Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

புலமைப்பரிசில் பரீட்சை...
பெற்றோருக்கா? பிள்ளைகளுக்கா?

“உன்னை நான்கு பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பினோமே… ஏன் ஆறு புள்ளிகளைத் தவறவிட்டாய்’ ’ என்று அந்தக் குழந்தையை, ஏனைய குழந்தைகள், பெற்றோர் முன்பாகவே கடிந்துகொண்டார்கள். இதுதான் பெற்றோரின் – குறிப்பாக, தமிழ்ப் பெற்றோரின் – மனோபாவமாக இருக்கிறது”

29.09.2017  |  
கொழும்பு மாவட்டம்
பரீட்சைக்கு முன் ஆசிரியர் வாழ்த்துகிறார்
– வனதேவதா

 

“ இனி எனக்கு எந்த ரென்சனும் இல்ல…மனம் லேசா இருக்கு… ”
“குடும்பத்தோட போற எல்லா கொண்டாட்டங்களையும் மிஸ் பண்ணிற்றம். அதையெல்லாம் சரிசெய்யவேணும்”
“ இந்த ஒரு வருசமா பெரும் போராட்டத்தில இருந்து விடுதலை கிடைச்சமாதிரி இருக்கு”.

இந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் 35 – 45 வயதுக்கு இடைப்பட்ட பெற்றோர்கள். அப்படி என்னதான் நடந்தது?

அண்மையில் இலங்கை பூராவும் 10 வயது நிரம்பிய 5ஆம் ஆண்டு படிக்கும் சிறார்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. பரீட்சை முடிந்து அந்தச் சிறார்களை அழைத்துச்செல்ல வந்திருந்த பெற்றோரின் மன ஆதங்கங்களே இந்தக் குரல்கள்.

இம்முறை மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களாக தூக்கம் தொலைத்து, தொ(ல்)லைக்காட்சி தொலைத்து, இன்ன பிற சந்தோஷங்களை எல்லாம் தொலைத்துத் தொலைத்துச் சேகரித்த கல்வியறிவை சுமார் இரண்டே மணிநேரங்களில் விடைத்தாள்களில் கொட்டி நிரூபித்துவிட்டு பல்வேறு மன நிலைகளில் பெற்றோரை நோக்கி வந்த மாணவர்களின் முகத்தில் சந்தோசத்தை காண முடிந்தது.

இந்தச் சிறார்களைவிடச் சந்தோசமாக இருந்த பெற்றோரின் மனநிலைகளைத்தான் மேலே உள்ள குரல்கள் வெளிப்படுத்தின.

பரீட்சை முடிந்து சந்தேசமாக வெளியேறும் மாணவர்களும் பெற்றோரும்

ஓடிவந்த பிள்ளை ஒன்றிடம்,
“இப்போது என்ன நினைக்கிறாய்?”
“டசக்கு டசக்கு பாட்டுப் போட்டுட்டு நல்லா ஆடணும் போல இருக்கு…” அவள் தனது புஷ்டியான முகம் முழுதும் மகிழ்ச்சியைப் பரவவிட்டபடி சொன்னாள்.
“அண்ணாவுக்கும் தங்கைக்கும் லீவு விட்டிருக்கேக்க எனக்கு, விளையாடக்கூட முடியேல்ல. அவர்களுடன் நல்லா விளையாட வேணும்…” என்று சந்தோசமாகக் கூறியவள், “ஆனா இப்ப அவர்களுக்கு பாடசாலை ஆரம்பமாகிவிட்டது..” என்ற சின்னக் கவலையையும் வெளிப்படுத்தினாள்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பரீட்சையில்?

“உண்மையில் நாட்டின் சிறந்த பாடசாலைகளில் வறிய மாணவர்கள் அனுமதி பெறுவதற்காகவும், அவர்தம் கல்வி உதவிக்காகவும் ஒரு வரப்பிசாதமாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புறப் பிள்ளைகள் நகர்ப்புறப் பாடசாலைகளில் இணைந்து படிப்பதற்கான கல்வி உதவித் திட்டத்தை அவர்களுக்கு வழங்குவதற்கான தகுதிகாண் பரீட்சையாகவே இது அமைக்கப்பட்டது. அதே நேரம் இந்தப் பரீட்சையில் சித்தியெய்திய வறிய மாணவர்கள் இந்தப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் நகரின் பிரபலமான பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவா.; ஆனால்…” என்று இழுக்கிறார் கொழும்பு நகரின் பிரபல பாடசாலையொன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத பிரதி அதிபர் ஒருவர்.

இந்தப் பரீட்சையில் மொத்தப் புள்ளிகள் 200. அதில் ஒவ்வொரு வருடமும் பரீட்சையின் வெட்டுப்புள்ளி இதுதான் என அரசு அறிவிக்கும். அந்தப் புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களாகக் கணிக்கப்படுவர். அந்த மாணவர்கள் பின்தங்கிய பாடசாலைகளில் படித்துக்கொண்டிருந்தால் பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனாலும் பிரபல பாடசாலைகள் தாம் மாணவர்களை உள்வாங்குவதற்காக தங்களது வெட்டுப் புள்ளிகளை அறிவிக்கும். அதேவேளை பரீட்சையில் சித்தியெய்திய வறிய மாணவர்களுக்கு சிறுதொகைப் பண உதவியையும் மாதாந்தம் அரசு வழங்கும்.

/

இந்த நிலையில், ஏன் அந்தப் பிரதி அதிபர் ~ஆனால்….| என்று இழுத்தார்?

“ஆனால்…..இன்றோ, இது ஒரு சமூக அந்தஸ்தாகவே கருதப்படுகிறது. அதிலும் முக்கியமாக, தமிழ்ப் பெற்றோர் தமது பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்துவதை தமது ஒட்டு மொத்த குடும்பத்தின் வெற்றியாகவே கருதுகின்றனர்” என்று கூறினார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பிரதி அதிபர்.

“அதுமட்டுமல்ல! நன்கு படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் அனைவருக்கும், தமது பிள்ளைகள் பாடசாலை, மாவட்ட, தேசிய மட்டத்தில் முதலிடம் பெற வேண்டும் என்ற பேராசையும் இருக்கிறது. பாடசாலையில் நடைபெற்ற மாதிரிப் பரீட்சையொன்றில் 200 புள்ளிகளுக்கு 194 புள்ளிகள் எடுத்த மாணவி ஒருவரை அவரது பெற்றோர் பாடசாலை வாசலில் வைத்தே கடிந்துகொண்டதைக் கண்டிருக்கிறேன். ~உன்னை நான்கு பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பினோமே… ஏன் ஆறு புள்ளிகளைத் தவறவிட்டாய்’ ’ என்று அந்தக் குழந்தையை, ஏனைய குழந்தைகள், பெற்றோர் முன்பாகவே கடிந்துகொண்டார்கள். இதுதான் பெற்றோரின் – குறிப்பாக, தமிழ்ப் பெற்றோரின் – மனோபாவமாக இருக்கிறது” என்று அந்தப் பிரதி அதிபர் முடித்தார்.

இவ்வாறு பெற்றோர் தங்களது குடும்ப கௌரவத்தைப் பாதிக்கும் பரீட்சையாகவே இதைப் பார்கின்றனர். அதற்காக பிள்ளைகளை பாடசாலை தவிர பல்வேறு பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புதல், பாடங்களுக்கு அப்பால் பிரத்தியேக விடயங்கள் எதிலும் பிள்ளையை ஈடுபடவிடாது தடுத்தல் என்பதில் இருந்து தமது விருப்பு வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு பிள்ளைகளை படி படி என்று துரத்துதல் வரை இயந்திரத்தனமாகவே செயற்பட தொடங்கி விடுகின்றனர்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு மூன்றாண்டு சாபமாக மாறிவிட்டதான ஒரு தோற்றப்பாடும் இருக்கத்தான் செய்கிறது. 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2ஆம் ஆண்டில் இருந்தே சிறார்களை ஆயத்தப்படுத்த தொடங்கிவிடுகின்றனர் சில பெற்றோர்.

“எனக்கே தெரிகிறது, இந்த மூன்று வருடங்களில் நான் என் மகளிடம் கடுமையாக நடந்திருக்கிறேன் என்பது! ஒவ்வொரு முறையும் நான் அவ்வாறு நடந்துகொண்டபின், என்னை நானே கடிந்துகொள்வேன். ஆனால் என்ன செய்வது? அவள் சித்தியெய்தினால்தானே எனக்குப் பெருமை?” என்கிறார் வத்தளையைச் சேர்ந்த ச.ஆறுமுகம் (45).

“நான் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிக்கிறேன். அங்கே எனது மகளின் வயதையொத்த பல குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராக இரண்டு அல்லது மூன்று பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். அப்படியிருக்க, நான் மட்டும் என் பிள்ளையை வீட்டிலேயே வைத்துக்கொண்டிருக்க முடியுமா? அதனால்தான் நானும் இரண்டு வௌ;வேறு ஆசிரியர்களிடம் அனுப்பினேன். நாளைக்கே தமது பிள்ளைகள் சித்தியெய்திவிட்டார்கள் என்று சந்தோஷமாகச் சொல்லும்போது, நான் மட்டும் வாயை மூடிக் கொண்டிருக்க முடியுமா?” என்று கேட்கிறார் சாந்தா ஜெகதீசன் (40). பெற்றோர் தரப்பு நியாயங்கள் (!) இப்படி இருக்கின்றன.

பெற்றோரின் இந்த எதிர்பார்ப்பால் குழந்தைகளின் மீதான அழுத்தத்திற்கு பெற்றோரே காரணம் என சாடுகிறார் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் ஒருவர்.

“புலமைப் பரிசில் பரீட்சையால் மாணவர்கள் அதீத மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அவை உண்மைதான்! ஆனால், அதற்குக் காரணம் முழுக்க முழுக்கப் பெற்றோர்களே! நன்றாகப் படிக்கும் குழந்தைகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பி அவர்களை அறியாமலேயே அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிலையை பெற்றோரே ஏற்படுத்துகின்றனர்.
ஏறக்குறைய எல்லாப் பாடசாலைகளும் புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு பாடசாலை நேரத்தின் பின் சுமார் இரண்டு மணிநேரம் விசேட பயிற்றுவித்தல் வகுப்புகளை நடத்துகிறோம். எமது பாடசாலையில், புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை நன்றாகப் படிப்பவர்கள், மத்திமமாகப் படிப்பவர்கள், சுமாராகப் படிப்பவர்கள் என்று மூன்று பிரிவினராகப் பிரித்து, அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில், போதுமான விதத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதுவே அவர்களுக்குப் போதுமானது. ஆனால், பெற்றோருக்கு அது போதுமானதாக இல்லை. கடந்த ஆண்டு முதலிடம் பெற்ற மாணவர்கள் பங்குபற்றிய பிரத்தியேக வகுப்புகளுக்கு தமது பிள்ளைகளையும் அனுப்பத் தலைப்படுகின்றனர்.

~~அது மட்டுமன்றி, வீட்டிலும் பிள்ளைகள் புத்தகமும் கையுமாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். தொலைக்காட்சி இல்லை, வேறெந்தப் பொழுதுபோக்குக்கும் அனுமதியில்லை. கடந்த ஒரு வருடமாக உறவினர் வீடுகளுக்குச் செல்லாத பல மாணவர்கள் கூட இருக்கிறார்கள். இப்படி, மனதுக்குப் போதிய ஓய்வின்றி மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்” என்கிறார் அவர்.

ஆனாலும் பாடசாலையில் வகுப்புகளை சிறப்பாக நடத்துவதில்லை என்பதையும், பாடசாலை ஆசிரியர்களே தமது பிரத்தியேக வகுப்புகளுக்கு வந்து மிகுதியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வதும் சில பாடசாலைகளில் இருப்பதை பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் சிலர் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு பெற்றோரும் பிள்ளைகளும் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் வேளையில் நகரில் பிரபலமான தனியார் பாடசாலைகள் இந்தப் பரீட்சை பற்றி எந்த வித கவனத்தையும் செலுத்துவதில்லை. தங்களது பாடசாலைப் பிள்ளைகளுக்கு இந்தப் பரீட்சை அவசியமற்றது என்றே அவர்கள் எண்ணுகின்றனர்.

“உண்மையில் 10 வயதுப் பிள்ளைக்கு இந்தப் பரீட்சையானது குருவி தலையில் பனங்காய் வைப்பதற்கு ஒப்பானது” என மாநகரின் மிக முக்கியமான தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபர் ஒருவர் தெரிவிக்கிறார். அதே போல் பெரும்பாலான பெற்றோர் இந்தப் பரீட்சை இந்த வயதில் தேவையில்லை என்றும், இன்னும் சில பெற்றோர் இந்தப் பரீட்சையே தேவை இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் கருத்து இவ்வாறிருக்கையில், இந்த மாதிரியான பரீட்சை இந்தப் பிள்ளைகளுக்கு முக்கியமானதா? என கல்வியியலாளரான பேராசிரியர் சோ.சந்திரசேகரனிடம் கேட்டோம். “பரீட்சையயைக் கைவிடமுடியாது. ஆனால் மாற்றியமைக்கலாம். அதை விரைவில் செய்ய வேண்டும்.” அவர் அளித்த மேலதிக விளக்கம் ஒலி ஒளி வடிவில்!