Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வடக்கில்….
அபிவிருத்திகளால் மக்கள் திருப்திகரமாக பயனடையவில்லை

வடக்கில் இருந்து அகதிகளாக மேற்கு நாடுகளில் குடிபெயர்ந்துள்ளவர்கள் மூலம் கிடைக்கின்ற வருமானம் வடக்கில் உள்ள தனிநபர் வருமானத்தினை உயர்த்துகின்றது.

12.03.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
பொருளாதார ஆய்வாளர் கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன்.
 

போரின் பின்பான வடக்கு  மாகாண அபிவிருத்தியில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கேற்றால் போல் கொள்கைகளும் செயற்பாடுகளும் துரதிஸ்டவசமாக அமையவில்லை என்கிறார்    ‘அபிவிருத்திக்கான பருத்துறை ஆய்வகத்தை ‘நடத்திவரும் (http://www.pointpedro.org/index.php?option=com_content&task=view&id=32&Itemid=59) பொருளாதார ஆய்வாளர் கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன்.
வடக்கு  மாகாண அபிவிருத்தியின் பரிமாணங்கள் தொடர்பில்த கட்டுமரன்இணையத்தளத்திற்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார். இப்பேட்டியில் அவர் கடந்த தற்போதைய முதலீடுகள்,  பற்றியும் கருத்தரைத்தார்.
அவருடனான பேட்டி வருமாறு….

த கட்டுமரன் : போருக்குப் பின் நாடு 8 ஆண்டுகளைக் கடக்கின்றது. அரசின் புள்ளி விபரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடக்கே உயர்வாக இருப்பதாகக் கூறுகின்றது. ஆனால் அங்கு அந்தளவிறகு மக்களின் வாழ்க்கைநிலை உயர்ந்துள்ளதா?

2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் வெளியாகியுள்ள (2014 ஆம் ஆண்டு வரையிலான) பொருளாதார புள்ளிவிபரங்களின்படி, போருக்குப் பின் இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களைவிட மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற அடிப்படையில் வடக்கு மாகாணமே அதிகூடிய பொருளாதார அபிவிருத்தியை எய்திவந்திருக்கின்றது. என்று கூற முடிகின்றது. இது, போருக்குப் பின் மீள்குடியேற்றங்கள் நிகழ்ந்தபோது, மக்கள் தொழில் முயற்சிகளை ஆரம்பித்தமை போன்ற இதர காரணிகளால் ஏற்பட்ட மாற்றம் ஆகும். எது எப்படியிருந்தபோதிலும், இலங்கையின் தேசிய பொருளாதாரம் என்று வருகையில் அதற்கு அதிகுறைந்த பங்களிப்பினையே வடக்கு மாகாணம் (3.5 வீதம்) வழங்கி வருகின்றது.
வடக்கு மாகாணம் மெத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்னிலையில் இருப்பதாக கூறும்போது, இவ் அளவீட்டுக்குள்ளேயே இந்த மாகாணத்திலுள்ள இராணுவ செலவீனங்கள் மற்றும் அரசாங்க நிர்வாக செலவீனங்களும் உள்ளடங்குகின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. எனவே வடக்கு மாகாணம் அபிவிருத்தியைக் கண்டிருந்தாலும் இதனால் சாதாரண பிரஜைகளுக்குச் சென்றடையக்கூடிய பிரதிபலன்கள் குறைவாகவே இருந்துவருகின்றன. இதேவேளை, மாகாண மொத்த உற்பத்தியை வைத்துக்கொண்டு வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை நாம் நேரடியாகக் கணக்கிடவும் முடியாது.

கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன்.
கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன்.

மாகாண மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் என்று நோக்குகையில், மாகாணத்திற்கென எவ்வளவு முதலீடுகள் கிடைக்கப்பெற்றன? மக்களின் தொழில் முன்னேற்றங்கள் எவ்வாறுள்ளன என்ற புள்ளிவிபரங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில், போர் நடைபெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்குக் பெருவாரியாகத் தொழில்கள் கிடைக்கப்பெற்றதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கவில்லை. இது ஏனெனில், கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தியது. பாதைகள் அமைத்தல,; மின்சார வசதிகளை ஏற்படுத்துதல், போரில் சேதமடைந்த அழிந்த கட்டிடங்களை அமைத்தல், ரயில் பாதைகளை அமைத்தல் என உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றன. இந் நிர்மாணப்பணிகளில்கூட ஈடுபட்ட கம்பனிகள் மேல்மாகாணத்தினைச் சேர்ந்த கம்பனிகளாகவே காணப்பட்டன. அல்லது சீனா போன்ற உதவி வழங்கும் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களாகவும் கணப்பட்டன. எனவே இந் நிலைமை உள்ளுர் மக்களின் வாழ்வாதாரத்தினை தொழில் ரீதியில் மேம்படுத்த வல்லவையாகக் காணப்படவில்லை.
த கட்டுமரன்: நடைபெற்ற உட்கட்டுமான அபிவிருத்திகளில் உள்ளுர் மனித வளம் உள்வாங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். மேதல்களுக்குப் பின்னர் இலட்சக்கணக்கான மக்கள் தொழில் இன்றி காத்திருந்தனர். ஆயிரக்கணக்கான விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் போன்றவர்கள் தொழில் தேடுவோராக அலைந்தனர். இந் நிலையில் இந்த மனித வளத்தை அரசு அபிவிருத்தியில் ஈடுபடுத்தாமைக்கு என்ன காரணங்கள் இருத்கமுடியும்?
நடைபெற்ற உட்கட்டுமான அபிவிருத்தியில் பணிகளை மேற்கொள்ளத்தக்க தொழில்திறனான ஊழியர்களை உள்ளுரில் பெறுவதிலும் சிக்கல்கள் இருந்துள்ளன. இதனால் மேல்மாகாணம் போன்றவற்றில் இருந்து ஊழியர்களை வடக்கில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர். மேலும், ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திகளை விரைவாகச் செய்து முடிக்கவேண்டும் என்ற கால அவகாசத்தில் இந்த வேலைகளை பொறுப்பெடுத்த கம்பனிகள் இயந்திர சாதனங்களை உச்ச அளவில் ஈடுபடுத்தியே செயற்பட்டன. இதனால் உள்ளுர் மனித வளம் உரிய வகையில் உள்வாங்கிக்கொள்ளப்படவில்லை. அதே நேரம் இப் போக்குகள் உள்ளுர் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கங்களையும் கொண்டிருக்கவில்லை.
போருக்குப் பின்பாக இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்களாக பல மனித உரிமை ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன. இந் நிலையில், வெகு விரைவில் ஒரு பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி உலகத்திற்கு ஒரு பிரமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே கடந்த அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. அபிவிருத்திகளின் போது பாதிக்கப்பட்ட உள்ளுர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்றோ, உள்ளுர் பணப்புழக்கத்தினை அதிகரிக்க வேண்மென்றோ அரசாங்கம் எண்ணவில்லை. இத் தேவை அரசாங்கத்திற்கு இருக்கவும் இல்லை. மாறாக எவ்வளவுக்கு விரைவாக ஆரம்பிக்கப்பட்ட பாரிய உட்கட்டுமான அபிவிருத்திகளை நிறைவேற்றி அதன் வாயிலாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என உலகத்திற்குக் காட்டுவதே அரசாங்கத்தின் தேவையாக இருந்தது. எனவே அவர்களுக்கிருந்த இத்தேவையினை பூர்த்திசெய்யக்கூடிய நிறுவனங்களிடமே வேலைகளை அவர்கள் கையளித்தார்கள்.
உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கம்போடியா போன்ற வேறு நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கு அபிவிருத்தியில் இயந்திர சாதனங்களைக் காட்டிலும் மனித வளங்களைக் கொண்டே அபிவிருத்தியை மேற்கொண்டு வந்தார்கள். இது உள்ளுர் தொழில் வாய்ப்புக்களை கவனத்தில் கொண்டே ஆகும். இவ் அபிவிருத்தி பணிகள் சற்றுக் காலதாமதமானாலும் கூட உள்ளுரவருக்கான தொழில் வாய்ப்புக்களை அந் நாடுகளில் அதிகரித்தன. இலங்கையில் ஐ.நா. சபை கூட அபிவிருத்தியில் மனித வளத்தினை பயன்படுத்துவதற்கான அவசியத்தினை எதிர்பார்க்கவில்லை. ஆகவே கடந்த அரசாங்கம் நினைத்தவாறு திட்டங்கள் வகுக்கப்பட்டன.

த கட்டுமரன் : யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் உட்கட்டுமான அபிவிருத்தியில் மாத்திரமே கவனம் செலுத்தியது. இவ் உட்கட்டுமான அபிவிருத்தினைப் பயன்படுத்தி மக்கள் தமது தொழில் முயற்சிகளை முன்னெடுக்கத்தக்கதாக எதாவது திட்டங்களை அல்லது இழப்பீட்டினை முன்வைத்ததா?

போர் முடிந்த பின்னர், அதில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றாவது நஷ்ட ஈடு வழங்கும் வழக்கம் ஒன்றுள்ளது. அது இலங்கையில் நடைபெறவில்லை. நேபாளம் மற்றும் தற்போது கொலம்பியா போன்ற நாடுகள் இவ்வாறு மேற்கொண்டமையினை நாம் கவனத்தில் கொள்ள முடியும். இது போன்று இலங்கையில் குறிப்பிடத்தக்களவு எதுவும் நடைபெறவில்லை. போரினால் சகலதையும் இழந்த மக்கள் தங்களின் முயற்சிகளால்தான் மீளவேண்டிய நிலைமை காணப்பட்டது.
யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்பிய வேறு நாடுகளில், முன்னாள் போராளிகளுக்கு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. எனினும் இங்கு அவ்வாறு நடைபெறவில்லை. இலங்கையில், 12 ஆயிரம் வரையில் போராளிகள் சரணடைந்ததாகவும் அதில் 11 ஆயிரம் பேருக்கு மேல் வீடுவிக்கப்பட்டதாகவும் அரசு கூறுகின்றது. எனினும் இம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் பின் இலகு கடன்களை வழங்குகின்ற திட்டத்தினையே அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. இத் திட்டம் வெற்றியளிக்கவில்லை.

த கட்டுமரன்: போருக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் செயற்பாடுகளில் சிக்கல்கள் நிலவுகின்றன. இந் நிலையில் வடக்கில் உள்ள மக்களின் தனிநபர் வருமானம் எவ்வாறான வழிமுறைகளுக்குள்ளாக பயணிப்பதாக அவதானிக்கின்றீர்கள்?

முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கத்தினை மாத்திரம் குற்றம் சுமத்தவும் முடியாதுள்ளது. உள்ளூர் தனியார் நிறுவனங்கள் கூட முன்னாள் போராளிகளை வேலைக்கு அமர்த்துவதில் ஏதோ தயக்கம் காட்டியே வந்திருக்கின்றார்கள். இது பாதுகாப்புக் கெடுபிடிகளின் காரணமாக இருந்திருக்கலாம். குறிப்பாக முன்னாள் போராளிகள் அரசாங்க வேலைகளில் அதாவது நிர்வாக சேவைகளில் அதிகளவில் உள்வாங்கப்படவில்லை. சில குறிப்பிட்ட எண்ணிக்கையினர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.

சாதாரண பொதுமக்களைப் பொறுத்தளவில் ஆசிரியப் பணி மற்றும் சுகாதார சேவைகளில் சில எண்ணிக்கையானோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பார்க்கும் போது உள்ளுர் தொழில் வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்து வருகின்றது.
தனிநபர் வருமானத்தினை எடுத்துக்கொண்டாலும் வடக்கு மாகாண பொருளாதாரம் ஆறாவது ஏழாவது நிலையில் தான் காணப்படுகின்றது. இதை விட குறைவான வருமானம் உள்ள மாகாணங்களும் உள்ளன. எனினும் வடக்கு மாகாணம் அதி பின்தள்ளப்படாமைக்கு புலம்பெயர்ந்தவர்களின் பிரத்தியேக உதவிகள் காரணமாக உள்ளன. வடக்கில் இருந்து அகதிகளாக மேற்கு நாடுகளில் குடிபெயர்ந்துள்ளவர்கள் மூலம் கிடைக்கின்ற வருமானம் வடக்கில் உள்ள தனிநபர் வருமானத்தினை உயர்த்துகின்றது. இவ்வாறு கிடைக்கின்ற புலம்பெயர் உதவிகளும் வடக்கில் உள்ள மக்களின் தேவைகளுடன் ஒப்பிடும் போது குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. இவ் உதவிகள் மூலம் சகலவற்றினையும் நிறைவேற்றிவிட முடியாது.

த கட்டுமரன்: போருக்குப் பின்பு விவசாய மற்றும் மீன்பிடி தொழில் முயற்சிகளில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

போருக்குப் பின்னர் வடக்கில் மீன்பிடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. அதுபோல பிடிக்கப்படும் மீன்களின் அளவும் அதிகரித்திருக்கின்றது. இருந்தாலும்1981 ஆம் ஆண்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது போருக்குப் பின்னரான வடக்கின் எந்தவொரு மாவட்ட மீன்பிடி உற்பத்திகளும் அதிகரிக்கவில்லை என்றே கூறவேண்டும்.
போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வடக்குக் கிழக்கில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கூடிய சந்தை வாய்ப்புக்கிட்டுகின்றது. அங்கு பிடிக்கப்படும் மீன்களை மாகாணங்களுக்கு வெளியில் சந்தைப்படுத்தக் கூடியதாகவுள்ளது. மேலும், ஏற்றுமதி நிறுவனங்களும் மீன்களை கொள்வனவு செய்வதனால் மீனவர்களுக்கு கூடிய விலை கிட்டுகின்றது. இவ்வாறாக சில சாதகமான முடிவுகள் மீன்பிடித்துறையில் காணப்பட்டாலும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்களால் கடல்தொழிலுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டே வருகின்றன.
விவசாயத்தில் உள்ளுர் உற்பத்திகள் அதிகரித்துள்ள போதும் அவற்றை சந்தைப்படுத்துவதில் சிக்கல்கள் நிலவுகின்றன. வடக்குக்கு வெளியில் இருந்து பெருவாரியான மரக்கறிகள் வடக்கு மாகாணத்தின் சந்தைகளை வந்தடைகின்றன. இதனால் விவசாயிகள் தமது உள்ளுர் உற்பத்திகளுக்கு போதிய சந்தை வாய்ப்புக் கிட்டாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே விவசாயத்திலும் முழு எழுச்சி ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தாலும் போர் நடைபெற்ற காலங்களுடன் ஒப்பிடும் போது படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுத்தான் வருகின்றன என்பதை மறுக்க முடியாது.

த கட்டுமரன்: கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்திக்கொள்ளை சாதகமற்றதாகவுள்ளமையினைச் சுட்டிக்காட்டுகின்றீர்கள். இந் நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நடைமுறையில் உள்ள அரசாங்கத்தின் அபிவிருத்திக்கான கொள்கைகள் எவ்வாறிருக்கின்றன?

துரதிஸ்ட வசமாக ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அவ்வளவு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. முன்னைய ஆட்சியாளர்களிடத்தில் சரியோ பிழையோ பொருளாதார அபிவிருத்தியின் வாயிலாக நிலையான அமைதியை நிலைநாட்டல் அல்லது நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதலே பிரதான தொனிப்பொருளாக இருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசாங்கம் அந்த மந்திரத்தை ஓதாவிட்டாலும் பொருளாதார அபிவிருத்தியை பாரிய அளவில் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சரியே பிழையோ ராஜபக்ச அரசாங்கம்தான் அதி கூடிய பொது நிதியை வன்னி மாவட்டங்களில் முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் பாரியளவில் செய்த வேலைத்திட்டங்கள் மக்களுக்குப் பலாபலன்களைப் பெற்றுக்கொடுக்காவிட்டாலும் ஒதுக்கீடுகள் வந்தடைந்தன.
துரதிஸ்ட வசமாக இந்த அரசாங்கம் அவ்வாறாகப் பொதுப்பணத்தில் பாரிய முதலீடுகளைச் செய்வதாகத் தெரியவில்லை. தேசிய அளவில் விடயங்களை அணுகுவதாகத் தான் இருக்கின்றது. தற்போதைய நிலையை விட போர் நிறுத்த காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிக அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது அதுபோன்று நடைபெறவில்லை.
தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துகின்றது. இதனை பிழையென்றும் கூறிவிடமுடியாது. தூரநோக்குடைய விடயங்களாகக் கூட இவ்விடயங்கள் உள்ளன.