Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நல்லாட்சி அரசாங்கமும் ஆணைக்குழுக்களை அமைப்பதில் பெயர் பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் கட்டுமரம் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வி. ‘மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டமையானது பஞ்சு மெத்தையில் படுத்துறங்குவதற்காக அல்ல’ – பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்   / 1. கேள்வி: காணாமல்போனோர் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில,; குறிப்பாக வவுனியாவில் நடைபெறுகின்ற போராட்டங்கள் கவனிப்பாரற்று இருக்கின்றன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது? பதில்:- காணாமல் ஆக்கப்பட்டோர் தமக்கு நீதி […]

05.05.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் கட்டுமரம் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வி.

‘மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டமையானது பஞ்சு மெத்தையில் படுத்துறங்குவதற்காக அல்ல’ – பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

 

/

1. கேள்வி: காணாமல்போனோர் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில,; குறிப்பாக வவுனியாவில் நடைபெறுகின்ற போராட்டங்கள் கவனிப்பாரற்று இருக்கின்றன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?
பதில்:- காணாமல் ஆக்கப்பட்டோர் தமக்கு நீதி வேண்டும் என்று கடந்த எட்டு ஆண்டுகளாகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களில் நாம் எத்தகைய பங்களிப்பைச் செய்து வந்துள்ளோம் என்பதை எமது மக்கள் நன்கு அறிவர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே நாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். குறிப்பாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்றும் அன்றைய கொடுங்கோண்மை ஆட்சிக்காலத்திலேயே மக்களைத்திரட்டி கொழும்பில் நாம் போராட்டங்களை நடத்தியிருந்தோம். அன்று பேருந்துகளின் சில்லுகளுக்கு ஆணி ஏற்றியும் மக்களை அச்சுறுத்தியும் மக்களை செல்லவிடாமல் தடுப்பதற்கு மகிந்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் எமது உறவுகள் தமது உறவுகளைத் தேடி அறிவதில் உறுதியுடன் இருந்தனர். இறுதியில் மகிந்த அரசாங்கத்தின் அச்சுறுத்தலையும் மீறி தமது போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றத்தின் பின்னரும் எமது மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் நாம் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பி அதற்கு அரசாங்கத்தின் பதிலையும் பெற்றோம். அரசாங்கத்தினால் இந்த விடயத்தில் உறுதியான பதில் எதனையும் தெரிவிக்க முடியாத கையலாகாத்தனத்தையும் இதன் மூலம் நாம் அம்பலப்படுத்தினோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளும் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற்றப்படவேண்டும் என்ற எண்ணத்திலேயே எமது கட்சி அவர்களுக்கு ஆதரவாக ஊர்வலத்தை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியினரும் ஊர்வலம் நடத்தி தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தனர். இதன் ஒரு கட்டமாகவே எமது கட்சியின் அரசியல்பீட உறுப்பினரான க.அருந்தவராஜா அவர்களின் முன்னெடுப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கையை வலியுறுத்தி சுமார் ஏழாயிரம் கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அழுத்தங்கள் போதாது என்பது அரசாங்கத்தின் மெத்தனப் போக்கின் மூலம் புலப்படுகின்றது. எமது மண் சுமார் நாற்பது ஆண்டுகாலமாக எத்தகைய சாத்வீகப் போராட்டங்களையும் சந்திக்காத மண். இதனால் இன்றைய அரசியல் தலைமைக்கு சாத்வீகப் போராட்டங்களின் வலிமை தெரியாதுள்ளதுடன், அதனை எவ்வாறு வடிவமைப்பது என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. இதனைப் போக்கி எமது மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை வெகுமக்கள் போராட்டங்களாக மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளுக்கும் உள்ளது. இந்த விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை வழிநடத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். இதனையே இந்த செவ்வியினூடாக பகிரங்க அறைகூவலாக விடுக்க விரும்புகிறோம்.

2. கேள்வி: அண்மைக் காலங்களில் மக்கள் போராட்டங்கள் தான் எழுச்சி பெற்றுள்ளன. இந்நிலையில் அது தொடர்பில் தமிழ்த்தலைமைகளின் நிலைப்பாடு என்ன? அப் போராட்டங்களில் அரசியல் தலைமைகளின் பங்களிப்பு எவ்வாறாக இருக்கின்றது?
பதில்:- எமது மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் நாங்கள். எமது மக்களுக்கு ஒன்றென்றால் துடித்துப் போகவேண்டியவர்கள் நாங்கள். நாம் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டமையானது பஞ்சு மெத்தையில் படுத்துறங்குவதற்காக அல்ல. மாறாக, பல்வேறு நெருக்கடிகளுக்கும், மக்களின உரிமைகளுக்கும் விடைகாண்பதற்காகவே நாம் தேர்தலில் போட்டியிட்டோம். எமது மக்களும் அதற்காகவே எம்மைத் தெரிவு செய்து அனுப்பினார்கள். அந்தப் பணியைச் செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும் குறிப்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் உள்ளது. இந்தப் பொறுப்பிலிருந்து யாரும் பின்வாங்க முடியாது.
ஆனால் கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இலங்கை தமிழரசுக் கட்சி மக்களின் போராட்டங்களில் பங்கெடுக்காமல் இருப்பதுடன், அத்தகைய போராட்டங்கள் தென்னிலங்கையில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மகிந்த தரப்பினர் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறிவிடுவர் என்றும் தனது கையாலாகத் தனத்திற்கு காரணம் கற்பிக்கின்றது. மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வலுக்கும்போதெல்லாம் வேறுவழியின்றி தனது நிலைப்பாட்டை மாற்றி, தானும் தனது ஆதரவை வழங்குகிறது. ஒரு தலைமைக்கட்சி மக்களுக்குத் தலைமை தாங்கக் கடமைப்பட்டது என்பதை மறந்து அல்லது அதிலிருந்து விலகி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தனது நிலையை மாற்றிக்கொள்கிறது. இந்தக் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கும் உரிமையை எமது மக்களுக்கு மட்டுமே உரித்துடையது.
மக்கள் தங்களை விரும்பாத எவரையும் ஏற்க மாட்டார்கள். ஒரு தலைவர் என்பவர் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராகவும் தான் சார்ந்த சமுதாய மக்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்துடையவராகவும் இருத்தல் வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் தலைவரோ மக்களைச் சந்திப்பதற்கே விருப்பமற்றவர். ஆனால் தேர்தலில் மட்டும் தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்.
மறுபுறத்தில் ஏனைய இரண்டு அங்கத்துவக் கட்சிகளும்கூட மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்னவென்பது புரியாத புதிராகவே உள்ளது. எம்மிடம் கேட்ட கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்டு விடைகாண்பது நன்று. மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அதுகுறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களைப் போராட்டத்திற்குத் தயார்படுத்தி அணிதிரட்டி வழிநடத்தி கோரிக்கைகளை வெற்றியடையச் செய்வதற்கே கட்சிகள் உதயமாகின்றன. ஆனால் இங்கு மக்கள் தாங்களாகவே அணிதிரண்டு தமது கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைத்துள்ளனர். ஒரு கட்சியின் முக்கியப் பணிகளில் பாதியளவு குறைந்துவிட்டது. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மக்களுக்குத் தலைமைதாங்குவதும் மக்களின் கோரிக்கைக்கு அடிப்படைக் காரணமான அரசியல்தீர்வை முன்வைத்து மக்களுக்கு அரசியல் தெளிவூட்டுவது மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு எஞ்சியுள்ள பணி. இதனைச் செய்யாமல் மக்களின் போராட்டம் நியாயமானது, நாங்களும் ஆதரவு தருகிறோம் என்று மூன்றாவது மனிதரைப்போல் நடந்துகொள்வது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு அழகல்ல.
எம்மைப்பொறுத்தவரை நாம் என்றும் மக்களுடனேயே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். எம்மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் எமக்கும் இருக்கின்றன என்ற உணர்வின் அடிப்படையிலேயே நாம் எமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் மேலிருந்து நேரடியாக மக்கள் பிரதிநிதியாக வந்துவிடவில்லை. எமது உரிமைக்கான போராட்டத்தின் அனைத்துப் படிமுறைகளிலும் பங்காற்றியதனூடாகவே இன்று நாம் மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றுகின்றோம். இன்றைய மக்கள் பிரதிநிதிகளில் பெருமளவினோர் இதற்கு முன்னர் செயற்றிறன் மிக்க அரசியல் கட்சியில் அங்கத்தவர்களாக இருந்து கட்சியின் அமைப்புவிதி மற்றும் அரசியற் கொள்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்து வந்த அனுபவமற்றவர்கள். இதுவும் அவர்கள் மக்கள் பிரச்சினைகளை தமது கைகளில் எடுத்து போராட்டக் களத்திற்கு வரத் தயங்குவதற்கான பிரதான காரணமாகும்.

 

3. கேள்வி: இலங்கையின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் வடக்கு, கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை பாரியளவில் காணப்படுகிறது. இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தொடர்பில் எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன?
பதில்:- வேலையற்ற பட்டதாரிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. ஆனால் கல்வித் தகைமை உடைய ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இதுகுறித்து நாமும் பலமுறை பாராளுமன்றத்தில் பேசியுள்ளோம். பாராளுமன்றத்தில் பேசுவது மட்டும் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது சரத்தானது ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்ண உணவும், இருக்க இடமும், வசிக்க வீடும், உடுக்க உடையும் அவசியம் என்று வலியுறுத்துகின்றது. இதனைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு வாழ்வாதாரம் அவசியம் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அந்த வாழ்வாதாரத்தை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆகவே நாட்டின் அனைத்து மக்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தக் கூடிய பணியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இன்றுவரை அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது.
இதுவரை காலமும் போரைக் காரணம் காட்டி ஏனைய விடயங்களைப் புறந்தள்ளி ஆளும் வர்க்கத்தினர் இலகுவாக ஆட்சி செய்து வந்தனர். இனி அத்தகைய சாட்டுபோக்குகள் சொல்ல முடியாது. இப்பொழுது அரசாங்கத்தின் சுய உருவம் வெளிப்பட்டுள்ளது.
எமது இளைஞர்கள் அரசாங்கத்தில் தான் வேலை வேண்டும் என்று கேட்கவில்லை. அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய எந்த நிறுவனத்திலும் பணிபுரிய அவர்கள் தயாராகவே உள்ளனர். இன்றைக்கு வேலையை வழங்கிவிட்டு நாளை வீட்டிற்கு அனுப்பும் நிறுவனங்களை நம்பி அவர்கள் பணியில் சேர்வதற்குத் தயாரில்லை. அத்துடன் தமது ஓய்வுக் காலத்தில் பிறரிடம் தங்கிநிற்காக சுயசார்பு பொருளாதார உத்தரவாதத்தை விரும்புகின்றனர். இதனை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையும் நியாயமானதே.
இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் ஒரு கொள்கை முடிவெடுத்து பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்கி அனைத்து துறையிலும் பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.

4. கேள்வி: புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் உள்ள “மக்கள் விருப்பு” என்ற விடயத்தை ஏன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தவில்லை?
பதில்:- வரப்போவது புதிய அரசியல் யாப்பா அல்லது யாப்புத் திருத்தமா என்பதே தெரியாத நிலையில் அனைத்துத் தரப்பினரும் இதனை இரகசியமாகவே வைத்துள்ள நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவிப்பது பொருத்தமற்றது.
5. கேள்வி:; புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான உபகுழுக்களில் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதும் கூட தமிழர்களுடைய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வலியுறுத்தப்படவில்லை என்ற கருத்துக் குறித்து என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?
பதில்:- ஏனைய அரசாங்கங்களைப் போன்றே இந்த நல்லாட்சி அரசாங்கமும் ஆணைக்குழுக்களை அமைப்பதில் பெயர் பெற்றது. எதற்கெடுத்தாலும் குழுக்கள் அமைப்பதும் அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலத்தை வழங்குவதும் அந்த அறிக்கை கிடைத்தபின் அவற்றைக் கிடப்பில் போடுவதும் இந்த அரசாங்கத்திற்கு ஒரு பொழுதுபோக்கு. இதனையே ஐ.நா. விவகாரத்திலும் இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு வருமா? அதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா என்பதெல்லாம் புரியாத புதிராகவே ஒரு மெகா சீரியல்போல் நீண்டு கொண்டே செல்லும். தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வலியுறுத்தி எமது மக்களின் அபிலாசைகளைத் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எடுத்துச்சொல்லி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டங்களை மேற்கொள்வதனூடாக மட்டுமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியுமே அன்றி, வெறுமனே இணக்க அரசியல் செய்வதனூடாக எதனையும் சாதித்து விடமுடியாது. இதுவரை இணக்க அரசியல் செய்துவருகின்ற கட்சிகள் தமது மக்களுக்கு எத்தகைய நன்மைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளன என்பதை இந்நாடு நன்கறியும்.

6.கேள்வி: வன்னிப் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடு குறித்து என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?
பதில்:- வன்னிக்கான பல்கலைக்கழகம் என்பது எமது மக்களின் நீண்டநாள் கோரிக்கை. மேலும் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியின் அளவைக் கூட்ட வேண்டியதும் அவசியமானது. மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப, பல்வேறு பட்டப்படிப்புக்களைப் புதிதாக உட்புகுத்த வேண்டியுள்ளது. அதற்கு பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பில் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழங்களில் இத்தகைய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வது எளிதானதாகவும் இருக்கும். புதிய கற்கை நெறிகள் உருவாவதால் புதிய தொழில்நுட்ப அறிவுடன் இளைய தலைமுறை உலக அரங்கில் போட்டிபோட்டு உயர்வடைய வழியேற்படும். இதன் காரணமாகவே நாமும் தொடர்ந்தும் வன்னிப் பல்கலைக்கழகத்தின் அவசியம் குறித்து தொடர்ந்தும் பாராளுமன்றில் குரல்கொடுத்து வருகிறோம்.

7. கேள்வி: உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது தொடர்பில் இழுபறிநிலை காணப்படுகின்றமை தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- மத்தியில் ஆட்சியிலுள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற தருணத்திற்காகக் காத்திருக்கின்றனர். இன்றைய சூழலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தெற்திலிருந்தும் கணிசமான வாக்குகளைக் கைப்பற்றும் நிலையிலுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் அது மகிந்த மற்றும் மைத்திரி ஆகிய இருதரப்பினரிடையே பிளவுண்டு கிடக்கிறது. நாட்டை ஆளும் ஜனாதிபதிக்கு கட்சி தனது கட்டுப்பாட்டை மீறிவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மகிந்தவை கையாள்வது ஒன்றும் ஜனாதிபதிக்கு பெரிய விடயம் அல்ல. மகிந்தவின் மீது நடவடிக்கை எடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, ஜனாதிபதிக்கு மகிந்தவும் வேண்டும். கட்சியும் வேண்டும். இந்த இரண்டையும் தனக்குச் சார்பாக மாற்றும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது.
மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிவடைவதால் கட்சியின் மூன்றாம் நிலை தலைவர்களை தம்பால் ஈர்க்கும் பொருட்டு அவைகளுக்கான தேர்தலை நடத்தி அவர்களின் உதவியுடன் ஏனைய தேர்தல்களை நடத்தலாம் என்பது ஆட்சியாளர்களின் கருத்தாக இருக்கலாம். இதன் காரணமாகவே ஜனாதிபதி மாகாணசபைத் தேர்தல்களுக்குத் தயாராகுமாறு தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைக் கருத்திற்கொண்டே அமைப்பாளர்களையும் மாற்றிவருகிறார்.

8. கேள்வி: அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் எந்தளவிற்கு அவசியம்? அதன் தேவைப்பாடு?
பதில்:- நாட்டின் மொத்த மக்கட்தொகையில் பெண்களின் விகிதமே அதிகம். அதிலும் குறிப்பாக போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் பெண்களின் தொகை ஆண்களைவிட அதிகமாகும். இதில் குடும்பத்தலைமைகளை ஏற்றுள்ள பெண்களின் தொகை இன்னும் அதிகம். இந்நிலையில் பெண்கள் தாம் மட்டுமே எதிர்நோக்கும் பிரத்யோக பிரச்சினைகளையும் ஒட்டுமொத்த சமுதாயப் பிரச்சினைகளையும் முன்வைப்பதற்கு அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். போராட்ட காலத்தில் அரசியல், ஆயுதங்களைக் கையாளுதல், கனரக வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட சகல துறைகளிலும் அவர்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளனர். எனவே தமிழ்த் தேசிய இனம் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் அவர்களுக்கும் தெரியும். எனவே தமது தேசிய இனத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியல் அரங்கில் பிரவேசித்து தமது பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்கள் முன்வரவேண்டும்.
இன்றைய தமிழ் அரசியல் அரங்கில் தமிழ்த் தேசிய இனத்தின் விடிவில் பற்றுறுதி அற்றவர்களே அதிகமாக இருக்கின்றனர். அவர்களின் வரிசையில் சேராமல் பற்றுறுதி மிக்க அரசியல் தலைவர்களாக பெண்கள் அரசியலில் இணைய வேண்டும்.

9. கேள்வி: வன்னியின் அபிவிருத்தியில் ரிசாட்பதியூதீன் அவர்கள் செயற்படும் அளவிற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவில்லை என்றொரு கருத்து நிலவுகின்றமை தொடர்பில் தங்கள் கருத்து?
பதில்:- ரிசாட் பதியுதீன் அமைச்சர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் அமைச்சர்களாக இருக்கவில்லை. மறுபுறம் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுள்ள அரசாங்கம் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் வைக்கின்ற கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்குக்கூட தயங்குகிறது. எம்மால் குறைந்தபட்சம் ஒரு பொருளாதார வர்த்தக மையத்தை எமது மக்கள் விரும்பும் இடத்தில் நிர்மாணிக்க முடியவில்லை. மக்களின் விருப்பத்திற்கு மாறாக இருபது கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ள புதிய பேருந்து நிலையம் இன்றுவரை யாருக்கும் பயனின்றி பூட்டிக்கிடக்கிறது. எம்மக்களின் வரிப்பணம் இவ்வாறு வீணடிக்கப்படுகிறது. நிதி விரயமானாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் விரும்பும் எதையும் செவிமடுக்கமாட்டோம் என்ற நிலையில் உள்ள அரசாங்கத்துடன் இன்னமும் எவ்வளவு தூரம் இணங்கிச் செயல்படுவது? இவைகளைச் சுட்டிக்காட்டினால் எம்மைக் குழப்பவாதிகள் என்கின்றனர்.

10.கேள்வி: சமகால பிரச்சினைகள் தொடர்பில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
பதில்:- மாறிவருகின்ற அரசியல் நிலையை அவதானிக்கின்ற பொழுது அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுகின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் இரண்டு கூறுகளாகப் பிரிந்து, கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைத்து, வரவிருக்கின்ற தேர்தல்களில் தனித்தனியாகப் போட்டியிட்டு தமிழ் மக்களுக்கென்று தனியாக ஒரு தலைமை இல்லை என்பதை நிரூபித்து அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் சிக்குண்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தைச் சின்னாபின்னமாக்கப் போகிறார்கள்.
இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, மக்கள் மத்தியில் பணிசெய்கின்ற, கொள்கை அடிப்படையில் செயற்படுகின்ற அரசியல் தலைமையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் சிந்தித்துச் செயற்படுகின்ற அனைவரும் ஒரு கொள்கையை வகுத்து அதனை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அதற்காக மக்களை அணிதிரட்டி அவர்களின் பேராதரவுடன் அரசியல் போலிகளையும் தரகர்களையும் அரசியல் அரங்கிலிருந்து தூக்கியெறிய முன்வரவேண்டும். இது ஒன்று மட்டுமே தமிழ் மக்களின் வளமான வாழ்விற்கு வழிவகுக்கும்.