Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கூத்துக்கட்டும் ‘புலவர்’.
“எழுத்தினால் என் வேலையையும் இழந்தேன்”

பத்திரிகைகளிலும் வானொலியிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள் வெளியாகியுள்ளதாக கூறும் இவர் “சில நேரங்களில் எனது கவிதை பத்திரிகையில் வந்துள்ளது என்று கேள்விப்படுவேன். ஆனால் அதை எடுத்துப் பார்ப்பதற்கு என்னிடம் பணம் இருக்காது….

27.03.2017  |  
மட்டக்களப்பு மாவட்டம்
எழுத்திலே குறியாக கிருஷ்ணபிள்ளை அருளம்பலம்.

“புதிய பேனாவை வாங்கி அதன் மை முடியும்வரை எழுதியிருக்தகிறேன்.அப்படி இரவுபகலாக எழுதியிருக்கிறேன். இந்த எழுத்தால், எனக்கு பொருளாதாரத்தை ஈட்டித்தரும் வேலையையும் இழந்திருக்கிறேன்.” என்கிறார், 54 வயதான எழுத்தாளர் கிருஷ்ணபிள்ளை அருளம்பலம். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதியெனும் பெருநிலப்பரப்பில் உள்ள கன்னங்குடா எனும் கிராமத்தில் வசிக்கும் இவர் ‘புலவர்’ என்று அறியப்படுகிறார்.

பாடசாலை கல்வி பயிலும் போதே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை அருளம்பலம் நண்பனுக்காக முதல் கவிதை எழுதியதாகச் சொல்கிறார். பத்திரிகைகளிலும் வானொலியிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள் வெளியாகியுள்ளதாக கூறும் இவர் “சில நேரங்களில் எனது கவிதை பத்திரிகையில் வந்துள்ளது என்று கேள்விப்படுவேன். ஆனால் அதை எடுத்துப் பார்ப்பதற்கு என்னிடம் பணம் இருக்காது. என் நண்பர்கள் சிலர் பத்திரிகை வாங்கித் தருவர். ஏன் வாசகர்கள் கூட பாராட்டிவிட்டு பத்திரிகையை என்னிடம் தந்துவிட்டுப் போவர்.” என தன் வறுமையையும் அதற்காக எழுத்தைக் கைவிடாத வைராக்கியத்தையும் வெளிப்படுத்துகிறார். குடும்ப சூழலும், வறுமையும் அவரை கல்விப்பொதுதராதர சாதாரண தரம்(11வகுப்பு) வரையுமே படிக்க அனுமதித்துள்ளது. அப்போது கூலிவேலை செய்து பிழைத்துவந்த இவர் எழுத்தை மட்டும் கைவிடவில்லை. தமிழர்களின் மரபுக்கலையான கூத்துக் கலையில் இவரது ஆர்வம் சென்றது.
மட்டக்களப்பில் ஆடப்படுகின்ற வடமோடி, தென்மோடி ஆகியவற்றில், புராண, இதிகாச கதைகளையும், சமூகத்தின் நிலைகளையும் கதைக்கருக்களாக கொண்டு கூத்துக்களை எழுதி அரங்கேற்றியுள்ளார். “இதுவரை 21கூத்துக்களை எழுதியுள்ளேன். அவை எல்லாமே ஆடப்பட்டுள்ளன.” என்று கூறும் இவர் ,தனது தந்தையிடமிருத்து கூத்தின் நுணுக்கங்களைப் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், அவர் வேலை செய்யும் இடங்களில் களைப்பு நீங்க பாடும் வாய்மொழிப் பாடல்களில் இருந்தும் தான் கற்றதாக கூறுகிறார். “உதாரணமாக வேளாண்மை வெட்டும் போது எல்லோரும் படல்களைப் பாடுவர். அதன்போதும் பாடும் தாளங்களை புரிந்து கொண்டேன் அவற்றினை வைத்து கூத்தினை எழுதினேன், இற்றைவரையும் எழுதிக்கொண்டு வருகின்றேன்.” என்கிறார்.

கிருஷ்ணபிள்ளை அருளம்பலம்.
கிருஷ்ணபிள்ளை அருளம்பலம்.

“ஒரு கூத்து எழுதுவதற்கு ஒருவருடம், பலமாதம். ஒருமாதம், பத்துநாளும் எடுத்திருக்கின்றது.” என்று கூறும் இவருக்கு நடந்த மற்க்கமுடியாத சம்பவம் ஒன்றையும் கட்டுமரத்துடன் பகிர்ந்துகொண்டார். “துரோணர் மோட்சம் என்ற கூத்து ஆடுவதற்காக நான் ஒரு மாதம் எடுத்து எழுதிக் கொடுத்தேன். அது பழகி மேடையேற்றுவதற்கு ஒரு சில நாட்கள்தான் இருக்கும்போது, கூத்து ஆடுபவர்களுக்கும், அண்ணாவியார் மற்றும் களரியில் இருந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக கூத்துக் கொப்பியை அவர்களில் யாரோ எரித்து விட்டனர். கூத்துபோட்டேயாக வேண்டிய கட்டாயம். கோப்பி இல்லாமல் போடமுடியாது. இதனால் மீண்டும் எழுதித் தரும்படி என்னிடம் கேட்டார்கள் எனக்கும் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தது. இப்டிச் செய்துவிட்டார்களே என கவலையாகவும் இருந்தது. ஆனாலும் நான் முயற்சி செய்து மூன்று நாள் தொடர்ச்சியாகவிருந்து எழுதிக்கொடுத்தேன்.” என்று பெருமித்துடன் நினைவுகூருகிறார்.
அதே நேரம் “அந்த நேரத்தில் நாட்கூலிக்காக மேசன் வேலை செய்துவந்தேன். ஒரு நாளைக்கு 100 ரூபா கூலி. அது எனது வீட்டின் உணவுப் பிரச்சினையை சமாளித்து வந்தது. ஆனால் தொடர்ந்து மூன்றுநாள் வேலைக்கு போகாததால் அந்த வேலையையும் நான் இழந்தேன்.” எனவும் கவலை தெரிவித்தார்.


அண்ணாவியார் மற்றும் களரியில் இருந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக கூத்துக் கொப்பியை அவர்களில் யாரோ எரித்து விட்டனர்.

இவ்வாறான கஸ்ரங்களையும் தாங்கி அவர் எழுத்தைக் கைவிடவில்லை. “எழுதுவது இலகுவான காரியமுமன்று, அது ஒரு வலி. ஏன் என்றால் அந்த வலியையும் உணர்ந்திருக்கின்றேன். எழுதுவது என்பதும் உடனே எழுதிவிட முடியாது சிந்திக்க வேண்டும். கற்பனைபண்ண வேண்டும். அதற்காக இரவில் ஒரு மணி, பன்னிரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து சில வரிகளை, வசனங்களை எடுப்பதற்கு வீட்டை சுற்றிச் சுற்றிச் நடந்த சம்பவங்களும் அதிகம் இருக்கின்றன.” இதனால் மனைவியிடம் ஏச்சு வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு.” என்கிறார் சிரித்துக்கொண்டே. இந்த வலிகளையெல்லாம் தாண்டி குடும்பத்தையும் கவனித்து, எழுதுவதற்கு இவர் அவ்வளவு வசதிபடைத்தவராகவும் இருக்கவில்லை. பகலில் வேலைக்கு போகும் இவர் வேலை செய்யும் இடங்களில் கற்பனையில் ஏதாவது வந்தால் உடனே வேலையை நிறுத்திவிட்டு துண்டு பேப்பர்களில் எழுதி வைப்பதாக கூறுகிறார். வீட்டிலும் எழுதுவதற்கான வசதி இவருக்கு இருக்கவில்லை.
“வீட்டில் குப்பி விளக்கில் இருந்து எழுதிவந்த நான் இப்ப கொஞ்சக்காலமாகதான் கரண்ட் வெளிச்சத்தில் எழுதுகிறேன். வீட்டில் இருந்து எழுத முடியாத சூழல் இருக்கின்றபோது, கோயிலிலும், பாலர் பாடசாலையிலும் இருந்து எழுதுவேன்.” ஏன்று தனது எழுதும் சூழலை விபரிக்கிறார். அத்துடன் பாரம்பரிய காவடிப் பாடல், புராண நாடகம், கரகம் போன்றவற்றையும் சிறுகதைகளையும் கிருஷ்ணபிள்ளை அருளம்பலம். எழுதியுள்ளார். இவை பத்திரிகைகளிலும், வானொலியிலும் வெளிவந்துள்ளன. இவ்வாறு பல்வேறு பாடல்களையும் எழுதியுள்ள இவரிடம் இவர் எழுதியவற்றுக்கான சாட்சியாக எந்தப் பிரதிகளும் இவரிடம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. கொப்பிகளில் எழுதும் இவர் அவற்றை பிரதிசெய்து வைப்பதில்லை. மூலப் பிரதிகளையே அனுப்பிவிடுகிறார் அல்லது தேவையானவர்களுக்கு கொடுத்துவிடுகிறார்.பிரதி எடுத்து வைப்பதற்கு தன்னிடம் பண வசதி இல்லை என்று கூறும் இவர், “பிரசுரமான சிலவற்றை நான் சேர்த்து வைத்தேன் அவையும் இந்த யுத்தத்தால் அழிந்து விட்டன” என்கிறார் கவலையுடன்.

கூத்துக் கட்டிய கொப்பி.
கூத்துக் கட்டிய கொப்பி.

இவ்வாறு பல கஸ்ரங்களையும் தாங்கி எழுதி வருபவருக்கு சமூகத்தில் வரவேற்பு எப்படி இருக்கிறது? “வரலாற்று கதைகளை கூத்தாக எழுதுகின்றபோது பிரச்சனைகள் இருப்பதில்லை. ஆனால், சமகால சமூகப் பிரச்திசனைகளை எழுதினால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக எதிர்க்காமாட்டார்கள். மறைமுகமான எதிர்ப்புக்களை காட்டுவர்கள். அவ்வாறு பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக்களை சந்தித்திருக்கின்றேன்.” என்று கூறும் இவர் தன்க்கான பெருமைகளையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“சமூகத்திலே படித்தமட்டத்தில் எனக்கு அந்தஸ்து இருக்கின்றது. இப்பொழுதெல்லாம், படித்தவர்கள் நிறையப்பேர் வீட்டுக்கு வந்து சந்திப்பர், கம்பஸில இருந்தும் வந்து சந்திப்பார்கள்” என்கிறார் பெருமையுடன். இவருக்கு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 2010ம் ஆண்டு ‘கலைக்கவிஞர்’ என்ற கௌரவிப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் இலக்கியத்துறைக்கான முதலாவது கௌரவிப்பு 2010ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதேபோல கிழக்கு பல்கலைக்கழகத்தினாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவரின் பெயரைச் சொல்லி அங்கு சிலரிடம் வினவியபோது, “தெரியாதே” என்று கூறிவிட்டு அகன்று சென்றனர். திருப்பி நாங்கள் அவர்களை அழைத்து, ‘புலவர்’ அவரைத் தெரியுமா? ஏன்றால் “அவரா, தெரியுமே..” என்கின்றனர். அவ்வாறு ஊருக்குள் மட்டுமல்ல படித்தவர்களிடமும் இவரது பெயரை விட ‘புலவர்’ என்ற அடைமொழிதான் நிறைந்திருக்திறது.
“பாரம்பரிய கூத்தரங்கில் கூத்துக்களைக் கட்டும் புலவர்கள் பிரசித்தமானவர்கள். அந்தவகையில் சமகாலத்தில் வாழ்கின்றவர்களில் இவர் பெயர் பெற்றவர். கூத்தரங்கை அறிந்து உணர்ந்த புலவர்” என்கிறார் கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியற்கல்வி கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் சிவஞ்ஞானம் ஜெயசங்கர். கூத்துக்கலை பற்றிய செயல்முறை விளக்கத்தை மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்காக இவரை பல்கலைக்கழகத்திற்கு அழைப்பித்துள்ளனர். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “கூத்துக்களைக் கட்டும் புலவர்கள் பாரம்பரிய கூத்தரங்கில் பிரசித்தமானவர்கள். இன்று கூத்தின் மீதான நவீன சார்புகளால் புவலர் பாரம்பரியம் பலவீனமடைகிறது.பலமான அண்ணாவியார் மூலம் இது பலம் பெறுகிறது. பொதுவாக நவீன பார்வை மற்றும் இவற்றை விஞ்ஞான பூர்வமற்ற ரீதியாக பார்க்கின்ற பர்வை என்பன பாரம்பரியக் கலைகளைக் கைவிடும் தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே பாரம்பரியத்தை மீண்டெக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அந்தவகையில்இ இவர்களது திறனை நாம் பாதுகாக்கவேண்டும். துரதிருஷ்ட வசமாக இதற்கான சரியான திட்டமிடல் எம்மிடையே இல்லை. ஆனாலும் எம்மால் இயன்றவற்றை நாம் செய்து வருகிறோம்” என்கிறார்.
இவ்வாறு பொது வெளியில் எதிர்பார்க்கும் முறைசார் கல்வி இல்லாவிட்டாலும் தன் தனித் திறமையால் இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கும் கிருஷ்ணபிள்ளை அருளம்பலம் போன்றவர்களை பாதுகாக்கவேண்டியது அதிகாரம் பெற்ற அமைப்புகளின் கடமையும் கூட.