Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

டக்ளஸ் தேவானந்தா
தேசிய நல்லிணக்கம் என்பது யுத்தத்தினால் காயப்பட்ட மனங்களுக்கு மருந்து தடவுவதாக இருக்க வேண்டும்

“தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றைச் சாத்தியப்படுத்துவதும், தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாக சாத்தியப்படுத்துவதும் சமாந்திரமாக அணுகப்பட வேண்டும். தேசிய நல்லிணக்கம் என்பது யுத்தத்தினால் காயப்பட்ட மனங்களுக்கு மருந்து தடவுவது போல் அமைய வேண்டும்.”என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் நாட்டில் நல்லிணக்கத்திற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு சில அடிப்படை விடயங்களை செய்வது அவசியமாகும். தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான […]

04.07.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

“தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றைச் சாத்தியப்படுத்துவதும், தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாக சாத்தியப்படுத்துவதும் சமாந்திரமாக அணுகப்பட வேண்டும். தேசிய நல்லிணக்கம் என்பது யுத்தத்தினால் காயப்பட்ட மனங்களுக்கு மருந்து தடவுவது போல் அமைய வேண்டும்.”என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் நாட்டில் நல்லிணக்கத்திற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு சில அடிப்படை விடயங்களை செய்வது அவசியமாகும்.


தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதியான விசாரணையும் பரிகாரங்களும் காணப்படுவது, அர்த்தபூர்வமான மீள்குடியேற்றச் செயற்பாடுகள். வடக்கு கிழக்கிலிருந்து மேலதிகமான படைகளை அங்கிருந்து நீக்கம் செய்வது போன்ற தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முதன்மைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும்.

அதே போல் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளானது பெரும்பான்மை சிங்கள மக்களிடமும் சகோதர முஸ்லீம்களிடமும் அவர்களது சந்தேகங்கள், குறைபாடுகள் அபிலாசைகள் என்பவற்றை உள்ளடக்கி அர்த்தபூர்வமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். மூவின மக்களிடமும் அச்சத்திற்கும் சந்தேகத்திற்கும் இடமின்றி தேசிய நல்லிணக்கம் வளர்த்தெடுக்கப்படும் போதே தீர்வுக்கான தளம் உறுதிமிக்கதாய் அமையும் என மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இனப்பிரச்சனை ஆயுதப்போராட்ட வடிவமாக ஆரம்பிக்கும் போது போராளியாகவும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை அடுத்து ஜனநாயக ரீதியில் அரசியலில் செயற்பட்டு வருபவரும், இலங்கை அரசியல் வரலாற்றில் அதிக காலங்கள் அமைச்சராக இருந்தவரும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரனாயக்கா குமாரத்துங்க மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் அமைச்சரவையில் இருந்தவருமான இன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கட்டுமரம் இணைத்தளத்துக்காக உரையாடினோம்.

நீங்கள் ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டதுக்கான காரணம்? அப்போதை சூழ்நிலையில் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்திற்கு ஒன்று சேர்ந்ததுக்கான களநிலைமை என்ன?

அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்குத் தலைமை கொடுத்தோர் உதாரணமாக, சேர்.பொன் இராமநாதனில் தொடங்கி ஜி.ஜி பொன்னம்பலம், செல்வநாயகம் மற்றும்அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட்டவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்ற வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களைப் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தத் தலைமைகளின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தன. அந்த ஏமாற்றமும், அதிருப்தியும், அரசுகளின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுமே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராடச் செய்தது. நாம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து தலைமை வகித்துப் போராட தொடங்கிய காலத்தில் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை ஒருபுறமும்,அரசின் ஜனநாயக ஒடுக்கு முறைகள் மறுபுறமுமாக இருந்தது. இவற்றிற்கு எதிராகப் போராடிய அதேவேளை நாம் பல வெகுஜனப் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

இன்று உங்களுடைய வயதையும் அனுபவத்தினையும் வைத்து நோக்கும் போது அன்றைய நிலைமையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தினை நம்பியது சரியானதா?

தமிழ் அரசியல் தலைமைகள் மீதான நம்பிக்கை அற்றுப்போய் இருந்த நிலையிலும், அரசின் ஜனநாயக ஒடுக்குமுறைகள் அதிகரித்திருந்த நிலையிலும் எமது உரிமைகளை வென்றெடு;ப்பதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்ததை காலத்தின் கட்டாயமாகவே கருதுகின்றேன். ஆனால், ஆயுதத்தைக் கையில் எடுத்த தமிழ் இயக்கங்கள் தங்களுக்குள்ளும், தமக்கிடையேயுமான ஜனநாயக மறுப்புக்களில் ஈடுபட்டது போராட்டத்திற்கு பாதிப்பாக அமைந்தது. நாங்கள் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சாதக பாதகங்களை ஆராய்ந்து போராட்டத்தின் பாதையையும் வடிவத்தையும் அமைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் அது போராட்டத்தின் திசையைச் சிதைத்து விட்டதுடன், போராட்டத்தை பலவீனப்படுத்தியும் விட்டது.

இளைஞர்கள் அன்று பல குழுக்களாக பிரிந்தனர். நீங்களும் ஒரு குழுவின் இராணுவத்தளபதியாக இருந்தீர்கள். அந்த குழுக்கள் பிரிவதற்கான காரணம்?

/இயக்கங்கள் தனித்தனியே தொடங்கப்பட்டதற்கு அந்த நேரச் சூழலும், தலைமை கொடுத்தவர்களின் கொள்கை வகுப்புக்களுமே காரணமாக இருக்கும். ஏற்கனவே நான் கூறியது போல ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் தமிழ் மக்களின் விடுதலை, அரசியலுரிமை என்பவற்றைத் தமது இலக்காகக் கொண்டிருந்த போதும் பொது எதிரியையும், போராட்ட வடிவத்தையும் வகுப்பதில் வேறுபாட்டைக் கொண்டிருந்தார்கள். நண்பன் யார்? எதிரி யார்? என்ற தெளிவற்ற நிலையிலேயே இருந்தார்கள். இயக்கங்களுக்கு இடையே தலைமைப் போட்டியும், சக இயக்க முரண்பாடுகளும் ஏற்பட அதுவே காரணமாக அமைந்தது. இலக்கு நோக்கி பொது வேலைத்திட்;டத்தில் இணைய முடியாமல் போனமைக்கு இதுவே காரணமாகும். நான் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சக தலைமையாகவும் அதன் இராணுவத் தளபதியாகவும் செயற்பட்டேன். அந்தக் காலத்தில் உள் இயக்க மற்றும் சக இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடுகளை வன்முறைகள் ஊடாகத் தீர்த்துக்கொள்வதிலேயே சக இயக்கங்கள் ஈடுபட்டபோது. நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. பெரும்பான்மைக்குச் சிறுபான்மை கட்டுப்படுவது, விமர்சனம் சுய விமர்சனம் எனும் ஜனநாயக மத்தியஸ்த்துவத்தின் ஊடாகவே முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தினேன். எனது இந்த கருத்து நிலைப்பாடு காரணமாக, வன்முறையூடாக பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முற்பட்டவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்கு அப்போது இந்தியாவிலிருந்து சக தலைமையாகச் செயற்பட்ட தோழர் பத்மநாபா அவர்களுக்கும் எனக்கும் இடையே இடைவெளிகளை ஏற்படுத்த சிலர் சதி செய்தனர். அந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு 1986ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தேன். பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்காததைத் தொடர்ந்து எனது கருத்துக்களுடன் இணங்கி என்னுடன் வந்த தோழர்களுடன் தனியாக செயற்படத் தொடங்கினேன். 1986ஆம் ஆண்டு நடுப்பகுதிக்கும், நான் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய 1990ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குமிடையே நான் இந்தியாவில் தங்கி இருந்ததால் அக்காலப் பகுதியில் இலங்கையில் நடந்த நல்லதற்கும், கெட்டதற்கும் நான் பொறுப்பல்ல. ஆனாலும் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தியவன் என்பதால், எமது மக்களின் அவலத்திற்கு உரிய கௌரவமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எனது கடமைப்பொறுப்பு என்று நம்புகின்றேன். அதற்காகவே இன்னும் அரசியல் வழிமுறையூடாகப் போராடிக்கொண்டும் இருக்கின்றேன். நான் முன்னெடுத்துவரும் யதார்த்த அரசியல் வழிமுறையே சரியான வழிமுறை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. எமது வழிமுறையை விமர்சித்தவர்களையும், எம்மைத் தூற்றியவர்களையும் வரலாறு எமது வழிமுறை நோக்கி இழுத்து வந்துவிட்டுள்ளது. எமது வழிமுறைக்கு வந்து சேர்ந்தவர்கள் எமது அணுகுமுறைப் பொறிமுறைக்கு வரவில்லை என்பதையும் நான் தொடர்ந்து கூறிவருகின்றேன். இதனால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றார்கள். இன்று நீங்கள் பார்க்கும் தமிழர் அரசியல் சூழல் இதுதான்.

இந்திய உளவுத்துறையின் பூளோக அரசியல் நலனுக்காக தமிழ் போராட்டக் குழுக்களை சிதைத்து தன்னுடைய நலனை இந்தியா முன்னுறுத்தியது. அதற்கு அன்றைய போராட்ட குழுக்கள் வழிவிட்டன எனும் விமர்சனத்துக்கு உங்களுடைய பதில்? அன்றைய விடுதலைப் போராட்ட குழுக்கள் இந்திய அரசியலைப் புரிந்திருக்கவில்லையா?

அன்றைய காலகட்டத்தில் இந்திய நலனும், தமிழ் மக்களின் நலனும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததாகவே இருந்தது. தமிழ் இயக்கங்கள்தான் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்தியா செய்த பேருதவிகளை நாம் மறந்து விட முடியாது. நீங்கள் கூறுயதைப்போல் இந்தியா தனது நலனிலிருந்து அதைச் செய்திருந்தாலும் அவற்றை ஈழ மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நாமே தீர்மானித்திருக்க வேண்டும். அவ்விடயத்தில் தமிழ் இயக்கங்கள் தவறு இழைத்திருக்கின்றன. தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா பின்புலமாக இருந்த வாய்ப்பானது அன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானது. இன்றும் கூட இந்தியாவின் அனுசரணையும் பங்களிப்பும் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரை இன்றியமையாததாகும்.

 

ஆயுதப்போராட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்கள் பெற்றது என்ன? அன்று நீங்களும் ஒரு ஆயுதவழிப் போராளியாக இருந்தவர் என்ற வகையில் உங்கள் கணிப்பு என்ன?

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டம் அதற்கு ஊடான மாகாணசபை முறைமை ஒரு பொன்னான வாய்ப்பாகும் என்று நான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து கூறிவருகின்றேன். நான் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் இலங்கை – இந்திய ஒப்பந்தமானது அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும், இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களும் மகிழ்ச்சியான பொழுதொன்றில் இணங்கிக் கொண்ட தீர்மானம் அல்ல. அது பல தமிழ் இயக்கங்களின் உண்மையான அர்ப்பணிப்புக்கும், அதில் தமது உயிர்களை தியாகம் செய்தவர்களின் தியாகத்திற்கும் அக்கால கட்டத்தில் தமது உயிர்களைத் தியாகம் செய்த தமிழ் மக்களின் தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். எமது போராட்டமே இலங்கை, இந்திய ஒப்பந்தம் ஏற்படக் காரணமாகும். எனவே அர்ப்பணிப்புடன் நடத்திய போராட்டம் எதையும் சாதிக்கவில்லை என்று கூறமுடியாது. இலங்கை, இந்திய ஒப்பந்தத்தோடு போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டு இலக்கு நோக்கி நாம் பயணித்திருக்க வேண்டும். அவ்வாறு நாம் போராட்ட வடிவத்தை மாற்றி அமைத்திருந்தால் அதன் பின்னர் இடம் பெற்ற உயிர்ப்பலிகளையும் உடமை இழப்புக்களையும், இடப்பெயர்வுகளையும் தவிர்த்திருக்க முடியும். பல சீரழிவுகளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து கட்டங்கட்டமாக முன் நகர்த்தி எமது இலக்கை அடைந்திருக்க முடியும். 30 வருடங்கள் கடந்தும் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களுக்கும் முகம் கொடுத்து நாம் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து நிற்கின்றோம். இந் நிலைமையானது தமிழ் இனத்தை பொருளாதார ரீதியாகவும், இன விகிதாசார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பாரிய பின்னடைவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இவற்றிலிருந்து மீள்வதற்கு அனைத்து முரண்பாடுகளைக் கடந்தும் தமிழ் இனம் ஒற்றுமையாக முயற்சிக்க வேண்டும்.

இனக்கலவரம் நடத்தப்பட்டு அப்போது போராளிகளாக இருந்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கதுறை, போன்றோர் சிறைக் கூட்டுக்கு வெளியே கொண்டு வந்து படுகொலை செய்யப்பட்ட போது நீங்களும் அந்த சிறைச்சாலையில் இருந்துள்ளீர்கள். அந்த கலவரத்தினை பற்றிய உங்களுடைய பார்வை என்ன?

வெலிக்கடைச் சிறையில் நடைபெற்ற அந்தப்ப படுகொலைகள் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவை. சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் அன்றிருந்த அரசாங்கம்; ஏவிவிட்டு தமிழ் அரசியல் கைதிகளாக உள்ளிருந்த எங்களை கொலை செய்வதற்கு நடத்தப்பட்ட தாக்குதல்கள் அவை. இதுபோன்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல்கள் பின் நாளில் ஒரு சில நடைபெற்றிருந்தாலும் வெலிக்கடைச் சம்பவம் வரலாற்றில் கறுப்புப் பதிவாகும். அவ்வாறான நிகழ்வு இனியும் நடைபெற யாரும் இடமளிக்கக்கூடாது. சிறையில் அரசியல் கைதியாக இருந்தது தொடர்பாக பதிலளிக்கும்போது தற்போது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியும் பொது மன்னிப்பும் கிடைக்க வேண்டும் என்பதையும், அதற்கான வலியுறுத்தலை தொடர்ந்தும் நாம் முன்னிறுத்தி வருகின்றோம் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். நானும் அரசியல் கைதியாக சிறையில் இருந்தவன் என்பதால் அவர்களின் துயரங்களையும் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினை நீங்கள் பொன்னான வாய்ப்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றீர்கள். ஆனால் நீங்கள் அமைச்சரவை அந்தஸ்துக் கொண்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே அது உடைக்கப்பட்டது. அதாவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தால் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பிரிக்கப்பட்டது. ஆப்போது நீங்கள் மௌனம் காத்தது ஏன்?/

ஏற்கனவே நான் கூறியது போல இலங்கை, இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்புத்தான். அந்த வாய்ப்பை நிராகரித்து தூக்கி எறிந்தவர்களின் செயலாலும், அந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததாலும் அது உடைக்கப்பட்டுவிட்ட நிலைமைதான். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து கட்டங்கட்டமாக எமது அரசியல் இலக்கு நோக்கி செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் மத்திய அமைச்சராக கடந்த அரசாங்கத்தில் இருந்தபோதும் போதுமான அரசியல் பலத்தோடு இருக்கவில்லை. வடக்கையும் கிழக்கையும் இரண்டாகப் பிரிப்பதற்கு அரசியல் ரீதியாகத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்படி ஒரு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால் அதைத் தடுத்து நிறுத்த என்னால் முடியுமான அளவுக்குப் போராடி இருப்பேன். மாகாண சபையின் அதிகாரத்தை குறைக்கும் அரசியல் தீர்மானம் ஒன்றை மகிந்தராஜபக்ஸ அரசாங்கம் எடுப்பதற்கு முயற்சித்த போது அதை நாடாளுமன்றத்திலுள்ள 50 பேரின் கையொப்பத்தைப் பெற்றுத் தடுத்து நிறுத்தினோம். ஆனால் வடக்குக் கிழக்குப் பிரிப்பு என்பது ஜே.வி.பியினரால் நீதிமன்றத்தை நாடி எடுக்கப்பட்ட தீர்மானமாகும். வடக்குக் கிழக்கு இணைந்திருப்பதற்கான பொறிமுறை மீதே தவறு இருப்பதாக வாதிடப்பட்டு இரு மாகாணங்களாக பிரிக்கப்பட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாம் கூறிவருவது போல ஆரம்பத்திலேயே 13வது திருத்தச் சட்டத்தை தமிழர் தரப்பு ஏற்றுக்கொண்டு எமது கைகளில் அதிகாரங்களை எடுத்திருந்தால் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணமாக தொடர்ந்தும் இருந்திருக்கும். காணி பொலிஸ் அதிகாரமும் மாகாண அரசிடமே இருந்திருக்கும்;. வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதை இரு மாகாண மக்களுமே தீர்மானிக்க முடிந்திருக்கும்.

இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால் வடக்கையும், கிழக்கையும் பிரிக்ககூடியதான ஏற்பாடுகள் உள்ளதான இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை அதாவது 13 ஆவது திருத்தத்தினை ஒரு பொன்னான வாய்ப்பாக நீங்கள் கூறுவது. ஒரு யதார்தமான நிலைப்பாடாக கருத முடியுமா?

வடக்கு கிழக்கு மாகாணசபை அமைந்து ஒரு வருடத்தின் பின்னர் தேவை ஏற்படுமிடத்து தொடர்ந்தும் இரண்டு மாகாணங்களும் இணைந்தே இருப்பதா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்பதற்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாமல் மாகாணசபை முறைமையை நிராகரித்ததுடன் தொடர்ந்தும் இரண்டு மாகாணங்களும் இணைந்திருப்பதற்கான பொறிமுறையை வலுவிழக்கச் செய்ததும் தமிழர் தரப்புத் தவறாகும்.

தமிழ் இயக்கங்கள் வடக்குக் கிழக்கு மாகாணத்தை தமிழர் தாயகப் பிரதேசமாகக் வகுத்துக்கொண்டு தாயகப் பிரதேசத்தின் விடுதலைக்காகப் போராடியிருந்தாலும் இலங்கை இந்திய ஒப்பந்தமே வடக்குக் கிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக இணைத்துத் தந்தது. அந்த வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்தாமல் அதற்குப் பின்னர் நடந்து முடிந்த தவறுகளுக்கு நியாயம் தேடுவது சரியாக இருக்காது.

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு சரியான தீர்வை கொடுக்குமா? இல்லை சர்வதேச தலையீடு அவசியமானதா?

இலங்கை அரசாங்கம் சரியான தீர்வைக் கொடுக்குமா? என்பது ஒரு கேள்வியாக இருக்கலாம். கௌரவமான தீர்வொன்றைப் பெறுவதற்கு தமிழர் தரப்பு எத்தகைய முயற்சிகள் எடுத்திருக்கின்றது என்பதும் தீர்வுகளைப் பெறுவதற்குக் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களைத் தமிழர் தரப்பு எந்த அளவுக்குச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற கேள்விகளையும் நாம் கேட்க வேண்டும். சர்வதேசம் தலையிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வைப்; பெற்றுத் தரும் என்பது, தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்;பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கூறப்பட்ட பொய்யான வாக்குறுதியாகும். அது சாத்தியமான விடயம் அல்ல. சர்வதேச நாடுகள் இலங்கை அரசுடன் தத்தமது நலன்சார்ந்த அணுகுமுறைகளையே கொண்டிருக்கும். ஒருவேளை இலங்கை அரசாங்கத்தை தமது பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்காக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள், மனிதாபிமானக் கோரிக்கைகள் என்பவற்றை அழுத்தத்திற்கான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள சர்வதேச சமூகம் முற்படலாம். அவ்வாறான ஒரு சூழலை தமிழ் மக்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவேதான் தமிழர் உரிமைப் பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாடுகள் ஒரு மருத்துவிச்சியின் பணியையே ஆற்ற முடியுமென கூறிவருகின்றேன். அழுதும் குழந்தையை அவளே பெறவேண்டும் என்பதைப்போல் தீர்வுக்காக நாமே நடைமுறைச்சாத்தியமாக முயற்சிக்க வேண்டும்.

இன்று இலங்கைக்கு ஜ.நா கொடுத்திருக்கும் இரண்டு வருட கால அவகாசம் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவ்விதமாக நிறைவேற்றுவது என்பது தொடர்பில் இப்போதும் தெளிவற்ற வாதப்பிரதிவாதங்களே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்தால் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஊடாக இலங்கை அரசு மீது போர்குற்ற மற்றும் மனிதவுரிமை மீறல்களையும் விசாரணை செய்து தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அரசுக்குக் கால அவகாசம் பெற்றுக் கொடுப்பதற்கு தமது ஒப்புதலை வழங்குகின்றனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாமதிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானதாகும். என்ற நிலையிலேயே விரக்தியுடன் இருக்கின்றனர். இரண்டு வருட கால அவகாசத்திற்குள்ளாவது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியும், பரிகாரமும் கிடைக்கப்பெறுமா? என்பதற்கான உறுதிமொழியை வழங்குவதற்குக்; கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவில்லை. இவ்வாறு அடிப்படையிலேயே தமக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் புறக்கணித்து நடக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தமிழ் மக்களின் கோபம் திரும்பியிருக்கின்றது. இணக்க அரசியல் நடத்தும் கூட்டமைப்பு தாம் பதவிகள், சுகபோகங்கள் என்று வெற்றி பெற்றிருக்கின்றார்களே தவிர, தமிழ் மக்களைத் தோற்கடித்திருக்கின்றார்கள்.

தற்போது உள்ள அரசியலமைப்புக்கும் புதிய அரசியலமைப்புக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? இதன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

தற்போது இருப்பது ஒற்றையாட்சி முறைமையாகும் என்பதை விளக்கமளிக்கத் தேவை இல்லை என்று நினைக்கின்றேன். புதிய அரசியல் அமைப்பா? அல்லது அரசியலமைப்புத் திருத்தமா? என்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையே வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றம் செய்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான வழிநடத்தல் குழுவானது புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களில ;ஈடுபட்டுள்ளது. ஆனாலும் சுதந்திரக் கட்சியினர் அரசியலமைப்பு திருத்த வரைபே முன்வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். வழிநடத்தல் குழுவில் நானும் அங்கத்துவம் வகிப்பதால் எமது மக்களின் அரசியல் அபிலாi~களை முன்னிறுத்தும் காத்திரமான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோம். அதில் நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருவதைப்போல் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டுக்கு அமைவாக ஐக்கிய இலங்கைக்குள், அதிகாரப் பகிர்வே எமது வலியுறுத்தலாகும். அத்துடன் இலங்கை மதச்சார்பற்ற நாடாக இருப்பதையும் நாடாளுமன்றத்திற்கும் மாகாண சபைக்கும் இடையே மேல்சபை ஒன்று அமைக்கப்படுவதுடன் அதில் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கு 50 விகிதாசாரம் தேவை என்றும் வலியுறுத்தியிருக்கின்றோம். எமது இந்த நிலைப்பாட்டை,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் இணைந்தும் தயாரித்த அரசியலமைப்புக்கான வரைபில் வலியுறுத்தியுள்ளோம்.

தற்போதைய அரசாங்கள் எடுக்கின்ற நல்லிணக்க மயற்சிகள் தோற்றும் போகின்ற போது மீண்டும் ஓர் ஆயுதப்போராட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட ஆயுத வழிமுறையானது ஆயுதப் போராட்டங்களுக்கு முன்னர் இருந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை பாரதூரமாகச் சிதைத்து விட்டுள்ளது. தமிழ்த் தலைமைகள் தீர்வுகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை கையாண்டு எமது மக்களின் அபிலாகளை வெற்றிபெறச் செய்தால் அதற்கான தேவை எழாது.

தற்போது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்பாடுத்தாது அரசாங்கம் நல்லிணக்கப் பணிகளை மேற்கொள்வது சாத்தியமானதா?
தீர்வு ஒன்றைச் சாத்தியப்படுத்துவதும், தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாக சாத்தியப்படுத்துவதும் சமாந்திரமாக அணுகப்பட வேண்டும். தேசிய நல்லிணக்கம் என்பது யுத்தத்தினால் காயப்பட்ட மனங்களுக்கு மருந்து தடவுவது போல் அமைய வேண்டும். அதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு சில அடிப்படை விடயங்களை செய்வது அவசியமாகும். அவையாவன தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதியான விசாரணையும் பரிகாரங்களும் காணப்படுவது, அர்த்தபூர்வமான மீள்குடியேற்றச் செயற்பாடுகள். வடக்கு கிழக்கிலிருந்து மேலதிகமான படைகளை அங்கிருந்து நீக்கம் செய்வது போன்ற தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முதன்மைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும். அதே போல் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளானது பெரும்பான்மை சிங்கள மக்களிடமும் சகோதர முஸ்லீம்களிடமும் அவர்களது சந்தேகங்கள், குறைபாடுகள் அபிலாசைகள் என்பவற்றை உள்ளடக்கி அர்த்தபூர்வமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். மூவின மக்களிடமும் அச்சத்திற்கும் சந்தேகத்திற்கும் இடமின்றி தேசிய நல்லிணக்கம் வளர்த்தெடுக்கப்படும் போதே தீர்வுக்;கான தளம் உறுதிமிக்கதாய் அமையும். ஈ.பி.டி.பி. ஆகிய நாம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். ஆகையால் எம்மை வடக்குக்கும் தெற்குக்குமான இணைப்புப் பாலமாகவே நிலை நிறுத்தியுள்ளோம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவுற்ற காலப்பகுதியில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட இடமான முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் கொண்டாடப்படுவது பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

இறுதி யுத்தத்தில் எமது மக்களை அழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கு அப்போதைய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடாத்த வருமாறும் அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் என்ற வகையில் நானே செய்து தருகின்றேன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்களாக அவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு தமிழ் மக்களைப் பயன்படுத்தினார்களே தவிர, தமக்குக் கிடைக்கப்பெற்ற 22 நாடாளுமன்ற பிரதிநிதிகள் என்ற அந்தப் பலத்தை தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்துவதற்கு அவர்கள் முன்வரவில்லை. எந்தளவுக்கு எந்தளவு தமிழ் மக்கள் பலியாகின்றார்களோ, அந்தளவுக்கு அந்தளவு தமிழீழம் விரைவாகக் கிடைக்கும் என்றும், சர்வதேச நாடுகள் ஈழம் கிடைக்க இலங்கைப் பிரச்சினையில் தலையீடு செய்யும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள். மக்களின் அவலச்சாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வரவேற்றார்கள். புலிகள் இல்லாது போனால் தாம் சுதந்திரமாக அரசியல் நடாத்த முடியும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆகையால் யுத்தம் நிறுத்தப்படுவதையோ எமது மக்கள் பலியாவதையோ தடுக்கப்படுவதையோ கூட்டமைப்பினர் விரும்பவில்லை. இன்று ஆளுக்கு ஒரு பக்கமாய் கற்பூரச் சட்டி ஏற்றியும், ஈகைச் சுடர் என்றும் இரங்கல் உரை என்றும் அஞ்சலி செலுத்துவதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

யுத்தத்தில் இறந்த தமது உறவுகளை எண்ணி இழப்புக்களைச் சந்தித்த எமது மக்கள் அஞ்சலி செலுத்துவதையும் அழுது புரளுவதையும் தமது அரசியலுக்காக பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.


இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதையும் ஆத்மசாந்திக்காக கிரியைகள் நடாத்துவதையும் எவரும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது.

தாயக விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்களையும் சேர்ந்த பல்லாயிரம் போராளிகள் மரணித்திருக்கிறார்கள், அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி மரியாதை செலுத்துவது எமது மக்களின் மனதுக்கு ஆறுதலாகும். எனவே எல்லோரையும் நினைவு கூறுவதற்கு பொதுத் தினம் ஒன்றை தீர்மானிக்க வேண்டும். பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நான் கூறிவருவதுடன், நாடாளுமன்றத்தில் இவ்வாறான தனி நபர் பிரேரணை ஒன்றையும் முன்வைத்திருக்கின்றேன். பொதுத் தினத்தில் பொதுவான இடத்தில் போராட்ட வரலாற்றில் உயிரிழந்த அனைவரையும் ஒரே இடத்தில் நினைவு கூறவேண்டும். அந்த நாளை எமது மக்கள் துக்க நாளாக அனு~;டிக்க வேண்டும். அதைவிடுத்து ஆளுக்கொரு தீச்சட்டியுடன் அரசியல்வாதிகளின் தலைமையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூடிக்கலைவதாக அந்தப் புனிதமான நிகழ்வு இருக்கக்கூடாது.

இலங்கையில் பாடசாலை தமிழ் புத்தங்களில் வரலாறுகள் திரிவு படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பாக பாராளுமன்றில் நீங்கள் குரல் கொடுத்தீர்கள்? பல சந்திப்புகளும் கல்வி அமைச்சில் இடம்பெற்றன. தற்போது அதன் நிலை என்ன?

வரலாற்று நூல்களில் மட்டுமல்லாமல் இந்து சமய நூல்களிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி இருப்பது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடனும் இவ் விடயம் குறித்து தமிழில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களையும், சமூக அக்கறையுள்ளவர்களையும் இணைத்துக்கொண்டு ஆக்க பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன். அதன் பயனாக இராஜாங்க கல்வி அமைச்சர் ராதா கிரு~;ணனின் ஒத்துழைப்புடன் வரலாறு மற்றும் இந்த சமய நூல்கள் ஆக்கம் மற்றும் அச்சிட்டுப் பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் தவறுகள் இடம் பெறாதென நம்புவோம்.

சிங்கள குடியிருப்புக்கள், புத்தர் சிலைகளை தமிழ் பகுதிகளில் நிறுவுதல்; பற்றி உங்கள் நிலைபாடு என்ன?
சிங்கள குடியிருப்புக்கள் தமிழர் நிலத்தில் திட்டமிட்டு குடியேற்றப்படுவதாக போதுமான செய்திகள் இல்லை. ஆனால் புத்தர் சிலைகள் தமிழர் பூர்வீக நிலங்களில் நிறுவப்படுவது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்த வரை வரலாற்றோடு தொடர்புபட்ட இடங்களில் பௌத்த ஆலயங்கள் புனரமைக்கப்படுவதும் புத்தர் சிலைகள் நிறுவப்படுவதும் பிரச்சனைக்குரிய விடயமல்ல மாறாக எமது மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் வலிந்து புத்தர் சிலைகளை நிறுவ முற்படுவதும் தொல்பொருள் ஆராட்சி எனும் பெயரில் தமிழர் முஸ்லீம்களின் பூர்வீக நிலங்களில் பௌத்த வரலாறுகளைத் திணிப்பதும் அங்கே புத்தர் சிலைகளை நிறுவுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இவ்வாறான செயற்பாடு இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் இல்லாது செய்து விடும். இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் எழுத்து மூலம் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

வடமாகாண சபை மூலம் தமிழர்கள் பெற்ற நலன் என்ன? நீங்கள் வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?

வட மாகாண சபையைப் பொறுப்பேற்றவர்கள் அதை திறம்பட நிர்வகிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக தமக்கு இடையே தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள். தீர்மானங்களை நிறைவேற்றியதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை. மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிய கூட்டமைப்பினர், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டது அதன் நிர்வாகத்தை முடக்கி வைக்கவும், அதை சூறையாடவுமேயாகும். எம்மைப் பொறுத்தவரை மாகாணசபை முறைமையை தமிழ்மக்களின் அரசியல் இலக்கு நோக்கி முன்னகர்த்த வேண்டும் என்று விரும்புகின்றோம். அதைப் பாதுகாத்து பலப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகின்றோம். துரதிஸ்டவசமாக வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களுக்கு கிடைத்திருந்தாலும் எமது மக்களுக்குப் பயனுள்ள வகையில் மாகாணசபை செயற்பட வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். அந்த வகையில் எமது மக்களின் நலன் சார்ந்து மாகாணசபை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவை வழங்குவதற்கு நாம் பின் நிற்கவும் மாட்டோம். இதே மாகாணசபை எமது கரங்களுக்குக் கிடைத்திருந்தால் வடமாகாணத்தை வளம் கொழிக்கும் மாகாணமாக மாற்றி இருப்போம். வேலைவாய்ப்புக்களை உருவாக்கியும் சுயதொழில் மேம்பாட்டிற்கான உதவிகளைப் பெற்றுக் கொடுத்தும் பொருளாதாரத்திலும், அபிவிருத்தியிலும் எமது மக்களின் வாழ்நிலையை உயர்த்தியிருப்போம். கல்வி, சுகாதாரம், போன்றவற்றில் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொண்டு ஆரோக்கியமுள்ள சமூகத்தை வளர்த்தெடுக்கப்பாடுபட்டிருப்போம். எமக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களைக்கொண்டு நாம் எவ்வாறு சேவை செய்தவர்கள் என்பதை எமது மக்கள் அறிவார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்கான விருப்பமும் உழைப்பும் எம்மிடம் உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். எதிர்வரும் காலத்தில் மாகாணசபை செயலூக்கமுள்ளதாக செயற்படுத்தும் வாய்ப்பை மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்று நாம் நம்புகின்றோம்.

வடக்கு மாகாண சபை நியதி சட்டங்களை உருவாக்க முடியாத வடக்கு மகாகணசபை அதன் முதலமைச்சர்  பற்றிய உங்கள் கருத்து என்ன?

வடக்கு மாகாண சபையில் 300க்கும் மேற்பட்ட நியதிச் சட்டங்களை வடக்கு மாகாண சபையில் உருவாக்கியிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் அதைச் செய்திருக்க வேண்டும். ஏனைய மாகாண சபைகளின் நியதிச் சட்டங்களை எமது மாகாணத்திற்கு ஏற்றவாறு மாற்றி அதைச் செய்திருக்கலாம். எஞ்சி இருக்கும் காலப்பகுதிக்குள்ளாவது அந்தக் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். வடக்கு மாகாண சபையில் ஈ.பி.டி.பி எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் அவசியமானதும் ஆக்க பூர்வமுமான முதலமைச்சரின் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். எமது நோக்கம் மாகாண சபையை முடக்குவதில்லை எமது மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயற்படுத்துவதாகும்.