Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

திறந்தவெளிச் சிறைச்சாலையில தான் நான் இருக்கிறன்

/ தோல்வாத்திய உருவாக்கற் கலைஞர் சதாசிவம் தெய்வேந்திரன். வேர்களின் திறமையும் தியாகமும் வெளியில் தெரிவதில்லை என்பதுபோல் பலரது அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் செய்நேர்த்திகளும் வெளியில் தெரிவதில்லை. அவர்களும் அதுபற்றி எந்தவித கவலையுமின்றி தமது கடமையை சத்தமின்றி செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் கடந்த 23 வருடங்களாக தனது தொழில் நேர்த்தியாலும் நம்பிக்கைப்பண்பாலும் உயர்ந்து தோல்வாத்தியக் கருவிகளை உருவாக்கும் கலையில் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் சதாசிவம் தெய்வேந்திரன். கடந்த 23வருடங்களில் 12ஆயிரத்திற்கு மேற்பட்ட மிருதங்கங்களை செய்திருக்கிறார். கச்சேரி கிழக்கு […]

08.05.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
OLYMPUS DIGITAL CAMERA

/

தோல்வாத்திய உருவாக்கற் கலைஞர் சதாசிவம் தெய்வேந்திரன்.

வேர்களின் திறமையும் தியாகமும் வெளியில் தெரிவதில்லை என்பதுபோல் பலரது அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் செய்நேர்த்திகளும் வெளியில் தெரிவதில்லை. அவர்களும் அதுபற்றி எந்தவித கவலையுமின்றி தமது கடமையை சத்தமின்றி செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் கடந்த 23 வருடங்களாக தனது தொழில் நேர்த்தியாலும் நம்பிக்கைப்பண்பாலும் உயர்ந்து தோல்வாத்தியக் கருவிகளை உருவாக்கும் கலையில் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் சதாசிவம் தெய்வேந்திரன். கடந்த 23வருடங்களில் 12ஆயிரத்திற்கு மேற்பட்ட மிருதங்கங்களை செய்திருக்கிறார்.
கச்சேரி கிழக்கு யாழ்ப்பாணத்திலுள்ள புகைவண்டிப்பாதைக்கு அருகில் அமைந்திருக்கும் தனது வீட்டில் தோளில் கிளியொன்று அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்க அதனோடு உரையாடியபடி தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தவரோடு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கட்டுமரம் இணையத்தளத்துக்காக உரையாடினேன்.
“என்னைப்பற்றி என்ன சொல்லக்கிடக்கு என தயங்கியவர் சரி நாலுபேருக்கு பிரியோசமெண்டா நல்லதுதானே” என்றுவிட்டு தன்னைப்பற்றியும் தனது தொழில் பற்றியும் பேசத்தொடங்கினார்.

அறிமுகமும் ஆரம்பமும்
இது எங்கட பரம்பரைத் தொழிலில்லை. எங்கட ஊர் சரவணை அங்க சரவணை ஸ்ரீ செல்வக்கதிர்காமம் என்று ஒரு கோயிலிருக்கு. அதுக்கு எங்கட குடும்பம்தான் ஆதீன கர்த்தாக்களா இருந்தது. முந்தி அங்க நடக்கிற பஜனைகளில உடுக்கு வாசிக்கிறனான். பள்ளிக்கூடத்தில ஆறாம் ஆண்டு படிச்சுக்;கொண்டிருந்த காலப்பகுதியில nஐயசோதி பாலச்சந்திரன் என்ற ஒரு வாத்தியார் படிப்பிச்சவர். அவர் பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்து வீட்டில இருந்து தவில் வாசிச்சுக்கொண்டிருப்பார். அப்ப நான் பள்ளிக்கூடம் முடிஞ்சு வரேக்க அவற்ற வீட்ட போய் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருப்பன். அப்ப நெடுக நிக்கிறான் என்டிட்டு ஒரு நாள் கேட்டார்

/

‘எல்லாரும் வீட்ட போட்டாங்கள் நீ ஒவ்வொருநாளும் நிக்கிறாய் இதை நீ பழகப்போறியா” என்று நானும் “ஓம்” என்று சொல்ல “சரி இவளவுநாளும் நான் வாசிச்சதை பார்த்தனிதானே இதில ஏதாவதொண்டை வாசிச்சுக் காட்டு” என்டார். அப்ப தவில் வாசிக்க முதல் ஆரம்பத்தில வாசிக்கிற பிள்ளையார் துதியை நான் கேட்ட ஞானத்தை வைச்சு வாசிச்சன். அதைக் கேட்டிட்டு சரி நீ கெட்டிக்காரன் உனக்கு நான் முறைப்படி பழக்கிறன் என்டிட்டு பழக்கினார். பிறகு நான் எங்கட கோயில வாசிச்சனான். பிறகு அதை முழுமையான தொழிலா செய்யாமல் சும்மா வாசிச்சுக்கொண்டிருந்தன். பிறகு அவரிட்டயே தவில் எப்பிடி செய்யிறது என்று கேட்டு தவில் தட்டு போடுறதை பழகினன். பிறகு புளியங்கூடல்ல வடிவேல் என்டவரிட்ட போய் நின்று தவில் செய்யிறது எப்பிடி என்று பழகினன். அவரிட்ட இருந்து அவற்ற மூத்த மகன் செல்வராசா என்றவர் தவில் செய்யிறதில இருக்கிற நுட்பங்கள் தோலின்ற தன்மைகளை சொல்லித்தந்தார்.
இப்பிடியே இருக்கேக்க பிறகு எனக்கு ஒரு டொல்க்கி கிடைச்சது அதுக்கும் சும்மா தோலை கட்டிப்போட்டு அடிச்சுக்கொண்டு திரிஞ்சன் அப்ப எனக்கு தோலுக்கு சாதம்(மிருதங்கத்திற்கு மையத்தில் கறுப்பாக உள்ள பகுதி) போடுறது எப்பிடி என்று தெரியாது. அப்ப அதையும் அறிஞ்சுகொள்ள வேணுமென்டு கனபேரிட்ட கேட்க ஒருத்தரும் அதை சொல்லித்தர முன்வரேல்ல. ஆயுள்வேதம் அழிஞ்சு போனதுக்கு காரணம் இதை மற்றவர்களுக்கு சொல்லிக்குடுக்காம போனதுதான். அதைப்போல இதையும் யாரும் சொல்லித்தர முன்வரேல்ல. கேட்க அதை நீ செய்யமாட்டாய் அது பெரியவேலை என்று தட்டிக்கழிச்சினம்.

முழுநேரத் தொழிலாக மாறியமை
பிறகு 95ல பிரச்சனைக்கு யாழ்ப்பாணம் வந்திட்டம.; அப்ப நான் ழட படிச்சு முடிச்சிட்டன். தொடர்ந்து படிக்கேலாம போட்டுது. அதுக்குப்பிறகு கொஞ்சநாள் ரேடியோ மெக்கானிசம் பழகினன் அதையும் பிரச்சனை என்டதால கைவிட்டிட்டு சும்மா இருந்தன். அந்த காலப்பகுதியில கூத்துக்கள். நாடகங்களுக்கு டொல்க்கி வாசிக்கப் போவன். அப்பதான் என்ர மச்சான் ஒராள் “நீ இதை நல்லா செய்யிறாய் இங்க இதை செய்யிறதுக்கு ஆக்கள் இல்லை, குறைவு அதால நீ போய் இதை கோவிந்த பிள்ளையிட்ட(பிரலப தோல்கருவி உருவாக்குனர்) பழகு என்டார்”. அப்ப அங்க போய் ஒன்டரை வருசம் வேலை செய்தனன். அங்கயும் வேலை நுட்பங்களை கற்றக்கொள்ளுறது கடினமா இருந்தது. பிறகு அங்கயிருந்து வெளியால வந்து இதில உள்ள நுட்பங்களை தேட தொடங்கினன். அப்பிடி தேடி வெளியில கொஞ்சம் அறியக்கூடியமாதிரி இருந்தது. பிறகு தனிய செய்ய தொடங்கினன்.
அதுக்குப்பிறகு சரி நெடுகலும் எல்லாரும் செய்யிற மாதிரி செய்யாம புதுசா ஏதாவது செய்யம் என்டு முடிவெடுத்து வார் போடாம சில்வர் தட்டில நட்டுப்போட்டு இறுக்கி விரும்பினமாதிரி ரியுன் செய்யக்கூடிய மாதிரி செய்தன். வாரில செய்யிறதைவிட இதில கூடுதல் வசதி இருக்கும். அதை தெரஞ்ச ஒருவர் பேஸ்புக்ல போட்டுவிட கேரளாவில இருக்கிற திவ்யகுருசர்மா என்றவர் பார்த்திட்டு என்னை இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போய் அங்க இந்த மிருதங்கத்தை அறிமுகப்படுத்தினார். அதோட இந்தியா கேரளாவில தங்கிநின்று அவர்களுடைய தோல்வாத்திய தயாரிப்பு முறைகளையும் கற்றுக்கொண்டுவந்தன்.
ஆரம்பத்தில என்ர தேவைக்காக செய்ய வெளிக்கிட்டது இப்ப அதுவே தொழிலாகிப் போட்டுது. இலங்கை மட்டுமில்லை வெளிநாடுகளுக்கும் கூடுதலா செய்து அனுப்புறன். வெளிநாட்டில குளிர் பிரதேசம் எண்டதால சாதாரண வடிவிலான மிருதங்கம் தோல் இளகக்கூடிய சந்தர்ப்பம் நிறைய இருக்கு அதால அவையள் இந்த புதிய வடிவ மிருதங்கத்தைத்தான் கூடுதலா விரும்பினம்.

நட்பும் குடும்பமும்
இந்த வேலையில முக்கியமா காசை எதிர்பார்த்து செய்ய ஏலாது இதை கடமையாகவும் அர்ப்பணிப்போடவும்தான் செய்ய வேணும். எந்தத் தொழில் செய்தாலும் எதில முன்னேறுவது என்றாலும் ஆருடையாவது உதவி இருக்க வேணும். அப்பிடி நான் இந்தத் தொழிலில குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவில முன்னேறி இருக்கிறனென்டா அதுக்கு முக்கிய காரணம் நண்பர் சதா வேல்மாறன்தான்.
ஒரு மிருதங்கக் கலைஞன் தன்னுடைய கலையை இன்னொருவருக்கு பழக்கி விடுறது வழமை. ஆனா ஒரு மிருதங்கம் தயாரிக்கிற ஒருவனை அந்தத்துறையில வளர்த்து விடுறதுக்கு முன்னிண்டு ஊக்குவிச்சது அவர் தான். ஆரம்பத்தில தன்னுடைய மிருதங்கங்களை தந்து நீ அப்படி செய்துபார் இப்பிடி மாத்தி செய்துபார் என்று உதவி செய்தது அவர் தான். நான் பிழையாகச் செய்யும் போது கூட திரும்பத்திரும்ப என்னட்டையே வந்து தன்னுடைய வேலைகளை செய்துகொண்டு போவார். அவர் என்னில வைச்ச நம்பிக்கை தான் நான் இப்பிடி வளரக்கூடியதா இருந்தது.
இன்னும் நான் முழுமையா பழகி முடியேல்ல இன்னும் எவ்வளவோ கற்றுக்கொள்ளவேண்டி இருக்கு. இங்க இதுகள செய்யிறது குறைவுதானே அதால ஆலையில்லா ஊரில இலுப்பைப்பூ சக்கரை என்டதுமாதிரி நான் இருக்கிறன். இதில நான் அறிஞ்சுகொளள் எவ்வளவோ விசயம் இருக்கு.
என்ர குடும்பத்தில மனைவி, பிள்ளைகள், மருமகன் இப்பிடி எல்லாருமே இந்தத் தொழிலை செய்ய பழகியிருக்கினம். இது இப்ப என்ர குடும்பக் கலையாகப் ஆகிவிட்டது. நான் எனக்குத் தெரிஞ்ச இதில இருக்கிற நுட்பங்களை யாருக்கும் ஒளிவுமறைவின்றி சொல்லுறனான்.
23வருசமா செய்துகொண்டிருக்கிறன். 12ஆயிரம் மிருதங்கத்துக்கு மேல செய்திட்டன். இறைக்காத கிணறு பாசி பிடிச்சிடும் என்றுவினம் அதால ஓடர் இல்லாட்டியும் ஏதாவதொன்றை செய்துகொண்டிருப்பன்.

தோல்கருவிகள் உருவாக்கும் முறை
மிருதங்கம், தபேலா, டோல்க்கி, பேரிகை, உடுக்கு, தப்பு எல்லாம் செய்யிறனான். அதைவிட கொங்கட் ட்ரம், பேஸ்ரம் அதுகளும் செய்யிறது. காரைநகர் அம்மன் கோவிலுக்கு பெரிய பேரிகை செய்தனான். இலங்கையில பெரிய பேரிகை அதுதான்.
ஆட்டுத்தோல். மாட்டுத்தோல், எருமைத்தோல். உடும்புத்தோல் எல்லாம் பாவிக்கலாம். எருமைத்தோல் இங்க இல்லை எடுக்கிறது கஸ்டம். அதுதான் மிக நல்லது இந்தத்தோல் தண்ணியில ஊறினாலும் உடன காயும். இளகிற தன்மை குறைவு. நாதத்துக்குரியது ஆட்டுத்தோல்தான். ஆட்டுத்தோல் மிருதங்கத்துக்கு நல்லது. தவிலுக்கு ரெண்டு தோலும் பாவிக்கலாம். உடுக்குக்கு மாட்டின்ர சவ்வு நல்லது. ஆதைப்போல உடுக்கு கஞ்சிராவுக்கு உடும்புத்தோல் நல்லது அது எடுக்கிறது கஸ்டம்.
மாநகரசபையின்ர கொல்களத்தில போய் தெரிவுசெய்து தோல் எடுக்கவேணும். மரங்களை நாங்கள் செய்யிறதில்லை. தோல் மட்டும்தான் போடுறது. ஒரு மிருதங்கத்திற்கு ஒரு பக்கம் மீட்டடிக்க ஒருநாள் வேணும். சாதம் போடவும் ஒருநாள் வேணும் எல்லாமா குறைஞ்சது ரெண்டு மூன்று நாள் வேணும். கூடுதலா நான் செய்தது மிருதங்கம்தான். மிருதங்கமும் தபேலாவும்தான் என்னட்ட கூடுதலா தேடி வருவினம். வெளிநாட்டுக்கு கொண்டுபோறவை சீசனுக்கு தான் செய்வம்.
1 மாதத்துக்கு 15 மிருதங்கங்கத்துக்குமேல செய்யிறத்துக்கு ஓடர் வரும். மழைகாலம் எங்களுக்கு கஸ்டம் தோலை காயவைக்க ஏலாது. மழைகாலத்தில வேலையும் செய்ய ஏலாது தோல் இளகிக்கொண்டிருக்கும். மழைகாலத்துக்கு ஏற்றமாதிரி கோடைகாலத்தில தோல்களை சேமிச்சு வைப்பம்.
பச்சையாகக் கொண்டுவந்த தோலை கட்டையிலயோ அல்லது நிலத்திலையோ எல்லாப்பக்கமும் இழுத்து ஆணிதைச்சு காயவைப்பம். ஒரு ஆட்டுத்தோல் சரியான வெய்யிலில காயும்போது 2மணித்தியாலத்தில காய்ந்துவிடும். காய்ந்த தோலை மூன்று மாதத்துக்கு இருப்பில வைக்கவேணும். பிறகு அதை தேவையான அளவு வெட்டி செய்வம். தோலில முடி இருக்கும் பக்கத்தில சாம்பலை தூவிவிட்டு கத்தியால் சுரண்ட முடி இல்லாமல் போகும். மாட்டுத்தோல் காய மூன்றுநாள் வேணும். கொட்டுத்தோல், உட்காரத் தட்டு, மீட்டுத்தோல் எல்லாத்தையும் படிப்படியாக அடுக்க வேணும். ஒரு கட்டையின்ர பாதி சாதம் என்ற அளவில இருக்க வேணும் சிலதுகள் தேவைக்கேற்றமாதிரி கூடிக் குறையும் அது கஸ்டமருடைய தேவையைப் பொறுத்தது.
பசுத்தோல்தான் மிருதங்க மீட்டுத்தோலுக்கு நல்லது. மாட்டின்ர முதுகுக்குறிக்கு மேற்பக்கமான பகுதி மென்மையான பகுதி குறிக்குக் கீழ்ப்பக்கம் தடிமனான பகுதி மொத்தமான பகுதியை வாருக்கு பாவிக்கலாம் மென்மையான பகுதியை மீட்டுத்தோலுக்கு பாவிக்கலாம்.
யாழ்பாணத்தில வளர்க்ப்படுகிற ஆடுகள் தவிடு புண்ணாக்குகளை போட்டு வளர்க்கிறதால கொழுப்புப் பிடிச்சிரும் தோலில கொழுப்பு இருக்கிறதால தோல் ஈயும் தன்மை இருக்கும். இலைதளைகளை தின்று வளருகிற ஆடுகளின்ர தோல் தடிமனாக இருக்கும் ஈயும் தன்மை இருக்காது இதுதான் நல்லது.
ரோமங்களின்ர அடர்த்தி கூடுதலாக இருக்கிற தோல் தடிமனான தோலாக இருக்கும் அடர்த்p குறைஞ்சளவில இருக்கிற தோல் மென்மையாக இருக்கும் அதையும் கவனத்தில எடுத்து செய்யவேணும்.
தோலுகளில கறுப்புப் புள்ளி வெள்ளைபடுதல் போல இருக்கிற தோல்களிலiயும் எதுவும் செய்ய ஏலாது. தோல்களை இலக்கம்போட்டு பிரிச்சு எதுஎது என்னத்துக்குப் பாவிக்கிறதென்று பார்த்து அதுகளை பாவிப்பம். பலா மரம் திருக்கொண்டல் மரங்கள் காலங்கூடின மரங்கள் நல்லது. அதுகளையும் தெரிவுசெய்து எடுக்கவேணும்.
என தன்னுடைய தொழில் ரகசியங்களை மிக பெருந்தன்மையோடு வெளிப்படுத்துகிறார் தேவேந்திரன்.

தொழிலில் புது முயற்சி
ரயில் வண்டி ஒன்று பெருத்த சத்தத்துடன் வரும் சத்தத்தைக்கேட்டு அது கடந்துபோகும்வரை அமைதியாக இருந்தவர் மீண்டும் தொடர்ந்தார். நான் வழக்கமான தபேலாவை விட புதிதாக ஏதாவது செய்ய முயற்சிசெய்து பாப்பன். இப்ப ஒன்று செய்துகொண்டிருக்கிறன்.
ஒரு தபேலாவில ரெண்டு பக்கமும் சுருதி மாறும். ஒருபக்கம் ரெண்டு கட்டை, மற்றப்பக்கம் 5 கட்டை தேவையான நேரம் அதை திருப்பிற்று வாசிக்கலாம் கூட்டிக்குறைச்சு மினக்கடத் தேவையில்லை. அது இன்னும் வெளியால அறிமுகப்படுத்தேல்ல இன்னும் கொஞ்ச வேலை செய்யவேணும்.
யுhழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறைக்குப் போய் வேலைகளைச் செய்து காட்டிறனான். மிருதங்கத்தின்ர பரிணாமம் யாழ்ப்பாணத்தில அதிகம். பாவனையும் கலைஞர்களும் அதிகம் அதால அதின்ர வளர்ச்சி கூடுதலா இருக்கு.
சிங்கள கலைஞர்கள் மிருதங்கம் உருவாக்கிறது குறைவு அதில பெரியளவு தனித்துவமும் அவையிட்ட இல்லை ஆனா தபேலா உருவாக்கிறதில அவர்கள் சிறந்தவர்கள்.
எனக்குப் பிறகு என்ர பிள்ளைகள், மருமகன் எல்லாரும் இதை கொண்டு நடத்துவினம் இந்தத்தொழிலால எந்தக்குறையும் இல்லை குடும்பத்தை திருப்திகரமா நடத்துற அளவுக்கு வருமானத்தை தருது.

அர்ப்பணிப்பும் பொறுமையும் முக்கியம்

இப்ப நான் திறந்தவெளிச் சிறைச்சாலையில .இருக்கிற மாதிரித்தான் இருக்கிறன். வெளிய போறதுக்கு நேரம் கிடைக்காது தொடர்ந்து இதிலயே இருக்கவேண்டி இருக்கும் இப்பிடி அர்ப்பணிப்போடதான் இந்தத்தொழிலை செய்யலாம் நேரம்குறிச்சு செய்ய ஏலாது. பொறுமை இருக்கவேணும்.
ஒரு வேலை செய்தா எனக்குத் திருப்தி கிடைச்சாத்தான் நான் அதை கையளிப்பன். விருது தாறது துறை சார்ந்து தெரிஞ்சவர் தந்தால்தான் விருதுக்கும் விருதை பெறுபவருக்கும் பெருமையும் பெறுமதியும் கிடைக்கும்.
ஒருவர் தான் விரும்பி ஆர்வத்தோட அர்ப்பணிப்போட இருந்தாத்தான் இதை சரியாப் படிக்கலாம், பழகலாம் இதை மற்ற கற்கைநெறியலைப்போல படிச்சிட்டுப் போகேலாது.
ஏன தன்னுடைய தொழிலைப்பற்றி பெருமையாகவும் சந்தோசமாகவும் கூறுகிறார் இந்த தோல்வாத்திய உற்பத்திக் கலைஞர்.
கண்டவற்றுக்கெல்லாம் விழாக்களும் விருதுகளும் கொடுத்துக்கொண்டாடிக்கொண்டிருக்கும் நாம் இப்படி சத்தமில்லாது காரியமாற்றிக்கொண்டிருக்கும் கலைஞர்களை எப்போது கண்டுகொள்ளப்போகிறோம். அது பற்றி கொஞ்சமேனும் சட்டைசெய்யாது மீண்டும் தோல்களோடும் கட்டைகளோடும் தன்னுடைய வேலையில் மூழ்கிவிட்டவரின் தோளில் மீண்டும் கிளி வந்து அமர்ந்து பேசத்தொடங்கியது.