Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மத இன ஒற்றுமை....
தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் பாரிய பங்கு உண்டு.

“என்னதான் இஸ்லாமிய நண்பி எனக்கு இருந்தாலும், அவர்களது வீட்டில் சாப்பிடுவது எனக்கு கொஞ்சம் கஸ்ரமாகவே இருக்கும். காரணம்…..

19.02.2017  |  
புத்தளம் மாவட்டம்
இந்துக் கோயிலில்பௌத்த மக்கள்
தமிழ் + சிங்களம்

“சிங்களம் கற்றுத் தேறிய நான், கடந்த 40 வருடங்களாக ஆசிரியையாக பணியாற்றி வருகின்றேன். எனக்கு நன்றாகத் தமிழ் கதைக்க முடியும். ஓராளவிற்கு வாசிப்பேன். ஆனால்; எழுதத் தெரியாது.” என்கிறார் சிலாபம் கார்மேல் மகளிர் பாடசாலையில் தரம் ஐந்து மாணவர்களுக்கு கற்பிக்கும் எம்.ஆர்.எப்.ஸீனியா. இவர் ஒரு இஸ்லாமியர்.
இவரது குடும்பத்தில் 6பேர். அதில் மூவர் தமிழ் மொழிமூலக் கல்வியையும் இருவர் சிங்கள மொழிமூலக் கல்வியையும் கற்றுள்ளனர். இதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, “எனது தாய் தந்தையர் தமிழ் தொழிமூலம் படித்தவர்கள். அவர்கள் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் சிங்கள மொழியில் தொடர்புகொண்டு வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது. ஓரு படிவத்தை நிரப்புவதென்றாலும் சிங்கள மொழி தேவைப்பட்டது. இதனால் வேறு நபர்களின் உதவியை நாடினர். சிலவேளைகளில் அது நம்பிக்கையானதாக இருந்ததில்லை. அதனால் பிள்ளைகளாகிய எங்களை இரண்டுமொழிகளும் தெரிந்திருக்கும் வண்ணம் வழிப்படுத்தினர்.” என்கிறார் எம்.ஆர்.எப்.ஸீனியா. அவர் தற்போது தனது இரண்டுபிள்ளைகளையும் தமிழ்மொழிமூலம் கற்பித்திருக்கிறார். அதற்க அவர் கூறும் காரணம், “ஒரு குடும்பத்தினுள் பன்மொழிப்  புலமை கொண்டவர்கள் இருப்பது எமக்கு மிகுந்த பலம் எனக் கருதுகிறோம்.”

இந்து + பௌத்தம்

“ பதினைந்து வருடங்களுக்கு முன்னர், நான் பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களப் பெண்ணை காதலித்து மணம் முடித்தேன். இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. கையில் காசும் இல்லை. மிகவும் கஸ்ரப்பட்டு நண்பர்கள் சிலரின் உதவியுடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம். இப்போது எனக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் சிங்கள மொழிமூல பாடசாலையில் கல்வி பயில்கின்றர்.” என்கிறார் இந்துமதத்தைச் சார்ந்த தமிழர் கதிரவேலு சந்திரபோஸ்.
வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த இருவர் சேர்ந்து வாழ்கின்றபோது ஏற்படும் அடிப்படைப் பிரச்சினைகளான சாப்பாடு, மதம், மொழி என்பவற்றை எப்படி சமாளித்தீர்கள் எனக் கேட்டபோது,
“ எனக்கு ஓரளவு சிங்களம் தெரியும். இப்போது மனைவியும் கொஞ்சம் தமிழ் கதைக்கிறா. தமிழ் முறைப்படியான உணவுகளை எனக்கு பிடித்தாற்போல் செய்து தருவார். இருவரும் போயா தினங்களில் விகாரைக்குச் செல்வதுடன், செவ்வாய் வெள்ளி நாட்களில் கோயிலுக்கும் சென்றுவருவோம். இப்போது இரு வீட்டாரும் கூட எங்கள் வீட்டுக்கு வந்து செல்கின்றனர்.” என்கிறார் மிகவும் சந்தோசமாக.

பௌத்தம் + கிறிஸ்தவம்

“நான் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவன்.என்னுடைய அயலவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள். சுமார் பதினைந்து ஆண்டுகாலமாக பழகி வருகின்றோம். இங்கு கிறிஸ்தவ ஆலங்களில் விழாக்கள் வெகு விமர்சையாக நடக்கும். அதற்கு நாங்களும் போவோம். வெசாக் காலங்களில் அவர்களும் எம்முடன் இணைந்து ‘தன்சல்’ நடத்துவர். மதபேதம் எங்கள் நட்புகளை பிரிப்பதில்லை.” என்கிறார் தனியார் நிதி முகாமைத்துவ நிறுவனம் ஒன்றில் நிதி முகாமைத்துவ அதிகாரியாக பணியாற்றும் ஹேரத் முத்துவன்ச நதீஸா தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் வாழ்வது சிலாபத்தில்.

இந்ததுக்கோயில்

சிலாபம், வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. மீன்பிடியை பிரதான தொழிலாகக் கொண்ட நகர்களில் சிலாபமும் முக்கியமனதாகும். இங்கு பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பல் மதத்தவர்களும் வாழ்கின்றனர்.
பிரசித்தி பெற்ற இந்ததுக்கோயிலான முன்னேஸ்வரம் சிவன் கோவிலும் அமைந்திருப்பது இங்கேதான். இந்துக்கள் மட்டுமல்லாமல் பௌத்தர்களும் பெருமளவில் இக்கோயிலுக்கு வந்துபோவர். பொதுவாகவே இந்துக் கோயில்களில் கடவுளை இந்த இந்த பழங்கள் இந்த இந்த பூக்கள் கொண்டுதான் வழிபடவேண்டும் என்பது மரபு. ஆனால் இக் கோயிலில், கடதாசிப்பூக்களும் விலக்கப்பட்ட பழங்களும் பூசைத்தட்டுகளில் இருக்கும். அதை இக்கோயிலும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது பற்றிக் கேட்டபோது,
அக்கோயிலின் உப அர்ச்சகரான சு. வெங்கட் கிருஷ்ணஐயர் இவ்வாறு கூறுகிறார்.
“இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தவர்கள் வந்து வழிபடும் ஒரு தலமாக இத்தலம் விளங்குகின்றது. கோயிலுக்கு உகந்த பூஜைப் பொருட்கள் அல்லாத பொருட்களை சுவாமிக்கு நைவேத்தியமாக கொண்டுவருகிறார்கள்தான். ஆனால் நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். காரணம், இக்கோயிலுக்குள் மாமிசம், மது தவிர்ந்த மற்றைய எப்பொருளாயினும் பக்தியுடன் இறைவனுக்கு படைக்கப்படுமானால் அதனை அவர்கள் இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணத்தினால் என நாம் நம்புகிறோம். பக்தர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதனால், நாம் ஏற்றுக்கொள்கிறோம். எந்த மதத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பக்தர்கள் என்ற வகையில் அவர்களது நம்பிக்கையை வளர்க்கவே நாம் விரும்புகிறோம்.” என்றார்.
இங்கு வருடம் தோறும் 28நாள் நடக்கும் திருவிழா காலங்களில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்தும் மக்கள் வருவர். அக்காலங்களில் அதிகளவிலான மக்களால் சிலாபம் நிரம்பியிருக்கும்.


சிலாபமானது, இனரீதியாக சிங்கள மக்களை அதிகளவில் கொண்டிருந்தாலும், தமிழர்களையும் ,சிங்களவர்களையும், பறங்கியர்களையும் கொண்ட கிறிஸ்தவ மத மக்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.

சிலாபமானது, இனரீதியாக சிங்கள மக்களை அதிகளவில் கொண்டிருந்தாலும், தமிழர்களையும் ,சிங்களவர்களையும், பறங்கியர்களையும் கொண்ட கிறிஸ்தவ மத மக்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. இங்கு கிறிஸ்தவ தேவாலயங்களும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. ஓவ்வொரு தேவாலயத்திலும் திருவிழாக்கள் நடைபெறும் போது அனைத்து மத மக்களும் கலந்துகொள்கின்றனர்.

சகிப்புத்தன்மை
வண.பிதா.ஜே.லின்டன் நிஹால் பேடோ.

“நான் 20வருடங்களாக இங்க கடை நடத்தி வருகிறேன். இந்துக் கோயிலில விசேசமெண்டாலும் சரி, கிறிஸ்தவ தேவாலய விசேசம் என்றாலும் சரி, பௌத்தர்களின் வெசாக் கால ‘தன்சல்’ எண்டாலும் சரி, இஸ்லாமியரின் நோன்பு காலமெண்டாலும் சரி அதுக்கேற்ற மாதிரி கடைகளில் பொருட்களை விப்பன். எல்லோரும் கடைக்கு வருவார்கள். சும்மா ஒரு பேச்சுக்குக் கூட யாரும் யாரையும் சலித்துக் கொண்டதேயில்லை. மத சகிப்புத்தன்மை சிலாப மக்களிடையே அதிகமாகவே உள்ளது.” என்கிறார் நவரத்தினம் கார்த்திகேசு.
“என்னதான் இஸ்லாமிய நண்பி எனக்கு இருந்தாலும், அவர்களது வீட்டில் சாப்பிடுவது எனக்கு கொஞ்சம் கஸ்ரமாகவே இருக்கும். காரணம் அவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுவார்கள். நான் ஒரு இந்து, அதை நினைத்துபார்ப்பது கூட எனக்கு பாவமாக இருக்கும். ஆனாலும் நான் நல்ல நண்பியை இழக்கத் தயாரில்லை. அவள் சாப்பிட்டால் நான் சகித்துக் கொள்வேன். அவளும் என்னை கட்டாயப்படுத்த மாட்டாள். “ என்கிறர் இந்திராணி கார்த்திகேசு.
இதையேதான் அவளது தோழி சித்திக் நசீமாவும் சொல்கிறாள். “இந்திராணி நல்ல நண்பியாக இருந்தாலும், அவர்கள் வீட்டில் கோழிக்கறி சாப்பிடுறதெண்டால் கஸ்ரம். அது ஹலால் ஆக இருக்குமோ தெரியாது. சாப்பிட மனம் விரும்பாது. அவளும் கட்டாயப்படுத்த மாட்டாள்”
இவ்வாறு சின்ன சின்ன விட்டுக்கொடுப்புகள் சகிப்புத்தன்மைகள் இந்த நகரை அமைதியாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
“இந்த நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களே, அவர்கள் மீன்பிடியிலும், பௌத்தர்கள் விவசாயத்தை மையமாகக் கொண்டு தங்களது தொழிற்பாடுகளை மேற்கொள்ளுகின்றனர். இருவரும் தங்கள் வாழ்வினில் தன்னிறைவினை அடைவதற்கு ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். முஸ்லிங்கள் வர்த்தக நோக்கத்துக்காக இங்குவந்து குடியேறியவர்கள். அவர்களும் இங்குள்ள இருவருக்கும் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் இங்குள்ள அனேகர் தமிழையும் சிங்களத்தையும் பேசக் கற்றுள்ளனர்.” என்கிறார் சிலாபம் பெரிய தேவாலய பாதிரியார் வண.பிதா.ஜே.லின்டன் நிஹால் பேடோ.

அரச அதிகாரம்

இவ்வாறு இந்த மத நல்லுறவுக்கு இந்த மக்களின் சகிப்புத்தன்மையும் மத புரிந்துணர்வும் மட்டுமல்ல காரணம், அரச அதிகாரமும் சம சந்தப்பத்தை அனைவருக்கும் வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

devisinal secraty
சிலாபம் பிரதேச சபைச் செயலாளர் டி. எம் ஏ.கே. திசநாயக்க.

“பண்டிகைக் காலங்களில் எல்லா மதத்தவர்களும் ஈடுபடும் வகையிலான செயற்றிட்டங்களை மேற்கொள்கிறோம். பௌத்த மதத்தவர்களுக்கான வெசாக் காலங்களில் நகர அலங்காரச் செயற்பாடுகளில் மற்றைய மதத்தவர்களையும் ஈடுபடுத்தல், தானம்(தன்சல்) நிகழ்வில் அனைவரும் பாகுபாடு இன்றி கலந்துகொள்ளச்செய்தல், அதேபோல் இஸ்லாமியரின் ரம்ழான் பண்டிகைக் காலங்களில் இங்கு காணப்படுகின்ற அரச அலுவலகங்களில் ஒருநாள் நோன்பு திறக்கும் வைபவத்தினை ஒழுங்கு செய்வதுடன் இந்த ஒழுங்கு செய்யும் நடவடிக்கையில் பிற மதத்தவரையும் ஈடுபடுத்தல், இந்துக்களின் முன்னேஸ்வரம் திருவிழாக்காலங்களிலும் , கிறிஸ்தவ தேவாலய திருவிழாக் காலங்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் பக்தர்களுக்கான செயற்பாடுகளை ஒழுங்கான முறையில் பார்ப்பதுடன், இவ்விழா தொடர்பிலான அறிவித்தல்களை மக்கள் மத்தியில் வழங்குதல் பண்டிகைக்காலங்களில் உற்சவங்களுக்கான போக்குவரத்து சேவைகளுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையிலான முன்னெடுத்தல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.” என்கிறார் சிலாபம் பிரதேச சபைச் செயலாளர் டி. எம் ஏ.கே. திசநாயக்க.
கோயில் விழாக்களில் காவல் துறையின் பாரியளவிலான ஒத்துழைப்பும் பிரதேச சபையின் ஒத்துழைப்பும் இங்கு மிக அதிகமாகவே உள்ளது.அதுவும் இந்த மத ஒற்றுமைக்கு முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.
என்னதான் ஒவ்வொரு தனிமனிதனும் ஒற்றுமை பற்றி சிந்தித்தாலும் அவர்களை ஒன்றிணைக்கும் அரச இயந்திரம் புரிந்துணர்வுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இரண்டும் சம அளவில் செயற்படுகின்றபோதுதான் சமூக ஒற்றுமை சாத்தியம்.

இனம்

சிங்களம்        58,988
தமிழ்               5,277
முஸ்லீம்           6,232
பறங்கியர்           101
மற்றைய இனத்தவர்கள்    120

 

 

மதம்

கிறிஸ்தவர்கள்        33,089
பௌத்தர்கள்         25,949
இஸ்லாமியர்           5,812
இந்துக்கள்            4,866
மதத்தவர்கள்           1,002

(மூலம் : சிலாபம் பிரதேச சபை)