Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

விதவைகளின் தேவைதான் என்ன?

“இறுதிப் போரில் எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 3 பிள்ளைகள். பொருளாதார பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை மட்டுமல்ல பாலியல் தொந்தரவுகளில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதும் எனது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டி இருப்பதும் என்னை வாட்டி வதைக்கின்றன. இவற்றை யோசிக்க யோசிக்க மன அமைதியில்லாமல் தவிக்கிறது. ஒட்டு மொத்தச் சமுகம் மீதும் கோபம் வருகிறது.” இறுகிப்போயிருக்கும் புவனாவின் கண்களில் கோபம் தெறிக்கிறது. இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் கணவனை இழந்த […]

06.06.2016  |  
வவுனியா மாவட்டம்

“இறுதிப் போரில் எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 3 பிள்ளைகள். பொருளாதார பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை மட்டுமல்ல பாலியல் தொந்தரவுகளில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதும் எனது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டி இருப்பதும் என்னை வாட்டி வதைக்கின்றன. இவற்றை யோசிக்க யோசிக்க மன அமைதியில்லாமல் தவிக்கிறது. ஒட்டு மொத்தச் சமுகம் மீதும் கோபம் வருகிறது.”
இறுகிப்போயிருக்கும் புவனாவின் கண்களில் கோபம் தெறிக்கிறது. இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் கணவனை இழந்த பல ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். புவனா அவர்களில் ஒருத்தி. குடும்பத் தலைவனைப் போரில் இழந்த பின்னர் குடும்பங்களின் சுமையையும் தாமே சுமக்கப் வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள இந்தப் பெண்கள் சமூகத்தினாலும் மேலும் மேலும் ஒடுக்கப்படுகின்றார்கள் என்கிற குற்றச்சாட்டுப் பரவலாக எழுகிறது. பாதுகாப்பின்மை, பாலியல் துன்புறுத்தல்கள், பொருளாதார பிரச்சினைகள் என்று பல கோணங்களில் இருந்தும் இவர்கள் தாக்கப்படும்போது அவற்றை எதிர்கொள்ளமுடியாது மனநிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் மட்டும் கணவனை இழந்த பெண்கள் 80 ஆயிரம் பேர் வரையிலானோர் வாழ்கின்றார்கள். இவர்களில் 90 விழுக்காட்டினர் தமிழர்கள். வாழ்க்கைச் சவாலை எதிர்கொள்வதற்கு இந்தப் பெண்களுக்கு அரசிடமிருந்து சமுர்த்தி நிவாரணம் மற்றும் இலகு கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. சுயதொழில் மேம்பாட்டிற்கான கடன் வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சினால் கடந்த 2015 ஆம் ஆண்டு 5,430 மில்லியன் ரூபா நிதியில் 4 வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை போதாது. பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.
தமிழ்ச் சமூகம் பாலியல் மற்றும் மறுதிருமணம் போன்றவற்றை தீண்டத்தகாத அந்தரங்க விடயமாகவே இன்னமும் நோக்குவதால் கணவனை இழந்த – குடும்பத் தலைவிகளின் நிலமை மோசமானதாகவே இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு மறுதிருமணத்தில் விருப்பம் காணப்படினும் சமூகத்தின் ஏச்சு, எள்ளி நகையாடல்களுக்குப் பயந்து ஒதுங்கியே இருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சீதனம் வழங்கும் முறைமையும் சில பெண்களின் மறுதிருமணத்தைச் சாத்தியமற்றதாக்கியிருக்கின்றன.
“கணவனை இழந்து தவிக்கும் விதவைப் பெண்களின் வாழ்க்கை உலகம் முழுவதுமே பல சமூகப் பிரச்சினைக்குக் காரணமாக இருந்துள்ளது. போர் மன அழுத்தங்களை உருவாக்குவதற்கும், மன அழுத்தத்தினை கூட்டுவதற்கும், கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் கட்டுப்பாட்டினை இழப்பதற்கும் காரணமாக இருந்துள்ளது. இலங்கையிலும் அதுதான் நிலமை. போரின் பின்னர் பலர் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள். போர் பல பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் வேலாயுதபிள்ளை ஜெகரூபி. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உளநல வைத்தியராகப் பணியாற்றி வருகிறார்.
“வடக்கு கிழக்கில் போர்க் காலத்தில் ஆண்கள் அதிகமாக இறந்து விட்டார்கள். போரின் பின்னர் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைவது பொதுவான வழக்கமாக இருந்தாலும், வடமாகாணத்தில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பல கணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள், பலர் காணாமல் போயுள்ளார்கள். இவர்களின் இழப்புக்களை எண்ணி எண்ணியே அதிகமான பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். கணவனை இழந்த பெண்களுக்கும் குடும்பங்களைத் தலைமைதாங்கும் பெண்களுக்கும் அதிகளவில் மன அழுத்தம் இருப்பதாகவும் சமூக அமைதியின்மையில்லாமல் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ ரீதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.” ஜெகரூபி நிலமையைத் தெளிவாக விளக்குகிறார்.
தமிழ்ப் பாரம்பரிய சமூக அமைப்பில் ஆண்களே குடும்பத்தின் பொருளாதாரச் சுமை தாங்கிகள். பெண்கள் பல சமயங்களில் அவர்களுக்கு உதவுபவர்களாக இருந்தாலும், பொருளாதார அச்சாணி என்னவோ ஆண்களிலேயே சுழல்கின்றது. இத்தகையதொரு நிலையில் குடும்பத் தலைவனான ஆண் இழக்கப்படுகின்றபோது குடும்பப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்தச் சுமையும் பெண்ணின் மீதே விழுகின்றது. ஏற்கனவே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு இந்த மேலதிகச் சுமையும் சேர்கின்றபோது அவள் மேலும் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகிறாள்.
“தன்னையும் பாதுகாத்துக்கொண்டு குழந்தைகளையும் பாதுகாத்துக்கொண்டு குடும்பத்திற்கு வேண்டிய பொருளாதாரத்தையும் ஈட்டவேண்டியிருக்கும்போது பெண் இரு மடங்கு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறாள்” என்கிறார் ஜெகரூபி.
தமிழ்ச் சமூகம் இன்னமும் விதவைகளைச் சமனான மனிதர்களாக, சரிநிகர் சமனானவர்களாக நடத்தத் தொடங்கவில்லை. எல்லா வகையான நற்காரியங்களில் இருந்தும் அவர்கள் தள்ளியே வைக்கப்படுகிறார்கள். அல்லது ஒதுங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். எல்லோருக்கும் இப்படி நிகழ்வதில்லை என்றபோதும் பலரதும் நிலமை இப்படித்தான் உள்ளது. அதிலும், கணவன் காணாமற்போயுள்ளவர்களின் நிலமை மேலும் பரிதாபத்திற்குரியது. இவர்கள் விதவையாகவும் இல்லாமல் சுமங்கலிகளாகவும் இல்லாமல் பெரும் மனப்போராட்டத்திற்கு மத்தியிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் எவ்வளவு கடினமானது என்பதனை உணர்வதற்கு ஏனையவர்கள் தயாராக இல்லை.
துணையோடு வாழும் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண் துணையின்றித் தனித்து வாழும் பெண்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தொழில் செய்யும் இடங்களிலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இரவு நேர வேலையைச் செய்ய வேண்டிய பெண்களாயின் அவர்களின் பிரச்சினைகள் தனிரகம்.
“கணவனை இழந்து தனித்து வாழும் பெண்கள் தொழில் தேடி வெளியே செல்கையில் அவர்களில் பலரின் பிள்ளைகள் சமூக சீரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு சமூகச் சீரழிவுகளுக்கு தாய்தான் காரணம் எனப் பின்னர் இந்தச் சமூகம் மனச்சாட்சி இன்றிக் அவளைக் குற்றஞ்சாட்டும். அத்தோடு கணவனை இழந்த பெண் தன்னை உடல் மற்றும் உள ரீதியாகவும் காப்பாற்றிக்கொள்ள வேண்டியவளாக இருக்கின்றாள்” என்கிறார் ஜெயரூபி.
“கணவனை இழந்த பெண்களுக்கு பல ஆண்களின் தொல்லைகள் இலகுவாகவே வருகின்றன. உதவி செய்யும் ஆண்களும், அவளிடம் ஏதோ ஒன்றினை எதிர்பார்த்தே வருகின்றார்கள். கணவனை இழந்து வாழ்கின்ற பெண் இலகுவாக வசப்படுத்தப்படக்கூடியவள், தனது உணர்ச்சிகளுக்காக எப்படியாவது ஒரு ஆணை சார்ந்தே வாழவேண்டும் என்று ஆண்களிடம் காணப்படும் தவறான அர்த்தங்களே இதற்கான காரணம்” எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இவைகள் கணவனை இழந்த பெண்களுக்கு மிகவும் அழுத்தமான விடயங்கள். கணவனை இழந்த பெண்கள் சட்ட ரீதியாக மறுமணம் செய்துகொள்வதற்கு முற்பட்டால், அவற்றினைக் கூட எமது சமூகம் கேவலமாகவே பார்க்கின்றது.
சட்ட ரீதியான திருமணத்தினைச் செய்ய முடியாதவிடத்து, யாருடனாவது சாதாரண முறையில் கதைத்தால்கூட அதை தவறாக பார்க்கின்றார்கள்.
“அவளுக்கும் ஆசை இருக்குத் தானே” என்ற கேவலமான சிந்தனையுடன், வக்கிரமான புத்தியுடன் கணவனை இழந்த பெண்ணை உரசும் ஆண்கள் கூட்டம் இன்னமும் இருக்கின்றது. கணவனை இழந்த பெண்களுக்கு கட்டுப் கோப்பான, பாதுகாப்பான வாழ்க்கையினை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு சிலரே முன்வருகின்றார்கள்.
மறுமணம் செய்தால், பாலியல் தேவைக்காகவே மறுமணம் செய்கின்றாள் எனத் தான் சமூகத்தால் எள்ளி நகையாடப்படுவோம் என்கிற அச்சமே பல பெண்களை மறுமணம் செய்வதிலிருந்து தடுத்து வைத்திருக்கிறது.
“கணவனை இழந்த பெண்களுக்கு ஆதரவான சமூகமாக எமது சமூகம் இல்லை. உதாரணமாக, அவருக்குப் பாலியல் தேவை இருந்தால், அந்தத் தேவை கவனிக்கப்படாமல் இருக்கின்றது. மறுமணம் செய்துகொள்வதில் உள்ள பிரச்சினைகள், மற்றும் கணவனை இழந்த பெண்களின் சமூகப்பிரச்சினைகள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் உளவள மருத்துவ வல்லுநர் சுப்பிரமணியம் சுதர்சன்.
“பல்வேறுபட்ட உதவிகள் கிடைத்தாலும், பொருளாதார ரீதியாக தேவைகள் நிறைவேற்றப்பட்டாலும், நீண்டகால திட்டங்கள் இன்மையால் அவை சரியாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்றன. அந்த வகையில் கணவனை இழந்த பெண்களுக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை. பொருளாதாரத்திற்கு என உதவிகளைக் கொடுப்பதைவிட வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான வேலை வாய்ப்புகளையும் சுயதொழிலையும் வழங்கவேண்டும்” என்கிறார் அவர்.
குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களிடம் ஏற்பட்டுள்ள இந்த நிலையினை போக்குவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதனைவிட தனிப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு உதவி செய்யலாம் என சிந்தித்து உதவ முன்வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
கணவனை இழந்த பெண்களின் சமூக அமைதியின்மையைப் போக்க மருத்துவத்தின் மூலம் முயல்வதைவிட அவர்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அவசியமானது. கணவனை இழந்த பெண்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன. இதனால் அவர்கள் அமைதியைத் தொலைக்கின்றனர்.
“உதவி செய்வதுடன், அந்த உதவிகளை மரியாதையுடன் செய்ய முன்வரவேண்டும். சமூக அமைப்புக்கள் அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, மறுமணம் பற்றிய வழிமுறைகளைக் கையாளவேண்டும். குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அவர்களின் பிரச்சினைகளை அணுக வேண்டும். குழந்தை இல்லாதவர்களாயின், அவர்கள் ஏன் மறுமணம் செய்ய மறுக்கின்றார்கள் என ஆராய வேண்டும்” என்கிறார் சுதர்சன்.
“சமூகத்தில் பாலியல் ரீதியான விழிப்புணர்வுகள் அவசியம். அது இல்லாமல் இருப்பதாலேயே பல பிரச்சினைகள் எழுகின்றன. கணவனை இழந்த பெண்களின் வாழ்வு மற்றும் மறுமணம் குறித்து சமூகம் ஆதரவு வழங்க வேண்டும்.” அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் பிரச்சினையை இலகுவாகக் கையாள்வதற்கான ஒரே வழி தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் மறுமணத்தை ஊக்குவிப்பதுதான். தமிழ் அரசியல் தலைவர்கள் மேடைகளில் இதுபற்றிப் பேசுகின்றபோதும் இளைஞர்களிடம் அதனை ஊக்குவிப்பதற்கான எந்தவிதமான சமூகச் செயற்றிட்டங்களையும் கொண்டிருக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் தலைவர்கள் இறங்கி வேலை செய்யவேண்டும்.