Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நீதியும் இழப்பீடும்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை.

நான் கொஞ்சநேரம் திகைத்துபோனேன். ஒண்டுமே நான் எதிர்பார்க்கல, என்ர பிள்ளை செத்துப்போச்சு, விலை மதிக்கமுடியாத என்ர சொத்தை நீங்கள் தெரிஞ்சோ தெரியாமலோ அழிச்சுப்போட்டியள். சம்மந்தப்பட்டவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.

29.11.2016  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் சிங்கள மாணவர்களின் பாதாதைகள்

“ஐயோ…..இந்த ஏலாத காலோட இரவில மேசன் வேலை செய்திற்று அடுத்தநாள் காலையில போய் சோதினை எழுதினவன் இவன். போறுப்பா குடும்பத்த பாக்கிறவன். படிச்சு நல்ல வேலைக்கு போய் எங்கள பாப்பான் எண்டு இருந்தம்.எல்லாதிலயும் மண்ண தூவிற்றாங்களே….படுபாவிகள்……”என்று கதறிக்கொண்டிருந்தார் இலங்கை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் அக்கா.
“அவன்ர படிப்பு முடிய இன்னும் ஒரு வருசம்தானே இருக்கு……அவன் வந்து குடும்பத்த பாப்பான் எண்டு நம்பி இருந்தமே…..எல்லாத்தையும் குலைச்சிற்றாங்களே…..”நடராஜா கஜனின் தாயின் கதறல் மறுபுறம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜனும், அவரது நண்பனான விஜயகுமார் சுலக்ஸ்சனும் கடந்த ஒக்டேபர் மாதம் 20ஆம்திகதி நள்ளிரவு கொலையுண்டனர். 21ஆம் திகதி இணையத்தளங்கள் அனைத்தும் பொலீசாரை மேற்கோள் காட்டி ‘மோட்டார்சைக்கிள் விபத்து’ என செய்தி வெளியிட்டிருந்தன.

இணையத்தளங்களில் முதலில் வந்த செய்தி
இணையத்தளங்களில் முதலில் வந்த செய்தி

மதியம் 12 மணிக்கு பின்னர் வைத்தியசாலை அறிக்கையின் பிரகாரம் விபத்து அல்ல சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற விடயம் வெளியில் கசிந்தது. மேட்டபைக் ஓட்டிச் சென்றவரின் மார்பில் சூட்டுக்காயமும் பின்னால் இருந்தவரின் தலை சிதைந்த நிலையில் இருந்ததாகவும் யாழ்ப்பாண வைத்திய சாலை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்தன. பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டனர். தகவலை உறுதிப்படுத்தும்வரையில் மாணவர்களின் உடலை பொறுப்பெறுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சூட்டுக்காயம் உறுதிப்படுத்தப்பட, சம்பந்தப்பட்ட பொலீஸாரை உடனடியாக கைது செய்யும்படி ஜனாதிபதி மட்டத்தில் இருந்து உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டது. அதன்படி 5பொலீசார் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

இறந்தவர்களின் குடும்பப்பின்னணி.

நடராஜா கஜன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். வயது 23.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் மூன்றாம் வருடத்தில் பயில்பவர். ஐந்து அக்காமாரோடும் இரண்டு தம்பிமாரோடும் கூடப் பிறந்த கஜன் அவரது தாயாரால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்டவர். காரணம்; எட்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு பிரிந்து விட்டார். பிறவியிலிருந்தே கஜனின் வலது கால் சற்று வளைந்திருப்பதால் பார்ப்போருக்கு அவரது நடை அசாதரணமாய்த் தோன்றும். மிகவும் பின்தங்கிய குடும்பத்திற்காக அப்பப்போ சிறு சிறு வேலைகளைச் செய்து பொருளாதார உதவிகளைச் செய்துகொண்டிருந்தவர். பள்ளிக் காலங்களில் கல்விச் செயற்பாட்டில் உயரிய திறமைகளைக் காட்டினாலும் அவரது காலில் இயற்கையாகவே இருந்த பிரச்சினையால் பல்வேறு அவமானங்களைக் கடந்ததாகவே கஜனின் கல்விக்காலம் கடந்திருக்கிறது. கஜனின் மூத்த சகோதரி எம்முடன் உரையாடும்போது இந்த விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.


யாழ்ப்பாணத்தில் உள்ள ஊனமுற்ற பிள்ளைகளுக்கான

காப்பகத்தில் சேர்க்கப்பட்டான். அங்கேயே தங்கியிருந்து

கல்வியைத் தொடர்ந்து A/L வரை படித்தான்

“கஜன் போர்க் காலத்தில் எம்முடன் இங்கே இருக்கவில்லை.யாழ்ப்பாணத்தில்தான் படித்துக்கொண்டிருந்தான். கடைசியாக இங்கே(கிளிநொச்சியில்) படித்துக்கொண்டிருந்தபோது சக மாணவன் ஒருவரின்கேலிக்குள்ளாகி படிப்பு வேண்டாம் என்று வீட்டில் நின்றுவிட்டான்.எங்களது இரட்டைத் தங்கச்சிகளில் ஒருத்தி கருணா நிலைய காப்பகத்தில்(பெற்றோர் அற்றவர்களை பாதுகாக்கும் இடம்) தங்கியிருந்துதான் கல்வி பயின்றாள். ஒருமுறை அங்கே ஒரு நிகழ்வு நடந்தபோதுயாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கிறிஸ்தவ பாதிரியார் வந்திருந்தார்.அவருக்கு கஜனின் நிலை தெரிந்தது. அங்கே (யாழ்ப்பாணத்தில்)ஊனமுற்றவர்களுக்கான காப்பகம் ஒன்றில் தங்கவைத்து படிப்பிப்பதாகஅம்மாவிடம் கேட்டுக்கொண்டார். வீட்டிலும் சரியான கஷ்டம். அம்மாஉடன்பட்டார். அதோடு கஜன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊனமுற்ற பிள்ளைகளுக்கானகாப்பகத்தில் சேர்க்கப்பட்டான். அங்கேயே தங்கியிருந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்து A/L வரை படித்தான். அந்தக் காலங்களில் நான் தான் மானிப்பாயில் உள்ள அந்தக்காப்பகத்திற்குப் போய் லீவு நாட்களில் கஜனை இங்கே அழைத்துவருவேன். நானும் முறிகண்டி என்ற கிராமத்தில் இருந்த ஒரு காப்பகத்தில் தங்கியிருந்துதான் கல்விகற்றேன். கஜன் O/L,A/L எழுதிவிட்டு விடுமுறையில் இருந்த காலத்திலும்குடும்பத்துக்காக கஷ்டப்பட்டான். மேசன் வேலைக்குச் சென்று
குடும்பத்துக்கு தன்னாலானவற்றைச் செய்தான்.” என்று த கட்டுமரனுக்காக நினைவுகளை மீட்டார் கஜனின் அக்கா.

சுலக்சன் விஜயகுமார் யாழ்பாணம் சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்தவர். 24வயது. ஊடகத்துறையில் மூன்றாம் வருடத்தில் கற்றுவருபவர். நகைச்சுவை குறும் படங்களையும் தானே நடித்து வெளியிட்டுமுள்ளார். 5பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இளையவர் இவர்.

கஜன், சுலக்சன் இருவரும் இயல்பாகவே கேலியும் சிரிப்பும் என கலகலப்பாக இருப்பர்.இருவரும் இணைபிரியா நண்பர்கள்.பல்கலைக்கழகத்திலும்சரி வெளியேயும்சரி இருவரும் ஒன்றாகவே
பிரசன்னமாவதுண்டு. இருவருமே வசதி வாய்ப்புக்கள் அற்ற குடும்பப் பின்னணியிலிருந்து ஆயிரம் கனவுகளோடு பல்கலைக்கழகத்தை எட்டியவர்கள். அன்றும் கஜனின் வீட்டுக்குப் போய்விட்டு நள்ளிரவில் தமது பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, பொலீசாரின் கட்டளையை மீறி அவர்கள் சென்றதனால்தான் அவர்களை சுட நேரிட்டடதாக தகவல்கள் வெளிவந்தன. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உயிராபத்து இல்லாது அவர்களை ப்பிடிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருநதுள்ளன. அவை ஏன் பொலீசாருக்கு தெரிந்திருக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அமைச்சர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

திகைப்பூட்டிய இழப்பீட்டு பேச்சுக்கள்

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் (21.10.2016)அன்று“பின்னேரம் ஆஸ்பத்திரியில் இருக்கிற பொலிஸ் நிலையத்துக்கு என் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு போனார்கள். ஏதோ சைன் வைத்துவிட்டு மகனின்ர பொடியை (body)
கொடுக்கப்போறார்களாக்கும் என்று போனேன். அங்கே அவர்கள் பிரச்சினையைசொன்னார்கள். தங்கள் தவறை ஒத்துக்கொண்டார்கள். எதிர்பாராமல் நடந்துவிட்டது, படிக்கிற பிள்ளைகள் இருக்கிறார்களா? எத்தனை பிள்ளைகள்இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டுவிட்டு உங்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம். இப்ப உடலை கிளீன் பண்ணி பெட்டிச் செலவு, போக்குவரத்துச் செலவு என அனைத்துச் செலவுகளையும் நாங்களே ஏற்கிறோம், வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் எனக்கேட்டார்கள்.

நான் கொஞ்சநேரம் திகைத்துபோனேன். ஒண்டுமே நான் எதிர்பார்க்கல, என்ர பிள்ளைசெத்துப்போச்சு, விலை மதிக்கமுடியாத என்ர சொத்தை நீங்கள் தெரிஞ்சோதெரியாமலோ அழிச்சுப்போட்டியள். சம்மந்தப்பட்டவனுக்கு சரியான தண்டனைகிடைக்க வேண்டும். இனிமேல் காலங்களில் இங்க எந்தவொரு பிள்ளைக்கும் இப்படிநடக்கக்கூடாது. அதைத்தான் எதிர்பார்க்கிறேன் என்று சொன்னேன்.” என்றார் கஜனின் அம்மா.


ஏற்கனவே ஒருவன் காணமல் ஆக்கப்பட்ட நிலையில்

இவனையும் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

இதற்கு நீதி வழங்குங்கள். நீதியைப் பெற்றுத்தாருங்கள்.

இதையேதான் சுலக்சனின் அப்பாவும் தன்கருத்தாக அண்மையில் வெளியிட்டிருந்தார்.ஓக்டோபர் 31ஆம் திகதி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பொன்றில் இரு குடும்பத்திற்கும் இராணுவத்தினரால் வீடுகட்டிக்கொடுக்கவும், குடும்ப அங்கத்தவர்களின் கல்வித்தரத்திற்கேற்ப வேலைவாய்ப்பையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினானர். அதை மறுத்த சுலக்சனின் தந்தை
“ எனது 5 பிள்ளைகளையும் நான் தனியனாக நின்று வளர்த்தேன். அதில் ஏற்கனவே ஒருவன் காணமல் ஆக்கப்பட்ட நிலையில் இவனையும் சுட்டுக்கொன்றுள்ளார்கள். இதற்கு நீதி வழங்குங்கள். நீதியைப் பெற்றுத்தாருங்கள்.இராணுவம் கட்டிக்கொடுக்கும் வீடு எங்களுக்கு வேண்டாம்”என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்தன.

வழக்குவிசாரணை

இந்நிலையில் கடந்த 4ஆம்திகதி பின்னர் 18ஆம் திகதிகளில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 4ஆம் திகதி ‘மோட்டர் சைக்கிளைச் செலுத்தி வந்த விஜயகுமார் சுலக்சன் துப்பாக்கிச் சூட்டினால் மரணமடைந்திருந்த நிலையில்அதன்பின்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தினால் நடராஜா கஜன் என்பவர் மரணமடைந்திருந்தார் என்று நீதிவான்தனது மரணவிசாரணை தொடர்பான கட்டளையில் குறிப்பிட்டிருந்தார்.’

கடந்த 18ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 18தடயப் பொருட்களை மன்றில் சமர்ப்பித்தனர். மாணவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள், இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உண்டு.அச்சத்தின் காரணமாக அவர்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லை என்றும் அவர்களது பாதுகாப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்தி அவர்களது சாட்சியங்களைப்பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் டிசெம்பர் 2ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சுந்தேக நபர்கள் தொடர்ந்தும் அநுரதபுரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நல்லிணக்க எண்ணங்களுக்கு விழுந்த அடி.

எந்தக் காரணங்களுமின்றி மாணவர்களை படுகொலை செய்ததும்,பின்னர் அதை மூடிமறை;கக பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டதும் மக்கள்மத்தியில் அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நல்லிணக்க அரசின் நல்லிணக்க செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இது அதில் பெரும் தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வட்டாரங்கள் தமது கருத்துக்களை எண்ணங்களை இப்படி முன்வைத்தனர்.

சட்டத்துறை மாணவன்,பாலேந்திரா சூர்யா (மூன்றாம் வருடம்.)

Suriya jaffna
பாலேந்திரா சூர்யா

“அரசும் அதன் அங்கங்களும் எப்போதும் பொது மக்கள் நலன் கருதி செயற்படவேண்டும். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நீதி கோரும் போது உணர்ச்சிவசப்பட்டுவெறுமனே குற்றவாளிகளை தண்டிப்பதற்கு மும்முரம் காட்டாமல் , பிள்ளைகளைஇழந்து தவிக்கும் குடும்பத்துக்கும் இழப்பீடினை செய்தல் வேண்டும்!குற்றத்தினை மூடி மறைக்க முயன்ற் அதே வேளை சாட்ச்சியங்களை அழிக்கமுயன்றதன் தொடர்ச்சியாக நடு நிலையான ஏற்புடைய தீர்வு வருவதுநீதித்துறையின் கைகளிலேயே இருப்பது என்பதும் சட்டத்தின் இருப்புக்கும்இது மிகவும் அவசியம் என்பதும் வெளிப்படை”

யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை விரிவுரையாளர் சுப்பிரமணியம் ஜீவசுதன்.

சுப்பிரமணியம் ஜீவசுதன்
சுப்பிரமணியம் ஜீவசுதன்

“பொலிஸ்மா அதிபர் ஒரு கருத்து வெளியிட்டிருந்தார், வடக்கு மக்கள்பொலிஸாரோடு இணைந்து வேலை செய்யவேண்டும் என்று. அந்த இணைவதற்கான அடிப்படைஇங்கே இல்லாமல் போய்விட்டது. அதைவிட மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்த
விடயம் யாதெனில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன கெட்டியாராட்சிவெளியிட்ட கருத்து. அதாவது இந்தச் சம்பவம் தெற்கில் நிகழ்கின்ற சாதாரணசம்பவம் என்று அவர் கூறியிருந்தார். இரண்டு மாணவர்களின் உயிரிழப்பு அவர்களுக்கு சாதாரணமாக த்தெரிகின்றதென்றால் மக்களிடத்தில் ஆளுந்தரப்பு தொடர்பான நல்லெண்ணங்களைஇந்தமாதிரியான விடயங்கள் கட்டியெழுப்பாது.

அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பில் உண்மையான கரிசனையோடு இருக்கின்றதென்பதைஉணர்த்துமுகமாக இவர்கள் தண்டிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குசரியான முறையில், உள ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் மேலே வரத்தக்க உதவிகள் அரசாங்கத் தரப்பிலிருந்து வழங்கப்படவேண்டும். யாருமே இதை அரசியல் நோக்கத்துக்காக
பயன்படுத்தக்கூடாது!”

இதுதொடர்பாக இலங்கை தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட அலுவலரும் யாழ்
பல்கலைக்கழக முன்னாள் மாணவருமாகிய சிந்தாத்தம்பி கிருபாகரன்

IMG_2846
சிந்தாத்தம்பி கிருபாகரன்

“இந்த சம்பவம் மூலம் நல்லாட்சியின் அரசிலும் சிறுபான்மைமக்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற அச்ச நிலை அனைவர் மத்தியிலும்
உருவாகியுள்ளது. சிறுபான்மையினரான எம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் வரை இவ்வாரான சோக நிகழ்வுகள் தொடர்கதையாகவேயுள்ளன.நடைபெற்ற இக் கோரச் சம்பவம் தொடர்பான உண்மை நிலைகள் கண்டறியப்பட
வேண்டும்; பாதிக்கப்பட்ட இரு மாணவர்களின் குடும்பங்களுக்கும் நீதிகிடைக்க வேண்டும், அதுவும் விரைந்து நீதித் நீர்ப்பு வழங்கப்படுவதன் ஊடாகஎதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் அனைத்துமக்களும் சுமுகமாக வாழக்கூடிய வகையில் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும்.”

சட்டத்துறை மாணவர் சங்கம் இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியிட்டஅறிக்கையில், “இலங்கை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படைஉரிமையின்கீழ் எந்தவொரு நிலையிலும் சட்டத்திற்கு உட்படாமல் ஒருவரது
உயிரைப் பறித்து தண்டிக்க முடியாது என்று உறுதிப்படுத்தியுள்ளது.குறித்தசம்பவத்தில் இரண்டு மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதுதெளிவாகின்றது. இந்த நிகழ்வானது மக்கள் தம் உரிமை மற்றும்
பாதுகாப்பின்மேல் வைத்துள்ள நம்பிக்கையில் கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாகவேஅமைந்துள்ளது.” என்று கோடுட்டுக் காட்டியுள்ளது. மக்களின் பாதுகாப்புஉரிமை பறிக்கப்பட்டுள்ளதாக அம் மக்கள் உணர்வார்களாயின் அது நல்லிணக்கத்தை
பாரதூரமாகவே பாதிக்கவல்லது என்பது அறிக்கையில்உணர்த்தப்பட்டுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைகளில் இடைக்கால நீதியும் இழப்பீடும் இரண்டு பொறிமுறைகளாக உள்ளன. அதை நடைமுறைப்படுத்துவதற்காக அலுவலகங்களும் அமைக்கப்பட்டுவருகின்றன. கடந்த கால கசப்புகளுக்கு நீதியும் இழப்பீடும் வழங்கும் பொறிமுறையளினூடாக நல்லிணக்கம் கட்டியெழு;பப்படும் என்ற நம்பிக்கையுடன் செயற்படும் நிலையில் இந்த சம்பவத்தினை அரசு எவ்வாறு கையாளப் போகிறது?