Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மொழிபெயர்ப்பாளர் திரு கமலநாதன்
கடைசிக் காலத்தில எனக்குச் சோறு போடுறது அந்நிய மொழி தான்.

யாழ்ப்பாணத்தின் யாழ் மாவட்டச்செயலக சுற்றுவட்டாரப் பிரதேசம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. செயலகத்தின் முன்வாயிலருகில் கூடாரம் அமைத்து போராடிக்கொண்டிருக்கின்றனர் வேலையில்லா பட்டதாரிகள். A9 பிரதான வீதியில் வாகனங்கள், பயணிகள், மாணவர்கள், மக்கள் என சாரைசாரையாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். வலப்பக்கமாகச் செல்லும் கச்சேரி நல்லூர் வீதியின் கரையோரமாக வரிசையாக காத்திருக்கின்றனர் படிவங்கள் நிரப்பும் தொழிலைச்செய்யும் தொழிலாளர்கள். கைளில் நாலைந்து பைல்கள், பேனை சிலரிடம் தட்டச்சுச்செய்யும் இயந்திரம் இவையே இவர்களது ஆகக்கூடிய தொழிலுக்கான உபகரணம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கிடைக்கும் மரநிழலில் ஒரு கதிரையைபோட்டு […]

21.02.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
Mr.Kamalanathan
Mr.Kamalanathan

யாழ்ப்பாணத்தின் யாழ் மாவட்டச்செயலக சுற்றுவட்டாரப் பிரதேசம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. செயலகத்தின் முன்வாயிலருகில் கூடாரம் அமைத்து போராடிக்கொண்டிருக்கின்றனர் வேலையில்லா பட்டதாரிகள். A9 பிரதான வீதியில் வாகனங்கள், பயணிகள், மாணவர்கள், மக்கள் என சாரைசாரையாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். வலப்பக்கமாகச் செல்லும் கச்சேரி நல்லூர் வீதியின் கரையோரமாக வரிசையாக காத்திருக்கின்றனர் படிவங்கள் நிரப்பும் தொழிலைச்செய்யும் தொழிலாளர்கள். கைளில் நாலைந்து பைல்கள், பேனை சிலரிடம் தட்டச்சுச்செய்யும் இயந்திரம் இவையே இவர்களது ஆகக்கூடிய தொழிலுக்கான உபகரணம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கிடைக்கும் மரநிழலில் ஒரு கதிரையைபோட்டு அமர்ந்துகொண்டு தம்மிடம் வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பவர்களில் ஒருவர் தான் பருத்தித்துறையைச் சேர்ந்த கமலநாதன்

அனலடிக்கும் வெயிலை ஊடறுத்து கூசும் கண்களோடு வீதியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கட்டுமரம் இணையத்திற்காக உரையாடத்தொடங்கினேன்.தொடர்ந்து படிவங்கள், கோப்புகள், கடிதங்கள். அலுவலகம் தொடர்பான எழுத்து வேலைகள் செய்வதாலோh என்னவோ அகராதியுடன் தான் காணப்பட்டார். ஊரையாடலை ஒரு வகையான அலுவலகத்தமிழில் ஆரம்பித்தார். பரவாயில்லை இயல்பாக பேசுங்கள் என்றவுடன் இயல்புநிலையை அடைந்தவர் தன்னைப்பற்றியும் தன்னுடைய தொழில்பற்றியும் பேசத்தொடங்கினார்.

இடப்பெயர்வும் மொழி அறிமுகமும்

பருத்தித்துறை அல்வாய் தான் என்ர சொந்த இடம். இப்ப என்ர மனுசியின்ர இடம் சாவகச்சேரில இருக்கிறன். எனக்கு அண்ணா ஒராள் இருக்கிறார் அவர் மட்டும் தான். என்ர அப்பா விவசாயம் தான் செய்தவர். நாங்கள் விவசாயக் குடும்பம். நான் உயர்தரம் வரைக்கும் படிச்சுப்போட்டு காணி அபிவிருத்தி கட்டட நிர்மாணப்பிரிவில வேலை செய்தனான். பிறகு நாட்டுப் பிரச்சனைகளால 92ஆம் ஆண்டு அந்த வேலை இல்லாமப் போட்டுது அதுக்குப்பிறகு இடப்பெயர்ந்து நிறைய ஊர்களில குடும்பமா இருந்தனாங்கள். புத்தளம், அநுராதபுரத்திலயெல்லாம் கூடுதல் காலம் இருந்தனாங்கள் அப்பத்தான் எனக்கு மூவின மக்களோடயும் பழகிற வாய்ப்பு கிடைச்சது. அதால நான் சிங்களமும் சரளமா கதைக்க எழுதப்பழகிக்கொண்டன்.
அடுத்தது ஆங்கிலமும் ஓரளவுக்கு பரவாயில்லை சிங்களம் எழுதிக்கொண்டு இருந்தனான் கொஞ்சம் மறந்து போனன் இருந்தாலும், இப்பவும் சிங்களப் புத்தகங்கள் வாங்கி நூறுவீதம் சரியாக எழுத பழகிக்கொண்டிருக்கிறன்.
ஆரம்பத்தில நான் மொழியை கல்லூரிக் காலங்களில விரும்பிப்படிச்சிருக்கிறன். அடுத்தது யுத்தக்காலத்தில ஒரு தற்காலிக தபால்ஊழியராக இருந்திருக்கிறன் அதாலயும் பல இடங்களுக்குப் போறது நிறையப்பேரை சந்திக்கிறது இவைகளாலயும் மொழியில சரியான தேர்ச்சியும் அனுபவமும் கிடைச்சது.

அதுக்குப்பிறகு யுத்தகால இடைவெளிகளில சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்துகொண்டிருந்தன். விவசாயம் செய்ய ஏலாத காலங்களில் சும்மாதான் இருக்கிறது அப்ப ஏதாவது வருமானம் வரக்கூடியதா செய்யவேணுமெண்டு யோசிக்கேக்கதான் என்னட்டை இருக்கிற மொழி அறிவைக்கொண்டு மொழிபெயர்ப்பு வேலையைச் செய்யலாம் எண்டு முடிவெடுத்து செய்யத் தொடங்கினன். ஆரம்பத்தில ஊரில இருக்கிற ஆக்களுக்கு ஏதும் அரசாங்க உதவித்திட்டங்கள், கச்சேரி அலுவல்கள், பள்ளிக்கூட அலுவல்கள் இப்பிடி ஏதாவது விசயங்களுக்கு கடிதம் எழுதுறது, படிவங்கள் நிரப்புறது இப்பிடியான வேலைகளை உதவியாக செய்து வந்தனான.; பிறகுதான் யாழ்ப்பாண கச்சேரிக்கு அருகில இப்படியான வேலை செய்யிறதுக்கு நிறை சந்தர்ப்பம் கிடைக்கும் அதோட வருமானமும் கிடைக்கும் அதோட என்னால ஏதும் சேவைசெய்தமாதிரியும் இருக்கும் என்ற எண்ணத்தோட இதை முழுநேரமா தொழிலாகச் செய்வம் என்று முடிவெடுத்து செய்ய வெளிக்கிட்டன். என்று தான் எப்படி மொழிபெயர்ப்புத் தொழிலுக்கு வந்தனான் என்றதை ஒரு மூச்சில சொல்லி முடிச்சார்.

பணியும் பணிச்சூழலும்

“காலையில 8 மணிக்கு யாழ்ப்பாணத்;தில இருக்கிற கச்சேரிக்கு பஸ்சில வாறனான். பின்னேரம் ரெண்டு மணிக்கெல்லாம் வேலை முடிஞ்சிடும். அதுக்குப்பிறகு ஒருத்தரும் மொழிபெயர்ப்புக்கு வராயினம். என்னைப்போல இந்த இடத்தில ஏழெட்டுப் பேர் இருக்கினம். சிலபேர் ரைப்ரட்டர் மிசின் வைச்சிருக்கினம் சிலபேர் ஓடர் எடுத்து பக்கதில உள்ள கடைகளில் கொம்பியூட்டர்ல செய்வினம் சிலபேர் கையால எழுதிக்குடுப்பினம். நான் கையாலதான் எழுதிக்குடுக்கிறனான்.

இதில வேலை செய்யிற அ+க்களில சிலர் இந்த வேலைக்கு இப்பத்தான் வந்திருக்கினம். அவைகளில சிலபேரிட்ட பண்புகள், ஒழுக்கங்கள் எல்லாம் போதாது. இப்பிடியான வேலைகள் செய்ய மக்கள் நம்பிக்கை இருந்தாத்தான் வருவினம். அதால ஒழுக்கமும் நேர்மையும் கட்டாயம் இருக்கவேணும். நான் அரசாங்க காரியாலயங்களில் இருந்தபடியால் அரச வேலைகள் எப்பிடி இருக்கவேணும். அதில உள்ள ஒழுக்கம், நேர்மைகள் பற்றி எனக்குத் தெரியும் அதால மக்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் இடையில நடைபெறுகிற வேலைகளை, சேவையை எப்பிடி செய்யவேணும் என்ற முறை எனக்குத் தெரியும். அதால என்னட்டை வந்து தங்களுடைய வேலைகளை செய்துகொண்டு போறவை எவைக்கும் இதுவரையிலும் எந்தப்பிரச்சனையும் வாரதில்லை.” என்று தனது பணிபற்றி சொல்லக் கொண்டிருந்தார்

“அதேபோல கச்சேரி அலுவலகத்தில வேலை செய்யிற ஊழியர்கள் நல்லமாதிரி பழகக் கூடியவர்களாகவும், தொடர்புகளைப் பேணக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். போற நாங்கள் ஒழுங்கமுடனும் பண்புகளுடனும் அதைப் பேணிக் கொண்டு இருக்கிறதால எங்கட வேலைகளில அவர்களும் அவர்களுடைய வேலைகளில நாங்களும் திருப்தி அடையக்கூடியதாக இருக்கு. அதால மக்கள் சரியான வகையில பயனடையிறதும் நடக்குது.

இங்க வாற மக்கள் கூடுதலாக ஏதோவொருவகையில தங்களுடைய அறியாமையை நிவர்த்திசெய்து அதன்மூலமா தங்களுடைய வேலைகளை சிரமமில்லாம முடிச்சுக்கொண்டு போகத்தான் வருவினம். அதால அந்த மக்களை நாங்கள் எந்த விதத்திலயும் ஏமாத்தக்கூடாது. எங்களுக்கு கடவுள்தந்த கொடைதான் இந்த அறிவு அதை நாங்கள் சரியான வகையில பயன்படுத்த வேணும். அதுதான் நாங்கள் கடவுளுக்குச் செய்யிற நன்றிக்கடன்.

கூடுதலாக உதவித்திட்டங்களைப் பெறுவதற்காக கடிதங்கள் எழுதித்தரச்சொல்லித்தான் நிறையப்பேர் வருவினம். வேற பிறப்பு,இறப்புச் சான்றிதழ், வேலைவாய்பு விண்ணப்பங்கள், கல்விசம்மந்தமான படிவங்கள் என்று மூன்று மொழியிலயும் செய்துதரச்சொல்லிக் கேட்டு வருவினம்.” ஏன்று மேலும் சொன்னார்.

சேவையில் மனத்திருப்தி

“கஸ்டதுன்பப்பட்ட மக்கள், எழுத வாசிக்கத்தெரியாத, மொழியறிவு இருந்தும் சரியான முறையில் எழுதத்தெரியாத நிறையப்பேர் வருவினம். அவைகளுக்கு வேலைசெய்து குடுத்து அதன்மூலம் அவைக்கு நன்மைகள் கிடைக்கேக்க மனசுக்கு திருப்தியா இருக்கும். சிலபேர் தேடிவந்து நன்றி சொல்லுவனம். சிலபேர் ஒண்டும் சொல்லாயினம் நான் எதையுமே கணக்கில எடுக்கிறதில்லை. இந்த வேலைகள் செய்யிறதுக்கு இதுவரையும் எவரிடமும் நான் காசு தாங்கோ என்று கேட்கிறதில்லை அவையளாக தாறதை மாத்திரம் வாங்கிக்கொள்ளுறனான். சிலபேரிட்ட இருக்காது, சிலபேரிட்ட இருந்தாலும் தராயினம் அதையும் நான் வற்புறுத்தி வாங்க முயற்சிக்கிறதில்லை மனமில்லாம தந்தால் அது உடம்பில சுவராதென்டு சொல்லுவினம் மற்றது நான் கடவுள் நம்பிக்கை உள்ளனான் எல்லாம் அவன்செயல் என்டுபோட்டு இருப்பன்.” துன் அமைதியான சுபவத்தால் தன்னிடம் வந்த வாடிக்கையாளர் ஒருவரை அவரது சேவை என்ன என்று விசாரிக்கிறார்;.
“ஒரு நாளைக்கு பத்துபேரும் வருவினம் பதினைஞ்சு பேரும் வருவினம். வருமானம் என்டு சொல்லேக்க ஒரு முந்நூற்றைம்பது அல்லது நானூறு வரும். ஒவ்வொரு நாளும் பருத்தித்துறையில இருந்து தான் வாறனான் இப்ப சாவகச்சேரில இருந்து வந்து போறனான். பின்னேரம் நேரம் செல்ல என்டா ஆட்கள் வராயின. அதாலயும், எனக்கு இப்ப வயசு எழுபதும் ஆகுது எண்டதாலயும் இயன்ற வரை நேரத்தோட போயிடுவன். சராசரி வருமானம் முந்நூறு ரூபாய்க்குள்ள வரும். பஸ் பிரயாணச் செலவும், மதியச் சாப்பாடும் இங்க தான். அதுக்கும் ஒரு செலவு.” சுற்று சலிப்போடு சொன்னார்.
“கடையில பணிஸ், வாழைப்பழங்கள தான் வாங்கிச் சாப்பிடுறது. சோறு, கறி நான் சாப்பிடக்கூடாது. ஆலயத்தில இருப்பதனால இதுவரைக்கும் கடை வழிய சாப்பிட்டது கிடையாது கடைகளுக்கு சாப்பிட போனதுமில்ல. தொடர்ந்து இந்துவாகவே இருக்கின்றேன். பரம்பரை ஆலயத்தை நடத்திக் கொண்டு இருக்கிறபடியால் ஆலயத்தின் கருணையோடும், தெய்வங்களின் கருணையோடும் இருக்கிறன். நான் பருத்தித்துறை அல்வாய் பிரதேசத்தில அண்ணமார்காளி என்ற இந்து ஆலயம் ஒன்றுக்கு பொறுப்பா இப்பவரைக்கும் இருக்கிறன். எங்கட பரம்பரை ஆலயம் இது அம்மாவினுடைய தந்தையார் வழிவந்த ஆலயம் அந்த ஆலய பொறுப்பை நான் ஏற்று அந்த ஆலயத்திற்கு பொறுப்பாகவும், ஆலய பூசகராகவும் இருக்கிறன். அதால கண்டபடி கடைகளில சாப்பிடுறது கிடையாது.”என்றார்.

முழைகாலங்கலில எப்படி வேலைசெய்வீர்கள் என்று கேட்டபோது, “வெய்யில் காலங்களில் நிழல் இருக்கிற இடத்தில இருந்து வேலை செய்வம். மழை நேரங்களில் அருகில் இருக்கும் கட்டடங்களில் நின்று இயன்றவரை வேலையை செய்து குடுப்பம். கூடுதலாக மழைக்காலங்களில் நான் வருவது குறைவு. வயல்வேலைகள் இருக்கிறபடியால அதில கொஞ்சம் செய்வன்.”

மொழி தந்த வாழ்க்கை

உங்கள் குடும்பத்தைப்பற்றி சொல:லுங்களேன் என்ற போது “எனக்கு மூன்று ஆம்பிளைப்பிள்ளைகள் இருக்கினம். உயர்தரம் வரைக்கும் வரைக்கும் படிச்சிருக்கினம். பிள்ளைகளுக்கு தொழில் இதுவரையிலும் கிடைக்கேல. வடபகுதியில் தொழில் வாய்ப்பைப் கிடைக்கிறதென்டது அரிதாத்தானே இருக்குது. உங்க உவையைப் பாக்கேல்லயே(வேலையற்ற பட்டதாரிகளைக் காட்டுறிறார்) அதால என்ர பிள்ளைகளும் இயன்றவரை அரசாங்கத்தால கோரப்படும் விண்ணப்பங்களைப் போட்டுக் கொண்டே இருக்கினம். இதுவரையிலும் வேலை கிடைத்ததாக இல்லை.” என்றார்

அப்போ உங்கள் வருமானம் குடம்பத்தை நடத்தப் போதுமானதாக உள்ளதா? ஏன்ற போது, “சாதாரண வயல் வேலைகளையும் செய்யிறது. பிள்ளைகளும் வயல் வேலைகளையும் செய்வீனம் அதோட சின்னச்சின்ன உப உணவு உற்பத்திப் பொருட்களையும் செய்யிறது மாரிகாலத்து சிறுபோக பயிர்ச்செய்கையும் செய்யிறதால இயன்றவரை எங்கட வாழ்க்கை சாதாரணமாகக் கழிந்து கொண்டு இருக்குது.” ஏன்று மௌனமானார்.

அவரது மௌனத்தைக் குலைத்து உங்கள் ஊரில் மொழிபெயர்ப்பு வேலைகள் செய்யிறனீங்களா? ஏன்று கேட்டேன்.


“ஊருக்குள்ள ஏதாவது எழுதவேணும் படிவம் நிரப்பவேணுமெண்டா நிறையப்பேர் என்னட்டை வருவினம் அவைகளுக்கு நான் சிரமம் பாக்காம செய்துகுடுப்பன் கடவுள் எனக்குத்தந்த இந்த வரப்பிரசாதத்தை நான் பிரயோசனமாக்கவேணும் என்னால இன்னொருவருக்கு நல்லது நடக்குமென்டா அது என்ர தலைமுறைக்கே புண்ணியம்தானே. ஊருக்குள்ள செய்துகுடுக்கிற வேலையள் ஒண்டுக்கும் நான் எதுவித காசும் கேக்கிறதில்லை.”

“தாய்மொழியோட சேர்த்து அந்நிய மொழிகளையும் கற்றுக் கொண்டதால் தான் இப்ப உதவியா இருக்கு. வசதி வாய்ப்புக்களை இலகுபடுத்தக் கூடியதாக இருக்குது. இந்த தொழிலில் அனுபவங்கள் ஏற்கனவே நல்ல முறையில் இருக்கு. அதால எனக்கு சிரமமில்லாம இருக்கு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிற காலத்தில இருந்தே இயன்றவரை மொழிகளில நல்ல தேர்வுகளைப் பெற்றிருக்கின்றேன் அதால் இன்னுமின்னும் நல்ல அனுபவங்கள் எழுத்தாக்கங்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு தொடர்ந்து கிடைச்சது. அதுதான் இப்ப கைகுடுக்குது. இந்த தொழிலில் இன்று வரையும் எனக்கு சலிப்பு வந்ததில்லை.”

வெவ்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்வது பற்றி இளைய தலைமுறைக்கு என்ன சொல்லுவீங்கள்?

“படிச்சுப் போட்டு தொழில் இல்லாம இருக்கிறவர்களுக்கும், இனிவரும் சந்ததியில் எந்தத் தொழிலுமே இல்லையென்று சொல்லிக் கொண்டு இருக்கிறவர்களுக்கும் நான் சொல்லுறன் மொழியைக் கற்றுக் கொண்டால் உழைக்கலாம், நாங்கள் கூடுதலாக கல்வியைக் கட்டாயம் பெற வேண்டும். பெற்றுக் கொண்டு நல்ல நிலைமைக்கு வர வேண்டும். ஒரு மொழி அதிகமாகத் தெரிந்தால் ஒரு அறிவு கூடும் எவ்வளவுக்கெவ்வளவு மொழியறிவு கூடுதோ அவ்வளவுக்கு நாங்கள் உலகத்தைப் படிக்கலாம். மொழி தெரிந்தால் எங்களுடைய பிரச்சனைகளை மற்றவர்களிடம் சரியாகப் புரியவைக்கலாம். கண்டபடி மற்றவர்களுடன் பிரச்சனைகள் வராது. என்னைப்பொறுத்தவரைக்கும் நான் படிச்ச அந்நிய மொழி என்னைக் காப்பாத்தினது. இப்ப கடைசிக் காலத்தில எனக்குச் சோறுபோடுது. அந்நிய மொழி எதிலையும் வித்தியாசம் காட்டாம வெறுக்காம எல்லாத்தையும் அறிஞ்சு கொண்டா அது வாழ்க்கைக்கு ஏதோ ஒரு விதத்தில கைகுடுக்கும்.” என்று தன்னுடைய அனுபவங்களுடாக நம்பிக்கை வார்த்தைகளை தெளிக்கிறார் இந்த மொழியின் காதலன்.