Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கும்மி கொட்டும் இளம் பெண்கள் !
அம்மனைக் குளிர்வித்தால் மழை வருமாம்.!

நான் நாகரிகத்தில் வளர்ச்சி கண்ட ஒரு நாட்டில் படித்துவிட்டு அங்குபணியாற்றிய போதும், எனக்கு இதில் நம்பிக்கை உண்டு. “ என்கிறார் இலண்டனில் இருக்கும் பொறியியலாளர் வைசாலி துரைரட்ணம்.

12.07.2017  |  
புத்தளம் மாவட்டம்

“ மல்லிகைப் பூப்பூத்து எங்கே மணக்குது…
அது எங்கே மணக்குது …
ஆண்டிமுனை மாரியம்மன் மேலே மணக்குது…!” இந்தப் பாடல் வரிகள் ஊர் முழுவதும் கேட்கிறது. பெண்கள் அனைவரும் சிறுசுகள், பெரிசுகள், இளசுகள் என பாகுபாடு இன்றி, பயிர் முளைத்த சட்டியைச் சுற்றி கும்மியடிக்கின்றனர். மேளதாளங்கள் ஒருபுறம், கும்மி கொட்டும் போது குலுங்கிச் சிரிக்கும் வளையல் ஓசைகள் மறுபுறம் என ஊரே களைகட்டியுள்ளது.
இலங்கையின் வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டம் சிலாப நகரிற்கு அருகாமையில் உள்ள ஊர்களான உடப்பு, ஆண்டிமுனை, செல்வபுரம், முந்தல் ஆகிய பகுதிகள் பெருங் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளன. நண்பிகள் குழுக்குழுவாக ஒன்றிணைந்து ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்துகொண்டு கும்மி கொட்டுகிறார்கள். ‘செவ்வாய்கொட்டு’ என்றழைக்கப்படும் இத்திருவிழா, கும்மிகொட்டு திருவிழா , முளைக்கொட்டுத் திருவிழா என்றும் பேச்சு வழக்கில் அழைக்கப்படுகின்றது. ஓவ்வொரு வருடமும் சித்திரை மாத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமையில் தானியங்களை சட்டியில் விதைத்து அது முளை கட்டி பத்தாவது நாளாக வருகின்ற செவ்வாய்க்கிழமை அன்று, கோவிலுக்குச் சென்று அம்மன் கும்பத்துக்கு அருகாமையில் வைத்து கும்மி கொட்டுவார்கள்.
“மக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க அம்மனை குளிர்விக்கிறம். அவள் எங்கள் வெப்பத்தை தணிப்பாள். அம்மை போன்ற வெப்ப நோய்கள் வராது என்பது எமது நம்பிக்கை” என்கிறார் அங்கு வந்திருந்த கனகாம்பிகை நடராசா (65)
சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் ‘காண்டாவனம்’(அதிக வெப்பம்) அப்பகுதியில் நிலவும். மாரியம்மனின் மனதைக் குளிர்வித்தால் அவள் மழையை வருவித்து வெப்பத்தைத் தணிப்பிப்பாள் என்ற நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் இந்த திருவிழாவைக் கொண்டாடுகின்றார்கள்;.
திருவிழாவிற்கான ஆயத்தங்கள்
முன்னைய காலத்தில் திறந்த வெளிகளில் மாத்திரம் கொண்டாடப்பட்ட இந்த விழாவானது. காலத்தின் தேவை கருதியும் குடித்தொகையின் பெருக்கம் கருதியும், தற்போது அப்பகுதியில் உள்ள ஆலயங்கள் தோறும் கொண்டாடப்படுகின்றது. சித்திரையில் வரும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை பத்து சிறுமியர்கள் சேர்ந்து கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று தானியங்கள் சேர்ப்பார்கள். அவ்வாறு சேர்க்கும் போது,

முளைத்த தானியங்களுடன் பெண்கள்

“கடலை சிறு பயறு…கானா மணிப்பயறு …தங்க முத்துநாச்சியார்க்கு…
எங்கும் சிறு பயறு…” என்ற பாடலைப் பாடியவாறு சென்று சேர்ப்பார்கள்;.
இதில் கடலை, பயறு, கானாமணி பயறு, எள்ளு, கொள்ளு, சோளம், நெல், குரக்கன், தினை போன்ற தானியங்கள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட தானியங்களை ஒவ்வொரு சாடிகளில் சாணமும் மண்ணும்கலந்த சாடியில் போட்டு பத்து நாளைக்கு முளைக்க விடுகின்றனர்.அந்த குறித்த சிறுமியரே அந்தப் பத்து நாளும் காலையும் மாலையும் தலையில் குளித்துவிட்டு வந்து தலையில் உள்ள நீரை முளைச்சாடியில் பிழிந்து விடுவார்கள். இவ்வாறு முளையிடப்பட்ட சாடிக்கு தூப, தீபம் காட்டி காலையும் மாலையும் வழிபடுவார்கள். இவ்வாறு முளையிடப்பட்ட சாடியைப் ‘பாலிகைசாடி’ என அழைப்பார்கள்.
பாலிகைச்சாடிக்கு நீருற்றும் சிறுமிகள் குறித்த பத்து நாளும் மச்சம் மாமிசம் எதுவும் உண்ணாது விரதமிருப்பார்கள். பத்தாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலை பூஜை நிறைவடைந்ததும். கோயிலுக்கு முன்னால் பந்தலிட்டு அலங்கரித்து, கும்பம் வைப்பர். அந்த கும்பத்தையே அம்மனாக பாவித்து அர்ச்சகர் பூஜை செய்வார். அரிசிமாவும் சீனியும் கலந்த உணவுகளை விசேடமாகப் படைப்பார்கள். பூஜை நிறைவடைந்ததும் பெண்கள் அனைவரும் கும்மியடிப்பார்கள். இதன்போதும் பாடல்கள் பாடப்படும்.
அம்மன் சிறப்புப் பாடல்களையும் பாடிப்பாடி விடியும் வரை கும்மிகொட்டுவார்கள். அதிகாலைப்பூஜை முடித்தன் பின்னர் குறித்த கும்பத்தை பத்துநாள் விரதமிருந்த ஒரு பெண்ணின் தலையில் வைத்து பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘குழவை’ கொட்டுவார்கள் (வாயால் கூ… என்று ஒலியெழுப்பல்). இவருடன் ஏனைய விரதமிருந்த பெண்களும் முளைச்சட்டியை தலையில் வைத்து கடலை நோக்கிச் செல்வர். இவர்களுடன் ஆங்காங்கே பல கிராமங்களில் இருந்தும் தமது நேத்திக்கடனை நிறைவேற்ற பல பெண்கள் ‘கரகம்’ சுமந்து வருவர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து(ஊரே திரண்டு) கடலுக்குப் போகும். கடற்கரைக்குச் சென்று அதிலும் பாடல்கள் பாடி கும்மி கொட்டிவிட்டு கடலில் முளையையும் கரகத்தையும் கரைத்துவிடுவர்.
“ நீண்ட நேரம் கும்மியடித்தது சற்றுக் களைப்பாக உள்ளது. ஆனாலும் கும்மியடிக்க அடிக்க அலுக்காது. அடிக்கலாம் போல் தோன்றுகின்றது.சின்ன வயதிலிருந்து நாங்கள் செய்யுறம் ஸ்கூல்ல பதினொறாம் வகுப்பில படிக்கிறம். இந்த நாலுபேரும் ஒரு செட்” என காட்டுகிறர் ஒரே சாறியணிந்திருந்த மோகனா வைத்தியநாதன்.

கும்மி கொட்டும் பெண்கள்

“எனக்கு இம்முறை பனிக்காலத்தில் என்றும் இல்லாதவாறான ஒரு காதுக்குத்துத் தொடங்கியது. அங்குள்ள பல டாக்டர்களிடமும் சென்று காட்டியாகிவிட்டது. தீர்ந்தபாடில்லை. பின்னர் இங்கு கரகம் சுமப்பதாக வேண்டினேன். காதுக்குத்தும் தீர்ந்தது. ஆதற்காக நான் லண்டனில் இருந்து வந்திருக்திறன்.நான் நாகரிகத்தில் வளர்ச்சி கண்ட ஒரு நாட்டில் படித்துவிட்டு அங்குபணியாற்றிய போதும், எனக்கு இதில் நம்பிக்கை உண்டு. “ என்கிறார் இலண்டனில் இருக்கும் பொறியியலாளர் வைசாலி துரைரட்ணம்.
இவ்வாறு முளைச்சட்டியையும், கரகத்தையும் சுமந்துசெல்பவர்கள் பயபக்கியுடனும் நம்பிக்கையுடனும் நடந்நீண்ட தூரம் நடந்து கடற்கரைக்குச் செல்கின்றனர்.இவ்விழாவினைப் பார்வையிடுவதற்காக சுற்றியுள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருகின்றனர். ஆனாலும் கரகம் பாலித்தல் முளைப்பயிர் வளர்த்தல் என்பவற்றை பிற ஆட்கள் பார்ப்பதை அல்லது புகைப் படம் எடுப்பதையோ அவர்கள் அனுமதிப்பதில்லை. அது ஊர் வழக்காக உள்ளது.
இந்த விழாவை இந்தியாவில் இராமநாதபுரம் பகுதியில் கொண்டாடுகின்றனர். அதற்கு முளைத்திருவிழா என்று கூறுகின்றனர். இவர்களும் தங்களது வாரிசுகளுக்குச் சொல்லிக்கொடுத்துள்ளடன். வெப்பினைத் தீர்க்கும் மருந்தாகவே இந்த கும்மிக்கொட்டை நினைத்து செய்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன.