Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கிளிநொச்சியில்
யுத்தத்தினால் மாற்றுத்திறனாளிகளாக 1732 பேர்

வீடுகளில் மலசல கூடம், வீட்டு வாயில் அமைப்பவர்கள்கூட மாற்றுத்திறனாளிகளை கவனத்தில் எடுப்பதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி பற்றி அறியாதவர்களாகவும் நம்மவர்கள் உள்னர்.

25.12.2016  |  
கிளிநொசசி மாவட்டம்
மாற்றுத்திறனாளி.
மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 3013 மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றனர். இதில் யுத்தத்தினால் தமது அவயங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்கள் 1732 பேர் என
மாவட்டச் செயலகத்தின் 2016 ஆம் ஆண்டு புள்ளிவிபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வடமாகாண சபையின் சமூகசேவைகள் அமைச்சின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் கிளிநொச்சி உதயநகரில் அமைந்துள்ளது. இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் ஆறுமுகம் சிவனேசன். இவர் ஒரு காலை இழந்தவர்.

ஆறுமுகம் சிவனேசனுடனான  நேர்காணல்.

மாற்று திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சிவனேசன்
கட்டுமரம் : உங்களின் பதிவின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் எவ்வளவுபேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்?

பதில் : கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 3285 பேர் உள்ளனர். இவர்கள் கால்,கை,கண் என அங்கங்களை இழந்தவர்களாக உள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் யுத்தத்தின் போது பாதிப்புற்றவர்கள். மற்றும் பிறப்பினால் மாற்றுத்திறனாளிகளாக உருவான சிறுதொகையினரும் இதில் உள்ளடக்கம்.

கட்டுமரம் : இவர்களின் இன்றைய நிலை எவ்வாறுள்ளது?

புதில் : எங்களுடைய மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைக்காக நாளாந்தம் போராடுகின்ற ஒரு மிகப்பெரும் துயரம் தான் உள்ளது. பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் மிகவும் மோசமான குடும்ப பொருளாதார நிலைமைக்குள் காணப்படுகின்றனர். அதிலும் குடும்ப பொறுப்புள்ள மாற்றுத்திறனாளிகளின் நிலைமை மிகமிக மோசானது. குடும்பச் செலவு பிள்ளைகளின் கல்விச் செலவு, அவர்களின் மருத்துவச் செலவு என வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது தவிக்கின்றனர். சிலர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுப்பட்டு உறவினர்களால் காப்பாற்றப்பட்டும் உள்ளனர். அண்மையில் கூட முழங்காவில் பிரதேசத்தில் இரண்டும் கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி ஒருவர், மூன்று தடவைகள் தற்கொலைசெய்வதற்கு முயற்சித்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

கட்டுமரம் : மாற்றுத்திறனாளிக்களுக்கு தமது சுய தேவைகளைத் தாமே பூர்த்திசெய்யக் கூடிய வகையில் எவ்வாறான உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன?

பதில் : பெரும்பாலும் நடக்க முடியாதவர்களுக்கு சக்கரநாற்காலி, செயற்கைக்கால், செயற்கைக்கை, வெள்ளைப்பிரம்பு என வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றில் பல பழுந்தடைந்து விட்டன. அதைச் செப்பனிடுவதற்கான பொருளாதார வசதி பலரிடம் இல்லை. ஆனாலும் இவ்வாறு வழங்கப்பட்ட அடிப்படை அனுசரணைகளை மட்டும் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. மாற்றுத்திறனாளிகளை நடமாட வைக்கும் இத்தகைய கருவிகள் இருந்தும் அவர்கள் முடக்கப்பட்டே உள்ளனர். வீட்டில் அவர்களுக்கான மலசலகூட வசதிகளோ, வெளியில் அவர்களுக்கான பாதைகளோ இல்லாத நிலையில் அவர்கள் எப்படி நடமாட முடியும்?

வீடுகளில் மலசல கூடம், வீட்டு வாயில் அமைப்பவர்கள்கூட மாற்றுத்திறனாளிகளை கவனத்தில் எடுப்பதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி பற்றி அறியாதவர்களாகவும் நம்மவர்கள் உள்னர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிக்ளுக்கு பல சந்தர்ப்பங்களில் மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. தனியாக தமது வேவைகளையே செய்ய முடியாதவர்களாக இருப்பதற்னான சூழல்தான் உள்ளது.

அதே நேரம், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் அவர்களின் நலன்கள் தொடர்பில் எவ்விதமான நிரந்தர திட்டங்களும் அரசிடமோ, அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களிடமோ இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அப்பப்போ கிடைக்கும் உதவிகள் குறுகிய காலத்திற்கானவையாக உள்ளன.


 யுத்தத்தினால் தமது அவயங்களை  இழந்து மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்கள் 1732 பேரும், பிறப்பினால் 605 பேரும், நோய்காரணமாக 509 பேரும், விபத்தினால் 167 பேரும்,என மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக் கட்டடங்கள்,திணைக்களங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் தாமாகவே சென்று தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு வழி அமைக்கப்பட்டவில்லை. சாதாரண மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறே வழிகள் காணப்படுகிறன. குறிப்பாக கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான பேரூந்து தரிப்பு நிலையங்களில் சக்கர நற்காலியே வாழ்க்கை என்று இருக்கின்ற ஒரு மாற்றுத்திறனாளி மழைக்கோ,வெயிலுக்கோ சென்று ஒதுங்க முடியாத படியே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக அமைக்கின்ற கட்டடங்களிலும் இந்த நிலைமையே தொடர்கிறது. இனிவரும் புதிய கட்டிடங்களிலாவது இது கவனத்தில் எடுக்கப்பட்டவேண்டும். சட்டத்தில் இருந்தும் பிரயோசனம் இல்லை.

மாற்றுத்திறனாளிகளில் சிலர் .
மாற்றுத்திறனாளிகளில் சிலர் .
கட்டுமரம் : மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவியாக மாதாந்தம் மூவாயிரம் ரூபா வழங்கும் திட்டம் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்த மாவட்டத்தில் 3000க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில் 483 பேருக்கே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இந்த மூவாயிரம் கொடுப்பனவு வட மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்களும் மாவட்டங்களுக்கான ஒதுக்கீட்டின் அளவிற்கேற்பவே வழங்குகின்றனர். இந்தக் கொடுப்பனவை மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வழங்கினால் அவர்கள் வாழ்வில் ஓரளவு நிம்மதி இருக்கும். குடும்பத்தில்,சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

கட்டுமரம் : மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை வளமாக்க என்ன செய்யவேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?

பதில்: நான் மேற்சொன்னவாறு மாற்றுத்திறனாளிகளின் நடமாட்டத்தை இலகுபடுத்தும் வழிவகைகளைப் பொது இடங்களில் ஏற்படுத்த வேண்டும். அடுத்து, மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பிறரிடம் கையேந்தி வாழ்வதைiயோ, தங்கி வாழ்வதனையோ விரும்பவில்லை நாங்கள் எங்களால் முடிந்த தொழிலை மேற்கொள்ள விரும்புகின்றோம் அதற்கேற்றவாறு தொழில் துறைகளை ஆரம்பிக்கலாம். குறிப்பாக வன்னியில் சில இடங்களில் பெரியளவில் பண்ணைகள், உதாரணமாக மாட்டுப் பண்ணை அமைத்து அதில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கு தொழில் வழங்கி வருகின்றார்கள். இதன்மூலம் அந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் ஒரளவுக்கேனும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றனர்.
புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் அப்பப்போ பண உதவிகளை தனித்தனியாக ஆற்றிவருகின்றனர். அது ஓரளவிற்கு வரவேற்கத்தக்கதுதான்.ஆனாலும் அவ்வாறு உதிரி உதிரியாக இல்லாது பெரிய திட்டங்களை ஏற்படுத்தித்தருவதற்கு அவர்களால் உதவமுடியும்.


குறிப்பாக வன்னியில்  மாட்டுப் பண்ணை அமைத்து அதில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கு தொழில் வழங்கி வருகின்றார்கள்.

இதனை தவிர முற்றிலும் இயங்க முடியாது ஆதாவது இடுப்புக் கீழ் இயங்க முடியாத மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அவர்களின் குடும்பத்தில் உள்ள அந்த மாற்றுத்திறனாளியை பராமரிக்கின்ற ஒருவருக்கு தொழில் வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கட்டுமரம் : மாற்றுத்திறனாளிகள் பற்றி ஏனைய பொதுமக்களின் பார்வை எவ்வாறுள்ளது?

பதில் : மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் எம் சமூகத்தின் மனநிலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே செல்கிறது. சமூகம் எங்களை அந்நியப்படுத்துகிறது.2009 இற்கு முன் அப்பப்போ ஏற்பட்ட மோதல்களினால் உருவான மாற்றுத்திறனாளிகளை கௌரவமாக பார்த்த, அழைத்த அதே சமூகம் தற்போது நொண்டி, குருடு, சொத்தி என அழைக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. எம்மிடமான பொருளாதார பலம் இல்லாமையும் இதற்கு ஒரு காரணம்.

மாற்றுத்திறனாளி ஒருவர்.

ஒரு மாற்றுத்திறனாளி வெளியில் வருகின்ற போது வீதியில் செல்கின்றவர்கள் தாங்களாகவே மாற்றுத்திறனாளிகளிடம் சென்று உதவுவதும், தங்களின் வாகனங்களில் ஏற்றிச்செல்வதும் கடந்த காலத்தில் காணப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்த மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களை ஏன் என்று கூட திரும்பி பார்க்கின்றார்கள் இல்லை. குறிப்பாக அரச அலுவலகங்களில், அல்லது வங்கிகளில், என அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எங்களின் தேவைகள் தொடர்பில் சென்றால் அங்கு மக்களுடன் நாங்களும் வரிசையில் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய மிகவும் வேதனையான சூழல்தான் நிலவுகிறது. முக்கியமாக ஒரு கால் இழந்தவர் சாதாரண ஒருவர் போன்று எவ்வளவு நேரத்திற்கு அவரால் வரிசையில் நிற்கமுடியும்? இதனை பல இடங்களில் மக்களும் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை, அலுவலர்களும் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை.
இதனைதவிர பெரும்பாலன மாற்றுத்திறனாளிகளை அவர்களது குடும்பங்களும் ஓரம் கட்டுகின்ற நிலைமையும் உள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகளின் இயலாமை குடும்பங்களுக்கு பாரம் என அவர்களை எண்ணவைக்கிறது. இதற்காகவேனும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் அவர்களை இயங்கவைக்கும் வழிவகைகளை செய்வதற்கு சகலரும் உதவவேண்டும். போர் முடிந்தும் இந்தனை வருடம் கழித்தும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை சரியாக கவனத்தில் எடுக்கப்படவி;ல்லை என்பது வேதனனையாக உள்ளது. இன்று சிறுவர்களாக இருந்து வளர்ந்துவரும் மாற்றுத்திறனாளிச் சிறுவர்களுக்காவது ஒரு எதிர்காலத்தை நாம் நம்பிக்கையுடன் அமைத்துக்கொடுக் வேண்டும்.


மாற்றுத்திறனாளிகள் – 2016

ஒருகாலை இழந்தவர்கள்
519
இரண்டுகால்களையும் இழந்தவர்கள்
69
ஒரு கையை இழந்தவர்கள்
238
இரண்டு கைகளையும் இழந்தவர்கள்
47
ஒரு கண்ணை இழந்தவர்கள்
349
இரண்டு கண்களையும் இழந்தவர்கள்.
46
ஏனையவகை
1745
 தகவல்கிளிநொச்சி மாவட்ட செயலகம்