன்ற
முற்போக்குக் கருத்தியல் அடிப்படையில் பரந்துபட்ட மக்கள் வேலைத்திட்டமும்
இணைந்து காலப்போக்கில் இந்த தவறான புரிதல்களில் மாற்றங்களைக்
கொண்டுவரலாம்.

த கட்டுமரன்: தற்போது எமது நாட்டில் மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில் குறிப்பாக தமிழ்
மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் அடுத்தகட்ட சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஒரு
சமூக செயற்பாட்டாளர் என்ற ரீதியில் உங்கள் கருத்து என்ன?

தேர்தலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எடுத்த நிலைப்பாடுகளை
முற்றிலும் தவறு காண முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு தனித்து எடுத்த முடிவு வெற்றி பெற்றது. இதனால்
நாட்டிற்கு சிங்கள பௌத்த பெரும்பான்மை மற்றும் சிங்கள கத்தோலிக்க
பெரும்பான்மை மக்களும் விரும்பியவர் ஜனாதிபதியாகியுள்ளார்.
இதுபோல சிறுபான்மை தமிழர்களும் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரும்
சிங்களவர்களில் சிறுபான்மையினரும் விரும்பியவர் ஜனாதிபதியாகத் தெரிவு
செய்யப்படாவிட்டாலும் சிறுபான்மையினர் அரசியல் வெற்றியொன்றையே
பெற்றுள்ளனர்.
தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பெருமளவிலான தமது அரசியல்
ஒற்றுமையை காட்டிய சந்தர்ப்பமாக இந்தத் தேர்தலைப் பார்க்க முடியும்.
வடகிழக்கில் தனிநாட்டுக்கு எதிராக செயற்பட்டவர்கள் முஸ்லிம்கள்.
புலிகளினால் உயிர் உடைமை இழப்புகளை அதிகம் சந்தித்தவர்களாகவும்
முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
தற்போது தமிழர்கள் தங்களை இராணுவ ரீதியாகத்
தோற்கடித்த சிங்களப் பெரும்பான்மைத் தரப்புக்கு எதிரான மனோநிலையை
தேர்தலில் வெளிப்படுத்தினார்கள். பெரும்பாலான முஸ்லிம்களும் தமிழர்களின்
இந்த மனோநிலையுடன் ஒன்றுபட்டு நின்றார்கள். இந்த வெளிப்படுத்தலானது
வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உறுதித்தன்மையை
சர்வதேசத்திற்குக் காட்டியுள்ளது.
இந்த அடிப்படையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் பேசும் மக்கள்
எடுத்த முடிவில் அவர்கள் அரசியல் ரீதியாக ஒரு வகை வெற்றியைப்
பெற்றதையே காட்டுகின்றது.
உண்மையில் தோல்வியடைந்தது ஐக்கிய தேசியக் கட்சியும் கட்சியின்
வேட்பாளரும் பெரும்பான்மை சிங்களவர்களிலிருந்து அந்த வேட்பாளருக்கு
வாக்களித்த சிறுபான்மையான சிங்களவர்களுமே.
இருப்பினும் தனித்துவம் வேறு தனிமைப்படுதல் வேறு என்பதைப் புரிந்து
கொண்டு சிங்கள சமூகத்திலிருந்து முற்றிலும் துருவப்படுத்தப்படுவதால்
உண்டாகக் கூடிய எதிர்கால அழுத்தங்களையும் ஆபத்துக்களையும்
சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்காலத்தில் சாதுரியமாகக் கையாள வேண்டும்.

ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவர் நாடு என்பதை ஒற்றைப் படையில்
பார்க்கிறார். அபிவிருத்தியையும் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி
செயற்படுவதாகவும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளோடு நட்பை பேணும்
அதேவேளை வல்லாதிக்கப் போட்டிக்குள் அகப்படப்போவதில்லை என்றும்
கூறுகிறார். அவர் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மனித உரிமைச்
செயற்பாட்டாளர்களுக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் பலத்த சவாலை
ஏற்படுத்தியிருக்கிறது. சமூக நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ்
கொண்டுவந்திருப்பது அவநம்பிக்கை தருகிறது. இந்தப் புதிய சூழ்நிலையில்
புதிய வியூகங்களும் உத்திகளும் சமூக செயற்பாடுகளை முன்னெடுக்கத்
தேவையாக இருக்கின்றன.
எனினும்இ முழுமையான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்
பின்புதான் உருவாகும். அடுத்த கட்டச் சாத்தியப்பாடுகள் குறித்த தெளிவான
நிலையை அதன் பின்புதான் நோக்க முடியும்.