Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் நஸ்பியா அஜித்
எனது படைப்புக்கள் தமிழ், முஸ்லிம் உறவை பலமாக்கும்

“தொண்ணூறுகளுக்கு முன்னம் யாழ்ப்பாணத்தில தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரே குடும்பமாகப் பழகினனாங்கள். இனச்சண்டையோட எல்லாம் மாறிப்போட்டுது. திரும்ப அந்த நிலைமை வரவேணும் என்று இலக்கியம் மூலம் போராடிக்கொண்டிருக்கிறன்” என்கிறார் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் நஸ்மியா அஜித். இவர் யுத்தகாலத்தில் 1990களில் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெயர்ந்து புத்தளத்தில் 25 வருடங்களாக வசித்து வந்தார். யுத்தம் முடிவுற்ற பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறியிருக்கிறார். யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நஸ்மியா அஜித் […]

14.03.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
Interview

“தொண்ணூறுகளுக்கு முன்னம் யாழ்ப்பாணத்தில தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரே குடும்பமாகப் பழகினனாங்கள். இனச்சண்டையோட எல்லாம் மாறிப்போட்டுது. திரும்ப அந்த நிலைமை வரவேணும் என்று இலக்கியம் மூலம் போராடிக்கொண்டிருக்கிறன்” என்கிறார் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் நஸ்மியா அஜித். இவர் யுத்தகாலத்தில் 1990களில் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெயர்ந்து புத்தளத்தில் 25 வருடங்களாக வசித்து வந்தார். யுத்தம் முடிவுற்ற பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறியிருக்கிறார்.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நஸ்மியா அஜித் இனமத ஒற்றுமை, பெண்ணியம், நம்பிக்கை என்பவைகளை தனது எழுத்தின் மூலம் சமூகவெளிகளில் பரப்பிக்கொண்டிருக்கும் ஓர் எழுத்துப் போராளி.
கண்ணீர்ப்பூக்கள், சிதறல்களில் சில துளிகள், அவலங்கள் என மூன்று சிறுநாவல்கள் மூலம் தன்னை இலக்கிய உலகிற்கு அடையாளங்காட்டி சமூக அவலங்களை தன்னுடைய எழுத்துக்களால் பேசிக்கொண்டிருக்கிறார்.
வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கும் ஒரு நண்பகல்நேரம் யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியில் அமைந்திருக்கும் அவரது வீட்டிற்கு கட்டுமரம் இணையத்தளத்திற்காக அவரைச் சந்திக்கச் சென்றேன். மெல்லிய புன்னகையுடன் வரவேற்று தனது எழுத்துப்பயணம் குறித்தும் சமூக அக்கறை குறித்தும் உரையாடத் தொடங்கினார்.

நஸ்மியா அஜித் நீங்கள் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக ஒரு இலக்கியப்படைப்பாளியாக எப்படி உருவானீர்கள்?
என்ர சொந்த இடம் யாழ்ப்பாணம்தான். 1990ம் ஆண்டு நான் க.பொ.சாதாரணதரம் படிச்சுக்கொண்டிருக்கேக்கதான் முஸ்லிம் இடப்பெயர்வு நடந்தது. அப்படியே போய் புத்தளத்தில இருந்தனாங்கள். சின்ன வயசில இருந்தே புத்தகம் வாசிக்கிறது ஏதாவது எழுதுறது நாடகங்கல நடிக்கிறது எல்லாத்திலயும் நிறைய ஆர்வம். படிச்சுக்கொண்டிருக்கேக்க இப்பிடியான விடயங்களில நிறைய ஈடுபட்டனான்.
பிறகு புத்தளத்துக்கு இடம்பெயர்ந்துபோய் அகதிமுகாமிலதான் எங்கட வாழ்க்கை தொடர்ந்தது. இங்க ஒரு நடுத்தரமான குடும்பமா இருந்தனாங்கள் ஆனா புத்தளத்துக்குப் போகும்போது எல்லாத்தையும் இழந்து வெறுங்கையோட போனம். நாங்கள் ஏழு சகோதரர்கள் குடும்பம் மிக வறுமையான நிலையிலதான் இருந்தது. நான் மேற்கொண்டு படிக்கிறதுக்கும் வறுமை காரணமா வீட்டில வேணாமென்று சொல்லிட்டினம்.
ஆனாலும் எனக்கு படிக்கோணும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது. எப்பிடியாவது படிக்கோணும் என்று முடிவுசெய்து அங்க இருந்த ஒரு சவர்க்கார தொழிற்சாலையில பகுதிநேர வேலைக்குச்சேர்ந்து அதில இருந்து வாற காசில படிக்க தொடங்கினன். பள்ளிக்கூடத்துக்கும் வேலைக்கும் போறதால பகுதிநேர வகுப்புகளுக்கெல்லாம்(ரியூசன்) போக ஏலாது ஊரில இருந்தவர்களும் சில நிறுவனங்களும் செய்த உதவிகளில படிச்சுக்கொண்டிருந்தன். பல்கலைக்கழகத்துக்கு இரண்டு புள்ளியால கிடைக்காம போட்டுது. கிடைச்சிருந்தாலும் அதை தொடரந்து படிக்க முடியுமா என்ற பயமும் இருந்தது. அப்பிடியான ஒரு குடும்ப வறுமைச்சூழல்.
அதுக்குப்பிறகு நான் படிச்ச பள்ளிக்கூடத்தில தொண்டர்ஆசிரியரா வேலை கிடைச்சது அதோட நிறுவனம் ஒன்றிலயும் வேலை கிடைச்சது. அதில வேலை செய்யும் போது தான் நான் நிறைய மனிதர்களையும் அவர்களுக்குள்ள பிரச்சனைகளையும் கூடுதலா அறிஞ்சு கொள்ளத் தொடங்கினன். 120 முகாம்களுக்கு மேல நான் நிறுவன கடமை ரீதியா போய் வேலை செய்தனான். அது எனக்கு பெரிய அனுபவத்தைக் கொடுத்தது.
எங்கட குடும்பச்சூழல் அயலவர்கள், இடப்பெயர்வு, அகதிமுகாம் வாழ்க்கை இப்பிடி நிறைய விடங்கள் என்னைப் பாதிச்சது. பொதுவா சமூகத்தில ஏதாவது பிரச்சனையைக் கண்டா அது தொடர்பில கேள்விகேக்கிறது என்ர வழக்கம் நான் அநீதிக்கு எதிரானவள். அதால நிறையப் பிரச்சனைகளையும் சந்திச்சிருக்கிறன்.
அகதிமுகாம் வாழ்க்கை அப்பிடியே எல்லாரையும் மாற்றிப்போட்டுவிட்டது. பொதுக்கிணறு, பொது மலசலகூடம் ஒரு குறுகிய சூழலுக்குள்ள வாழ்க்கை இப்பிடி எல்லாம் மாற்றங்களோடயும் பிரச்சனைகளோடயும்தான் வாழ்ந்தம். அப்பிடியான வாழ்க்கை அதில இருக்கிற வலி, பிரச்சனைகள் எல்லாம் என்னை பாதிச்சது அதை எப்பிடியாவது பேசவேணும் இதுக்குத் தீர்வுகள் காணவேணும் என்று ஒரு அவா ஆனா யாரிட்டச் சொல்லுறது எப்பிடித் தீர்வு காணுறது என்றதெல்லாம் கேள்விக்குறியாத்தான் இருந்தது. இப்பிடியான விடயங்கள் மனசுக்கு இருந்து அழுத்திக்கொண்டிருக்க அதை இறக்கி வைக்க அது பற்றி எழுதத் தொடங்கினன்.
ஆரம்பத்தில இவைகளையெல்லாம் டயறிலதான் சும்மா ஏதோ மனவிடுவிப்புக்காக எழுதிக்கொண்டு வந்தனான். அந்தப் பழக்கம் அப்பிடியே தொடர்ந்து கவிதைகள் நாடகங்கள் இப்பிடி எழுத ஆரம்பிச்சன். இப்பிடி எழுத ஆரம்பிச்ச என்ர எழுத்துப் பயணம் இப்ப மூன்று நாவல்கள் வெளியிட்டதில வந்து நிக்குது. இன்றைக்கு என்னை ஒரு எழுத்தாளரா அடையாளம் காட்டியிருக்கு.

இந்த துறைக்குள் உங்களை அடையாளப்படுத்த கடந்துவந்த சவால்கள் குறித்து சொல்லுங்கள்?
ஓம். நான் இந்தத்துறைக்குள்ள நிறையச்சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததது. என்னுடைய முதல் நாவல் கண்ணீர்ப் பூக்கள். அது நான் கண்ட, கேட்ட, பழகிய மனிதர்களை வைத்து யதார்த்தங்களையும் உண்மைகளையும் பேசின நாவல்.
நான் என்னதான் கதைகளை எழுதினாலும் அதை அச்சுவடிவில கொண்டுவர என்ர குடும்ப பொருளாதாரத்தால சாத்தியமில்லை. அப்ப எனக்குத் தெரிஞ்ச சிலர் சொல்லிச்சினம் நூல்வெளியீட்டுக்கு நிதி உதவி செய்ய எங்கட சமூகத்தில சில தனவந்தர்கள் இருக்கினம் நீங்க அவைகளை அணுகிப்பாருங்க என்று. நானும் நம்பிக்கையோட அவரைத் தொடர்புகொள்ள “நூல் வெளியீடா அதுக்கு நாங்கள் உதவி செய்யிறதில்லை என்று முகத்திலயறைஞ்ச மாதிரி சொல்லிட்டார்” அது எனக்கு மனதளவில பெரிய தாக்கத்தைத் தந்தது. சமூகத்தில ஒரு நல்லவிடயம்தானே செய்யப்போறன் அதை ஏன் இவர்கள் புரிஞ்சுகொள்கிறார்கள் இல்லையென்ற வருத்தம் ஒரு வைராக்கியமா மாறி எப்பிடியாவது இந்த நாவலை வெளியிட்டே ஆகவேணும் என்ற வெறியோட முயற்சி செய்ய ஆரம்பிச்சன். ஆனாலும் தொடர்ந்தும் ஏமாற்றமும் ஏளனமும் வலியும்தான் மிஞ்சியது. நான் மனசுடைஞ்சுபோன நேரம் பிள்ளைகள் எனக்கு ஆறுதலா இருந்து ஊக்கப்படுத்தி கட்டாயம் வெளியிட வேணுமென்று என்னை வற்புறுத்தினார்கள்.
அதுக்குப்பிறகு இந்த நாவலை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சுருக்கி என்னுடைய பொருளாதாரத்தைக் கவனத்தில கொண்டு வெளியிட்டன். இந்த நூல் வெளியீட்டில என்னுடைய ஆசான்கள், நண்பர்கள். இலக்கிய ஆர்வலர்கள் என்று நிறையப்பேர் வந்து ஆதரவு தந்திச்சினம். அது எனக்கு கிடைச்ச முதல் வெற்றி. உழைப்புக்கும் திறமைக்கும் முழுமயான திருப்தி கிடைச்சது. இதைவிட இவா என்ன செய்யிறா என்று விமர்சிக்கவும் வேடிக்கை பார்க்கவும் என்றும் சில கூட்டம் வந்தது. இவைகளுக்கு மத்தியில முட்டிமோதி முளைச்சிருக்கிறன்.(சிரிக்கிறார்) என்னுடைய இந்தப் பணிக்கு கணவர் உதவியும் செய்வதில்லை இடைஞ்சலாவும் இருந்ததில்லை சுதந்திரமா என்னை இயங்க அனுமதிச்சிருக்கிறார். குறிப்பா நான் உடைஞ்சு போற நேரமெல்லாம் என்னை ஆறுதல் படுத்தி என்னை இயங்கவைப்பதில பிள்ளைகளுடைய பங்கு அளப்பரியது. அதோட இப்பிடி ஒரு ஆற்றலைத் தந்ததுக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லவேணும்.

உங்களுடைய படைப்புக்கள் எதுசார்ந்து பேசுகின்றன?
யாழ்ப்பாணத்தில தமிழ் முஸ்லிம் மக்கள் எப்பிடி அன்னியோன்மாக இருந்தார்கள். அவர்களுடைய உறவு எப்பிடி இருந்தது என்பதுபற்றி இன்றைக்கு இருக்கிற தலைமுறைக்குத் தெரியாது. முன்பு இருந்தவர்களில நிறையப்பேர் இறந்துவிட்டார்கள். வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். நாங்கள் மீண்டும் இந்த மண்ணுக்கு வர எங்களை புதியவர்களாகத்தான் இங்க உள்ள இன்றைய தலைமுறை எதிர்கொண்டார்கள.; அப்ப அதை மையப்படுத்தி எங்கட இரு இனத்தினுடைய உறவையும் மையப்படுத்தி முதலாவது நாவலை எழுதினனான். ஆனாலும் அதில முஸ்லிம் தமிழ் மக்களுடைய உறவைப் பற்றி விரிவாக பேசப்படவில்லை. தொண்ணூறுகளுக்கு முன்னம் யாழ்ப்பாணத்தில தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரே குடும்பமாகப் பழகினனாங்கள். இனச்சண்டையோட எல்லாம் மாறிப்போட்டுது. திரும்ப அந்த நிலமை வரவேணும் என்று இலக்கியம் மூலம் போராடிக்கொண்டிருக்கிறன் ஆரம்ப காலத்தில இருந்து இன்றுவரைக்கும் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகள் தொடர்பில ஒரு முழுமயான நாவல் எழுத வேணும். தமிழ் முஸ்லிம் உறவை படைப்பாக்குவதும் பலமாக்குவதும் என்ர ஒரு கனவா இருந்துகொண்டிருக்குது.
ரெண்டாவது நாவலில எங்கட முஸ்லிம் சமூகத்துக்குள்ள உள்ள ஒற்றுமையின்மையையும் மனித நேயத்தையும் அது எதிர்கொள்கிற பிரச்சனைகளையும் சில குடும்ப சூழலை மையப்படுத்தி எழுதியிருந்தன்.
மூன்றாவது அவலங்கள் என்ற நாவலில பெண்களுக்கெதிராக நிகழ்த்தப்படுகிற வன்முறை. அவர்கள் முகங்கொடுக்கிற பிரச்சனை பெண்களுக்குள்ள பொறுப்பு அவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் தடைகளைத்தாண்டி எப்படி முன்னேறவேண்டும் என்றவகையில இந்த நாவலைப் படைச்சனான்.
இப்பிடி கூடுதலாக சமூகத்தில எனக்கிருக்கிற பொறுப்பு, அதுமேல் கொண்டிருக்கிற பற்று, கோபம், வெறுப்பு விருப்பு ஆர்வம் இப்பிடியான எல்லாத்தையும் யதார்த்தமா என்ர கதைகளில கொண்டு வர முயற்சி செய்வன் ஏதாவது ஒருவகையில மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்ற ஒரு பேராசை என்னை திரும்பத் திரும்ப இதில ஈடுபட வைக்குது. நான் இப்பத்தான் ஆரம்பநிலை எழுத்தாளர். இன்னும் கடந்துவர நிறைய இருக்கு கற்றுக்கொள்ள நிறைய இருக்கு. ஆனாலும் என்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சிசெய்து நல்ல படைப்புக்களை சமூகத்துக்கு கொடுப்பன் என்ற நம்பிக்கை இருக்கு.

தமிழ் சமூகத்திடமிருந்து உங்களுக்கு எப்படியான வரவேற்பும் ஒத்தாசையும் கிடைத்தது?
ஓம் அதை கட்டாயம் சொல்லவேணும். உண்மையிலேயே எனனை இந்தத்துறையில முதன்முதல்ல அடையாளம் கண்டு அதைநோக்கி முன்னேற்றிவிட்டது தமிழ் ஆசான்கள்தான். கணபதிப்பிள்ளை ஆசிரியர், புவனேஸ்வரி அம்மா, லலீசன் ஆசிரியர் இப்பிடி பலர் எனக்கு ஒத்துழைப்புத்தந்தவை. அதுமட்டுமன்றி நிறைய தமிழ் வாசகர்கள் என்னுடைய நாவலைப் படிச்சுப்போட்டு தொலைபேசிமூலம் வாழ்த்துக்கள் சொன்னவை. நல்ல வரவேற்பு தந்தவை.

உங்களுடைய நாவல்களில் பல இடங்களில் கவிதைகளும் இடம்பெறுகின்றதே?
கவிதை எழுதுவதில்தான் நிறைய விருப்பம் நிறைய கவிதைகள் எழதி இருக்கிறன். இன்னும் அது தொகுப்பாக வெளிவரேல்ல. கொண்டுவரவேணுமென்ற ஆசை இருக்கு வசதி இல்லை முயற்சி செய்துகொண்டிருக்கிறன்.

யுத்தத்திற்கு பின்னரான இந்த சூழலில் நீங்கள் குறிப்பிடுவது போன்று முன்புபோல அனைவரும் ஒற்றமையுடன் வாழ்தல் என்பது சாத்தியமா?
நிச்சயமாக முடியும். இது புதிதாக ஆரம்பிக்கப்போகிற விடயம் இல்லையே. ஏற்கனவே இரண்டு சமூகங்களும் ஒற்றமையாகத்தானே இருந்தனாங்கள் அது ஏன் இப்ப முடியாது. பிரச்சனைகளை மறந்து விட்டுக்கொடுப்போட எல்லாரும் இருந்தா பழையபடி எங்கட அந்த உறவுமுறை மீண்டும்வரும். எங்கட வாப்பா தையல்கடை வைச்சு நடத்திக்கொண்டிருந்தவர். அதில நிறையப்பேர் வேலை செய்தவ அவையில தமிழாக்களும் இருந்தவை. அவையள் எங்களோட ஒரே குடும்பம் மாதிரித்தான் பழகினவ. எங்கட கொண்டாட்டங்களுக்கு நாங்கள் செய்யிற வட்டிலப்பம், நெய்ச்சோறு எல்லாம் தமிழ்ஆக்களுக்கு குடுத்துவிடுறதும் அவைகளின்ர தைப்பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு செய்கிற பொங்கல், பலகாரங்கள் எல்லாம் எங்கட வீடுகளுக்கு தாறதும் வழமையான விசயம். இப்பயும் நான் அதை நடைமுறைப்படுத்திக்கொண்டுதான் வாறன். அப்பிடி எல்லாரும் பழக முன்வந்தா கட்டாயம் இது நடக்கும்.

முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் பழையபடி அந்நியோன்யமான உறவுகொள்ள என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
25வருடகாலம் என்றது ஒரு பெரிய இடைவெளி அந்த இடைவெளியை குறைக்கவேணுனெ;டா நிறைய வேலைகள் செய்யவேணும். அதில முதலாவதும் அடிப்படையானதும் இரண்டுசமூகங்களுக்குமிடையில இருக்கிற அந்த இடைவெளியை குறைச்சு அவையள் இரண்டுபேரும் நெருக்கமாகப் பழகுறதுற்கான சந்தர்ப்பத்தை குடுக்கவேணும். உதாரணமா இங்க இருக்கிற பாடசாலைகளில இரண்டு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து படிக்கிற சந்தர்ப்பங்களை கூடுதலாக உருவாக்கவேணும். இப்பயும் இருக்குதுதான் ஆனாலும் அது கூடுதலா இருந்தாநல்லது. அவர்கள் பேசவும் பழகவும் தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே கதைச்சு தாங்களே முடிவுகள எடுக்கவும் ஏலும். இதால அவைகளுக்க நெருக்கம், விட்டுக்கொடுப்பு. புரிந்துணர்வு இப்பிடி நிறைய விசயம் ஏற்படும். நான் படிப்பிக்கிற ஒஸ்மேனியா முஸ்லிம் கல்லூரியில கூடுதலான ஆசிரியர்கள் தமிழர்கள். அவைள் அந்த மாணவர்களோட பழகுறதும் மாணவர்கள் அவைகளோட பழகுறதும் நல்ல ஆரோக்கியமா இருக்கு. அப்பிடியான விசயங்கள் கூடுதலா முன்னெடுக்கப்படவேணும். இரண்டுசமூகங்களுக்குமிடையில இருக்கும் வெறுப்பு நீக்கப்படவேணும். அதை நாங்கள் குழந்தைகளிடம் இருந்து தொடங்கவேணும். மனங்கள் மாறவேணும்.
பெரும்பான்மையினமும் அரசாங்கமும் இது தொடர்பில் எப்படியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
அரசாங்கத்துடைய தார்மீக கடமை இது. ஒரு நாட்டில இருக்கிற எல்லா மக்களையும் சமமாக மதித்து அவர்களுடைய பிரச்சனைகளை இனங்கண்டு அதை தீர்த்து வைக்கிறதுதான் அரசாங்கத்துடைய முக்கிய பொறுப்பு அரசாங்கம் அதை கண்டுபிடிச்சு சரிசெய்யவேணும். நாட்டில அமைதி நிலவுமாக இருந்தா தலைவர்கள் சரியாக இருந்தா எல்லா மக்களக்குமிடையிலான புரிந்துணர்வு நன்றாக வரும். ஒரு குடும்பத்தில தாய் தகப்கன் சரியாக இருந்தா பிள்ளைகள் எந்தவிதமான தவறான வழிக்கும் போக மாட்டினம். எல்லா குடும்பமும் நல்லா இருந்தா நாடு நன்றாக இருக்கும்தானே. அப்பிடி நாட்டில எந்த குழப்பமும் இல்லாம அமைதி இருக்குமாக இருந்தால் இவ்வாறன பிரச்சனைகள் மிக இலகுவில இல்லாம போகும் நாட்டில நிரந்த அமைதி வரவேணும். ஒவ்வொரு இனங்களுக்கும் இருக்கிற பிரச்சனைகளை இனங்கண்டு அவைகளை அரசாங்கம் தீர்த்துவைக்க வேணும். அப்படிச் செய்தாலே முரண்பாடுகள் இல்லாமல் போகும். முரண்பாடுகள் இல்லையெண்டா தானாகவே ஒற்றுமை வந்துவிடும்

ஏதாவது ஒரு துறையில் சாதிக்கத்துடிக்கும் பெண்களுக்கு வெற்றியடைந்தவர் என்ற ரீதியில் என்ன சொல்வீர்கள்.
என்னைப்போல பெண்கள் இப்படியான துறைகளில இயங்குறதுக்கு சமூகத்தில தடை இல்லை. ஆனா அவர்கள் சமூகத்தின்ர தடையை மீறி செய்யத் தயாரில்லை. அது மாறவேணும். தயவுசெய்து திறமையை வறுமைக்குள்ள முடக்காதீர்கள். தடைகளை கண்டு துவளாதீர்கள். உங்களால எது முடியுமோ அதைச் செய்யுங்க சாதிக்கலாம். எழுதுறதைக் கூட்டுங்க யாழ்ப்பாணத்தில ஏகப்பட்ட பெண் எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய நல்ல நல்ல எழுத்துக்கள் வெளியில் போய்ச் சேரேல்ல. நிறைய விடயங்கள் மூடப்பட்டுக் கிடக்கு அதை எழுத்தின் மூலமா வெளிய கொண்டுவர வேண்டும். என தன்னுடைய அனுபவத்தை தன்னைப்போன்ற இளைய படைப்பாளிகளுக்கு கூறுகிறார் இளங்கலைஞர் எழுத்தாளர் நஸ்பியா அஜீத்.

சி. மதிவேந்தன்