Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இலவச சீருடை!
வருசம் பூராவும் அந்த ஒரு சட்டைதான்!

“சில வேளைகளில் முக்கியமான பாடங்கள் நடக்கும் நாளில் கூட என்னால் பாடசாலைக்கு போக முடிவதில்லை. ஒரே ஒரு சட்டையை வைத்திருப்பதால் அது எப்போது என் காலைவாரும் என்று சொல்லமுடியாது. இதனால் அதை வெளியில் சொல்லமுடியாது சில ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராததால் திட்டும் வாங்கியுள்ளேன்.”…

12.01.2020  |  
மட்டக்களப்பு மாவட்டம்

“என்ன கமலம் அக்கா, அனு இண்டைக்கு பள்ளிக்கூடம் போகஇல்லையோ?”
“ஓ….வெள்ளைசட்டை காயயில்லை…அதுதான்..”
இப்படி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கதைத்துக்கொண்டார்கள்.

“சிலவேளை உலராத உடையோடு பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வார்கள். அந்த இலவச சீருடை புத்தகங்களால்தான் எங்கள் கிராமத்து பிள்ளைகளும் படிக்கிறார்கள். இல்லையென்றால் அவர்களுக்கு கல்வி கிடைக்காது. அரசு கொடுக்கும் ஒரு சீருடையுடன் இன்னொன்றை வாங்கி அணிய அவர்களிடம் வசதி இல்லை. பாடசாலை 180 நாட்கள் நடைபெற்றால் 180நாட்களும் ஒரே ஒரு சீருடையை அணிந்துதான் பாடசாலை செல்கின்றனர். அரசாங்கம் கொடுக்கும் சீருடையை அதிக காலம் பயன்படுத்துவர்களாக இவர்கள்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறன்!” என்கிறார் படுவான் கரையைச் சேர்ந்த வன்னமணி சிவப்பிரகாசம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பகுதியில் உள்ள மாணவர்கள் பற்றிதான் இவர் கதைக்கிறார்.

/
பொதுவாக பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகமளிக்காமல் விடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இங்கே போட்டுக்கொண்டுபோக சட்டை இல்லை என்ற காரணத்தினால் பாடசாலை செல்லாமல் இருக்கும் பிள்ளைகள் உள்ளனர். மழைகாலத்தில் தோய்த்த ஆடை உலராது. சிலர் உலராத ஆடையுடன் பாடசாலை சென்றுவரும்போது அங்குள்ள கதிரை மேசைகள், வீதிகளினால் அதிக அழுக்கடைந்த ஆடையுடன்தான் திரும்பி வருவர். ஏன்று ஆதங்கப்படுகின்றனர் பல பெற்றோர்.
நகர்புறங்களில் வாழும் பலரும் ‘ஏன்தான் அரசு சீருடைக்கு காசு தருதோ தெரியாது. ஒரு சட்டை கூட ஒழுங்கா வாங்கமுடியாது. ஏங்களுக்கோ ஒவ்வொருநாளும் போடுவதற்கு 5சட்டைவேணும்.’ என்று அலுத்துக்கொண்டே அரசின் இலவச சீருடைக்கான வவுச்சரை சட்டைசெய்வதே இல்லை. இத்தனைக்கும் நகர்புறங்களில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் வாகனங்களில் வந்துபோபவர்கள். சட்டைகளில் தீராத கறைபடுவதென்பது அபூர்வம். ஆனால் இங்கு,
‘வீட்டுக்கும் பாடசாலைக்கும் உள்ள தூரமும் அதிகம், பள்ளங்களும் படுகுழியுமாக காணப்படும் வீதிகளில் நடந்தே செல்லவேண்டும். ஒற்றையடிப்பாதைகளினாலும் செல்ல வேண்டியேற்படும். அருகில் காடுகள். காடுகளின் ஓரத்தில் சூரைப்பற்றைகள் நடந்து செல்லும்போது சூரைப்பற்றையில் சட்டை பட்டு கிழிந்தாலோ, பாடசாலை நேரத்தில் விளையாடும் போது கிழிந்தாலோ அவ்வுடையைதான் பிள்ளைகள் தைத்து அணிந்து கொண்டு பாடசாலைக்கு போகவேணும்.’ என்கிறார் இந்தக் கிராமவாசியான 72வயதான முத்துலிங்கம் நவரெத்தினம்.


அந்தக் கறைபடிஞ்ச சட்டையுடன்தான் அந்த வருடம் ஓடும்.

இவரது பேரப்பிள்ளைகளும் படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில்தான் கற்கின்றனர். தாத்தா என்ற வகையில் காலைவேளையில் பிள்ளைகளை பாடசாலைக்கு பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு விடுவதும், பின்னர் பாடசாலை விட்டு செல்லும் போது வீடுகளுக்கு ஏற்றிச்செல்வதும் இவரது வேலையாக இருக்கிறது. “தம்பி ஒருமாதத்திற்கு எத்தனை உடுப்புக்களை மாறி மாறி நாங்க போடுவம். ஒரு உடுப்பை ஒவ்வொரு நாளும் போடுறமா? இல்லையே. ஆனா பள்ளி படிக்கும் பிள்ளைகள் ஒரு உடுப்பையே ஒவ்வொரு நாளும் போடுவினம். உடுப்பில மாங்காய் அந்தகாய் இந்தக்காய் எண்டு இந்த பிள்ளையள் சாப்பிடுற காய்களின்ர கயறு பட்டுத்தெண்டால் அதை கழுவியும் போகவைக்கஏலாது. அந்தக் கறைபடிஞ்ச சட்டையுடன்தான் அந்த வருடம் ஓடும். அடுத்த வருடத்திற்கு வரும் உடுப்பை நம்பிதான் இந்தப்பிள்ளையள் சந்தோசமா இருக்குதுகள். நம்மளும் அண்டைக்கு அண்டை உழைத்து சாப்பிடுற ஆக்கள். என்ன செய்யிறது?” என்கிறார் கவலையுடன்.
அது ஒரு விவசாயக் கிராமம். விவசாய நிலங்களில் மேல்சட்டை இ;ல்லாமல் வெய்யிலிலும் மழையிலும் வேலை செய்யிற ஆண்கள். தோய்த்து தோய்த்து வெளிறிய சட்டைகளுடன் பெண்கள். இந்த மக்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அது மானத்தை மறைக்கும் ஒரு துணி என்பது மட்டுமே.! அதற்கப்பால் தெரிவுகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. இந்த நிலையில் இந்தப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சீருடை வரப்பிரசாதமே! வெள்ளையாக இருந்த அந்த சீருடை பழுப்படைந்த மஞ்சள் நிறமாக மாறியிருக்கும்! அயன் செய்த அடையாளமே இருக்காது! ஆங்காங்கே கிழிசல்கள், கசங்கல்கள், கயர்கள், ஆனாலும் அதை துவைத்து ஒரு வருடத்திற்கு மேலாக அணிந்து அதன் உச்ச பச்ச பயனை பெறுவதற்கான முயற்சிகளில்தான் உள்ளனர்.
இந்தப்பகுதியிலுள்ள பிள்ளைகள் பாடசாலைக் கல்வியினை மட்டுமே நம்பி உள்ளனர். இவர்களுக்கு பாடசாலை முடிந்தபின் விசேட வகுப்புக்கள் நடத்தினால் அடுத்த நாள் அவர்களால் பாடசாலைக்கு போகமுடியாது.

/
“இந்தபள்ளிகூடத்தில் ஏதாவது பின்னேர வகுப்புகள் நிகழ்ச்சிகள் வைச்சால் வகுப்பில் நின்று வீடு செல்கின்ற போது இரவாகிவிடுகிறது. அதன்பின் அவர்கள் பாடசாலை சீருடையை கழுவமுடியாத நிலை, அவர்களும் களைத்துவிடுகிறார்கள். இதனால் மறுநாள் பாடசாலைக்கு வரமுடியாதவர்களாகின்றனர். மழைக் காலங்கள் என்றால்; பிள்ளைகளின் வரவு மிகக்குறைவாக இருக்கும்.” என்கிறார் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் இளையதம்பி குகநாதன்.
பெரும்பாலும் இங்கே 50 வீதமான பிள்ளைகள் ஒரு சட்டையுடன் இருப்பவர்களாகத்தான் உள்ளனர். அவர்கள் பாடசாலைக்குச் செல்வதா? இல்லையா? என்பதை அந்த ஒரு சட்டைதான் தீர்மானிக்கிறது.! ஒரு நாள்தானும் சீருடைக்கு மாற்றாக நிற ஆடைகள் எதனையும் மாணவர்கள் அணிவதற்கு எந்தப்பாடசாலையும் அனுமதிப்பதில்லை.
“சில வேளைகளில் முக்கியமான பாடங்கள் நடக்கும் நாளில் கூட என்னால் பாடசாலைக்கு போக முடிவதில்லை. ஒரே ஒரு சட்டையை வைத்திருப்பதால் அது எப்போது என் காலைவாரும் என்று சொல்லமுடியாது. இதனால் அதை வெளியில் சொல்லமுடியாது சில ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராததால் திட்டும் வாங்கியுள்ளேன்.” என்கிறார் 14வயது மணவி ஒருவர்.
முன்பு அரசினால் ஒரு சட்டைக்கான துணி வழங்கப்பட்டது. 2016க்குப்பின் துணியை வாங்குவதற்கான ‘வவுச்சர்’ கொடுக்கப்படுகிறது. அந்த வவுச்சரில் துணியை வாங்கித் தைப்பதற்கு, பெண்களுக்கு என்றால் 200 ரூபாவும் ஆண்களுக்கு என்றால் (சேட், காற்சட்டை) 400 ரூபாவும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் இத்தகைய குடும்பங்களில் 4க்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பர். எந்தவிதமான நிரந்தர வருமானமும் அற்ற இத்தகைய குடும்பங்களில் ஒரு வருடத்தில் ஒரு சீருடையுடன்தான் பிள்ளைகள் படித்துவருகின்றனர். அந்த ஒரு சீருடைதான் அந்த கிராமத்தில் இருந்து அவர்கள் படிப்பதற்கு ஒரு காரணியாகவும் இருந்துவருகிறது.

இந்த நிலை இந்தக் கிராமத்தில் மட்டுமல்ல இலங்கையின் பல விவசாயக் கிராமங்களில், சொந்த நிலமற்று கூலிவேலை செய்யும் மக்களின் நிலை இவ்வாறுதான் உள்ளது. அரசின் இலவச சீருடை இல்லையென்றால் எத்தைனையோ பிள்ளைகள் பாடசாலைப்பக்கமே வரமுடியாத நிலை இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது.