Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மயிலிட்டி மீள் குடியேற்றம்.
குடியேற அடிப்படை வசதிகூட இல்லையே….

“மயிலிட்டியில் மூன்று பாடசாலைகள் யுத்தத்திற்கு முன் இயங்கியுள்ளன. அவற்றில் தற்போது ஊறணி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மட்டுமே ஓரளவுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலிட்டியில் இருக்கின்ற இரண்டு பாடசாலைகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லை.

18.11.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
தனபாலசிங்கம் லதா.

இலங்கையில் ஆயுத மோதல்கள் ஏற்பட முன்னர் யாழ் மாவட்ட மயிலிட்டித் துறைமுகம் நாட்டின் மூன்றிலொரு பங்கு மீன் உற்பத்தியை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முக்கியத்துவமுடைய இத் துறைமுகம் ஏன் இன்று உற்பத்தியின்றி உறங்கிக் கிடக்கின்றது ?
மயிலிட்டித் துறைமுகம் பொருளாதார ரீதியில் முக்கியத்துவமுடையது. அத்துறைமுகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட அதிகரித்த கடல்தொழில் உற்பத்திகள் மயிலிட்டியின் கடல்தொழில் உற்பத்திசார் வல்லமையினை பறைசாற்றுகின்றன. உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் இம் மீன்பிடித்துறைமுகத்திற்கே முதன் முதலில் அரசினால் (1962 இல்) வெளி இணைப்பு இயந்திரம் மற்றும் உள் இணைப்பு இயந்திரங்களுடனான படகுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இது அரசாங்கத்தின் அறிக்கைகளிலும் நகேந்திரம் இராசரத்தினம் என்பவரால் இக்கிராமம் பற்றி எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புக்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Myliddy Harbour – மயிலிட்டித் துறைமுகம்

கடல்தொழில் முயற்சிகளில் முன்னிலையில் இருந்த இப் பகுதி மக்கள், 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் 15 ஆம் திகதி இராணுவ விமானத்தாக்குதல்கள் நிமிர்த்தமாக ஏதிலிகளாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட இம் மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் நண்பர்களின் வீடுகளிலும் வாழ்வாதரம் இன்றி வாழ்ந்து வருகின்றனர். “நூற்றுக்கு 75 வீதமான கடல்தொழிலாளர்களைக் கொண்டுள்ள இக் கிராமத்தில் இருந்து கடல்தொழிலை நம்பி வாழ்ந்த 1400 வரையிலான குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டுகளில் வெளியேற்றப்பட்டனர்.” என்கிறர் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவுக்கும் வலி வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்திற்கும் தலைவராகவுள்ள அ.குணபாலசிங்கம்.

அ.குணபாலசிங்கம்.

எமது நிலம் எமக்கு வேண்டும் என மக்கள் போராடிவந்தனர். இந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறிப்பிட்ட அளவு பொதுமக்களின் நிலங்களை இராணுவ பிடியில் இருந்து விடுவித்தது. அவ்வாறு நிலங்களை அரசு விடுவிக்கும் போது பொருளாதார கேந்திர முக்கியத்துவம் மிக்க மயிலிட்டியையும் விடுவிக்கவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வலுப்பெற்றது.
இக்கோரிக்கை மற்றும் அழுத்தங்களின் அடிப்படையில் பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு மயிலிட்டித்துறைமுகம் உள்ளிட்ட மயிலிட்டித்துறை வடக்கு (ஜே 251) கிராம சேவகர் பிரிவில் இருந்து 58 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. (http://www.tamilguardian.com/content/myliddy-harbour-and-lands-released-after-27-years-military-occupation ) இவ் விடுவிப்பிற்கான பத்திரத்தினை யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி யாழ். மவட்ட செயலாளர் என்.வேதநாயகனிடம் மங்களகரமாகக் கையளித்திருந்தார். இவ்வாறு ஆலோபணைகளுடன் இத் துறைமுகம் விடுவிக்கப்பட்டாலும் அதன் பயனை இன்றுவரையில் மக்கள் அனுபவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
“போருக்கு பிறகு மீளக்குடியேற்றம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையினை ஏற்படுத்த வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கே 27 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த மயிலிட்டித் துறைமுகத்தினை அரசாங்கம் விடுவித்தது” என்கிறார் மயிலிட்டி மீள்குடியேற்றக்குழுவின் செயலாளர் டீ.ஜெயம்.


மயிலிட்டியை விடுவித்துவிட்டோம் எனக் கூறிக்கொண்டு துறைமுகத்தின் ஒருபகுதி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளமை அடிப்படையில் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

மயிலிட்டியை விடுவித்துவிட்டோம் எனக் கூறிக்கொண்டு துறைமுகத்தின் ஒருபகுதி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளமை அடிப்படையில் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இதனை அண்மையில் இப் பகுதிக்கு விஜயம் செய்த நேர்வேத் தூதுவரிடம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளிப்படையகவே தெரிவித்துள்ளனர். மயிலிட்டி முழுமையாக விடுவிக்கப்படாமையினால் மக்கள் தொழிலினை முன்னொடுக்கும் உரிமையினை இழந்துள்ளனர்.
கடல்தொழிலில் ஈடுபடுவோர் தமது கிராமங்களில் மீளக்குடியமர வேண்டும். பின்னரே தொழில் முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த முடியும். நிலைமை இவ்வாறிருக்கையில் “யுத்தத்தினால் நிர்மூலமாக்கப்பட்ட மயிலிட்டியின் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கூட மக்கள் மீளக்குடியமர்வதற்கோ தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கோ அடிப்படையான எவையும் ஏற்படுத்தப்படவில்லை” என அங்கு வசித்த நா.பாத்மநாதன் தெரிவிக்கிறார்.

நா.பாத்மநாதன்

மீன்பிடித் தொழிலைச் செய்யும் தொழிலாளர்கள் ஏனைய தொழில்களைப் போலல்லாது கடல் தொழிலை அவரவர் குடும்ப உறுப்பினர்களிடையே பணிப் பகிர்வு ஒன்றை மேற்கொண்டே மேற்கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் மீள்குடியேற்றத்தில் இன்றும் நிலவும் தடைகள் தொழிலாளர்கள் கடல் தொழிலை ஆரம்பிப்பதற்குத் தடையாகவே உள்ளன.
மயிலிட்டியானது, மயிலிட்டித்துறை வடக்கு (ஜே 251), தெற்கு (ஜே 248), மயிலிட்டி வடக்கு (ஜே 246) என மூன்று கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டது. விடுவிக்கப்பட்ட சில 54 ஏக்கர் போக எஞ்சிய 524 ஏக்கர்; யநிலங்கள் படையினரின் வசமே இன்றும் உள்ளன. இதற்கு வைத்தியசாலை கூட விதிவிலக்கல்ல.
யுத்தத்தினால் எல்லாவற்றினையும் கைவிட்டே மக்கள் வெளியேறியுள்ளனர். வெளியேறிய ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக இழந்த வீட்டின் பெறுமதி (தற்போதைய மதிப்பில்) 140 இலட்சங்கள் என முறையிடுகின்றனர். எனினும் தற்போது அரசாங்கத்தின் திட்டங்களில் வீடுகள் அமைப்பதற்காக நிதி வழங்கப்பட்டால் அது 8 இலட்சம் பெறுமதியானதாகவே உள்ளது. அதுவும் 11 குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கா திட்டமே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதேவேளை மயிலிட்டியில் உள்ள கடல்தொழிலாளர் சங்கங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் “ஐந்து வள்ளங்களும் அதற்கான இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. யானைப் பசிக்கு சோளப்பொரி போன்ற இவ் உதவிகள் ஓர் அடையாளமாகவே வழங்கப்பட்டுள்ளன” என்கின்றார் மயிலட்டி கிராமிய கடல்தொழிலாளர் அமைப்பின் செயலாளர் ந. ரட்ணராஜா.
“மயிலிட்டியில் மூன்று பாடசாலைகள் யுத்தத்திற்கு முன் இயங்கியுள்ளன. அவற்றில் தற்போது ஊறணி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மட்டுமே ஓரளவுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலிட்டியில் இருக்கின்ற இரண்டு பாடசாலைகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லை. அவற்றில் இன்றும் இராணுவத்தினரே நிலைகொண்டுள்ளனர். இவ்வாறிருக்கையில் தொழிலாளர்கள் எவ்வாறு இங்கு தமது குடும்பங்களுடன் வந்து மீளக்குடியேறி தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முடியும் ?”என மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் உப தலைவர் பி.ரஞ்ஜன் கேள்வி எழுப்புகின்றார்.
மக்களை மீளத்திரும்புங்கள்! தொழில்களை ஆரம்பியுங்கள்! என அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், “எமது கடல்தொழிலை ஆரம்பிப்பதற்கான துறைமுகத்தில் ஒரு பகுதியை மடடும் விடுவித்து விட்டு, அடிப்படை வசதிகளும் இல்லாது நாம் எப்படி குடியேறுவது? என்கிறார்” தனபாலசிங்கம் லதா.
இதே நேரம் இக்கட்டுரை பிரசுரமாகும் இவ்வேளை மயிலிட்டி மீள் குடியேற்ற திட்டத்திற்காக யுன்டிபி, நோர்வேஜின் கண்காணிப்பில் பத்து இலட்சம் அமெரிக்க டொலர்களை ஒருவருட வேலைத்திட்டத்தின் கீழ் கையளித்துளளதாக செய்திகள் தெரிவிக்கின்றன (http://www.thesundayleader.lk/2017/11/13/norway-to-support-resettled-communities-in-myliddy/ )