Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

‘நான் புத்தரின் சீடன்! புத்தர் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை.!’

தமிழை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழ் பேசும் நபர்களைத் தேடி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். எனது பேஸ்புக்கில் எனது பெயரை தமிழுக்கு மாற்றி கணக்கைப் புதுப்பித்தேன். பிறகு இலங்கை இந்தியா மலேசியா கனடா போன்ற உலகம் முழுக்கவும் உள்ள தமிழர்களை அதில் இணைத்துக்கொண்டு…..

11.03.2020  |  
களுத்துறை மாவட்டம்

தனது தாய்மொழியில் தேர்ச்சியடையவே தள்ளாடும் இந்த சமூகத்தின் மத்தியில் மேலதிக மொழியான தமிழைக் கற்று அதில் தேர்ச்சியடைந்து அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார் ரத்ன தேரர். தமிழில் கலைமானிப்பட்ட கற்கையையும் தொடர உள்ளதாக கூறுகிறார். சிங்களவர்கள் தமிழையும் தமிழர்கள் சிங்களத்தையும் கற்கவேண்டும் என்ற தொனிப்பொருளில் செயற்படும் இவர் சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்ட பௌத்த பிக்கு ஆவார். களுத்துறை மாவட்டத்தில் இரண்டாம் மொழி தமிழை கற்பிக்கும் இவருக்கு தமிழ் மீது அலாதிப்பற்றும் பிரியமும் உள்ளது. தமிழை கற்பிப்பதன் மூலமும் தமிழை சரளமாகப் பேசுவதன் மூலமும் இவர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். ரதன தேரர் கட்டுமரனுக்கு வழங்கிய விசேட செவ்வி இது.

தி கட்டுமரன் – நீங்கள் தமிழ் புழக்கத்தில் இல்லாத பகுதியில் இருக்கும் நீங்கள் அந்த மொழியில் எவ்வாறு தேர்ச்சி பெற்றீர்கள்?

நான் 2001 ஆம் ஆண்டில் பௌத்த துறவியாக இணைந்தேன். நான் படித்த பிரிவெனாவில் (பிக்குகள் படிக்கும் பாடசாலை) இரண்டாம் மொழி தமிழ் பாடம் இருந்தது. அங்கு தமிழ் எழுத்துக்களோடு ஒரு சில தமிழ்  சொற்களையும் படித்துக்கொண்டேன். ஆனாலும் தமிழை சரளமாக பேசும் அளவுக்கு அங்கு பயிற்சிகள் கிடைக்கவில்லை. எனது உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர் நான் கொழும்பு பௌத்த பாலி பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளேமா பயிற்சி நெறியை நிறைவு செய்தேன். அதன் இறுதிப்பரீட்சையில் எனக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன. இதனால் எனது தமிழறிவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் பிறந்தது.

/

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செய்திகள் என்பவற்றை பார்த்தேன். நான் வசிக்கும் பிரதேசத்தில் தமிழ் பத்திரிகைகள் இல்லை. தமிழ்  மக்கள் வாழும் பிரதேசங்களுக்குச் சென்று தமிழ் பத்திரிகைகளை  வாங்கி வாசிப்பேன். சமஸ்கிருதம் பாலி போல தமிழ் மொழிகற்க புத்தகங்களில் மட்டும் முடங்கியிருப்பதில்லை. தமிழை நிறைய பேர் பேசுகிறார்கள். தமிழை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழ் பேசும் நபர்களைத் தேடி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். எனது பேஸ்புக்கில் எனது பெயரை தமிழுக்கு மாற்றி கணக்கைப் புதுப்பித்தேன். பிறகு இலங்கை இந்தியா மலேசியா கனடா போன்ற உலகம் முழுக்கவும் உள்ள தமிழர்களை அதில் இணைத்துக்கொண்டு அவர்களுடன் பேசிப்பழகி தமிழறிவை வளர்த்துக் கொண்டேன்.

தி கட்டுமரன் – தமிழ் மக்கள் சிங்களத்தையும் சிங்கள மக்கள் தமிழையும் கற்றுக் கொள்வதன் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்?

நாட்டில் தமிழ் பேசுபவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு முதற்காரணம் மொழி தெரியாமல் இருப்பதுதான். முரண்பாடுகள் தோன்றுவதற்கு மொழி ஒரு காரணமாக இருக்கின்றது. ஒரு சமயத்தில் அல்லது சமூகத்தில் உள்ள பிரச்சினையை இன்னொரு சாராருக்குத் தெரிவிக்க மொழி ஒரு ஊடகமாக அமைகின்றது. மொழி தெரியாவிட்டால் அதை மற்ற சமூகத்துக்கு தெரிவிக்க முடியாது. எந்தவொரு பிரச்சினையையும் பேசினால்தான் தீர்வு காண முடியும். பேசுவதற்கு மொழி தெரியாவிட்டால் எப்படி தீர்வு காணுவது?
இரு சாராரும் இரு மொழிகளையும் கற்க வேண்டும். ஒரு சிங்களவருக்கு தமிழும் தெரியும் என்றால் வடக்கு கிழக்கிலும் சென்று இலகுவாக வேலை செய்யலாம். முக்களுடன் சகஜமாகப் பழகலாம். அங்கு இருப்பவர்களுக்கு தமிழ் தெரியும் என்றால் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் தொடர்பாடலுக்கு பிரச்சினை இருக்காது. மொழி தெரியும் என்றால் வீணான சந்தேகமோ அல்லது பிரச்சினையோ வராது. இதன் மூலம் பாரியளவில் முரண்பாடுகள் குறையும். தனிநபர் முரண்பாடுகள் குறைகின்றபோது பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புகளும் குறையும்.

தி கட்டுமரன் – முஸ்லிம் மக்களும் இந்து மக்களும் ஒரே மொழியைத்தான் பேசுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குள் பிரச்சினைகள் இருக்கின்றனவே.அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கம் இடையில் உள்ள பிரச்சினைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் மிகக்குறைவாகவே உள்ளமையை நீங்கள் உணரலாம். நிறைய பேர் மனிதர்களாக பிறந்து மனிதர்களாகவே மரணிக்கிறார்கள். ஆனால் சிலபேர் மனிதர்களாக பிறந்து மிருகங்களாக மாறியிருக்கிறார்கள். ஒரே மொழியைப் பேசினாலும் ‘நாம்’ என்று சிந்திப்பதில்லை. ‘நான்’ என்றே யோசிக்கிறார்கள். ‘எனக்கு’ என்ற சிந்தனை இல்லாமலாகி எப்போது ‘எமக்கு’ என்ற சிந்தனை வருகிறதோ அப்போதுதான் பிரச்சினைகள் முழுமையாக இல்லாமல் போகும்.

தி கட்டுமரன் – நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக உங்களிடம் உள்ள எதிர்காலத் திட்டங்கள் எவை?

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மாணவர்கள் சிங்கள மொழித் தேர்ச்சியில் பின்நிற்கிறார்கள். அவர்களுக்கு இலவசமாக சிங்கள மொழிப்பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கென எதிர்கால செயற்றிட்டங்கள் என பெரியளவில் எதுவுமில்லை. ஆனால் நான் செய்யும் எல்லா செயற்றிட்டங்களுமே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவே அமையப்போகின்றன. ஏனென்றால் நான் எல்லா விடயங்களையும் இங்கே தமிழிலிலேயே செய்கின்றேன். இங்கே தமிழ் படிப்பிக்கின்றேன். எனது மாணவர்கள் நன்றாக தமிழ் வாசிக்கிறார்கள். அவர்களால் எழுதவும் முடியும். சிலர் தமிழ் பேசுவார்கள். அதே நேரம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மாணவர்கள் சிங்கள மொழித் தேர்ச்சியில் பின்நிற்கிறார்கள். அவர்களுக்கு இலவசமாக சிங்கள மொழிப்பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் எனக்கு உதவுவார்கள். அங்கு சென்று சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும். இதற்காக இலவச செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்களைச் செய்து வருகிறேன். இவையெல்லாம் நல்லிணக்கத்திற்கான வழிகளாக இருக்கும் என்பது தான் எனது எண்ணம்.

தி கட்டுமரன் – நீங்கள் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தால் ஏதாவது கசப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்களா?

உண்மையில் தழிழும் எனது தாய்மொழி என்றளவில்தான் நான்பார்கிறேன். தமிழில் கலைமாணிப்பட்டம் பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்த வருடம் கற்றல் வேலைப்பாடுகள் தொடங்கிவிடும். இதன்போது பெரியளவில் எனக்கு கசப்பான அனுபவங்கள் இல்லை. அதிகம்பேர் என்னைப் பாராட்டவே செய்தார்கள். ஆனால் எனது பேஸ்புக்கில் எனது பெயரை தமிழில் மாற்றிய பிறகு அதைப் பலர் விமர்சித்தார்கள். ஏன் இப்படி செய்ய வேண்டும்? எதற்காக தமிழில் பதிவிடுகிறீர்கள்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. சிலவேளை வெறுப்புப்பேச்சுக்களும் உள்பெட்டிக்கு வரும். சிங்களவர்கள் பலர் ஏன் தமிழ்பெயரில் உலா வருகிறார் என்ற சந்தேகக் கண்ணுடன் பார்த்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன். விமர்சிப்பவர்களும் நிறுத்தி விட்டார்கள்.

தி கட்டுமரன் – பௌத்த கலாசாரம் தவிர்ந்து வேறு எந்த கலாசாரம் பற்றி அறிந்துள்ளீர்கள்?

பௌத்த கலாசாரம் எனது தாய்கலாசாரம். அது தவிர எனக்கு இந்து கலாசாரம் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய சடங்கு சம்பிரதாயங்களை மிகவும் இரசித்திருக்கிறேன். கடந்த பொங்கலை மன்னாரில் தமிழர்களோடு கொண்டாடினேன். சிவராத்திரி புத்தாண்டு தீபாவளி என எந்தவொரு பண்டிகை வந்தாலும் அவர்களுக்கு வாழ்த்து அனுப்புவேன்.

மேலும் கத்தோலிக்கர்களின் கலாசாரமும் எனக்குத் தெரியும். முஸ்லிம்களுடன் பழகும் வாய்ப்பு இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களுடைய கலாசாரம் தொடர்பான விடயங்களை படித்து தெரிந்து வைத்திருக்கிறேன். என்னுடைய அடுத்த பிறந்த நாளுக்கு நீங்கள் ஒரு குர்ஆனை பரிசாகக் கொடுப்பீர்கள் என நினைக்கிறேன்.(சிரிக்கிறார்)

தி கட்டுமரன் – இனவன்முறைகள், மத வன்முறைகள் என நாட்டில் பிரச்சினைகள் குறைந்தபாடில்லை. இது பற்றி..?

இலங்கையின் நிலைமைக்கு இலங்கையில் உள்ள அனைவரும் பொறுப்புதாரிகள்தான். இங்கு அரசியல் சீராக இல்லை. அங்கே ஊழல் நடக்கும்போது மக்களைக் குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. தமது சுயலாபத்துக்காக வன்முறைகளை தூண்டிவிட்டு அதில் பலர் குளிர்காய்கிறார்கள். இங்கு சமயத் தலைவர்கள் சிலர்கூட ஒழுங்காகச் செயற்படவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது. பொலிஸ் இராணுவம் உட்பட பல்வேறு அரச அதிகாரிகளும் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு இனத்துக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். நான் புத்தரின் சீடன். புத்தர் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. நானும் அந்த கண்ணோட்டத்தில்தான் எல்லோரையும் பார்க்கிறேன். அதைத் தவறு என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கை சட்டத்தின்படி தமிழும் அரசகரும மொழிதான். அதை பயன்படுத்தும் சுதந்திரம் அனைவருக்கும் உரித்தானது. நான் எல்லா வேலைகளையும் தமிழில்தான் செய்கிறேன். இப்போது சிங்களத்தை விட தமிழை பயன்டுத்துவது எனக்கு இலகுவாக இருக்கிறது.