Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பாதுகாக்கவேண்டிய பாரம்பரியங்கள்!

“ஒருவனுக்கு ‘நல்ல பாம்பு’ கடிச்சு போட்டுது கொண்டுவந்தானுகள் மருந்து செய்யக்குள்ள இதென்ன அத்துமீறிபோகுது எண்டு கேட்கானுகள். பொறகலா ஓடினாதான் அதுவும் ஓடும். அத நான் மறிப்பன். என்று சொன்னன். சொல்லி சிறிதுநேரத்தில் ……

24.04.2017  |  
மட்டக்களப்பு மாவட்டம்
விசகடி வைத்தியர் செல்லத்தம்பி வல்லிபுரம்.

“இப்ப சும்மா தலையிடி எண்டாலும் ஆஸ்பத்திரி…. எல்லாத்துக்கும் ஊசி! எங்கட காலத்தில கடவுள் நம்பிக்கையும் கைமருந்தும்தான். இப்பத்தைய மாதிரி கட்டிடமும் இல்லஇ கட்டிலும் இல்லை. பாம்பு கடிச்சவரையும் தேள் கடிச்சவரையும் வேறுஎன்ன விசக்கடியெண்டாலும் காப்பாத்தின நாமதான்.” என்கிறார் விசகடி வைத்தியர் செல்லத்தம்பி வல்லிபுரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள கற்சேனை கிராமத்தில் வசிக்கும் இவரை ‘பாம்புக்கடி வைத்தியர் ’ என கிராமத்தவர் அழைக்கின்றனர். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக்கிராமத்தில் விச ஜந்துக்களுக்கும் குறைவில்லை. முன்னைய காலங்களில் மிகவும் பின்தங்கிய கிராமமாக இது இருந்ததாலும், அனேகமாக வியாதிகளுக்கு நாட்டுவைத்தியமே கைகொடுத்தது. அதுபோல் விசக்கடிக்கும் பரம்பரை பரம்பரையாக சிலர் வைத்தியம் பார்த்துவந்தனர்.
“எங்கட பாட்டன் சின்னத்தம்பி பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்யிறவர், அவர்படிச்ச கொப்பி, ஏடு, புத்தகம் எல்லாம் எனக்கு கிடைச்சது. அத படிச்ச, அதோட பெத்திபோடியார், ஆறுமுகம் இவங்க செய்யிறதையும் பார்த்திட்டு இருப்பன் அதால எனக்கும் பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கிறது எப்படி எண்டு தெரியவந்துது.” என்று சொல்லும் 65வயது நிரம்பிய செல்லத்தம்பி தனது முதல் அனுபவத்தை இப்படிச் சொல்கிறார்.

அவரது வீட்டுக்கருகில் சில மூலிகைகளையும் வைத்துள்ளார்.

“1993இல் தான் முதன் முதலில் பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்தனான், செய்யும் போது சரியான பயமாக இருந்தது. கடவுள கும்பிட்டுது எல்லாம் நீயே எண்டு சொல்லித்து மருந்து செய்தன். எந்த பிரச்சினையும் இல்லாமல் பாம்பு கடிச்சவர் தப்பிட்டார். ஐந்துபேருக்கு வைத்தியம் பார்த்ததிற்கு பிறகுதான் பயம் குறைந்தது.” என்று கூறும் இவர் ஒருதடவை மூன்று பேருக்கு ஒன்றாக வைத்தியம் பார்த்து அவர்களை உயிர் பிழைக்கவைத்துள்ளார்.
அதேநேரம் ஒருவருக்கு பாம்பு கடித்து தான் மிகவும் கஸ்ரப்பட்ட நாளையும் இப்படி விபரிக்கிறார். “ஒருவனுக்கு ‘நல்ல பாம்பு’ கடிச்சு போட்டுது கொண்டுவந்தானுகள் மருந்து செய்யக்குள்ள இதென்ன அத்துமீறிபோகுது எண்டு கேட்கானுகள். பொறகலா ஓடினாதான் அதுவும் ஓடும். அத நான் மறிப்பன். என்று சொன்னன். சொல்லி சிறிதுநேரத்தில் இருந்தபெடியன் கெளிஞ்சிபோயிட்டான். எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பொருளை எடுத்துவரச்சொன்னன். நெருப்புபோல வேலை நடக்குது. ஒரு மந்திரத்த சொல்லி செய்யஇ உடனே சரிவந்திட்டு. அதேநேரம் அங்க பாம்பு கடிச்ச இடத்தபோய் பார்த்தா பாம்பு செத்துபோய் கிடந்தது.”
“மந்திரமா? அதென்ன” என அவரிடம் வினாவினோம்.
“ இந்த வைத்தியத்தில தூதன் குறி செல்லுதல் ,தவணை போடுதல், விசக்கல் கொடுத்தல் குழையடித்தல் எண்டு பல முறைகள் இருக்கு. உதாரணமா தூதன் குறி சொல்லுதலை எடுத்தா ஒருவருக்கு பாம்பு கடிச்சா அதை எங்களிட்ட வந்து சொல்லுறவர் கடித்தவரின் பெயரைக் கூறி பூச்சி குத்திவிட்டது என்ற வாக்கியத்தை மட்டுமே கூறுவர்.(உ-ம் கமலுக்கு பூச்சி குத்தி விட்டது) கூறிவிட்டு அவர் அப்படியே நிற்பார். அவர் நிற்கும் நிலையையும் அவருடைய செயற்பாட்டையும் வைத்துக் கொண்டு என்ன பாம்பு குத்தியது என்று நாம் எளிதில் கண்டுபிடிப்போம். விசத்தை இறக்க அதற்கான மந்திரங்கள் உண்டு. அவற்றை உச்சரித்தபடியே மருந்துகளை விரைந்து செய்வோம். இவ்வைத்தியத்தில் மந்திரம் இறைநம்பிக்கை போன்றனவே பிரதான இடத்தை வகிக்கின்றது.” என்கிறார்.
பொதுவாக விசக்கடி என்பது உடனடியாக இரத்தில் கலந்து உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது. அந்தநேரத்தில்இ இரத்த ஓட்டத்தில் விசம் பரவுவதை விட வேகமாக வைத்தியர்கள் செயற்படவேண்டும். விசம் பரவுவதைக் கட்டுப்படுத்துவது, பரவியதை முறிப்பது, என அவர்களது மருந்துகள் செயற்படும். ஆனால் மந்திரம் முக்கியமானது என இவர்கள் குறிப்பிடுவது இந்த விஞ்ஞான உலகில் நம்புவதற்கு கடினமாகத்தான் உள்ளது. “நம்ம உச்சரிக்கிற மந்திரத்தில ஒரு எழுத்துபிழையா உச்சரித்தாலும் மந்திரம் பலிக்காது. அதற்காக படிக்கிறத ஒழுங்காக படிச்சுக்கொள்ளணும்.” என்றும் இவர் சொல்லுகிறார்.
சரி இவர் குடுக்கும் மருந்துகள் எந்தவகையானவை? மூலிகைகள், உட்கொள்ளவும், கல்லை வைத்து விசத்தை இழுக்கவும் கற்றுத் தேர்ந்துள்ளதாக கூறுகிறார். அதென்ன கல்லு?  “விசத்தை உறிஞ்சி எடுக்கும் கல் ஒன்றுள்ளது. பாம்பு கடித்த ஒருவரின் கடிவாயை வெட்டி அந்த இடத்தை தேங்காய்ப் பாலால் கழுவி அந்தக் கல்லை அதன்மேல் வைக்கும் போது அது விசத்தை எடுக்கும். எமது பிரதேசத்தில் காணப்படும் விசக்கல்லானது குறவர்களிடமிருந்து எடுக்கப்படுவதாகவே கூறப்படுகின்றது. உண்மையான விசக்கல்லா எனப் பார்ப்பதற்கு கல்லை தேங்காய் பாலில் இட்டுப் பார்க்கும் போது தேங்காய்பால் கொதிக்கும்.அப்போது அது உண்மையான விசக்கல் எனக் கூறுவர். விசக்கல்லை பாம்பு கடித்த இடத்தில் வைத்ததன் பிற்பாடு அதனை மீண்டும் எடுத்து பாலில் கழுவித்தான் வைக்கவேண்டும்.” என அந்தக் கல்பற்றி பெரிய விளக்கத்தையே தந்தார்.


“வைத்தியம் செய்யிறத்திற்கு ஒரு மணித்தியாலமும் பிடிக்கும், ஒரு நாளும் எடுக்கும், சிலநேரம் மூன்று நாளும் எடுக்கும்.

சரி எவ்வளவு நேரத்துள் இவர்களது வைத்தியம், விசம் கடித்த ஒருவரை மீட்கிறது?
“வைத்தியம் செய்யிறத்திற்கு ஒரு மணித்தியாலமும் பிடிக்கும், ஒரு நாளும் எடுக்கும், சிலநேரம் மூன்று நாளும் எடுக்கும். பாம்பு கடித்த உடனே கொண்டுவந்தா உடனே மருத்துவம் செய்யலாம். பாம்பு கடித்து நீண்ட நேரத்திற்கு பிறகு கொண்டுவந்தால்தான் நாள்கணக்கு எடுக்கும்.” என்கிறார்.
“ஒரு நாள் ஒரு இளம்பெண்பிள்ளைக்கு பாம்பு கடிச்சதெண்டு கொண்டுவந்தானுகள்இ அப்ப சரியான மழைவேறு, பாம்பு கடிச்சு கனநேரமாயிட்டு, மழையில நனைத்துக் கொண்டுவந்தனால் பிள்ளைக்கு உணர்வும் இல்லை. நான், மருந்து அரைச்சு வறாத்துக்குள்ள செத்திட்டாள். நூன் பார்த்த 100க்கும் மேற்பட்ட விசக்கடியில் அந்தப்பிள்ளை மட்டும்தான் செத்துப்போனது. அது நான் மருந்து குடுக்கமுன்பே இறந்திற்று. மற்றும்படி நான் மருந்து செய்து ஒத்தரையும் சாகவிடல்ல.” என்கிறார்.
இதனால் இவர்களுக்கான வருமானம் எந்தளவில் உள்ளது எனப்பார்த்தால்,  முன்னைய காலங்களில் இந்த வைத்தியத்திற்கு பணம் வாங்குவதில்லை என்றும், பின்னர் மக்கள் விரும்பிதருவதை வாங்குவதாகவும் கூறினர். இப்பொழுது உள்ள வைத்தியசாலை வசதிகளால் மக்கள் இவரை நாடி வருகிறார்களா? எனக்கேட்டபோது, “மக்கள் வருவதற்கு விரும்புகிறார்கள் நான்செய்வதில்லை. காரணம்  செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வேணுமாம் எண்டு சொல்லினம். இப்ப எழுதி போட்டிருக்கிறன். இன்னும் தரயில்ல. அப்பிடியிருந்தும் அவசரத்திற்கு எண்டு கிட்டடியில ஒருவர காப்பாத்தினனான்.” என்று கூறும் இவர் அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலுள்ளார். இலங்கையில் பழந்தமிழ் இலக்கியங்கள் என்று பார்த்தால் சோதிடமும், வைத்தியமும் தான் காலத்தால் முந்திய தமிழ் நூல்களாக கிடைக்கப்பெற்றுள்ளன. அந்தளவிற்கு பாரம்பரியம் கொண்ட இந்த வைத்திய முறைகளை நவீன முறைகளால் மழுங்கடிக்காமல் முறையாக வளர்த்தெடுத்து அடுத்த   சந்ததியினருக்கு கையளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.