Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வெள்ளித் திரை:
‘சினிமா’ எனும் மந்திரம் இலங்கை சமூகங்களை ஐக்கியப்படுத்தியது…!

“எனக்கு ஒரு சில தமிழ் வார்த்தைகளே தெரிந்திருந்தபோதும் எப்படியோ அந்தப் பெண்ணுடன் கதைத்தேன்”, என்கிறார் ரத்னசிறி. அவர்களுக்கிடையே காதல் மலரத்தொடங்கியது. அதன்பிறகு, தனியாக இருவரும் சினிமாக்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

07.09.2017  |  
திருகோணமலை மாவட்டம்
A movie hall in Trincomalee.

வடகிழக்கில் உள்ளவர்கள் அண்டையிலுள்ள சினிமா அரங்குகளின் அருமை நினைவுகளை இன்னும் வைத்திருக்கிறார்கள். அது சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தை ஒன்றாக இணைத்தது என்றும்  சில சமயங்களில், காதல் தொடர்புகளையும் ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

வடகிழக்கு நகரமான திருகோணமலையில் உள்ள பல சினிமா அரங்குகளில் திரையிடப்படும் சினிமாக்களை தமிழ், சிங்கள மக்கள் ஒன்றாக கண்டுகளித்து, திரைக்கதைகளை பாராட்டுவதில் ஒற்றுமை கண்டார்கள்.

தமிழ் திரைப்படங்களை பார்த்து நான் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டேன்என்று 1970 களில் நகருக்கு வந்த ஒரு மீனவரான ரத்னசிரி கூறுகிறார். “நான் இங்கு வந்த போது ஒரு தமிழ் வார்த்தை கூட எனக்கு தெரியாது. எனக்கு சினிமா பைத்திய நண்பர்கள் சிலர்  இருந்தனர். அவர்கள் சிங்கள திரைப்படமா அல்லது தமிழ் திரைப்படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. எல்லா படங்களையும் பார்த்து ரசிப்பார்கள்.”

skandharaja-and-Thuwan
skandharaja- Rathnasri, and Thuwan

அந்த நேரத்தில் நான் எனது தாயின் வீட்டில் தான் வாழ்ந்து வந்தேன், எமது அயலவர்களில் பெரும்பாலான மக்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்என்று ரத்னசிறி விளக்குகிறார். “அங்கு சினிமா நடிகை போன்று தோற்றமளித்த ஒர் அழகிய யுவதி இருந்தாள், அவள் அடிக்கடி என்னை பார்த்து சிரிப்பாள் ஆனால் பேசியதில்லை.” “அப்படியிருக்கும்போது ஒருநாள், நகர சினிமா கொட்டகையில் புதிய படம் ஒன்று திரையிடப்பட்டது. படத்தைப் பார்க்க நானும் சென்றிருந்தேன்; அங்கு குறிப்பிட்ட அந்தப் பெண்ணும் குடும்பத்துடன் வந்திருந்தாள். எனக்கு ஒரு சில தமிழ் வார்த்தைகளே தெரிந்திருந்தபோதும் எப்படியோ அந்தப் பெண்ணுடன் கதைத்தேன்“, என்கிறார் ரத்னசிறி. அவர்களுக்கிடையே காதல் மலரத்தொடங்கியது. அதன்பிறகு, தனியாக இருவரும் சினிமாக்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

பின்னர் ரத்னசிறி அந்த தமிழ் பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். இங்கு திரையிடப்பட்ட சினிமாக்கள்தான் அதற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார். அவர்களின் கதையும் ஒரு சினிமா காதல் கதை போலவே இருந்தது.

நிர்மலகாந்த் (பிளாக் ஜூலையில்,  தீ வைத்தனர்)

துவான் முஹம்மதின் கதையும் இதுபோன்றதே. திருகோணமலையில் சினிமாவுக்குச் செல்வதன் மூலமும் ஒரே சினிமாவை பலமுறை பார்ப்பதன் மூலமும் சிங்களத்தை சரளமாக பேசக் கற்றுக் கொண்டதாக கூறுகின்றார்.

“இப்போது நிலைமை மாறிவிட்டது. தொலைக்காட்சி வந்ததிலிருந்து, திரையரங்குகள் அவற்றின் ரசிகர்களை இழந்தன. பிள்ளைகள் இப்போது வருடத்துக்கு ஒரு முறைதான் சினிமா பார்ப்பதற்கு திரையரங்குகளுக்கு செல்கின்றனர். நாம் சென்ற திரையரங்குகள் எல்லாம் இப்போது சூப்பர் மார்க்கட்டுகளாகவோ அல்லது பாடசாலை அரங்குகளாகவோ மாறிவிட்டன”, என்று முஹம்மத் கவலைத் தெரிவிக்கின்றார்.


திருகோணமலை திரையரங்குகள் 1970 களில் சமூக ஒற்றுமையின் மூச்சாக இருந்தன

திருகோணமலை திரையரங்குகள் 1970 களில் சமூக ஒற்றுமையின் மூச்சாக இருந்ததை உள்ளூர் வர்த்தகர் தயானந்த ஜயவீர நினைவுகூருகிறார்.

எமக்குத் தமிழ் தெரியாது என்றாலும் நாம் தமிழ் திரைப்படங்களை பார்ப்போம். தமிழ் பாடல்களைப் பாடுவோம். திரையிடப்பட்ட படத்தின் பாடல்களை அப்போது அச்சிட்டு புத்தகமாக விற்பார்கள். நாமும் அதனை வாங்குவோம். அவை இன்னும் என்னிடமுள்ளன. அக்காலத்தை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாய் உள்ளது. ஆனால் உள்நாட்டு யுத்தத்தின் பின் எல்லாமே மாறிவிட்டனஎன்று ஜெயவீர கவலையுடன் தெரிவிக்கின்றார்.

திருகோணமலையில்  மிகவும் பிரபலமான சினிமா தியேட்டராக நெல்சன் திரையரங்கே அப்போது இருந்தது. இதன் உரிமையாளர் ஸ்கந்தராஜா என்ற ஒரு தமிழர்,  இருந்தபோதும் இதில் அநேகமாக சிங்களப் படங்களே திரையிடப்பட்டு வந்தன.

இதுபற்றி ஸ்கந்தராஜாவிடம் கேட்கையில் அவர்நான் ஒரு சிங்கள படப் பிரியன், சிங்கள நடிகர்கள் என்றால் எனக்கு உயிர்என்று கூறிய அவர்திரையரங்கில் அப்போது நாம் தமிழ் சிங்கள உறவை கட்டியெழுப்பினோம்என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.