Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கடற்கரைக்கு அருகில் நன்நீர்!
உடப்பில் நன்நீர் பாதுகாப்புக்கு என்ன வழி?

“தண்ணியும் காத்தும்தானே நம்ம மக்களுக்கு சும்மா கிடைச்சிச்சு. இப்ப அதிலயும் மண்ணுவிழுந்திச்சு. நல்ல தண்ணி ஊறுற ஊறணிப்பகம் நாம போக முடியல. அந்த இடத்தில ஆமி காம் போட்டிருக்காக நாங்க வேற இடத்துக்கு நீண்ட தூரம் போறம். அதில்லாம, இப்ப நாகரிகம் வளர்திட்டு, ரோடு எல்லாம் பொட்டிருக்காக அதனால முந்தியப் போல குடிக்கத் தண்ணியெடுக்க அகப்பையும் குடமும் தேவல்ல. மெசினும் டாங்கியும் போட்டு தண்ணி எடுத்து விக்கிறாக.”

31.12.2017  |  
புத்தளம் மாவட்டம்
நன்னீர் விற்பனை செய்யும் வாகனம்

“எங்கட அம்மாவுக எல்லாம் கொடத்தையும் வாளியையும் இல்ல, குடத்தையும் அகப்பையையும் எடுத்துக்கிட்டு தண்ணியெடுக்க எண்டு கடற்கரைக்கு போவாக. கடற்கரையில இருந்து கிட்டத்தட்ட 250 மீற்றர் தூரத்துக்குள்ளால வெறும் மணலை அகப்பையால கிண்டினா நல்லதண்ணி வரும். ஆத அள்ளிக்கிட்டுவருவாங்க. அததான் நாங்க குடிச்சு வளந்தம்….இப்ப எங்கட புள்ளைங்களுக்கு காசுக்கு தண்ணி வாங்கிறம்” என்கிறர் பாலந்திரன் மோகனா (40). இவர் இலங்கையின் சிலாபப் பகுதியில் உடப்பு என்ற கிராமத்தில் வாழ்பவர். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகக் காணப்படும் உடப்பூரில் கண்ணுக்கு எட்டின தூரம் வரை வானில் இருந்து கடல் மட்டும் நீல நிறமாகவும் நீரினாலும் சூழப்பட்டுள்ள போதிலும் அந்த நீரைப் பயன்படுத்தி தமது அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கு அவர்களால் முடியவில்லை. அன்றாடம் கடல் நீரில் விழித்து வாழ்ந்தாலும் குடிக்கும் தண்ணீரைக் காசுக்கும் குளிக்கும் தண்ணீரை நீண்டதொரு பயணத்தின் பின்னரும் பெற்றுக்கொள்கின்றனர்.
“தண்ணியும் காத்தும்தானே நம்ம மக்களுக்கு சும்மா கிடைச்சிச்சு. இப்ப அதிலயும் மண்ணுவிழுந்திச்சு. நல்ல தண்ணி ஊறுற ஊறணிப்பகம் நாம போக முடியல. அந்த இடத்தில ஆமி காம் போட்டிருக்காக நாங்க வேற இடத்துக்கு நீண்ட தூரம் போறம். அதில்லாம, இப்ப நாகரிகம் வளர்திட்டு, ரோடு எல்லாம் பொட்டிருக்காக அதனால முந்தியப் போல குடிக்கத் தண்ணியெடுக்க அகப்பையும் குடமும் தேவல்ல. மெசினும் டாங்கியும் போட்டு தண்ணி எடுத்து விக்கிறாக.” என மேலும் அந்தப் பெண் அங்கலாய்த்தார்.

நன்னீருக்காக காத்திருக்கும் குடங்கள்.

குறிப்பாக இந்த ஊறணித்தண்ணியானது, உடப்பில் ஆண்டிமுனை, செல்வபுரம், பெரியபாடு ஆகிய பகுதிகளில் இருந்து கிடைக்கின்றது. அங்கு கடற்கரைப் பக்கங்களில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வீட்டுக்குரியவர்கள் தமது நல்ல தண்ணி கிணறுகளை வாடகைக்கு விடுகின்றனர். பெரிய பௌசர்கள் வைத்திருப்பவர்கள் அந்தக் கிணறுகளில் சேகரித்த நீரை ஏனைய கிராமங்களுக்கு விற்கின்றனர். இது ஒரு தனியார் வர்த்தகமாகவும், சங்கங்கள் கோயில்கள் குறைந்த விலையில் சேவையாகவும் செய்துவருகின்றன. ஒரு குடக் குடிநீரானது 5முதல் 10 ரூபா வரை விற்கிறார்கள்.
“ஒரு குடம் தண்ணி 5 ரூபாய். குடிக்க சமைக்க என ஒருநாளைக்கு எங்களுக்கு 25 குடம் தண்ணிக்கு மேல வேண்டும். அன்றாடம் கடல் தொழிலுக்குப் போய் கொண்டு வார காச வச்சுத்தான். எங்கட சீவியப்பாடு ஓடுது. அதில தண்ணிவேற வேண்டணும். ‘பைப்’ லைன் எடுத்தாறன் எண்டுட்டு ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் அரசால பதினையாயிரம் ரூபாய் காசு வாங்கிண்டு போய் பைப் லைன போட்டாங்க. இன்னும் பைப்பைத் திறந்தா காத்துத்தான் வருது.” என்று வைரவநாதன் துசியந்தினி தெரிவிக்கிறார். குடிதண்ணீரை இப்படி வாங்குபவர்கள் குளிப்பதற்கு என்ன செய்வார்கள்?
“நாங்க குளிக்கிறதுக்கு பொதுக்கிணத்தடிக்கு போகவேணும். பத்து ரூபாய் கொடுத்து பஸ்ஸில ஏறி வந்து தான் நாங்க குளிக்கிறது, உடுப்புக் களுவுறது. நாங்க இரண்டு நாளைக்கு ஒருக்கா வந்தா இந்தமாதிரி பொதுக்கிணத்தில குளிச்சு உடுப்புகளைக் கழுவிக் கொண்டு போவம்.” ஏன்று மேலும் தெரிவித்தார் துசியந்தினி.
கடற் கரைக்கு மிகவும் அருகாமையில் காணப்படுகின்ற நிலப்பரப்பில் நன்நீரும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் உவர் நீரும் காணப்படுகின்றது. கடற்கரைக்கு அருகாமையில் (200-250மீற்றறுக்குள்)சுமார் 15 அடிக்கு கீழ் நன்நீர் கிணறுகள் தோண்டப்படுவது இல்லை. அதேநேரம் குளிப்பதற்கெனப் பயன்படுத்தப்படும் கிணறுகள் சுமார் 20, 25 அடிக்குக் கீழும் தோண்டப்படும். இப்பகுதி மக்களும் அதற்கேறாற்போல் தங்கள் குடியிடிருப்புக்களை கடற்கரையை அண்டியும், இறால்;, உப்பு வயல்களை கடற்கரைக்கு அப்பாலும் அமைத்துள்ளனர். இதனால் பல கிணறுகள் தனியாருக்கு சொந்தாமாகியுள்ளன.
“15 அடிக்கு அப்பால் கிணறுகளைத் தோண்டும் போது ஒரு துருப்பிடித்த சுவையுடன் நீர் காணப்படுகின்றது. நாங்கள் இந்த தண்ணீரை குளிப்பதற்காகவும் பூமரங்களின் பராமரிப்பு தேவைகளுக்காகவும் இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்றோம்.” என்கிறார், கடற்படையில் உடற்பயிற்சி மாஸ்டராகப் பணியாற்றும் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம். செனவிரத்ன. கடற்படை முகாம் பகுதிக்கும் நன்னீர் கிணறுகள் 3 இருப்பதாக மக்கள் தெரிவித்தபோது, அவை மிக ஆழமாகத் தோண்டப்பட்டிருப்பதால் துரப்பிடித்து நீர் கிடைப்பதாக அவர்கள் கூறிப்பிட்டனர்.

பொதுக் கிணற்றில் குளிக்கிறரர்கள்

தனியாருக்குச் சொந்தமான காணிகளுக்குள் சில நன்னீர்கிணறுகள் இருக்கின்றபோதம் சில கிணறுகளில் தாம் நீர் எடுப்பதில்லை என்றும் ஒர சில மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“ஆரம்பத்தில எங்கட வீட்டுக்கிட்ட எல்லாம் நல்லதண்ணி எடுக்க முடிஞ்சுது ஆனால் இப்ப பக்கத்தில சுடலை வந்திற்று. இங்கு மரம் மட்டைகளைக் காணுறது அரிது அதனால இந்துக்களாக இருந்தாலும் அவங்கள எரிக்கிறதில்ல. புதைக்கிறாங்க. அதனால அந்த பக்கத்தில இருந்து தண்ணி எடுக்கிறது இல்லை. குளிக்கிறதுக்குத் தான் எடுக்கிறம். குடிக்கிறதுக்குத்தும் மற்றைய சமையல் வீட்டு வேலைக்கு எல்லாம் செல்வபுரம், பெரியபாடு ஆகிய பகுதியில் இருந்து கொண்டு வற நீரத்தான் வாங்கிறம்.” ஏன தெரிவிக்கிறார் சின்னத்தம்பி மகேசன்(65).
இதே கருத்தை சோமாஸ்கந்த மூர்த்தி சொக்கலிங்கம் என்பவரும் தெரிவிக்கிறார்.“சுடலைக்குப் பக்கத்தில இருக்கிற பகுதிகள் கிடைக்கப் பெறுகின்ற தண்ணிகள்ல செத்த சவங்களின்ட கிருமி இருக்குமொ எங்கிற பயத்தில எங்கட ஆட்களும் இந்த பகுதியில் இருக்கிற தண்ணிய பாவிக்கிறது இல்லை.”
இதனால் கடலுக்கு அருகில் கிடைக்கக்கூடிய நன்னீர் தகுந்த முறையில் திட்டமிட்டு பராமரிக்கப்படாததால் உடப்பு பகுதிகளில் நீருக்கு மிகப்பெரும் தட்டுப்பாடு நிலவும் சாத்தியம் உருவகிவருகிறது.