Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கலாசாரம்,நம்பிக்கை - 'சுனாமி’
கலாசாரத்தை பிறப்பு அல்ல, வாழும் சூழல் தீர்மானிக்கிறது!

ஒரு தமிழ் மற்றும் சிங்களக் குடும்பம் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படத்தின் காட்சிகள் திருகோணமலை, குச்சவெளி, கண்டி, திகண, நீர் கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது…

30.01.2020  |  
கொழும்பு மாவட்டம்

“பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் ஒருவரை ஒருவர் தெரிந்து, அறிந்து, புரிந்து வைத்துக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை. அதை எல்லோரும் செய்யவேண்டும்.”என்கிறார் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான நிரஞ்சனி சன்முகராஜாதிரைப்பட நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான நிரஞ்சனி சன்முகராஜா. அண்மையில் இவர் நடித்து வெளிவந்த சிங்கள திரைப்படமான ‘சுனாமி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்திருப்பவர் இவர். தமிழ் சிங்கள மொழிகளை உள்ளடக்கிய இந்தப்படம் நல்லிணக்க எண்ணங்களுக்கு ஒரு உந்துதலாகவும் உள்ளது. இது சம்பந்தமாக த கட்டுமரன் நிரஞ்சனி சண்முகராஜாவை நேர்கண்டது. அவருடனான நேர்காணல் வருமாறு.

த கட்டுமரன்: தமிழராக இருக்கும் நீங்கள் சிங்களப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை எப்படிப் பெற்றீர்கள்?

நான் பிறந்து வளர்ந்து படிச்சதெல்லாம் கண்டி. நான் தமிழ் பாடசாலையிலும் முஸ்லீம் தேசிய பாடசாலையிலும் படித்தேன். பாடசாலைக் காலத்திலும் கிராஅத், ஹசீதா போன்றவையெல்லாம் சொல்லுவேன். என்னுடைய மதத்தைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அதே போல இஸ்லாம் பற்றியும் எனக்குத் தெரியும். அதே போல் சிங்கள மொழியும் கலாசாரமும் எனக்கு நன்கு பரீட்சயமானது. பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் ஒருவரை ஒருவர் தெரிந்து, அறிந்து, புரிந்து வைத்துக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை. அதை எல்லோரும் செய்யவேண்டும். நாங்கள் எந்த மதமாக, மொழி பேசுபவர்களாக இருந்தாலும் மனிதர்கள் நன்றாக வாழ்வதற்கு மிக முக்கியம் மனித நேயம். எல்லா மதமும் அன்பை பகிருங்கள் என்று தான் சொல்கிறது. நாங்கள் தான் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம். அதன் அடிப்படையில் அனைவரிடமும் சகவாழ்வை வாழமுடியம் அதன் பலனாக எனக்கு கிடைத்த வாய்ப்புதான் இது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட நாடகப் போட்டியொன்றில் சிங்களம் பேசும் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுக் கொண்டேன். அது சிங்கள மேடை நாடகமொன்றில் தமிழ் பெண் நடித்து சிறந்த நிடிகைக்கான விருது பெறும் முதல் சந்தர்ப்பமாகவும் இருந்தது.

த கட்டுமரன்: தற்போது வெளியாகியுள்ள ‘சுனாமி ‘ படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கிறீர்கள். அதற்கு முன் உங்கள் திரைப்பட கலை அனுபவம் பற்றி கூறுங்கள்?

நான் ஆரம்பத்தில் பாட்டுப் பாடுவதில் ஆர்வம் காட்டியிருந்தேன். பல பாட்டுப் போட்டியிலும் பங்குபற்றியிருக்கிறேன். பின்னர் தேசிய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இணைந்து கொண்டேன். மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் ‘இனி அவன்’ என்றதொரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக்கிடைத்தது. அப்போது படங்களில் நடிப்பதற்கு தமிழ் நடிகைகள் மிகவும் குறைவாகவே இருந்தனர். நான் ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள் வாழ்ந்ததால் படத்தில் நடிப்பதற்கு என் குடும்பத்தாரின் சம்மதமும் கிடைக்கவில்லை. கலைத்துறையில் (2011) எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதற்காக என் குடும்பத்தாரின் அரைச் சம்மதத்தோடு அந்த இனியவன் படத்தில் நடித்தேன்.
யுத்தத்தின் பின்னர் உருவாகும் சமூகத்தில் தமிழ் இளைஞர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், சோதனைகள் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தும் மற்றும் போரினால் அழிவடைந்த பிரதேசங்களின் பௌதீக அபிவிருத்தி, அதனால் மறைந்துபோன தமிழ் கலைத்துறையின் வளர்ச்சி, மீளிணக்கத்தை நோக்கிப் பயணிக்கின்ற இலங்கைக்கு அவசியம் என்பதை வலியுறுத்தும் ஒரு திரைப்படம் தான் ‘இனி அவன்.’ 2012 இல் வெளியிடப்பட்ட இத்திரப்படத்தில் நடித்தமைக்காக எனக்கு 2013 இல் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.
நான் தற்போது வரைக்கும் 7 திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன். ருக்மனி தேவி அம்மா அவர்கள் தான் இலங்கையில் பிறந்து இலங்கை சினிமாவில் நடித்த முதலாவது தமிழ் நடிகை. அவர் தான் சிங்கள சினிமாவுக்கும் முதல் நடிகை. அவருக்குப் பிறகு இலங்கை சினிமாவில் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் தமிழ் நடிகையாக நான் இருக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

​ த கட்டுமரன்: சுனாமி திரைப்படம் உருவாக்கம் சம்பந்தமாக கூறமுடியுமா?

பதில்: இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் நடந்த மிகப் பெரிய இயற்கை அனர்த்தம் சுனாமி. அதன்போது நிறைய உயிர்சேதங்கள் அழிவுகள் நடந்தன. அவ்வாறு இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இக்கதை எழுதப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு சுனாமி தினத்தில் காணாமல் போன ஒரு குழந்தை தொடர்பான ஒரு கதை இது. அக்குழந்தைக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் 9 பெற்றோர்கள் உரிமை கோரினர். பின்னர் அக்குழந்தை மரபணு பரிசோதனையின் பின்னர் உரிய பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. அந்த உண்மைக்கதை சிறு மாறுதல்களுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் மற்றும் சிங்களக் குடும்பம் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படத்தின் காட்சிகள் திருகோணமலை, குச்சவெளி, கண்டி, திகண, நீர் கொழும்பு, ஹம்பாந்தோட்ட போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.

சுனாமி படத்தில் பிரதான கதாபாத்திரம் ஏற்ற நிரஞ்சினி – தர்மராஜ் .

இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரமொன்றில் கல்யாணியாக இரண்டு பிள்ளைகளின் தாயாக நடித்திருக்கின்றேன். இலங்கை சினிமாவுக்கு 72 ஆண்டுகளாகின்றது. தொழில் நுட்பத்தின் உச்சத்தில் நிற்கிறோம். தொழில்நுட்பம் மற்றும் உயிர்ப்பான ஒரு கதையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இனி இப்படி ஒன்று எடுப்பார்களா என்று தெரியாது. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரம் இரண்டில் நானும், தர்மராஜ் என்பவரும் நடித்திருக்கிறோம். நாம் இருவரும்தான் தமிழ் கலைஞர்கள். இலங்கை இயக்குநர்களில் அதிகளவு சர்வதேச விருதுகளைப் பெற்றவரான கலாசூரி சோமரத்ன திஸாநாயக இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளார் என்பதும் நாம் அதில் நடித்திருக்கிறோம் என்பதும் பெருமைக்குரியதுதான்.

த கட்டுமரன்: இந்தப் படத்தின் கதை தமிழில் உள்ளதா? சிங்களத்தில் உள்ளதா?

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தை எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் பார்த்து விளங்கிக் கொள்ளும் அளவுக்குத் தான்; உருவாக்கபட்டிருக்கின்றது. அதாவது தமிழ் காட்சிகள் வரும் இடங்களில் சிங்கள உபதலைப்புகளும் சிங்களக் காட்சிகள் வரும் இடங்களில் தமிழ் உப தலைப்புகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. மனித நேயம் எந்தளவுக்கு முக்கியம் என்பதைக் கருவாக வைத்துத்தான் இத் திரைப்படம் உருவாகியிருக்கிறது. மொழி அதற்கு தடையாக இல்லாதவாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.

த கட்டுமரன்: சுனாமியின் கதையம்சம் நமக்குத் தரும் பாடம் எதுவாக உள்ளது?

ஒரு பிள்ளையினுடைய பிறப்பு அதனுடைய மதத்தை அல்லது கலாசாரத்தை தீர்மானிப்பதில்லை. அது வாழும் சூழல் தான் தீர்மானிக்கிறது என்பதை இக் கதை தெளிவாகச் சொல்கிறது. தமிழ் பெற்றோருக்குப் பிறந்த குழந்தை சிங்களப் பெற்றோரிடம் 12 வருடங்களாக வளர்கின்றது. சட்டத்திற்குமுன் வருபோது சட்டத்திற்கும், பாசத்திற்கும் , மனிதநேயத்திற்கும் நடக்கும் போராட்டமே இது. அத்தோடு இயற்கையின் முன் நாம் அனைவரும் சமம் என்பதையும் இந்தப் படம் மட்டுமல்ல யதார்த்தமும் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது. முக்கியமாக ஒரு நல்லிணக்கம் சார்ந்து சிந்திப்பதற்கான திரைப்படம் இது.

த கட்டுமரன்: இனமுரண்பாடுகளும் குரோதங்களும் ஓங்கியுள்ள நிலையில் இரு இனங்களுக்கிடையேயான உங்கள் வாழ்வுப்பயணம் எப்படியுள்ளது?

பதில்: என்னுடைய அம்மாவின் அம்மா சிங்களவர். என்னுடைய அம்மா, அப்பா தமிழ். நான் படிச்ச பாடசாலை முஸ்லிம். அப்படி இருக்கும் போது நான் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல முடியும்?. எந்த கலாசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. இலங்கையில் அனைத்து மத, இன கலாசாரங்களுடன் என் வாழ்விலும் குடும்ப உறவிலும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவற்றை நான் அறிந்து வைத்திருக்கிறேன். இலங்கையில் இருக்கும் மிக முக்கியமான கலாசாரங்களைப் பற்றிய அறிவு, அந்த மாதிரியான மக்கள், சூழ்நிலைகள் என எல்லாவற்றிலும் நான் வாழ்ந்திருக்கிறேன். வாழ்ந்துகொண்டிருகிறேன்.
நான் பணியாற்றும் ஊடகத் துறை அல்லது திரைப்படத்துறையாக இருக்கட்டும் எல்லா மத இனக் கலைஞர்களுடனும் நான் பணியாற்றுகின்றேன். அவர்களோடு நல்ல உறவைக் கட்டியெழுப்பியிருக்கிறேன். சகவாழ்வை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல நாடகங்கள், திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை அதற்கான பங்களிப்பைச் செய்து கொண்டு வருகின்றேன்.

த கட்டுமரன்:  கலைத்துறையினூடாக நல்லிணக்கம் எந்தளவுக்கு சாத்தியமாகிறது?

பதில்: நல்லிணக்கத்தை சகவாழ்வை அடிப்படையாகக் கொண்டு பல கலைப்படைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாடகங்கள், திரைப்படங்கள் இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு மனங்களிலும் மாற்றம் வேண்டும். கலைஞர்களும் தங்களில் ஒரு மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நல்லிணக்கத்தைச் சாத்தியமாக்கும்.
பன்சலை, கிறிஸ்தவாலயம் போன்றவற்றுக்குப் போனால் எப்படிக் கும்பிட வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதேபோன்று முஸ்லிம் திருமண வீட்டுக்குச் சென்றால் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி சஹனில் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தெரியும். என்னுடைய உரிமையை இழக்காத அதேவேளை எனது கடமையையும் நான் மறந்துவிடுவதில்லை.அது போலத்தான் எனது கலைத்துறைப் பயணத்திலும் நடந்து கொள்கின்றேன். இவ்வாறு நாம் நல்லிணக்கத்தை சாத்தியமாக்கலாம்.