Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பன்சேனை பாரி வித்தியாலயம்
 “யானைக்கும், மாட்டுக்கும் பயந்து ஓடியதே, ஓட்டத்திற்கான என் பயிற்சி”

தாம் வாழுகின்ற பகுதியில் ஆலயம் ஒன்றின் சடங்கோ, திருவிழாவோ ஆரம்பிக்கப்பட்டால் அவைமுடியும் வரை மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில்லை.

21.10.2017  |  
மட்டக்களப்பு மாவட்டம்

பன்சேனை பாரி வித்தியாலயம்இன்னும் 11ஆம் ஆண்டுடன் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு மேல் படிப்பதற்கு மாணவர்களும் இல்லை. அப்படி படிப்பதற்கு ஒரு சில மாணவர்களுக்கு தகுதி இருந்தாலும், 25 கிலோமீற்றருக்க அப்பால் சென்று படிக்க யாருக்கும் ஆவல் இல்லை. இப்போதைக்கு 320 மாணவர்களையே இப்பாடசாலை கொண்டுள்ளது. இவ்வளவுபேரும் படிப்பதே பெரிய விசயம் என இந்த ஊர் மக்கள் நினைக்கிறார்கள்.

இலங்கையில்  98 கல்வி வலயங்களில் கல்விப்பெறுபேற்றில் மிகப்பின்தங்கிய இறுதிவலயமாக இருப்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படுவான்கரைப்பிரதேச கல்வி வலயம்தான். (2016ம் ஆண்டு தரவுகள் இதைச் சுட்டிக்காட்டுகின்றன.)  இந்த வலயத்தில்தான்   பன்சேனை பாரி வித்தியாலயம் இருக்கிறது.  முற்றுமுழுதாக கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை உள்ளடக்கிய கல்வி வலயமாகவும் இது உள்ளது.


இலங்கையில்  98 கல்வி வலயங்களில்
கல்விப்பெறுபேற்றில் மிகப்பின்தங்கிய
இறுதிவலயமாக இருப்பது

வயல்வெளிகளும், காடுகளும் ஆங்காங்கு மேட்டுநிலப்பகுதிகளில்   வீடுகளையும் கொண்டமைந்த இப்பகுதியில், பன்சேனை பாரி வித்தியாலயம் அமைந்துள்ளது.

“5கிலோ மீற்றர், 4கிலோமீற்றர், 3கிலோமீற்றர் என்கின்ற பல கிலோ மீற்றர் தூரங்களிலிருந்து, நடையிலும், துவிச்சக்கரவண்டியிலுமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகிறார்கள்” என்கிறார் அதிபர் செல்வராசா ஜமுனாகரன். இப்படி வருபவர்களும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்களாகவே உள்ளனர். இவ்வளவு மோசமாக கல்வியில் பின்தங்கிப் போவதற்கு பாடசாலையின்  வளப்பற்றாக்குறையும்  முக்கிய காரணமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிபரோ,

அதிபர் செல்வராசா ஜமுனாகரன்.

“வளப்பற்றாக்குறையும் உண்டு. ஆனால் மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை கல்வியைப்பாதிக்கிறது. குறிப்பாக தாம் வாழுகின்ற பகுதியில் ஆலயம் ஒன்றின் சடங்கோ, திருவிழாவோ ஆரம்பிக்கப்பட்டால் அவைமுடியும் வரை மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில்லை. வீட்டின் வறுமை காரணமாக பாடசாலையினைவிட்டு இடைவிலகுகின்றமை, பெற்றோரின் அக்கறையின்மை போன்றவையும் முக்கிய காரணங்களாகும்.” என்கிறார்.

கல்வியில் பின்தங்கிய இவர்களின் பாடசாலைபற்றி இன்று பலரும் கதைக்கத் தொடங்கிவிட்டனர்.ஏன் தெரியுமா?

இந்த வருடம் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் கிழக்கு மாகாண மாவட்டத்தில் பன்சேனை பாரி வித்தியாலயம் முதலிடம்.!

100 மீற்றர், 400மீற்றர், 800 மீற்றர் , 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் கோட்ட, வலய மட்டங்களில் பன்சேனை பாரி வித்தியாலயம் முதலிடம்! மாகாணமட்ட போட்டியிலும் இவ்வருடம் வெற்றிபெற்றிருக்கின்றனர்.!

அப்போ இவர்களுக்கு விளையாட்டுக்கான வளங்கள் உள்ளனவா?

“விளையாட்டுக்கான மைதானம் கூட இங்க ஒழுங்கா இல்ல. பிறகெங்க விளையாட்டு உபகரணங்கள் இருக்கும்? அதுவும் இல்ல. இந்த மாணவர்கள் தம் உடல் வலுவைமட்டும் பயன்படுத்தி செய்யும் விளையாட்டான ஓட்டம் மட்டுமே இவர்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்கிறது” என்கிறார் பாடசாலையின் அதிபர் செல்வராசா ஜமுனாகரன்.

கிடைக்கும் நேரங்களிலெல்லாம் பாசாலை மைதானத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியராசா வசந்தினி.

உடல்வலுவை மட்டும் பயன்படுத்தி செய்யும் விளையாட்டுக்கும் நல்ல பயிற்சி வேண்டும். பாடசாலையில் பயிற்சிகள் எந்தளவுக்கு உள்ளன என உடற்பயிற்சி ஆசிரியரிடம் வினாவினோம்.“காலை மாலை என இருநேரங்களுமே பயிற்சி செய்வதற்கான உகந்த நேரமாக கொள்ளப்படுகின்றது. ஆனால் இந்த நேரங்களில் மாணவர்கள் வருகைதரமாட்டார்கள். பாடசாலை பாடங்களிடையே கிடைக்கும் நேரத்தினைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சியினை வழங்கிக்கொண்டிருக்கின்றேன்.” என்கிறார் அவர். அது மட்டுமல்லாமல் மாணவர்கள் காலை மாலை வருகைதர முடியாததற்கான காரணத்தையும் உடற்பயிற்சி ஆசிரியர் தேவப்போடி பவளசிங்கம் குறிப்பிட்டார். “இங்கு யானை நடமாட்டம் உண்டு. மாணவர்கள் வெகு தூரங்களில் இருந்து வருவதால் நேரத்திற்கு எழுந்து வருவதோ அதேபோல பாடசாலையிலிருந்து 4மணிக்கு பிற்பாடு வீட்டுக்கு செல்வததோ அவர்களால் முடியாது. யானைக்குப்பயம்” என்கிறார்.

உடற்பயிற்சி ஆசிரியர் தேவப்போடி பவளசிங்கம்

“ கிடைக்கும் நேரத்தில் கூட பயிற்சியை ஒழுங்காக வழங்கமுடியாது. இந்த மாணவர்களின் வறுமை அவர்களுக்கான உணவை இரண்டுநேரமாக குறைந்துள்ளது. அதிலும் அவை சத்தான உணவுகளே அல்ல. ஒரேமாதிரியான உணவைத்தான் அவர்கள் தொடர்ந்து உண்கின்றனர். இதனால் உடல் வலுவும் போதுமானதாக இல்லை.” என்றும் குறிப்பிட்டார்.

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் இந்த வருடம் பன்சேனை பாரி வித்தியாலயம் விளையாட்டுப் போட்டிகளில் 06தங்கம், 01வெள்ளி, 01வெண்கல பதங்கங்களைப் பெற்றுள்ளது.

“பாடசாலையில் எனது ஆசிரியரிடம் ஓட்ட நுட்பங்களைப் பெற்றாலும் பயிற்சி என்னவோ எனது பயத்தினால் வந்தது. எனது வீட்டுக்கும் பன்சேனை பாரி வித்தியாலயத்திற்கும் உள்ள தூரம் 5கிலோ மீற்றருக்கு மேலாக இருக்கும். சைக்கிளில் அல்லது நடையில் செல்வேன். நடந்து செல்வதென்றால் ஓடியே செல்வேன். அதேபோல யானைப் பயத்திலையும், மாடு துரத்தும் போதும் பயத்தினால் மிக வேகமாக ஓடுவேன். இவைதான் எனது ஓட்டப்பயிற்சியாக அமைந்தன.” என்கிறார் மாகாண மட்டத்தில் 3 தங்கப்பதக்கங்களுக்கு சொந்தக் காரியான பாக்கியராசா வசந்தினி.

இவர் இந்த வருடம் 400 மீற்றர், 800 மீற்றர், 1500 மீற்றர் ஓட்டங்கள் (முதல் இடம்) உதைபந்தாட்டம், அஞ்சல் ஒட்டம் என அனைத்திலும் வெற்றி பெற்றவர். குடும்பத்தில் எட்டுப்பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையான இவர் குடும்பத்தினரும் ஓரளவு ஒத்துழைப்பு நல்குவதாக குறிப்பிடுகிறார். வருங்காகலத்தில் தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெறுவேன் என நம்பிக்கையுடன் குறிப்பிடும் இவர் தான் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆசிரியராக வரவேண்டும் என்பதே தனது விருப்பு என்றும் கூறுகிறார்.

பன்சேனை ‘பாரி’ வித்தியாலயம் என தன் பெயரில் வாரி வழங்கும் கொடைவள்ளல் பாரியின் பெயரைக் கொண்டிருந்தாலும் ‘பாரி’யை இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.